பிரபந்தக் கல்வி, கடிதம்

அன்பிற்கினிய ஜெ,

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். 20.10.2023 அன்று நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பை தொடங்கு முன், ஆசான் திரு. ராஜகோபாலன் அவர்கள் எங்கள் எல்லோரையும்ஆழ்வார்கள் பாடல்களில் ஆர்வம் வந்தது எங்கனம்என வினவினார். என் சிறு பிராயத்தில் எனது தாயார் சாமி வருந்துவதை கேட்டிருக்கிறேன்.

வரப்பாம் தலகாணி

வா மடையாம் பஞ்சு மெத்த

எங்க தொப்பகுண்டக்காரா

துளசிமணி மார்வேந்தே

அள்ளி மழபொழியும்நீ இருக்கும்

அருவி மழச்சோங்கு

சொல்லி மழ பொழியும்

துவராபுரி நாடு

பால வெட்டி பல் வெளக்கி

பனையோல கொண்டு நா வழிச்சு

வெண்ணெய் திருடின கண்ணா நீ திரும்பு

பிறந்தார் வடமதுரை

போய் வளந்தார் ஆல்பாடி

நஞ்சு முனையில் பால் குடித்து

சொந்த மகனாய் வாழ்ந்தார்

வந்த வினைகளெல்லாம்

தந்திரமாய் போக வச்சார்.”

இந்த பாடல்களை பலமுறை எனது தாயார் பாடக்கேட்டிருக்கிறேன். எல்லாமுறையும் அவர் கன்னங்களில் திரைகடலோடி, கிழிந்த அவரின் சேலைமுந்தி நனைந்திருக்கும். 2019 ல் சொல்வனத்தில் வெளிவந்த மாசிக்களரி என்ற சிறுகதையை எழுதுவதற்காக, என் தாயாரை பாடச் சொல்லி எழுதிவைத்து பயன்படுத்தினேன்.

எனது பள்ளிப்பிராயத்திற்கு பின் ஒரு நாள், கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் உரையை ஒலிநாடாவில் கேட்டேன். அதில் ஆண்டாள் அருளியஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்என்ற திருப்பாவை நான்காம் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருந்தார். அந்த ஒலிநாடா தேயத்தேய அவர் குரலில் கேட்டு அந்த பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன். ஆர் எஸ் எஸ் காரர்களுடன் எனக்கு நட்பிருந்த காலம் அது. ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆன்மிக பணிகளை கைவிட்டு இந்து வெறி அரசியல் பணிகளை மட்டுமே செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள் வலுவானதால் என்னை நான் கழட்டிக்கொண்டேன். பின் பிழைப்பு தேடி சென்னை. கொடிய வறுமையிலும் நாளிதழ்களை விலைக்கு வாங்கி படித்திருக்கிறேன். அந்நாளிதழ்கள் உருவாக்கி அளிக்கும் அரசியல் கொப்பளிப்பில் உழன்றிருக்கிறேன். சென்னையில் நடக்கும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகளில் பார்வையாளனாக பல ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.

அதன் பின்னரே மரபிலக்கியத்தின் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. சரியான ஆசிரியர் இன்றி மரபிலக்கியம் பயில்வது நற்பயன் விளைவிக்கும் என எதிர்பார்க்க முடியாது. சென்னையில் இருந்து வெளிவரும்முகம்என்ற மாத இதழில் எழுத்தாளர் கோவி மணிசேகரன் அவர்கள் மரபிலக்கணம் சொல்லித்தருவதாக அறிவிப்பு வெளிவந்திருந்தது. நான் சென்றுவிட்டேன். பெரிதாக இலக்கணம் ஒன்றையும் நான் அவரிடம் கற்றுக்கொள்ளவில்லை. இலக்கியமும், இலக்கியவாதியும் கொண்டிருக்கும் ஆன்மீக தகுதிகளைஉறவை நான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் அவர்களிடமே கண்டுகொண்டேன். இலக்கியம் ஆன்மீகமானது என்பதை மீண்டும் அறிந்துகொண்ட பின்தான் தங்களையும் அடைந்தேன்.

