ஆலயங்களை அறிதல் – லிங்கராஜ்

அன்பு ஜெ,

இலையுதிர், மலர் பருவ வண்ண காடுகளில் திளைத்து விட்டு திரும்பி நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

போன வருடம் ஆகஸ்ட்22 மலேசியா சுவாமி வகுப்பிலிருந்து தொடங்கிய நித்யவன உறவு, கிட்டத்தட்ட ஒரு வருடம் மேல் ஒடிவிட்டது. பகவத்கீதை வாசிப்புகள், ஆலயம் எனும் ஒரு கலைப்படைப்பை அனுபவிக்க ஆரம்பித்தது என இந்த வருடத்தில் சில மிக நல்ல தொடக்க புள்ளிகள் அமைந்தன

ஆலயம் வகுப்பில் ஏப்ரல்23 கலந்து கொண்டேன். ஆரம்பத்தின் எழுச்சிகளுக்கு பிறகு எழுத வேண்டும் என நினைத்து கொண்டேன். அறிதல் எப்படி உணர்தலுக்கு மேல் உதவி புரியும் என்பது இந்த பயிற்சி வகுப்பின் பின் தெரிந்து கொண்டேன். இயற்கையில் எத்தனை பிரம்மாண்டம்? வான், மரங்கள், காடுகள், பூக்கள் என ஒரு இயற்கையின் ஒரு பக்கம். மனிதனின் கலை எனும் விஷயத்தில் இருக்கும் மேன்மை என ஒரு பக்கம்

ஆலயம் – ஒரு சிலை அல்லது தெய்வ ரூபத்தை வெறுமனே பார்த்து கொண்டே இருந்தால் மட்டும் எது உள் செல்லும்? ஒரு அறிதல் எப்படி கண்ணை திறக்க வைத்து அந்த சிற்பங்களை உரையாட வர வைக்கிறது என்பதன் பேரானந்தம் JK வகுப்பிற்கு பின் தொடங்கியது.

மிக வேகமாக செல்லும் காட்டாறு என அவர் பயணித்தபடி சென்றார். அத்தனை பேரையும் இழுத்து கொண்டு செல்லும் ஆறெனவும் கூட. எத்தனை சம்பந்தப்பட்ட தகவல்கள், சொல்லிய புத்தகங்கள் மற்றும் ஆலயங்களின் பெயர்கள்? வீழாத அம்பு என சென்றபடி இருந்தார்.

பல்லவன் மேல் இருந்த அவரின் ப்ரமிப்பான மரியாதை, தஞ்சை கோயிலில் அவர் வாழ்ந்த நாட்கள், மாமல்லபுரம், காஞ்சி கோவில்களின் தொகுப்பு என விவரனை நுட்பமும் விரிவும்  சிறிய காலக்கெடுவில் முடித்து சென்றார்.

