அமெரிக்காவில் நான் இருந்தபோது சுவாரசியமான ஒரு கடிதம் வந்திருந்தது, நண்பர் வேலாயுதம் பெரியசாமி குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்குச் சென்றுவிட்டு புகைப்படங்களுடன் எழுதியிருந்தார். (மதுரை, ஜெர்மனி,குலசை- வேலாயுதம் பெரியசாமி). அம்மனின் அருளுக்காக உக்கிரமான தோற்றம் கொண்ட தெய்வங்களாக வேடமிட்டு ஆடும் பக்தர்கள். அவர்களில் பலர் குழந்தைகள்.
பதினாறு கைகள் கொண்ட காளிக்கு ஐந்து வயதுதான் இருக்கும். வீரப்பல்லும் வெறித்த விழிகளும் நீண்ட கூந்தலும் கொண்ட மாடசாமிக்கு ஏழு எட்டு வயது இருக்கலாம். பெரும்பாலான கொடுந்தெய்வங்கள் அப்பா தோளில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்த்தன.நீண்ட ஆயுளுக்காக வேண்டிக்கொள்ளப்பட்டவர்கள். நேந்த ஆபத்தில் இருந்து தப்பித்தமையின் நன்றியுடன் வந்தவர்கள். தெருவெங்கும் உக்கிரங்களும் வெறிகளும் அருள்களும் வண்ணத்ததும்பல்களாக நிறைந்திருந்தன.
அன்று நான் அமெரிக்காவில் ஆஸ்டினில் சௌந்தருடன் காலைநடை சென்றிருந்தேன். வீடுகள் தோறும் வரவிருக்கும் ஹாலோவீன் நாளுக்கான பேயலங்காரங்கள். விதவிதமான கெட்ட ஆவிகளை கற்பனைசெய்து உருவங்களாக நிறுவியிருந்தனர். பெரும்பாலும் எலும்புக்கூடுகள். மண்டையோட்டில் எழுந்த வெறிச்சிரிப்புகள். பறக்கும் புகையுடல் கொண்ட, முகம் திரளா ஆவிகள். துடைப்பக்கட்டை ஏந்திய சூனியக்காரிகள். எல்லாமே சிரித்துக்கொண்டிருந்தன, வசீகரித்துக்கொள்ள முயன்றன
குழந்தைப்பேய்களும் இருந்தன. குழந்தையாகத் தெரியும்போதே அவற்றின் கண்களின் கொடிய வெறிப்பும் வாயில் திரண்ட வன்சிரிப்பும் பேயென்றும் காட்டின. மேலைப்பண்பாட்டின் அழகிய உருவகங்களில் ஒன்று குழந்தை வடிவு கொண்ட தேவதைகள்- செரூப் எனப்படுபவை. அவையே பேய்களுமாக ஆகியிருந்தன. பலவகையான சிலந்திகள், ஓணான்கள், தேள்கள் பேய் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. பறக்கும் வௌவால்களாக சில பேய்கள். அமர்ந்திருக்கும் கரிய காகங்களாகச் சில பேய்கள். ஆனால் நாகம் இல்லை.
சில பேய்ப்பொம்மைகளுக்கு இருபதடிக்குமேல் உயரம். சிலவற்றில் இயந்திரங்கள் சேர்க்கப்பட்டு, நாம் கடந்துசெல்லும்போது உக்கிரமான சிரிப்புடன் எழுந்து கொண்டன. கைகளை அசைத்து நடனமிட்டன. உள்ளே காற்று ஓடிய சில பேய்ப்பாவைகள் நடனமிட்டன. சில பொம்மைகள் தீவிரமாக ஆயுதங்களை அசைத்தன. சில பொம்மைகள் தாளாக்காதலுடன் வா வா என அழைத்துக்கொண்டிருந்தன.
