கடமையும் உரிமையும்- ரம்யா

அன்பு ஜெ,

ஒவ்வொரு நீலி இதழின் போதும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரு சரடின் வழியாக கோர்த்துக் கொள்வதற்கான ஒன்றைக் கண்டடையும்போது மூளை பரவசம் அடைகிறது. ஒரு இதழிலுள்ளவற்றை முந்தைய இதழ்களில் உள்ளவற்றுடன் கோர்த்துக் கொள்ளும்போதும் இது நடக்கிறது. ஒன்றிலிருந்து கேள்விகள் பெருகுவதும், பிறிதொன்றில் விடை கிடைப்பதுமான இந்தப் பயணம் மகிழ்வை அளிக்கிறது.

அந்த வகையில் இந்தமுறை நீலி இதழில் சைதன்யா எழுதிய “வேர்கள்” கட்டுரை முக்கியமானது. சிமோன் வெயில் என்ற சிந்தனையாளரை அறிமுகப்படுத்துவதான கட்டுரை. உரிமைகள் என்று சொன்னதும் முஷ்டியை உயர்த்தியபடி போராடுவது போன்ற சித்திரமே நம் கண் முன் வருகிறது. எத்தனை துடிப்பு மிக்க விசையை ”உரிமை” என்றதும் இளமையும் அறியாமையும் அடைகிறது என்றே சிந்திக்கிறேன். நம் அரசியலைப்புச் சட்டத்தின் ஆன்மாவாக இருப்பது அதன் முகவுரையும் (Preamble), அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பகுதியும் தான். அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதியை நாம் அமெரிக்காவிடமிருந்து கடன் வாங்கினோம். அடிமைப்பட்டுக் கிடந்த நாம் வேறு எதை விடவும் உரிமை என்று சொல்லும் போது உணர்ச்சிவசமடைந்து விடுகிறோம். “என் உரிமை” என்று சொல்லும்போதே நெஞ்சுக்கூடு விரிந்து விடுகிறது தான்.

”அடிப்படைக் கடமைகள்” (Fundamental Duties) என்ற கருதுகோளை நாம் சோவியத் ரஷ்யாவிடமிருந்து கடன் வாங்கினோம். ஆனால் இது 1950இல் அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படும்போது சேர்க்கப்பட்டது இல்லை. மாறாக 1976இல் நெருக்கடி நிலைக்குப் பின்னான சூழலில் தான் அதன் தேவை உணர்ந்து சேர்க்கப்பட்டது. தனியான ஷரத்தாகக் கூட இல்லை. மாறாக ஒரு ஓரமாக DPSP (Directive Principle Of State Policy) -ன் ஒட்டாக ஷரத்து 51A -வாக சேர்க்கப்பட்டது. உரிமைகளைப் படிக்கும் போது அடையும் எந்த பரவசத்தையும் கடமைகளைப் படிக்கும் போது அடைவதில்லை நாம்.

மேலும் பிரான்ஸிடமிருந்து நம் அரசியலமைப்பிற்கு பெற்றுக் கொண்டது ”சுதந்திரம்(Liberty), சமத்துவம்(Equality), சகோதரத்துவம்(Fraternity)” ஆகியவை. எங்கிருந்து எது பெறப்பட்டது என்பதிலிருந்தே ஒரு நாட்டின் சாரத்தை, அதன் வரலாற்றை தொகுத்துக் கொண்டு கண் நோக்க முடியும்.

இங்கு சைதன்யா அறிமுகப்படுத்திய சிமோன் வெயில், பிரான்ஸின் நன்கு அறியப்பட்ட பிற சிந்தனையாளர்களிடமிருந்து எங்கு வேறுபடுகிறார் என்ற சித்திரமும் இக்கட்டுரையில் கிடைத்தது. ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற பிரான்ஸின் கருதுகோள்கள் சைதன்யாவின் கட்டுரை வழியாக உரிமைகள், பெறக்கூடியவை போன்றவற்றை வலியுறுத்தும் ஒன்றாகவே பார்த்தேன். ”அடைய வேண்டியது” என்பது வேட்கையையே அளிக்கிறது. அதுவே உயிர்சக்தியைத் தூண்டுகிறது. செயல்படவைக்கிறது. போராடச் சொல்கிறது.

அதே சமயம் “கடமைகள்” என்பது நாம் செய்ய வேண்டியது என்றவுடன் சோர்வை அளிக்கிறது. அகிம்சை சோர்வளிப்பது அதனால் தான். ஆக்கப்பூர்வமாகச் செய்ய வேண்டும் என்பது தளையாகப் பார்க்கப்படுவதும், அதைச் செய்பவர்களை ஏளனத்துடன் அணுகுவதும் அதனால் தான். உயர்ந்தவற்றின் முன் அடிபணிய, ஒப்புக்கொடுக்க மனம் இல்லாமல் போவதும் இக்காரணத்தினால் தான்.