ஹம்பியுடனும் மாமல்லபுரத்திலும் சென்ற பயணங்கள் அற்புத கணங்களால் நிறைந்தவை. மாமதி நிறை நாளில், மல்லை கடல் அருகில், நிலாவின் ஒளி கடலின் நீரில் வெண்தழலென பொங்கி பொங்கி வந்து கொண்டிருந்தது. உற்று பார்க்க நிலவொளி, நீரினில் தீ என அலைகள் மேல் ஆடியபடி கரைதொட்டு அறைந்து கொண்டிருந்தன. அந்த இரண்டு நாள் பெரும் பாறைகளிலிருந்து வெளி வந்து காலத்துடன் சென்று கொண்டிருந்த சிற்பங்கள் பல பார்த்தோம். வராகர் குகை, மகிஷவத குகை என அந்த சிற்பங்களை உற்று பார்க்கையில் அவை அல்லது அவைகளில் ஏதோ ஒரு சிற்பம், ஏதோ ஒரு கணத்தில் நாம் எல்லாம் ஒன்றேன ஆகி உறவாட,பேச தொடங்கி விட்டன. மகிஷ வத குகையின் சிற்பத்தில் ஒர் கடைசியில் இருக்கும் ஒர் அரக்கனின் புன்னகை தொட்டது அந்த கணம். அர்ஜுன தபசு சிற்ப தொகையில், தன் குட்டிகள் பால் குடிக்க பெண் சிங்கம் ஒன்று பார்த்துகொண்டிருந்தததை நான் பார்க்க தொடங்கியது அந்த கணத்தின் தொடக்கம். புலிக்குகையில் நான் சோம|ஸகந்த உருவத்தை கருவறையில் பார்த்தது அந்த கணம். அமிழ்ந்து பார்த்து விட்டு வெளி வருகையில் அவை எல்லாம் ஒரு பெரும் பாறை தொகையில் உருவாகியவை என்ற எண்ணம் தொடும் போது இவைகளை உருவாக்கிய  கலைஞர்களின் விரல்களை என்னுடன் கோர்த்து கொள்ள தோன்றுகிறது. ஐவர் ரத தொகுதியில் உச்சியில் வைக்க இருந்த சில கலசக்கல் தரையில் இன்னமும் காத்து கிடந்தன. முற்று பெற்று ஆலயம் என தொடங்க முடியாமல் எந்த காரணத்தினாலோ உயிருடன் இருக்கின்றன. இருபக்கமும் சிவன் அடைத்து கொள்ள, கண்களின் வெளி தாண்டி உள் உறங்கும் அந்த விஷ்ணு, சிவனின் பின்புறம் பார்த்த சோமஸ்கந்த அழகு சிற்பம் என அந்த கடற்கரை ஆலயம் மெதுவாக உருகும் கருமெழுகு என காலத்தின் கடலில் தன்னை அரித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அங்கே ஹம்பியில் ஒரு சிற்பத்தில் பெண் ஒருவரைஆண் முத்தமிடும் சிற்பம் பேச தொடங்கியது அக்கணம். புராணங்களிலிருந்து கதைகளின் ஒரு காட்சிகளை கல்லில் உறை ஒவியம் என ஆக்கி சென்ற கலை குவியல்கள் ஹம்பியில். ஒர் மண்டபத்தின் சிற்பங்களை மட்டும் பார்க்க, பார்த்தவைகளிலிருந்து செல்ல வேண்டிய சிறு உள் பயணம் என சில மணி நேரமாவது வேண்டும். அத்தனை நுணுக்க தொகைகள். அந்த ஆற்றங்கரை மாலையில் அமர்ந்து விட்டு வருகையில் காலம் உறைந்து நதியென ஒடியபடி இருந்தது. ஹம்பியின் கால வெறுமை, இன்மையின் தன்மை, பல லட்ச மக்களின் இடப்பெயர்தல்களின் ஒலம் அங்கு இன்னமும் காற்றில் இருக்கும் என தோன்றும் படியான சப்தங்களை தாண்டிய ஆழமைதி, வழிபாடு மறைந்து போய் மக்கள் திரள் ஏறி மிதிக்கும் கருவறை இல்லா கோவில்கள் தந்த அயர்ச்சி என மறக்க முடியா துயர் கனவு என இருந்தாலும் கேண்மை தேறல் என்று நீங்கள் சொன்ன அந்த மனமொத்த கூட்டத்தில் அந்த முதல் பயணத்தில் இருந்த சிரிப்பும் உற்சாகமும் என்றும் நினைவில் இருக்க போதுமானவை.

இன்னும் என்ன மீதம் இருக்கிறது என்பதை விட, எதை அவர் தொடங்கி வைத்தார் என்பது தான் பிரதானம். அவர் பகிர்ந்து கொண்டவை மனதில் ஓட்டி பார்த்து கொள்ளலாம். எனினும் ஒரு பயணத்தின் சுழி என அவர் வகுப்பில் நடந்தது. ஆறு மாதங்களுக்கு பிறகு திரும்பி பார்க்கையில், அந்த அறிதல்கள் அமைத்து கொடுத்தவை, ஆலயத்தை மொத்தமாக பார்க்கும் பார்வையை மாற்றி விட்டன என்று தோன்றுகிறது. தத்துவம் என அழகு என வரலாறு என கலையின் விரிவு என வழிபாடு என ஒரு ஆலயம் பல தளங்களாக ஒரிடத்தில் இருக்கின்றன என தோன்றுகிறது. அப்படி பார்க்க தொடங்குவதின் சிறு முன்னெடுப்பு இந்த வகுப்புகளும் பயணமும் என சொல்லிக் கொண்டாலும் இன்னமும் ஆழம் செல்ல வேண்டுமானால் அது கோரும் அவை சார்ந்த வாசிப்பின் உழைப்பு தெரிய ஆரம்பிக்கிறது.

 

மிக்க நன்றிகளுடன்,

 

லிங்கராஜ்.

முந்தைய கட்டுரைஅறம், ஜிகிர்தண்டா, சைரன்
அடுத்த கட்டுரைஇரவு – ஓர் உரையாடல்