இன்றைய காந்தி, அறம் ஆகிய நூல்களின் வழியே தங்கள் மீதான என் விழைவை விருத்தி செய்துகொண்டேன்.

ஊரடங்கு காலத்தில் யதேச்சையாக மாலோல கண்ணன், ரங்கநாதன் ஆகியோர் குரலில் திருப்பாவையை யூடியூபில் கேட்க வாய்த்தது. பொருள் விளங்கியதுடன் சிறு வயதில் என் தாயார் சாமி வருந்தும் பாணியில் இருந்ததையும் கவனித்தேன். ஆகவே மீண்டும் மீண்டும் கேட்டதில் திருப்பாவை முழுவதும் மனனமாகிவிட்டது. ஆழ்வார்களின் நான்காயிரம் பாடல்களுக்கும் திருப்பல்லாண்டுதான் ஓங்காரம் என அறிந்த பின்னர் அதனையும் மீள மீள கேட்டதில் மனனமானது. தமிழ் வேதத்தின் ருசியை உணர தொடங்கினேன். கண்ணிநுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், திருப்பள்ளியெழுச்சி, திருவெழுகூற்றிருக்கை என இந்த சிற்றுயிர், பிரபஞ்ச தேனருவியை நோக்கி தன் சிறுநாவை நீட்ட தொடங்கியது. இப்படித்தான் தங்கள் தளத்தில் நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பு குறித்த அறிவிப்பை கண்ட அதிகாலையிலேயே மின்னஞ்சல் அனுப்பினேன். வருடக்கணக்கில் பிரிந்திருந்த பிள்ளை கண்ணெட்டும் தூரத்தில் வருவதை விழி சுருக்கி, உயிர் குவித்து காணும் தந்தையின் இன்ப காத்திருப்புதான் அதன் பின்னர்.

குலம் தரும் செல்வம் தரும் அடியார் படு துயராயினவெல்லாம்

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்

நலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினுமாவினை செய்யும்

நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

என்ற பாடலை உயர்திரு.மாலோலன் அவர்கள் பாடிய பின் வகுப்பு தொடங்கியது. பக்தி இலக்கியம் உருவாகிய வரலாற்று பின்புலத்தை எளிமையாக விளக்கினார் ஆசான் ஜா ராஜகோபாலன். பொ. யு. 6 ம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் இலக்கியத்தில் வைணவம் செலுத்திய ஆளுமை. பின் சங்க இலக்கிய மரபை பக்தி இலக்கியம் எடுத்தாண்ட விதம். வைணவம் பிற சமயங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பற்றியெல்லாம் சிறந்த அறிமுகத்தை பெற்றோம்.

நித்ய விபூதி, லீலா விபூதி பற்றி எளிய விளக்கம் அளித்தார். பொதுவாக ஆழ்வார்கள் பாடல்களில் இருக்கும் சொல்லழகு, நாடகீயம், தத்துவம் ஆகிய மூன்று அடுக்குகளை குறிப்பிட்டார். இத்தனை காலம் இந்த பாடல்கள் தொடர்ந்து புதுமை கொண்டிருப்பது அதன் தத்துவ பலத்தால்தான் என்பதை நிறுவினார். கம்பனின் காவிய வெற்றியில் ஆழ்வார்கள் பங்களிப்பும் விதந்தோதப்பட்டது. கம்பன் வடித்த காவிய மகுடத்தின் வைரங்கள் ஆழ்வார்களின் பாடல்கள்.

பெரியாழ்வார் பாடல்களிலிருந்து வகுப்பு தொடங்கியது. மே மாதம் நடந்த காவிய முகாமும் பெரியாழ்வார் பாடல்களில் இருந்துதான் தொடங்கியது

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்

நறுநெய் பால் தயிர் நன்றாக தூவுவார்

செறிமென்கூந்தல் அவிழ திளைத்தெங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.

