“ஜெட்லாக்”

அன்புள்ள ஜெ,

இவ்வளவு தூரம் விமானப் பயணம் மேற்கொள்கிறீர்கள். அடுத்த நாளே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள். உங்களுக்கு ஜெட்லாக்  (விமானப் பயண அசதி) வராதா என ஆச்சரியமாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்தபட்சம் பலர் மிக அசதியுடன் இருப்பர்.

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

இதை என் வெளிநாட்டுப்பயணங்களிலெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நான் திரும்பத் திரும்ப பதிலளிப்பேன். நான் 2001 முதல் வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்கிறேன். ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா என இந்தியாவில் இருந்து 12 மணிநேரத்தொலைவிலுள்ள ஊர்களுக்கு பயணம் செய்துள்ளேன். இதுவரை ஜெட்லாக் என குறிப்பிடப்படும் அச்சிக்கலை அறிந்ததே இல்லை.  எவ்வகையிலும். அது என்ன என்று என் உடலைக் கூர்ந்து கவனித்து புரிந்துகொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.

நான் விமானங்களில் மிகநன்றாகவே தூங்கிவிடுவேன். அண்மைக்காட்சிச் சிக்கல் காரணமாக விமானங்களில் என்னால் படம்பார்க்கம்முடியாது. அரைமணிநேரம் பார்த்தாலே மிகுதி. (இம்முறை அமெரிக்கப் பயணத்தில் அவதார் 2 பார்த்தேன். என்ன ஒரு அபத்தமான, கற்பனையே இல்லாத , சில்லறைத்தனமான திரைக்கதை. திரும்பத் திரும்ப மாட்டிக்கொள்ளுதல், தப்பித்தல் மட்டுமே. அதை சிறிய திரையில் பார்க்கையில் எள்ளளவு சுவாரசியம்கூட உருவாகவில்லை). உள்ளூர் பயணங்களின்போது  விமானத்தில் இருந்தபடி ஒரு கதை எழுதினேன்.   

பொதுவாக நான் பயணங்களில் உற்சாகமாக இருப்பேன். உடல்நிலையை சரியாக வைத்திருப்பேன். சிறிய சிக்கல்களை பொருட்படுத்த மாட்டேன். ஆகவே சென்ற ஊரில் முதல்நாளே முழுமையாக திளைக்க ஆரம்பித்துவிடுவேன். கொஞ்சம் தூக்கம் வருவதுபோல் இருக்கும், ஒரு ஐந்து நிமிடம். உடனே எழுந்து ஒரு நடை செல்வேன். அல்லது  ஏதாவது வாசிப்பேன். முதல்நாள் பகலில் விழித்திருந்து அந்த ஊர் நேரத்துக்கு இரவில் தூங்கிவிட்டால் உடற்கடிகாரம் ஒழுங்கமைந்துவிடும். மறுநாள் அந்த காலத்தில் புத்தம்புதிய காலையுடன் இருக்கும்.

சில நடைமுறை நுட்பங்களை கண்டடைந்துள்ளேன். ஒன்று, சென்ற ஊரில் கூடுமானவரை வெளியே வான்கீழ் இருக்கவேண்டும். வெயில் இருந்தால் மிக நல்லது. கண்வழியாக அது பகல் என்னும் செய்தி மூளைக்குச் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.  அது பகல் பகல் என நாம் சொல்லிக்கொள்ளவேண்டும். நம் உடம்பை நம்பவைப்பது மிக எளிது. நாம் நம்பினால்போதும்.

பெரும்பாலான ஜெட்லாக் பிரச்சினைகள் நாம் அதை ரசிப்பதனால் உருவாகின்றன. நல்ல தூக்கத்தை நாம் விரும்புகிறோம். ஆகவே பகலில் தூக்கம் வந்தால் அதை தவறவிடுவதில்லை. முதல்நாள் பகலில் தூங்கினால் அதை உடல் வழக்கமாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இன்னொரு பிரச்சினை, நாம் குளிர்நாடுகளுக்குப் போனால் அங்குள்ள குளிரும் வெயிலில்லா மங்கல் வானமும் சேர்ந்துகொண்டு நம்மை தூங்கு தூங்கு என்கின்றன. அதை வெல்லவேண்டும்.