ஹாலோவீன் மாதத்தில் அப்படி வீட்டை பேயலங்காரம் செய்துகொள்வது அங்கே ஒரு கொண்டாட்டம். சிறந்த கிறிஸ்துமஸ் மரத்துக்குப் பரிசளிப்பதுபோலவே ஹாலோவீன் அலங்காரத்துக்கும் பரிசு உண்டு. அதற்காக பெரும்பணம் செலவழித்து இல்லங்களை கொடூரமாக அலங்கரித்துக் கொள்கிறார்கள். அரசு அலுவலகங்களில்கூட அலங்காரங்கள் உள்ளன. நியூஜெர்ஸியில் பழனி ஜோதியின் ஊரின் மேயர் ராம் அன்பரசன் அலுவலகம் சென்றிருந்தேன். அங்கும் உள்ளேயே ஹாலோவீன் பேய் தொங்கிக்கிடந்தது.
ஹாலோவீன் அன்று சிவப்புப் பூசணிக்காய்களை இளித்த வாயும் பற்களும் கண்களுமாகச் செதுக்கி உள்ளே விளக்கேற்றி தொங்கவிடுவதே பண்டைய வழக்கம். அது பேய்கள் இல்லத்தை அணுகாமலிருக்க செய்யும் என நம்பப்பட்டது. இங்கே ஏற்கனவே ஒரு பேய் காவலிருப்பதாக பேய்கள் எண்ணிவிடும்.எல்லைப்பிரச்சினை வரக்கூடாது என்று விலகிச்சென்றுவிடும். பின்னர்தான் வெவ்வேறு பேயுருக்களை வைக்க ஆரம்பித்து இன்று அதுவே ஒரு பெரிய வணிகமாக ஆகிவிட்டிருக்கிறது.
ஹாலோவீன் நாளுக்கு முன்னராக பழைய பொருட்களைக் கழித்துக்கட்டும் ‘கரேஜ் சேல்’ நிகழ்கிறது. நான் கிளம்பும் அன்று நியூஜெர்ஸியில் தெருவெங்கும் கரேஜ் சேல் போட்டிருந்தனர். பழைய பொருட்களை கொண்டுவந்து சாலையோரம் வைத்து சல்லிவிலைக்கு விற்கிறார்கள். பொதுவாக ஓரிருமுறை பயன்படுத்தப்பட்ட பொருட்கள். நல்ல பொருட்களைக்கூட வாங்கலாம். எவருக்கும் அவற்றை வாங்குவதில் உளத்தடை இருப்பதுபோலவும் தெரியவில்லை. நான் 2015ல் கனடாவில் ஒரு நல்ல கோட்டு வாங்கினேன். அதை விற்ற பாட்டி அவள் மகன் வாங்கி ஒரே முறை மட்டுமே போட்டது என்றாள். சலவைசெய்து பாலிதீன் உறைக்குள் புதியதுபோல் வைத்திருந்தாள். இப்போதும் மலைப்பகுதிப் பயணங்களில் பயன்படுகிறது.
ஹாலோவீன் அக்டோபர் 31 அன்று இரவு கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்களும் சிறுவர்போன்ற முதியவர்களும் பல்வேறு பேய்வடிவங்களை மாறுவேடமாக அணிந்துகொண்டு வீடு வீடாகச் சென்று கதவைத்தட்டி கதிகலங்கச் செய்து சீனிமிட்டாய்களை பரிசாகப்பெறுவது வழக்கம். அதற்கென்றே பலவண்ணங்களில் சீனிமிட்டாய்கள் விற்கப்படுகின்றன. மிட்டாய்க்கலர் என்றே அருண்மொழி சில வண்ணங்களைச் சொல்வாள். ராமராஜன் வண்ணம் என நான் சொல்வதுதான். கூடவே டாலரில் பரிசுத்தொகை கொடுக்கும் வழக்கமும் உண்டு. அன்று தெருவெங்கும் பேய்கள் அலையும். நிஜப்பேய்கள் பயந்து ஒளிந்துவிடும்.
