பிரபந்தம், கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு,

ராஜகோபாலன் அவர்கள் நடத்திய திவ்ய பிரபந்த வகுப்புகளில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது.

2 1/2 நாள் நடந்த அவருடைய வகுப்புகள் பற்றிய பதிவுகள் பல வந்து விட்டன. என்னுடைய பங்கிற்கு இந்தக் கடிதம்.

திவ்ய பிரபந்தங்கள் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை. நம் மரபில் பக்தியின் முகமாக இதை படிக்கவும் கற்கவும் அர்த்தம் கேட்கவும் சிலருக்கு வாய்ப்புகள் அமைய சாத்தியங்கள் உண்டு. எனக்கு பிரபந்தங்களின் அறிமுகமே தொடர்ந்து கேட்டு வந்த உபன்யாசங்கள் மூலம் தான். மார்கழியில் திருப்பாவை உபன்யாசம் கேட்க திருவான்மியூரில் இருந்து திருவல்லிக்கேணி போய் கேட்டு இருக்கிறேன்.

மரபான முறைகள் முதன்மையாக பக்தியை முன்வைப்பவை பெரும்பாலும் ஏற்கனவே கேட்கப்பட்ட அர்த்தத்தை அப்படியே பயில்பவர்களுக்கு கடத்த முயல்பவை. புதிய அர்த்தங்களோ அல்லது தனக்கு தோன்றிய வழிகளை சேர்ப்பதோ கூடாது என்பதை சொல்லப்படா கொள்கையாகக் கொண்டவை. மரபு வழிகளின் இலக்கு பக்தி என்பதால் பிற அனைத்து சுவைகளும் ஓரமாக வைக்கப்பட்டு விடும்-கவிதையின் சுவை அதிர்ஷ்டவசமாக முனைப்பு உள்ள யாருக்கேனும் வாய்க்கலாம்.

இந்த பிரபந்தம் கற்க்கும் பயிற்சியின் தொடக்கமே பக்தியை தள்ளி வைக்காமல் கூடுதலாக கொஞ்சம் கவிதை சுவையுடன் அனுபவிக்க பயிலும் பயிற்சியாக தொடங்கியது.

அதன் நீட்சியாக வைஷ்ணவத்தின் ஒரு தொகுப்பான அறிமுகமும் கொடுக்கப்பட்டது (அந்த சிறு அறிமுக தொகுப்பு முக்கியமானது — ராஜகோபாலன் அவர்களது உழைப்பு  ).

இவை முதலிலேயே கொடுக்கப்படும்போது இவை வைணவ முறையின் படி நாராயணனை முதன்மையாக வைப்பவை என்பதன் தெளிவையும் கொடுக்கிறது. அதற்கு பின் வைணவர்களோ, சைவர்களோ, வேறு மத நம்பிக்கையாளர்களோ நாஸ்திகர்களோ கூட ராஜகோபாலனின் மந்தஹாச புன்னகையுடன் சேர்ந்த கவிதை அழகில் ஆழ்வர்.

பாடல்களை மாலோலன் அவர்கள் எப்படி மாயாஜாலம் போல எடுத்து பாடுகிறார் என்பதை ஏற்கனவே கடிதங்களில் சுட்டினார்கள். அவர் ஒரு ஆசிரியரும் கூட. மேலும் அவர் இதை அபிமானம் கொண்டு கற்பவர்களில் சிலருக்கு இலவசமாகவும் பாடம் சொல்கிறார். வெளிநாடுகளில் இருந்து பாடம் கேட்கும் சிஷ்யர்களும் உண்டு என்றார்.

மாலோலன் போல, ஓர் இரு வார்த்தைகள் கொடுத்தாலே அவை அமையும் பிரபந்தங்களை பார்க்காமல், சரியாக சொல்பவர்களை அதிகாரி என்று சொல்வது உண்டு. மலோலன் அவர்கள் மனம் செயல்படும் முன் கணீரென்றகுரலில் பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பயிற்சி வகுப்பை எந்த விதத்திலும் சோர்வுற செய்யாமல் உறுதுனையாக இருந்த அவர், தன் மரபான கருத்துகளையும் ஒரு சில இடங்களில் அடிக்கோடிட்டார்.

பாடல்களை ஒரு கவிதை தருணம் நோக்கிய தொகுப்புகளாக பிரித்து பயிற்சிக்கு இரண்டு நாட்கள் முன்னமே அனுப்பிவிட்டார் ராஜகோபாலன்.