என்ற பாடலுக்கு காவிய முகாமில் கிடைத்த விளக்கம் கோயிலின் கொடிக்கம்பம்தான். இதே பாடலுக்கு நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பில் கிடைத்தது நெய்விளக்கு ஆரத்தி ஒளியில் மூல மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம்.

ஒரே பாடலில் ஒரு புலவனும், கவிஞனும், மெய்ஞ்ஞானியும் முறையே சொல், பொருள், ஞானமாய் நீள்விசும்பருளி நிற்பதை மெய்சிலிர்க்க கண்டுகொண்டிருந்தேன்.

பூமி தொடாத பிள்ளையின் பாதமெல்லாம் கண்ணனின் திருவடிகள் என்பதை, தன் அத்தை பற்றிய கதையொன்றை சொல்லி ஆசான் ஜா ராஜகோபாலன் விளக்கினார். கணந்தோறும் களிப்பெய்த அந்த நம்பிக்கைகள் அத்தியாவசியமானவை.

இந்த மண்ணில் பிறப்பதெல்லாம் கண்ணனின் அம்சங்களே என்பதை, பெரியாழ்வாரின் பாடல்களை அனுபவித்து கொண்டிருந்தபோது தோன்றியது. எல்லா குழந்தைகளிலும் கண்ணனே லீலைகள் புரிகிறான்.

என் சிறுகுட்டன் என்ற வகுப்பு முடிந்த பின்னர்தான் வைணவ தத்துவங்களை ஆசான் அறிமுகம் செய்தார். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை பற்றிய விளக்கம் பெற்றோம். வாத்சல்யம், சுவாமித்துவம், சௌசீல்யம், சௌலப்யம் போன்ற விஷ்ணுவின் கல்யாண குணங்கள். சித்து, அசித்து, ஈஸ்வர என வைணவ தத்துவம். பரமபக்தி, பரபக்தி, பரஞானம் என பக்தியின் அடுக்குகள். அனன்ய கதித்வம், ஆகிஞ்சன்யம் என சரணாகதி லட்சணங்கள். இறைவிரோத தன்மைகள். தந்தை, மகன், எஜமானன், ரட்சகன் என பக்தர்கள்(ஆழ்வார்கள்) இறைவனை காணும் நிலைகள் பற்றிய இவ்வகுப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்டது. இந்த வகுப்பு முதலில் நடத்தப்பட்டிருந்தால் பெரியாழ்வார் பாடல்களின் கவியின்பத்தை கைவிட்டு, இந்த தத்துவங்கள் எனும் அல்ஜீப்ராக்களுக்கு, பெரியாழ்வார் பாடல்களில் ஆசனங்கள் தேடி அலுத்திருப்போம். ஆனால் ஜா ரா தொடக்கத்திலேயே வைணவ பக்தி இலக்கியத்தை கவிதையாகவும், பண்பாட்டு ஆவணமாகவும் காணவேண்டும் என்பதை தெளிவுபடுத்திவிட்டார். அதே நேரத்தில் மெய்ஞ்ஞானம் அருளபெற்றவர்கள் கவிதையை கைக்கொண்டே பேச வருகிறார்கள். ஆகவே கவிதையை அனுபவித்த பின் கடவுளை அனுபவிக்கலாம் என்ற அடிப்படையிலேயே பாடத்திட்டத்தை வகுத்திருந்தார். எல்லா கவிதைகளும் மைல் கற்களே. அளவிறந்த ஒன்றுக்கு அடையாளமாக இக்கவிதைகள் நாட்டப்பட்டிருக்கின்றன என்பதை தொடர்ந்து ஜா ரா சொல்லிக்கொண்டே வந்தார். அந்த வகையில் ஜா ராவின் திட்டமிடல் மிக சிறப்பானது என்பதை இப்போதும் உணர்கிறேன்.

