கதாநாயகி வாங்க
கதாநாயகி மின்னூல் வாங்க
ஒரு கலை அல்லது படைப்பு என்பது ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டுவது.. அதை பார்க்கும் போதோ அல்லது படிக்கும் போதோ பார்வையாளனுக்கு எளிதில் புரியும் படி ரசனை ஊட்டக்கூடிய வகையில் அமைப்பது ஒரு விதம்… அதே சமயம் படைப்பாளி தன்னுடைய மனதில் தோன்றும் விஷயங்களை, தன்னுடைய புரிதலை ஒருவகையான தத்துவ விசாரங்களை, ஆன்ம விசாரணங்களை நிகழ்த்திக் காண்பித்து வாசகன் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஒரு வகை..
அந்த வகையில் இந்த கதையின் ஆசிரியர் ஜெயமோகன் அவர் படித்த பிற நாட்டு இலக்கியங்களில் இடம்பெற்ற சில கதை, கதைமாந்தர்களை அவர் நினைத்த கதையை அல்லது கதை மாந்தர்களையோ இந்த கதையில் சித்தரித்து இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது… கதாநாயகி என்பது ஒரு பேய் கதை என்று தான் சொல்லுகிறார்… அதாவது ஒரு பேய் ஒரு புத்தகத்திலிருந்து எழுந்து வந்த அந்த புத்தகத்தில் இருப்பதை சொல்லக்கூடிய கதையாக வைத்துக் கொள்ளலாம்.. 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை ஒரு பேய் சொல்லுவது போல் அமைத்திருக்கிறார்..
1981 ஜூன் 28ஆம் தேதி… மெய்யன் பிள்ளை என்ற ஒரு ஆசிரியர் கதை சொல்வதை போல ஆரம்பிக்கிறது.. எஸ் எஸ் எல் சி வரை படித்த அவர் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் ஆசிரியர் பயிற்சி பெறுகிறார்.. படிப்பு முடிந்தவுடன் அவருக்கு வேலை அளிக்கப்பட்டிருந்த கொன்னமேடு என்ற ஊருக்கு செல்கிறார்.. கோதையாறு இன்ஜினியர் அலுவலகத்திற்கு சென்று தான் தங்க வேண்டிய அக்கறை பங்களா பற்றி விவரிக்கிறார்.. கோரன் என்ற குள்ளமான இறுக்கமான கரிய உடல் கொண்ட ஒரு மலைக்காணி அந்த பங்களாவிற்கு அழைத்து செல்கிறான்.. இதற்கு முன்பு வந்த ஊரில் வேலை செய்த ஆசிரியர்கள் பாம்பு கடித்தும் யானை மிதித்தும் இறந்துள்ளார்கள் என்ற செய்தி இவனுக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்துகிறது…
அந்த பங்களாவை சுற்றி பார்க்கும் போது கதாசிரியர் கட்டமைத்திருக்கும் அந்த பங்களா ஒரு விதமான அமானுஷ்ய காட்சியை அரங்கேற்றுகிறது… ஜோவென்று விடாமல் பெய்யும் மழை… “இங்கே வானை ஓர் கத்தியால் கிழித்து உள்ளே தேங்கி இருக்கும் ஒரு மாபெரும் ஏரியை கொட்டச் செய்வது போல மழை விழுந்தது”
கோரன் அந்த பங்களாவில் இருந்த விறகடுப்பை பற்ற வைத்து சாயா தயாரித்துக் கொடுக்க மெய்யன் பிள்ளை அந்த பங்களாவை பார்வையிடுகிறான்.. பிறகு கஞ்சி காய்ச்சி குடித்துவிட்டு அங்கிருந்த கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்குகிறான்..
