விடைபெற்ற வாசகி- கடலூர் சீனு

எழுத்தாளனும் வாசகியும்

இனிய ஜெயம்

வாசகி ராதா பாட்டி புவி நீக்கினார். காலை வழக்கம் போல அவரை வந்து பார்க்கும் அருகே உள்ள வீட்டினர் இம்முறை வருகையில் வீடு பூட்டியே கிடக்க, நேரம் செல்ல செல்ல விபரீதமாக உணர்ந்து கதவை உடைத்து உள்ளே செல்ல, பாட்டி குளியலறை அருகே விழுந்து கிடந்த வண்ணம் காண கிடைத்திருக்கிறார்.

அவ்வப்போது காலை நடையில் பாட்டியை காண செல்லும் வளவ துரையன் சார் இம்முறை அங்கிருந்து அழைத்து எனக்கு தகவலை தெரிவித்தார். பாட்டி வாசித்து தள்ளிய பவா உள்ளிட்ட எல்லோரையும் அழைத்து தகவலை சொன்னார்.

நான் சென்ற போது தகவல் வழியே அவரது தங்கை மகன் (ஒரே ஒருவர்) இறுதி சடங்கு செய்ய வந்திருந்தார். பக்கத்து வீட்டு பெண்கள் சிலர். பாட்டியை எப்போதும் உடன் இருந்து எங்கேனும் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர் மோகன். எதிர் மளிகை கடைகாரர். மெடிக்கல் ஷாப்காரர். வெறும் இத்தனை பேர் மட்டுமே பாட்டியை சுற்றி இருந்தோம். இறுதி சடங்கு செய்ய வந்திருந்த பாட்டியின் தங்கை மகன் என்னை யார் என்று விசாரித்தார். நானும் பாட்டியும் ஒண்ணா சேந்து புக்கு படிப்போம் அந்த வகையில் பாட்டியை தெரியும் என்று சொன்ன என்னை வினோதமாக பார்த்தார்.

பாட்டியின் வீட்டை அம்மாவுக்கு காட்டி இருந்தேன். அவ்வப்போது சென்று பாட்டியை பார்த்து வர சொல்லி இருந்தேன். பாட்டியை ஒரு முறை கஷ்டப்பட்டு எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். தேவை எனில் அவரும் என் வீட்டுக்கு வர வழி தெரியட்டுமே. ஒரு முறை பண்டிகை ஒன்றின் முதல் நாள் ராதா பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பரிசுகளுடன். அன்று முழுவதும் எங்களுடன் இருந்தார்.

அவ்வப்போது அவர் வீட்டுக்கு நான் போகும் போதெல்லாம் கதைகள் குறித்து கார சார விவாதம்தான். (இறுதியாக வெண்ணிலா எழுதிய நீரதிகாரம் தொடர் வாசித்து கொண்டிருந்தார்) கண்ணு மங்குதுடா tv யும் பாக்க முடில, படிக்கவும் முடில என்பார். அவரது பிரியத்துக்கு உரிய சுகா வின் அப்பா தவறியபோது சுகா எப்டி இருக்கோ என்று வருத்தபட்டார். சுகா ஷங்கர் இல்லாட்டி பாலு மகேந்திரா மாதிரி பெரிய டைரக்டரா வரணும் நேரம் அவருக்கு தள்ளி போகுது என்பார்.

எங்கேனும் ஊர் சுற்றி விட்டு பக்கிரி கோலத்தில் பாட்டியை பார்க்க போகும்போது. சின்னப் பயடா நீ, மூஞ்சி எப்டி இருக்கு பாரு, தாடியை வெட்டுடா என்பார்.  என் சிறு வயது முதல் நான் கண்ட ஒன்று உண்டு. என் நெருங்கிய நட்பு உறவு பலருக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் என் முகம் பிடிக்காது. முதல் கணம் அதை காட்டி பின்னர் கஷ்டப்பட்டு அதை தாண்டுவார்கள். அப்படி ஒரு விதி எனக்கு. முதல் கணம் அப்படி முகத்தை காட்டி விட்டதை சமாளிக்க தாடியை வெட்ட வேண்டியதுதானே, இப்படி ஏதாவது சொல்லி சமாளிப்பார்கள். பாட்டியும் அப்படி சொல்ல, ஏன் பாட்டி உங்களுக்கும் இந்த மூஞ்சியை பிடிக்கலையா என்று ஒரு முறை கேட்டேன். அட லூசு, அம்மாக்கு பிடிக்காத புள்ள மூஞ்சின்னு ஒண்ணு உலகத்துல உண்டா என்று கேட்டார்கள். அன்று முதல் என்னை பார்க்கும் போதெல்லாம் கன்னத்தை கிள்ளி முத்தம் தராமல் வழியனுப்பவே மாட்டார்கள்.

கொரானா வுக்கு பிறகு பாட்டியை பார்க்க போவதை பெரிதும் குறைத்து கொண்டேன். அருகே சென்றால்தான் நாம் பேசுவது அவருக்கு கேட்கும். முத்தம் தராமல் வழியனுப்பவும் மாட்டார்.  ஒரு சிறிய தொற்று காய்ச்சல் கூட தாங்கும் உடல் அல்ல பாட்டியுடயது. வயதாகி பூ போல ஆகி விட்டார்கள். (சொன்னால் போற சீவன் எப்டி போனா என்ன என்று பதில் சொல்வார்கள்). இந்த தூரம் அவரை நிச்சயம் வருத்தமுற செய்திருக்கும் என்று அறிவேன்.

பொதுவாக எவர் மரணத்துக்கும் நான் போவது அறிதே. பேசும்போது சிரித்தபடியே நான் போய்ட்டேன்னு தகவல் தெரிஞ்சா எங்க இருந்தாலும் நீ வந்துடனும் என்பார் எப்போதும். நான் மௌனமாக கேட்டுக் கொள்வேன்.

ராதா இதோ இன்று உன் தகவல் வந்தது. இதோ வந்து விட்டேன். எனக்கு உணவிட்டாய். உடை தந்தாய். அதன்பொருட்டல்ல. பாட்டி போலும் உறவு என்றும் அல்ல. உன் கணவன் உன்னை தனியே விட்டுப் போகலாம். உன் உறவுகள் உன்னை விட்டுப் போகலாம். நான் உன்னை தனியே விட மாட்டேன். நான் ஆராதிக்கும் அந்த இலக்கிய தெய்வத்தின், அதே தெய்வத்தின் பிள்ளைகள்தான் நீயும் நானும். உன் சக இலக்கிய உரையாடல் தோழனாக நிச்சயம் நான் உன்னருகே நிற்பேன்.

வெளியே வெயில் மறைந்தது, வானம் இருண்டது. சாரல் மழை பொழிந்து. இறுதிப் பயணம் கிளம்பும் முன்னர் ராதா பாட்டியின் முகத்தை பார்த்தேன். தனிமை தனிமை தனிமை. வாழ்நாளெல்லாம் தனிமை. இலக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமே அவள் உறவு. உயிர் பிரியும் கணம் அவள் என்ன நினைத்திருப்பாள்?

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று

ஒண்சுடரோன் வாரா தொளித்தான்

இம்மண் ணளந்த

கண்பெரிய செவ்வாய்நம் காரேறு வாரானால்

எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பார்ஆர் என்னையே?

சுகா அண்ணனுக்கு தகவலை சொல்ல அலைபேசியை எடுத்தேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைநாகராஜா கோவில்