இரண்டாம் நாள் வகுப்பில்தான் இந்த வாழைப்பழமெனும் கவிதைக்குள், உயிர் மருந்தாய் வைணவ தத்துவங்களும் வைத்தளிக்கப்பட்டன. தத்துவம் பயின்று தவழும் மற்றை ஆழ்வார்களுக்கு மத்தியில், பெருவேட்கையுடன் ஆண்டாள் பிரவாகிக்கிறாள். அவள் உணர்வுகளுக்குள் (உணர்ச்சிகளும்தான்) தத்துவங்கள் அடைக்கலமாவதை காண முடிந்தது. நா முத்துக்குமார் சொல்வது போலஅடைமழை வந்தால் குடை என்ன செய்யும்?” ஆண்டாள் காலம் தொட்டு இன்றைய சினிமா பாடல்வரை ஆண்களின் பெண்ணினைவுகள் என்பது பெண்ணுடலாகவே இருந்துவருவதும், அதே வேளையில் பெண்களின் ஆண் நினைவுகள் மகிழ்ச்சி தருணங்களாகவே(Momentry pleassures) இருந்துவருவதும் உணர்த்தப்பட்டது. வைணவ கோட்பாட்டின்படி ஸ்ரீமன் நாராயணனே ஆண், மற்றெல்லோரும் பெண்கள்தான். ஆண்டாள் ஒருத்திதான் பெண், மற்றெல்லோரும் அவளின் பெண் பிள்ளைகள் என்று ஆண்டாளை கற்கும்போது தோன்றியது. ஆழ்வார்கள் தலைவரான நம்மாழ்வாரை உடலாக பாவித்து, ஏனைய ஆழ்வார்களை அவரின் உறுப்புகளாக பாவிக்கும்பூதம் சரஸ்டமகநாட்வய பட்டநாதஎன்ற தனியனில் ஆண்டாள் குறிப்பிடபடவில்லை. மதுரகவியாழ்வாரும்தான்.    

இரண்டாம் நாள் வகுப்பு முதல் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை, சரணாகதி, முக்குறும்பு என பாடல்களின் உள்ளுறைபொருளாய் திகழும் தத்துவங்கள் ஜா ராவால் எடுத்துரைக்கப்பட்டன. பல திவ்ய தேசங்களைப்பற்றிய உரையாடல். அங்கு வீற்றிருக்கும் பெருமானின் பெருமை. அவற்றுடன் இணைக்கப்பட்ட புராணங்கள். அப்புராணங்களை விளக்கி நிற்கும் சிற்பங்கள். ஐதீகங்கள். ஐதீகங்கள் உருவாகும் அடிப்படைகள். திருவரங்க அரசனின் சீர்மைகள். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரின் செல்வாக்கு. திவ்யதேச திருவிழாக்கள். அத்திருவிழாக்களின் தேவைகள். அதில் திவ்ய பிரபந்தத்தின் செல்வாக்கு. நாதமுனிகள், ராமானுஜர், பிள்ளை லோகாச்சார்யார், பெரியவாச்சான் பிள்ளை, அன்னங்கராச்சார்யர் போன்ற பல ஆச்சார்ய மரபு அறிமுகம். தற்காலத்தில் பிராமணர் அல்லாதவர்கள் திவ்ய பிரபந்தத்திற்கு அளித்திருக்கும் விளக்கம். அதன் செறிவு. ராமானுஜர், கூரத்தாழ்வார், உறங்காவில்லி போன்றோரின் வரலாற்று கதைகள் இவையெல்லாம் உயிருணவாய் எங்களுக்கு பரிமாறப்பட்டன. ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!’