அவர் தேர்ந்தெடுத்த பாடல்களை இம்பர்வாரி நண்பர் ஸ்ரீனிவாஸ் இணையத்திலிருந்து எடுத்துக் கொடுக்க

அவற்றை  ஸ்லைடுகள், பாடல்களின் தொகுப்பு pdf என்று எல்லாவற்றையும் கீதா செந்தில்குமார் செய்திருந்தார் (ஆமாம், வெண்முரசுக்கு ஒரு நாளுக்கு ஒரு தொகுப்பு என்று செய்கிறார் அவரே தான்..). அழகான நேர்த்தியான வடிவில் அவர் பாடல்களை தொகுத்து இருந்தார். கூடவே புரோஜெக்டரில் பகல் வெளிச்சத்திலும் எழுத்துருக்கள் தெளிவாகத் தெரியும் படி அமைத்து இருந்தார்.

முன்னமே பாடல்களை தொகுத்து கொடுத்தது அனைவரும் வாசித்து வரும்படி உதவியாக இருந்தது. கூடவே ஒரு ஒரு அமர்வுக்கும் என்ன எதிர்பார்ப்பது என்பதையும் தெளிவுற வகுத்தும் தந்தது. ராஜகோபாலன் 2 1/2 நாளுக்கு சாத்தியமான அளவு பாடல்களை தொகுத்து தெளிவான திட்டத்தை அமைத்து இருந்தார். இனி வரும் நாட்களில் மேலும் பயில் அரங்குகள் நடந்தால் வேறு தொகுப்புகள் வரலாம் — கேட்க முடியாமல் போய்விடுமோ என்றும் எனக்கு தோன்றியது.

ஒரு கவிதை முனையை நோக்கிய தொகுப்புகள் என்று குறிப்பிட்டு இருந்தேன். அவை வகுப்பு முடிந்த பின்னும் அந்த நாளுக்கான எண்ணமாக சுழன்று கொண்டே இருந்தன. உதாரணமாக – பாதியும் உறங்கிப்போகும் என்கிற தொகுதியில்  – நிலையற்ற உடல், இக வாழ்வு இவற்றைப் பற்றிய பாடல்கள் வரும் போது மனம் நேராகவே துக்கமான எண்ணங்களுக்கு போகிறது!- அது ஆழ்வார்கள் எண்ணியதும் பல பல நூறு வருடங்களாக எய்தியதும் தான்.. அவற்றை வைக்கும் போதே ராஜகோபாலன்,

வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே

ஒரு ஆறு ஒருவன் புகா வாறு உருமாறும்

ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்

மாயவர் தாம் காட்டும் வழி

போல ஒரு பாடலை வைக்கிறார். மனம் முற்றிலும் வேறு விதமாக வரவு ஆறு என்ற பதத்தில் ஆழ வைக்கிறார்.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்

வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்

வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை

தளர்வு இலர் ஆகி சார்வது சதிரே

இந்த இரு பாடல்கள் வந்து சேர்ந்த போது அவற்றை என் அப்பாவின் வாழ்வை வைத்து புரிந்துகொண்டேன். மனம் இயல்பாக ஒரு விடுதலையையும் விலகலையும் அடைகிறது.

போலவே அவர் தொடங்கிய முதல் தொகுப்பு –

என் சிறு குட்டன் – இதில் பாடல்கள் வரவர கண்ணனை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று தோன்றியது. அடுத்து வந்த – நப்பின்னை காணில் சிரிக்கும் – தொகுப்பில் ..

பக்கம் கரும் சிறுபாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய

இந்த பாடல் வரும் போது எனக்கு ஒன்று புரிந்தது. ஆழ்வார்கள் காணக் கூடிய எல்லா பிள்ளைகளில்லும் கண்ணனையே கண்டிருக்கிறார்கள். அதையே கவிதையாக்கி உள்ளார்கள்.

இது திறந்த வாசல்கள் ஏராளம். நான் குழந்தைகளை கண்டால் உற்சாகமாக விளையாடுவதும்.. குழ்ந்தையாக மட்டுமே ரசிக்கவும் பழகி உள்ளேன். அந்த எல்லா குழந்தையும் கண்ணன் என்பது எவ்வளவு சுவை.

இது போல பல பல இடங்கள் வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகியும் உள்ளே சுழன்று கொண்டே இருக்கின்றன.

இது போன்ற கற்கும் தருணங்களை கொடுக்கும் உங்களுக்கும், ராஜகோபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

நன்றி

ராகவ்

முந்தைய கட்டுரைநீலி, உமா மகேஸ்வரி சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைகா.கோவிந்தன்