வேண்டிய ஒருவர் வலுவாக சிபாரிசு செய்தமையால் இந்த வானொலிப்பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன், இந்த வானொலி பற்றி அப்போது எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி பேட்டியாளருக்கு அனேகமாக ஏதும் தெரியாது. இணையத்திலிருந்தும் பலவகை வம்புகளிலிருந்தும் கேள்விகளை தொடுத்துக்கொண்டு கேட்டார். அனேகமாக எல்லா கேள்விகளுமே எதிர்மறையானவை. ‘மடக்கிவிடும்’ நோக்கம் கொண்டவை.
பேட்டியில் அரசியல் கேட்ககூடாது, பேசமுடியாது என்று முன்னரே நிபந்தனை விதித்திருந்தேன். ஆனால் வானொலி நெறியாளர் அதற்கு ஒப்புக்கொண்டாலும் பேட்டியில் அதை கடைப்பிடிக்கவில்லை. ஒரு வெளிநாட்டில், சுற்றுலா விசாவில் வந்த பயணி அரசியல் பேச முடியாது என்பதைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அவர்கள் அறியாத ஒன்றுண்டு. அது இந்தவகையான எவருமே அறிந்திராதது. நான் 1990ல் ஓர் இலக்கியக்கூட்டத்தில் கேள்வி கேட்ட அரசியலாளரிடம் சொன்ன பதில் அன்று பரவலாகப் பேசப்பட்டது. “தம்பி, உன்னுடைய அறிவுத்திறன் அல்லது வாசிப்பைக் கொண்டு என்னையல்ல, ஏதேனும் ஒரு நல்ல எழுத்தாளனை மடக்கி விடலாம் என்று உண்மையாகவே நம்புகிறாயா?”