ஆலம் மின்னூல் வாங்க
ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்
அன்புள்ள ஜெ,
நலம். உங்கள் அமெரிக்கப்பயணம் இனிதே முடிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ஆலம் கதை வெளிவந்த நாட்களிலேயே படித்து முடித்துவிட்டேன். எனக்கு திருநெல்வேலி மாவட்டம் நல்ல பழக்கம் என்றாலும், இக்கதை படிக்கும் போது அந்நிலத்தின் மீது ஏற்பட்ட உணர்வு வேறு.
நம்மால் நடத்தி கொள்ள முடியாத பல்வேறு வகையான உணர்ச்சிகளை சொல்லாலும், இசையாலும், மற்றும் பல கலைகளாலும் வெளிப்படுத்த முடியும். ஒரு மனிதன் தனக்கு எட்டாத ஒன்றை கற்பனை மூலம் அடைந்தும்,அழித்தும் கொள்கிறான்.
நேற்று இரவு வியன்னா- வில் ஒரு இசை பேரனுபவத்தை கேட்டேன். ஒரு வெறித்தனமான பியூர் நாய்ஸ் (Noise, experimental, post-rock) இசை (Swans எனும் குழுவின் இசை). மனிதனின் விருப்ப வெறுப்புகளை, அவன் உள் மனதின் எண்ணங்களை, அவன் காதலை, காமத்தை என பல உணர்ச்சி நிலைகளை வெளிக்காட்டும் ஒரு இசை அனுபவம்.
அஜிதன் நடத்திய பீத்தோவன் இசை பயிற்சி முகாம்- 2022ல் கலந்து கொண்டேன். அப்போது கிடைத்த அனுபவம் வேறு. மேற்கத்திய இசையில் பீத்தோவன் ஒரு பெரும் புள்ளி. அவரின் இசையை ஏற்கனவே பல முறை கேட்டு இருந்தாலும், அஜிதனின் இசை பயிற்சிக்கு பின் வேறு ஒரு நிலையில் புரிந்து கொள்ள முடிகிறது. இசையின் படி நிலையும், அதன் இன்பமும், அதற்கு அஜிதன் அளித்த பார்வையும் மிக்க பொருத்தம்.
பீத்தோவன் ஒரு ஆகம முறையை பின் பற்றும் தெய்வம். அவர் இசையை அல்லது கிலாசிக்கல் என்று கூறும் அனைத்து இசை கலைஞர்களும் மனிதனின் பக்தியை மெச்சி, அவன் கேட்டவுடன் அருள் புரியும் தெய்வங்கள்.
ஆனால், இவ்விசையை, நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறை என கொள்ளலாம். பல முறை கண்ணீர் விட்டு, பல முறை பாவ மன்னிப்பு கோரி, பல வதங்களை செய்ய தூண்டும் ஒரு இசை. வதைத்து விட்டால் தீரும் என நாம் எண்ணி சூர சம்ஹாரம் முடிந்த பின்னும், இன்னும் சிறு வஞ்சம் மிச்சம் இருக்கும் என அடுத்த இசை துவங்கும் போது தெரியும்.
நேற்று, அவ்வாறு அந்த இசையில் மூழ்கி இருக்கும் போது, என்னுள் ஆலம் ஏற்படுத்திய அனைத்து உணர்ச்சிகளையும் என்னால் எடுத்து வர முடிந்தது. வித விதமாக பாவ மன்னிப்பு. பல சூர சம்ஹாரம் அந்த இசை அனுபவத்தில் (இரண்டு மணி நேரத்தில்).
ஆலம் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளிவர அவை அனைத்தும் அந்த இசையின் பின்னணியில் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு இசையின் உச்சத்தின் போதும் சந்தானம் கூரிய அவர் தரப்பின் நியாயம், வீரலட்சுமி தன் மகனுக்காக ஏங்கி அழுது பாவ மன்னிப்பு கேட்பதுமான ஒரு உணர்ச்சி படிமம் அமர்ந்தது.
ஆலம் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நாமும் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் சந்தித்து இருப்போம். அவ்வாறு நான் சந்தித்த கதாபாத்திரங்களுக்கு என்னுள் பாவ மன்னிப்பு வழங்கியும், சில சூர சம்ஹாரங்கள் நிகழ்த்தியும் ஒரு சிறு நீதியை எனக்குள் வழங்கி என் கடந்த காலங்களுக்கும் நிகழ் காலத்திற்கும் சமரசம் செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்தது.
ஆலத்தின் உணர்ச்சி நிலைகள் பல. அவற்றை புரிந்து கொள்ளும் வகையில் ஆலத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.
ஷர்மிளா ராஜூ.