இரவில் தூக்கம் தெளிகிறது… அப்போது ஒரு மேஜையின் அடியில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டு அந்த மேஜையை துலாவுகிறான்.. ஒன்றுமில்லை என்று திரும்ப மூடிவிட்டு தூங்கச் செல்கிறான்.. மீண்டும் சுமார் மூன்று மணியளவில் தூக்கம் தெளிகிறது… படுத்துக் கொண்டே யோசிக்கும்போது அவனுடைய கைகளில் ஏதோ அகப்பட்டதாக நினைவிற்கு வருகிறது..
ஆனால் மீண்டும் அதை திறந்து பார்க்கும் போது எதுவும் கிடைக்கவில்லை வந்து படுத்து கொள்கிறான்.. பாதி தூக்கத்தில் ஏதேதோ சிந்தனை.. அவன் பார்த்த பழைய ஆங்கில படம் ஒன்றில் இதே போன்று மேஜையை திறக்கும் போது அதற்கு அடியில் ரகசிய அறையில் ஒரு டைரி கிடைக்கிறது.. இந்த காட்சி தெரிந்தவுடன் மீண்டும் எழுந்து விடுகிறான்… மீண்டும் அந்த மேஜையை துழாவும் போது அங்கே ஒரு ரகசிய அறையில் ஒரு புத்தகத்தை கண்டெடுக்கிறான்..
ஆனால் அந்த புத்தகம் டைரி கிடையாது அது ஒரு 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த Evelina: or the history of young ladies entrance into the world நாவல்.. அந்த நாவலின் புத்தகங்களை புரட்டிக் கொண்டு இருக்கிறார்..
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலை எங்கிருந்து படிக்க தொடங்குவது என்ற குழப்பம்.. ஒரு நாட்குறிப்பை போல இருக்கும் ஏறத்தாழ 60 பக்கம் கொண்ட அந்த நாவலின் முன்னுரையை படிக்கத் தொடங்குகிறார்… இரவு முழுவதும் படிக்கும் நாவல் ஆசிரியர் ஃபேன்னி பர்னி என்கிற பிரான்செஸ் பர்னி குறித்த அந்தரங்கமான வாழ்க்கைக் குறிப்பு விடிந்ததும் இரவு படித்த குறிப்புகள் எதுவுமே இல்லாமல் சாதாரண வாழ்க்கைக் குறிப்பாக மாறுகிறது…
இதுவரைக்கும் இந்த புத்தகத்தின் கதையோட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை.. அந்த பழைய புத்தகத்தை படிக்க ஆரம்பித்த பிறகு குழம்பியது மெய்யன்பிள்ளை மட்டும் அல்ல நிறைய இடங்களில் நானும் தான்… அவ்வளவு எளிமையான வாசிப்பு அல்ல இந்த புத்தகம்… அதேபோல ஒற்றை மைய கதையும் அல்ல.. பல்வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பி வாசிக்கலாம்…
அந்த புத்தகத்தில் பேய் கதை ஆரம்பிக்கிறது இப்படி…
ஃப்ரான்ஸெஸ் பர்னியின் குடும்பமே முறையான கல்வியும் அறிவுத்தளச் செயல்பாடும் கொண்டதாக இருந்தது.
சிறுவயதிலேயே கொஞ்சம் நுரையீரல் நோய் இருந்தமையால் அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே வாழ்ந்த ஃப்ரான்ஸெஸ் தனித்தவராகவும், சிடுசிடுப்பானவராகவும், கனவு காண்பவராகவும் இருந்தார்.பத்துவயதிலேயே கவிதைகளும் நாட்குறிப்புகளும் எழுத ஆரம்பித்தார்.
ஃப்ரான்ஸெஸின் அம்மா பிரிட்டனுக்கு அகதியாக குடிபெயர்ந்த ஒரு பிரெஞ்சுக்காரரின் மகள். ஆகவே அவளுக்கு கணவன் இல்லத்தில் ஒரு சிறுமை இருந்தது. விருந்துகளில் எப்போதும் அது வெளிப்பட்டது.