“இங்கே ஒருவன் தன் உரிமை எனச் சுட்டுவது அவனுக்கு பிறர் ஆற்ற வேண்டிய கடமைகளே” என சிமோன் வெயில் குறிப்பிடுவதாக சைதன்யா சொல்லும் இந்த ஒற்றை வரி மட்டும் அடிக்கோடிட்டு மீள மீள சொல்லிக் கொள்ளப்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அரசியல், சமூகம், பொருளாதாரம், சூழலியல் என்பதைத் தாண்டி மனம் சார்ந்தும் வாழ்க்கை முறை சார்ந்தும் இதே வரியை நாம் சொல்லிக் கொள்ள வேண்டிய தேவை இன்று உள்ளது.

என் வாழ்க்கையில் பள்ளியிலிருந்து தொடர்ந்து வரும் வரி ஒன்றுண்டு. “நம் சமூகம் தான் நாம் இங்கு சுமூகமாக வாழ, கல்வி கற்க காரணமாக அமைந்தது. படித்து பெரியவர்களாகி நாம் சமூகத்திற்கு திருப்பியளிக்க வேண்டும். அது எவ்வகையிலேனும் அமையலாம். ஒருவர் மருத்துவராகி அல்லது ஆசிரியராகி அல்லது விஞ்ஞானியாகி அல்லது மரம் நட்டுக்கூட” என்ற வரிகள். இந்த வரியை அப்துக்கலாம் அவர்களின் நேரடி உரையாடலைக் கேட்டபோது மனதில் பதிந்த வரிகள். அவர் குடியரசுத்தலைவராக இருந்தபோது நாடுமுழுவதும் பள்ளிக் குழந்தைகளை சந்தித்துக் கொண்டே இருந்தார். என் இளமையில் சமூகத்திற்குத் திருப்பிச் செய்ய எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே யோசித்து ஒவ்வொன்றையும் செய்ததை இன்று நினைவுகூர்கிறேன். இந்த எண்ணத்தை மாணவர்களிடம் விதைப்பதையே அப்துல்கலாம் தன் வாழ் நாளின் லட்சியமாகச் செய்திருக்கவேண்டும். எத்தனை இளம் மனங்கள் அன்று அத்தகைய கனலை வாங்கியிருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அப்படி ஒரு ஆள் நம்மிலிருந்து தோன்றி அந்தக் கனலை மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். வள்ளலார் ஏற்றி வைத்த தீ மட்டுமல்ல, காந்தி ஏற்றி வைத்த தீயும் இன்னும் அணையவில்லை. அணைந்துவிட்டது போலிக் கூச்சல்கள் தான். //ரஷ்ய கம்யூனிசத்தின் வீழ்ச்சியையும், நாசிசம் உருவாக்கிய பேரழிவையும் முன்னரே அவரால் கணிக்க முடிந்தது.// என்ற சைதன்யாவின் வரிகளின் வழி வீழ்ந்த அத்தனைகளையும் தரிசித்தேன்.

இந்தக்கட்டுரை வழியாக காந்தியை வேறு ஒரு கோணத்தில் கண்ணோக்க முடிந்தது. அஹிம்சை, கடமையைச் செய்தல், சேவை மனப்பான்மை, ஆக்கபூர்வமான செயல்கள் என அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். உரிமைகளுக்கு முன் கடமையை முன் வைத்தார். பெண்கள் மேல் அவர் ஏன் ஆண்களை விடவும் நம்பிக்கை வைத்திருந்தார் என இன்னும் புரிந்து கொள்ள முடிகிறது. பெரியவற்றின் முன், மிகப்பெரிய அறத்தின், சிந்தனையின் முன் உடனடியாக அடிபணியும் அந்த மனம் ஆண்களை விட பெண்களுக்கே இயற்கையாக அமைந்துள்ளது. ஆண்கள் முதன்மையாக விரும்புவது தனித்துச் செல்லல், தனிப்பாதையை உருவாக்குதல், உரிமைகளை நிலை நாட்டல், போராடுதல், உயிர்த்தியாகம் செய்தல் என உடனடியான ஒன்றைத்தான். ஒப்பு நோக்க பெண்களில் இந்த தன்மை குறைவு. சற்று யோசிக்கக் கூடியவர்களாக, நீண்ட நோக்கில் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றே இன்று தோன்றுகிறது. இயல்பான ஒரு நேர்மறைத்தன்மை ஒன்று அவர்களிடம் உள்ளதைக் காண்கிறோம். விடுதலைக்கு முந்தைய பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் காந்தியவாதிகள், காந்தி அழைத்தால் சென்று எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டு காந்தியப்பணி செய்வதையே விரும்பியிருக்கிறார்கள். எழுத்திற்காக வீட்டுக் கடமைகளை வீடைத் துறந்தவர்கள் அல்ல. எல்லாக் கடமைகளையும் முடித்தபின் அதைச் செய்யவே அவர்கள் மனம் ஒப்பியிருக்கிறது.

