ஆலம்- வி.எஸ். செந்தில்குமார்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தினந்தோறும் பல நிகழ்வுகளை கேட்கிறோம், பார்க்கிறோம், அறிகிறோம். அதில் எது படைப்பாக மாறுகின்றது? நிகழ்வுகளை சுவாரசியமாக, தேர்ந்த மொழியில்  கூறுவதனால் மட்டுமல்ல, நீங்கள் குறிப்பிடுவது போல் அதில் ஒரு அடிப்படை கேள்வி உருவாகுமெனில், வாழ்க்கையை பற்றிய ஒரு பார்வை அல்லது தரிசனம் இருக்குமென்றால் அது என்றென்றும் நீடித்து இருக்கும் சிறந்த படைப்பாக அமைகிறது.

இன்றும் பெரும்பான்மையோரால் நம்பப்படும் டார்வினின் புகழ்பெற்ற  “தகுதியானது பிழைத்து வாழும்” (Survival of Fittest) என்ற கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள். “ஒரு உயிரினம் வாழ்வது அதன் தகுதி அடிப்படையில் இல்லை மாறாக சூழல் அளிக்கும் வாய்ப்பினால்”  என்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறீர்கள். இதை நிறுவுவதற்கு அல்லது விவாதிப்பதற்கு ஒரு புனைவை உருவாக்குகிறீர்கள். மொத்த படைப்பும் இந்த அடிப்படையான வினாவிற்கான பதில் நோக்கியே பயணிக்கிறது.

எனது தகுதியால். திறமையால் வாழ்வை சிறப்புடன், நிறைவுடன் அமைத்து விட்டேன் என்று எண்ணியிருக்கையில் ஒரு சூழல் உருவாகிறது அதில் மொத்த வாழ்வும் தலைகீழாகிறது. எனது தகுதி, திறமை, அறிவு எதுவும் உதவவில்லை. சூழலின் பிடியில் சிக்கி சுழல்கிறேன். உண்மையில் சூழல் செய்தது எனக்குள் இருக்கும் நஞ்சை சற்று கிளறிவிட்டது மட்டும்தான். எனக்குள் உள்ள அந்த கிருமியை பிறகு நானே நக்கி நக்கி பெரிதாக்கி என்னையே அழிக்க பயன்படுத்துகிறேன். இல்லை அது என்னை பயன்படுத்தி அழித்துவிடுகிறது. சூழல் சற்று தள்ளி நின்று சிரித்துக்கொண்டிருக்கிறது.

எனக்கு நெருக்கமான ஒரு பெருவாழ்வு வாழ்ந்த குடும்பம் தற்போது பணத்தை இழந்து, பெருமை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும். ஐந்தே நிமிடத்தில் தீர்த்து விடக்கூடிய பிரச்சனை, ஆனால் யாரும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இல்லை, இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்குமளவுக்கு நடவடிக்கைகள் உள்ளன. எப்படி யோசித்தாலும் இவர்கள் ஏன் தங்களை அழித்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்களுக்குள் இருக்கும் நஞ்சு வீறுகொண்டு வேலை செய்கிறது. அவர்கள் ஆணவம் கொண்டிருக்கவில்லை. ஆணவம் அவர்களை கொண்டுள்ளது. நான் யார் என்பதை நிரூபிக்க எதையும் இழக்க தயாராக இருக்கிறார்கள் தங்கள் வாழ்க்கையை உட்பட

கோபம்மோகம், காமம், ஆணவம், வன்மம் என பல கிருமிகள் நமக்குள் சூழலுக்காக  காத்துக்கொண்டிருக்கின்றன. வாய்ப்பு வருகையில் நம்மை கொண்டே நம்மை அழித்து விடுகிறது. டார்த்தீனியம் கதையில் வருவது போல் நாமே அதை ஆசை ஆசையாய் வளர்க்கிறோம்.

V.S. செந்தில்குமார், சென்னை

முந்தைய கட்டுரைகுதிரைகளுடன் பேசுபவன்
அடுத்த கட்டுரைவழி, இணைய இதழ்