அமெரிக்காவில் எல்லாமே முன்னரே தொடங்கிவிடுகின்றன. எதை எப்படி கொண்டாடலாம் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். கொண்டாடவில்லை என்றால் வணிகர்கள் விடப்போவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே உற்பத்தி நிகழ்ந்துவிட்டது. கிறிஸ்துமஸ் மரம் உற்பத்தி செய்து விற்பதே பெருந்தொழில் அங்கே. மலிவு விலையில் எல்லாவகையான ஏசுநாதர்களும் கிடைப்பார்கள். ‘ஆர்டரின் பேரில் ஸ்பெஷலாக’ செய்து தரவும்படும். நியூயார்க் நகரில் நிற்கையில் ஒரு ஹாலோவீன் ஊர்வலம் நிகழ்வதைக் கண்டேன். சூனியக்காரிகளும் பேய்களும் குட்டிப்பேய்களும் சென்றன. அவற்றில் சிலர் இந்தியர்கள் போலிருந்தனர். நம்மவரில் அடுத்த தலைமுறை அங்கே உருவாகிவிட்டிருக்கிறது. அங்கே இருக்கும் பேய்களில் கலந்துவிட்டிருக்கிறது .
உலகமெங்கும் நோய்க்காலம் என ஒன்று பழங்குடிகளால் அடையாளம் காணப்பட்டிருக்கும். நமக்கு அது சாரல் மழைபெய்யும் ஆடிமாதம் மற்றும் முன்மழைக்காலமான ஐப்பசி- கார்த்திகை மாதங்கள். பழையன கழித்தல், விளக்கேற்றி தீயசக்திகளை விலக்குதல் ஆகியவற்றை நிகழ்த்தும் திருவிழாக்கள் இந்தியாவெங்கும் உள்ளன. கார்த்திகைதீபமும் தீபாவளியும் எல்லாம் அவ்விழாக்களின் தொடர்ச்சிகள். அதன் பின்னரே கோடைவிழாக்கள். கேரளத்தில் மழை விட்டு வானம் வெளித்தபின் ஓணம் வருகிறது. நமக்கு பொங்கல்.
ஹாலோவீன் அப்படிப்பட்ட தொன்மையான ஒரு விழா. பழைய கெல்டிக் பழங்குடிகள் கொண்டாடிய சௌ-இன் (Samhain) என்னும் விழா இது. கோடைக்காலம் முடிந்து, அறுவடை நிறைவுற்று, இருண்ட குளிர்காலத்தின் தொடக்கமாக இந்த நாளை கணக்கிட்டனர். பேய்கள் மண்ணுக்குள் இருந்து எழுந்து வரும் நாள். கோடையில் செடிகள் தளிவிடுகின்றன அல்லவா, அதைப்போல. அப்பேய்கள் உருவாக்கும் நோய்கள் பெருகவிருக்கும் தொடக்கப்புள்ளி இந்நாள்.நோய்களை உருவாக்கும் தீய ஆவிகளை விரட்டும்பொருட்டு பேய்வடிவில் முகங்களை இல்லங்கள் முன் படைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.
எட்டாம் நூற்றாண்டில் பாப்பரசர் மூன்றாம் கிரிகோரி நவம்பர் 1 நாளை அனைத்துப் புனிதர்களுக்கும் உரிய நாளாக அறிவித்தார். அது கெல்டிக் பேய்விழாவை தடுக்கும் நோக்கம் கொண்டது. பேய்களை விரட்ட பேய்களையே வழிபடுவதைவிட புனிதர்களை வழிபடலாமே? ஆனால் மக்களால் பேய்களை விடமுடியவில்லை. அனைத்துப்புனிதர் நிகழ்வுடன் கெல்டிக்குகளின் விழாவும் இணைந்துகொண்டது. பேய்களை விரட்டுவதுடன் பழையனவற்றை எரித்து தூய்மைசெய்துகொள்வதும் எல்லாம் சேர்ந்து ஹாலோவீன் கொண்டாட்டமாக ஆகியது . இன்று ஹாலோவீன் கிறிஸ்தவத்தின் ஏறத்தாழ எல்லா பிரிவினருக்கும் உரிய பொதுக் கொண்டாட்டமாக உள்ளது. மதமிலிக்களுக்கு அதிலுள்ள பேய்கள் மட்டுமே போதுமென்றாகிவிட்டது.