இந்தக் கட்டுரை வழியாக பார்க்க நேர்ந்தது ஒரு நீண்ட தொலை நோக்குப் பார்வையுள்ள சிந்தனையாளரை. இதே இதழில் உமாமகேஸ்வரியின் பேட்டியில் தனியர்களைப் பற்றி, ஆண்-பெண் உறவுச்சிக்கலைப் பற்றிய உரையாடலில் அவர் இவ்வாறு சொன்னார், “எல்லோரும் விடுதலை, சுதந்திரம் என்று தனித்தனியாகப் போகிறார்கள். ஆனால் யாரும் கடமைகள், பொறுப்புகள் பற்றி யோசிப்பதில்லை.” சைதன்யாவின் கட்டுரையை உளநுட்பங்கள் சார்ந்து இன்னொரு தளத்திலும் தொகுத்துக் கொண்டேன். உமாமகேஸ்வரியின் படைப்புலகம் சார்ந்து வெளிப்படும் ஒன்று ஏதோவொன்றின் விசையால் இக்குடும்ப அமைப்பின் மேல் நம்பிக்கை கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் பெண்களையே. ”ஏன் பற்ற வேண்டும்? வெளிவந்துவிடு. எக்கேடு கெட்டும் போகட்டும். உன் மகிழ்ச்சியை விடுதலையை உரிமையை நாடு” என்ற குரல் எப்போதோ ஆரம்பித்தாலும் இன்னும் எதை நம்பி இந்தப் பற்றுதல் என்ற கேள்வி எழுகிறது. உரிமைகளைக் கோருபவர்கள் தங்கள் கடமைகளைப் பற்றி பொறுப்புகள் பற்றி யோசிக்க வேண்டிய காலத்தையே வரும்காலம் கோரி நிற்கிறது. அன்பைப் பொறுத்தும் நாம் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. நாம் திருப்பியளிக்க வேண்டும் எனும் போது மட்டும் விடுதலை, சுதந்திரம் என்று பேச ஆரம்பிக்கிறோம்.