1707ல் பிறந்த “சாமுவேல் கிரிஸ்ப்” ஆரம்பகால பிரிட்டிஷ் நாடகாசிரியர்களில் ஒருவர்.. ஃப்ரான்ஸெஸ்யின் குடும்ப நண்பர்களில் முதன்மையானவர் சாமுவேல் கிரிஸ்ப்.. பயணியும் எழுத்தாளருமான அவர் ‘அப்பா கிரிஸ்ப்’ என்றுதான் ஃப்ரான்ஸெஸ் குறிப்பிடுவார்… ரோமப்பேரரசின் காலத்தைச் சேர்ந்த ’ஆப்பியஸும் விர்ஜீனியாவும்’ என்ற கதை அக்காலத்தில் பலராலும் எழுதப்பட்டு நடிக்கப்பட்டது. அதில் கிரிஸ்பினால் படைக்கப்பட்ட இந்த கதையில் வரும் “விர்ஜீனியா” இந்த புத்தகத்தில் பேயாக கருதப்படும் ஒரு மாந்தர்.. 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த Evelina: or the history of young ladies entrance into the world நாவலின் கதாநாயகி ஈவ்லீனா ஒரு பேய் (?) இந்த நாவலை இயற்றிய ஃப்ரான்ஸெஸ் பர்னி ஒரு பேய்(?).. அதுமட்டுமில்லாமல் இன்னொரு பேயும் இருக்கிறாள்…
இது தெரிவதற்கு முன்பு இன்னும் மிக நீண்ட கதை இருக்கிறது.. வரலாற்று தகவல்கள் இருக்கிறது.. அந்த புத்தகம் இறந்த காலத்தையும் வரலாற்றையும் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மீட்டெடுத்து மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கதை சொல்கிறது…
’ஒரு சூழலை தர்க்க உள்ளமும் அதர்க்க உள்ளமும் சேர்ந்தே புரிந்து கொள்ள முயல்கின்றன. தர்க்க உள்ளம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது.. அதற்கு தொடர்பில்லாத அதர்க்க உள்ளம் இன்னொரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது.. இரண்டும் ஒன்றின் மேல் ஒன்று படிந்து ஒற்றை சித்திரமாக ஆக வேண்டும்.. அதுவரை உள்ளம் தத்தளித்து கொண்டிருக்கும்.. அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.. ஒன்று தொட்டு இன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கும்… அதர்க்க உள்ளம் கனவுகளை முடிவில்லாமல் சமைத்து அதர்க்க உள்ளத்திற்கு அளித்துக்கொண்டே இருக்கும்.. அவற்றை உடைத்து கலந்து தர்க்க உள்ளம் தனக்கான உண்மையை உருவாக்கிக் கொள்ளும்’’
நாவலின் நாயகி ஈவ்லின் என்ற பாத்திரத்தின் பாட்டி அவள் எளிமையான சூழலில் பக்தியும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணாக வாழ்வதற்கு கிராமமே நல்லது என நினைக்கிறார்.. ஆனால் பாவம் செய்வதற்கான சூழல் அமையாத ஊர் செய்ய முடியாத பாவம் கற்பனையில் பெருகி இவர்களை சூழ்ந்து இருக்கிறது என்ற எண்ணம் தான் ஈவ்லின் க்கு… எனவே அவள் லண்டன் வாசியாகவே பெரும் சீமாட்டிகளின் வாழ்வை வாழவே ஆசைப்படுகிறாள்… ஆனால் அந்த கனவை அடைந்த பின் அவள் ஒரு நாள் கூட மகிழ்ச்சியாக இல்லை…
லண்டனில் வாழக்கூடிய பெண்களோ முற்றிலும் மாறுபட்டவர்கள்.. பெண்களுக்கு பெண்களே உண்மையான சவால்களாக இருக்கின்றார்கள்.. எல்லாவற்றிற்குமே ஒப்பீட்டு மதிப்பு மட்டும்தான்.. ஒருத்தி மற்றவளுக்கு மதிப்பை ஏற்படுத்துகிறாள்.. எனவே ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு போட்டி.. ஒவ்வொருவருக்கும் இன்னொருவர் எதிரி.. ஒவ்வொருவருக்கும் இன்னொருவர் விளம்பரம் செய்பவரும் கூட… இப்படி பெண்களின் நுட்பமான பாவனைகளையும் அக கொந்தளிப்புகளையும் ஃப்ரான்ஸெஸ் ன் எழுத்தில் படிக்கும் மெய்யன்பிள்ளை பிரம்மித்துப் போகிறான்..