நிஜப்பூசணிக்காய்களை வெட்டி தொங்கவிட்டிருந்த இல்லங்கள் சிலவே. பெரும்பாலான இல்லங்களில் கடைகளில் வாங்கப்பட்ட பிளாஸ்டிக் பூசணிக்காய்கள். ஒரு பல்லடுக்குக் கடைக்குச் சென்றிருந்தோம். அங்கே இளிப்புவாய் வெட்டப்பட்ட பூசணிக்காய்களைப்போன்ற பிளாஸ்டிக் உருளைகள் குவிக்கப்பட்டிருந்தன. மிகப்பெரியவைகூட உண்டு. ஒரு பூசணிக்காய் அருகே சென்று நின்றேன். என்னருகே ஓர் அசைவு. என் வலப்பக்கம் பொருளடுக்கில் இருந்து குட்டிப்பேய் ஒன்று எட்டிப்பார்த்து இளித்தது. என் கையில் இருந்த சாக்லேட்டை பார்க்கிறதா என்ற ஐயமும் எனக்கு வந்தது. ரத்தச்சாக்லேட் என ஏதாவது ‘பிராண்ட்’ உண்டா என்ன?
வசந்தத்தில் உயிர்ப்பெருக்கிப் பொலியும் மண் மழைக்காலத்தில் நோயூறுவதாக ஆகிவிடுகிறது. குளிரில் நச்சுக்காளான்கள் அதில் முளைக்கின்றன. விவசாயத்தில் மண் அமுது. வீட்டுக்குள் வருகையில் அழுக்கு. தெய்வம்தான், ஆனால் பேயுமாகும் அல்லவா?
எத்தனை அச்சம். மானுடனின் அச்சம்தான் இப்படி இளிக்கிறது. எதையெல்லாம் அச்சம். துடைப்பமேந்திய சூனியக்காரியில் தெரிவது இரண்டு அச்சங்கள். அழுக்கின்மீதான அச்சம். முதுமைமீதான பேரச்சம். செத்துப்போன அனைவர்மீதும் அச்சம். அஞ்சி அஞ்சி வாழ்ந்திருக்கிறான் மனிதன். அச்சத்தையே பெருக்கிக்கொண்டு அச்சத்தை எதிர்கொண்டிருக்கிறான் . அச்சத்தை எதிர்க்கும் ஆயுதமென அச்சம். அச்சமே பேய். தெய்வமும் அதுவே.
அஞ்சித்தான் வாழவேண்டியிருக்கிறது. இந்தப் பூமியை நாம் அறிந்துவிட்டோம் என எண்ணுகிறோம். வென்றுவிட்டோம் என நிமிர்கிறோம். இளித்த சிரிப்புடன் ஒரு கொடுந்தொற்று எழுந்து வந்து பேருருக்கொண்டு நம் முன் நிற்கிறது. இது வெல்லமுடியாத ஒரு சமர் என நமக்கு உணர்த்துகிறது. தீபாவளி வரவிருக்கிறது. நரகாசுரன் மண்ணின் வடிவம். அவனை வென்ற தேவியோ அனல். எது மூத்தது, எது அறுதியாக எஞ்சுவது? எவர்சொல்லக்கூடும்?
ஆனால் குலசைக் கொண்டாட்டத்தை எண்ணிக்கொண்டபோது ஒன்று தோன்றியது. அச்சத்தை பேயென்றாக்கிக் கொண்டாடுவது சரியா? அதையே தெய்வமெனக்கொண்டு வழிபடுவது சரியா? நான் வழிபடவே விரும்புவேன். என் முன் ஒரு பேய் தோன்றினால் அதை அக்கணமே தெய்வமென்றாக்கிவிடுவேன். அதை வழிபடுவேன், கொண்டாடுவேன். அது திகைத்து நின்றுவிடும். அது ஒன்றும் பெரிய ராஜதந்திரம் அல்ல. பெரிய நாயைப் பார்த்தால் குட்டிநாய் உடனே மல்லாந்து படுத்து அடிவயிற்றைக் காட்டி வால்குழைத்து நெளிவதுபோல. அல்லது எதிரிநாட்டு மன்னன் முன் மேளதாளத்துடன் நடனமிட்டுச் செல்லும் இருபத்துமூன்றாம் புலிகேசிபோல.