விஷ்ணுபுரம் விழாவுக்கான என் சிறு நன்கொடையை அனுப்பியிருக்கிறேன். போதிய அளவுக்கு நிதி வந்துள்ளது என நம்புகிறேன். நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
அ.
அன்புள்ள அ
நன்றி.
விஷ்ணுபுரம் அமைப்பின் எல்லா நடவடிக்கைகளும் டிசம்பரில் நாங்கள் பெறும் நன்கொடைகளால் மட்டுமே நிகழ்கின்றன. ஓர் ஆண்டில் மூன்று இலக்கிய விழாக்கள் குறிப்பாக. இலக்கியவாதிகள் சிலருக்கான நிதியுதவியும் இதில் அடங்கும்.
சென்ற 2020 ல் கோவிட் தொற்று காரணமாக விழா நிகழவில்லை. ஆகவே நிதி பெறவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு கிடைத்த நிதியில் எஞ்சிய தொகை கோவிட் தொற்றுக் காலகட்டத்தில் பல உதவிகளுக்கு பயன்பட்டது. பின்னர் வந்த ஆண்டும் நிதி தேவைக்குச் சற்று மேலாகவே கிடைத்தது.
இந்த ஆண்டு பொதுவாக நிதி வரவு சற்றுக் குறைவுதான். பொதுவாக எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி மிகக்குறைவாகவே வருகிறது – தேவையில் பத்து சதவீதத்துக்கும் குறைவாக. சென்ற ஆண்டுகளில் அங்கும் இலக்கியப்பணிகள் நிகழ்வதனால் அங்கிருந்து நிதி மிகக்குறைவு என்னும் நிலை.
உள்ளூரில் நாங்கள் எவரிடமும் தனிப்பட்ட முறையில் இதுவரை நிதி கோரவில்லை. கார்ப்பரேட் நிதி பெறுவதுமில்லை. ஆகவே எங்கள் நிதி எப்போதுமே போராடிப்பெற்றுக்கொள்ளும் அளவிலேயே உள்ளது.
விஷ்ணுபுரம் அமைப்பு தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் முழுக்க முழுக்க நண்பர்கள் செலவுகளைப் பகிர்ந்துகொள்வது என்னும் அடிப்படையிலேயே நிகழ்ந்து வந்தது. விழா சற்றுப்பெரிதாகி, ஒன்றுக்குமேல் விழாக்கள் ஆனபோதே வெளியே நிதி கோரலானோம். இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கையில் இருந்தும் பணம் போடவேண்டியிருக்கும்.
இம்முறை சற்று அதிகமாகவே நாங்கள் சொந்தநிதியைச் செலவிட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
ஜெ