இப்படியே அந்த புத்தகத்தில் கூறப்பட்டு வரும் நீண்ட கதை என்ன சொல்ல வருகிறது? நான் மட்டும் குழப்பத்தில் இல்லை.. மெய்யன் பிள்ளையும் கூட…
“நீ அந்த புத்தகத்தை தூக்கி வீசு அதில் ஏதோ பேய் கூடி இருக்கிறது மெய்யாகவே புத்தகங்களில் பேய்கள் குடியிருக்கும் என் அம்மா சொல்வதுண்டு”
நாவலில் வாசிப்பது உண்மையாக அந்த நாவலில் இல்லை.. ஆனால் அது அவனுடைய நினைவில் இருக்கிறது.. அவன் வாசிக்கும் போது அது நாவலில் தோன்றியது.. ஆனால் உண்மையில் அது இல்லை… தர்க்க பூர்வமாக யோசிக்கும் போது அவையெல்லாம் பாதி தூக்கத்தில் இருக்கும்போது கற்பனைகளும் கனவுகளும் கலந்து மனதில் ஊடாடும் ஊடாட்டமே.. அது போன்ற ஒரு நிலை என்று நினைத்துக் கொள்கிறான்…
ஒரு கட்டத்தில் நாவலின் முடிவு அது என்று நினைத்து புத்தகத்தை மூடிவிடுகிறான் மெய்யன்பிள்ளை.. ஆனால் மீண்டும் அந்தக் கதை இன்னும் முடியவில்லை மீண்டும் படி என்கிறது… மீண்டும் படிக்க ஆரம்பிக்கிறான்… படிப்பவனே அந்த கதைக்குள்ளும் தோன்றும் ஒரு பாத்திரம் ஆகிறான்…அவளிடம் உள்ளத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் அவனிடம் சொல்லலாம் என்று தோன்றி சொல்பவள் யார்? பெண்மை என்ற அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பிரான்செஸ்சா? அடக்குமுறைகளுக்கு ஆளாகும் ஈவ்லினாவா? கௌரவத்திற்காக கொலை செய்யப்பட்ட விர்ஜீனியாஸா? அல்லது ஹெலனாவா?
கண்டிப்பாக இல்லவே இல்லை… யாரும் எதிரபார்க்காத திருப்பம்! ஒரு சிறிய சம்பவங்கள் வழியாக பழைய வரலாற்றை குறுக்காக வெட்டி ஆராய்கிறது.. சிக்கலான கதைக்குள் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள்.. முழுமையான அனுபவத்திற்கு ஆழ்ந்த வாசிப்பு தேவை…
மெய்யன் பிள்ளை வேலைக்கு செல்லும் ஊரில் அது ஒரு மலைக்காடாகவும், போக்குவரத்து கூட இல்லாத இடமாகவும் இருந்தாலும் அதற்கு தகுந்தவாறு அவன் எப்படி எதற்காக அவனை தகவமைத்துக் கொள்கிறான் என்ற குழப்பம் இருந்து கொண்டே வருகிறது.. கதையின் ஊடாக மலைவாழ் மக்களின் சில வாழ்க்கை முறைகளையும் அறிய முடிகிறது… இப்போது நிகழும் மெய்யன் பிள்ளையின் கதையையும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வையும் கடைசியில் ஒரு புள்ளியில் அழகாக கொண்டுவந்து இணைக்கிறார் கதாசிரியர்..
சுனிதா கணேஷ்குமார்
(வாசிப்பைநேசிப்போம் குழுமம்)