இதேபோன்றுதான் பயணங்களில் வரும் உடல்நிலைச் சிக்கல்களும். நான் கடைப்பிடிக்கும் இரு வழிகள். ஒன்று, எங்கும் தூய நீரையே அருந்துவது. அதில் சமரசம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் புட்டிகளில் அடைக்கப்பட்ட நீர் தவிர எதுவுமே இந்தியாவில் பாதுகாப்பானவை அல்ல. இங்கே நீரில் பலவகை பாக்டீரியாக்கள். எங்கும் தூயநீர் பற்றிய புரிதலும் இல்லை. எந்த நீரையும் நம்பி குடிக்க முடியாது. இரண்டு, வெளிநாடுகளுக்குச் சென்றால் ஆரஞ்சுப்பழச்சாறு முடிந்தவரை அருந்துவேன். பொதுவாக பழங்கள் நிறைய உண்ணக்கூடியவன் நான். உடல்நலத்துக்கு அது உகந்தது. ஆரஞ்சுப்பழச்சாறு பலவகையில் நம்மை பாதுகாக்கிறதென்று நினைக்கிறேன்.

மற்றபடி உணவு ஒத்துக்கொள்ளாமை, தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளாமை உள்ளிட்ட எந்த நோயும் இதுவரை வந்ததில்லை. எல்லா உணவையும் உண்பேன். எல்லா வகை மாமிசங்களும் பிரியத்துக்குரியவையே. வெளிநாடு சென்றால் இந்திய உணவை நாடிச்செல்ல மாட்டேன். அந்த ஊர் உணவே உகந்தது. அதில் சிறந்ததே நல்ல உணவு என்பது என் அறிதல். 

(ரோமில் அருண்மொழி இட்லிக்கு ஆசைப்பட்டாள். தேடிச்சென்று ஓர் இந்திய உணவகத்தில் அமர்ந்து ஆணை அளித்தோம். அந்த அம்மணி குளிர்ப்பெட்டியை திறந்து பாலிதீன் உறையில் வைக்கப்பட்டிருந்த இட்லிகளை எடுத்து ஓவனில் வைத்து சூடு பண்ணி அளித்தாள். இப்போது அருண்மொழி வெளியூர் சென்றால்  இந்த ஊர் சாப்பாடே போரும் ஜெஎன சொல்ல ஆரம்பித்துவிட்டாள்)

சென்ற 30 அக்டோபரில் ஊர்திரும்பினேன். அன்று முழுக்க எழுத்துவேலைகள். மூக்குக்கண்ணாடியில் ஒரு சிக்கல் அதை சரிசெய்யச் சென்றேன். அப்படியே லியோ என்னும் படத்தை பார்த்தேன். மின்னஞ்சல்களை அனுப்பி முடிக்க எட்டு மணி. ஒன்பதுக்கெல்லாம் கட்டையை சாய்த்துவிட்டேன். 31 ஆம் தேதி காலைநடை செல்லும்போதே அயிலை, சாளை மீன்களை வாங்கி வந்தேன். வங்கி சென்று வரும் வழியில் மரச்சீனிக் கிழங்கு. உள்ளூர் சுவை. எஞ்சியிருந்த அமெரிக்கக் கறையையும் கழுவி தூய நாரோயில்காரன் ஆகிவிட்டேன். மாலையே சென்னை. சினிமா, சினிமா

ஜெ 

முந்தைய கட்டுரைமு.மேத்தா
அடுத்த கட்டுரைநூலகங்களில் என் நூல்கள்