விவசாயம் இன்றளவும் இந்தியாவில் அறுபது சதவீதத்திற்கு மேலான மக்கள் நம்பியிருக்கும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் அது நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி யில் 14 சதவீதமே பங்கு வகிக்கிறது. ஆனால் மிகக் குறைந்த நபர்கள் பங்களிக்கும் சேவைத்துறை அறுபது சதவீத்ததிற்கும் மேலான வருவாயை ஈட்டுகிறது. வேறெவற்றையும் விட வருமானம் தரும் தொழிலாக புகழடையும் தொழிலாக கேளிக்கைத்துறை இன்று பூதாகரமாக வளர்ந்துள்ளது. எதுவுமே வீட்டில் இல்லையானாலும் அதிக விலைக்கு ஒரு தொலைபேசி வாங்கிக் கொள்ள முடிகிறது. பெரும்பாலான நேரங்கள் அதற்குள். பெரும்பாலான நேரம் அதில் செலவிடப்படுவதால் அதற்கான தீனியைத்தர பெரும்பாலனவர்கள் அதில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். வீட்டிலிருந்து கொண்டே தொடர்ந்து கண்ட ரீல்ஸ்கள் எனப்படும் குறும் வீடியோக்களைப் போட்டு மக்களை மூளைச் சலவை செய்யத்தகுதியானவர் என்பதை வலியுறுத்தும் இன்ஃபுலுயன்ஸர்கள் அதிகரித்திருக்கும் காலகட்டம். ஒரு நல்ல செவ்வியல் படைப்பைக் கூடப் படிக்காதவர் புக் ரிவ்யூவர், புகைப்படம் எடுப்பது ஒரு கலை என்பதே அறியாமல் குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. காணொளிகளும் இதே நிலமை தான். கலை ரசனை மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. எங்கும் பணமே பிரதானமாக உள்ளது. உண்மையான ஆக்கப்பூர்வமான பணி என்றால் என்ன என்பதை நாம் கடமைகளை மறந்ததால் தான் அதைப்பற்றிய பிரக்ஞை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கிறோம். அப்படி உருவாகிவிட்டவர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இதைப் பற்றிய பிரக்ஞை உள்ளவர்களுக்கு உள்ளது. ஒரு ரீல்ஸ் போடுவதை விட வயலில் வேலை செய்வது, படிப்பது ஆக்கப்பூர்வமான செயல் என்ற சிந்தனையை நாம் வலியுறுத்த வேண்டிய காலம் இது. ஒரு புத்தகத்தை புகைப்படம் எடுத்துப் போடுவதை விட அதைப்பற்றிய தன் மதிப்புரையை விரிவாக எழுதுவது ஆக்கப்பூர்வம் என்று வலியுறுத்த வேண்டிய காலம். இலக்கியத்திலும் கூட இதே நிலமை தான். தொடர்ந்து எது தீவிர இலக்கியம், எது ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்பதை முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். இந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நீங்கள் அது சார்ந்த பல முன்னெடுப்புகள் வழியாக புதியவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அமெரிக்காவில் நீங்கள் சந்தித்த இளைய தலைமுறையினர் பற்றிய கடிதம், அமெரிக்காவில் நீங்கள் நிகழ்த்திய உரைகள் வழி என யாவும் அந்தக் கடமையையும் பொறுப்பையும் அதை உணர்வதற்குத் தேவையான அறத்தையும் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் நாம் முந்தைய தலைமுறையின் கருணையால், தியாகத்தால் இங்கு இருக்கிறோம் என்ற உணர்வு முதலில் வர வேண்டும். பெரியவற்றின் முன் அடி பணிய, தன்னை முன்னிருத்தாமல், தனி மனிதனின் விழைவை மட்டுமே கண்ணோக்கிக் கொண்டிராமல் சற்று கருணையோடு அமைய சிமோன் வெயிலின் இந்தச் சிந்தனை அவசியம். இக்காலகட்டத்தின் மிகப்பெரிய சிக்கல் ஒன்றிற்கான தேவையான சிந்தனைப்புள்ளி இது.

இன்று இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சூழலியல் சார்ந்தும் உரிமைகளை விட கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் மிகப் பெரிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். ஒட்டுமொத்த மனித குலமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று சிமோன் வெயிலுடையது.

டால்ஸ்டாயை நாவல் வழியாகவும் அவரின் கடிதங்கள் வழியாகப் பார்க்கும் போது இந்த சிந்தனையையே அடைய முடிகிறது. எளியவர்களை ஒடுக்குபவர்கள் தங்கள் நிலைமையிலிருந்து இறங்கி வந்து தாங்கள் அவர்களுக்குச் செய்த பிழையை ஈடு செய்யும் ஒரு கடமை உள்ளது என்பதை அவர் நம்பினார். அதை வலியுறுத்தினார். தன் கதையின் நாயகர்களை அவ்வாறு செய்யவைத்தார். நெஹ்லுதவ் விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்ததும் கத்யூஷாவிற்கு செய்ய வேண்டும் என நினைத்த பிரதிபலனும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு(Oppressed) ஒடுக்கிய சமூகத்திலிருந்து(oppressor) செய்ய வேண்டிய கடமையின் பொருட்டே. இன்றளவும் நம் வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கியவர்களிடமிருந்து தன் உரிமை என பிய்த்து எறிந்து தான் வெளிவந்திருக்கிறார்கள். இதற்கு இணையாகவே ஒடுக்கியவர்கள் தங்கள் கடமை என முன்வந்தால் மட்டுமே முழுமையாக சாதிய, மத, சமூக, அரசியல், பொருளாதார, சூழலியல் சார்ந்த அழுக்குகளைக் களைய முடியும் என தீர்க்கமாக இப்போது நம்புகிறேன்.

இக்காலகட்டத்தின் தேவை உரிமையை முஷ்டி தூக்கி போராடுபவர்களோ, மூச்சு முட்ட பேசிக்கொண்டே இருப்பவர்களோ அல்ல. செயலில் இறங்குபவர்கள், கடமைகளை, பொறுப்புகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்பவர்களே இக்காலகட்டத்தின் தேவை. எல்லா மட்டத்திலும், எல்லா துறைகளிலும் இதுவே தேவை. சைதன்யாவுக்கு என் நன்றியும் அன்பும்.

ரம்யா.

வேர்கள் – சைதன்யா

முந்தைய கட்டுரைதலைக்குமேலொரு கனவு -கடிதம்
அடுத்த கட்டுரைகவிதைகள், யுவன் சந்திரசேகர் சிறப்பிதழ்