திருவரங்க திருவிழாக்கள் பற்றிய உரையாடல்கள் பரவசத்திலாழ்த்தின. Sri Ranganaathar is alive என ஜா ராவும், மாலோலனும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் நான் வாசித்த முதல் நூல் திருவரங்கன் உலா. என்னை பலவகையிலும் அந்நாவல் சுத்திகரித்தது. அந்த நாவலின் பல காட்சிகள் நினைக்குந்தோறும் சிலிர்ப்பூட்டுவன. உலகளந்த பரம்பொருள் ஏன் இப்படி காடுலாவ வேண்டும் என்ற கேள்வி பிள்ளைலோகாசாரியரிடம் வைக்கப்படும். “தேடி வருபவர்கள் மட்டுமல்ல தேடிச்சென்று அருள்வது இறைவனின் செளலப்யம். காடு சென்ற இராமனே அகலிகையை மீட்டான். குகனை, அனுமனை, சுக்ரீவனை, விபீஷணனை ஆட்கொண்டான். வாலி, இராவணனை வீழ்த்தினான். காடு நமக்குத்தான். இது அரங்கன் படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார்என பிள்ளை லோகாசாரியர் விளக்கம் அளிப்பார் திருவரங்கன் கானேகிய போது அவருடன் இரு குடவர்கள் உடனிருந்து பெருமானுக்கு பணிவிடை செய்வார்கள். காட்டில் உறங்கி கொண்டிருந்த போது புழுக்கம் கண்டு குடவர்கள் பதைத்து விழிப்பார்கள். விழித்தவுடன் விசிறி கொண்டு தங்கள் புழுக்கம் தணிக்காமல் பெருமானுக்கு இருவரும் கவரி வீசுவர். ரங்கநாதனின் உயிர்ப்பை அறிந்தவர்கள் அக்குடவர்கள். எந்த சூழலிலும் அரச மரியாதையில் ரங்கநாதனுக்கு எந்த குறையையும் அவர்கள் வைப்பதில்லை. ஆம். அரங்கன் இன்றும் உயிர்த்திருக்கிறான். என்றென்றும் அவ்வண்ணமே.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்

சேவடி செவ்வித் திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில் நடந்த வெண்முரசு கூட்டத்தில் ஏன் தத்துவங்கள் பற்றி பேசவில்லை ஜா ராவிடம் கேட்டிருந்தேன். அவருக்கு அது ஞாபகத்தில் இல்லை. இன்று அவராலேயே வைணவ தத்துவங்களின் அறிமுகங்களை பெற்றுள்ளேன். வகுப்பு முடிந்தபின் அமர்வுகளுக்கு ஜா ரா கொடுத்திருந்த தலைப்புகளை கவனித்தேன்.

என் சிறுகுட்டன்.

நப்பின்னை காணில் சிரிக்கும்.    

பின்னும் ஆளும் செய்வன்

ஒன்றும் அலாத மாயையாய்

மூவுருவில் ராமனாய்

பாதியும் உறங்கிப்போகும்

கூனல் பிறை வேண்டி

என்னையும் உன்னில் இட்டேன்.

கவியின்பம் அனுபவித்து, மெல்ல மெல்ல பெருமானை காட்டி, என்னை எனக்கு காட்டி, என்னையும் அவனில் இட்டு சரணாகதி சுட்டி நிற்கிறது ஜா ராவின் தலைப்புகள். உண்மையிலேயே அற்புதமான திட்டமிடல். நெகிழ்கிறேன்.

ஜா ரா அளித்திருந்த பாடல்கள் பட்டியலில் திருமங்கை ஆழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை இருந்தது. ஆனால் நேரம் போதாமையால் அதன் விளக்கம் பெற முடியாமல் போனது. ரதபந்தமாக அமைக்கப்பட்ட அந்த பாடல்தான் புரிந்து கொள்வதற்கு மிகுந்த அர்ப்பணிப்பை கோருவது. மேலும் ஜா ரா சொல்வது போல இந்த கவிதைகள், அதற்கு அப்பாற்பட்ட ஒன்றுக்கு அடையாளமாக நிற்பவை. இதன் வைப்பு முறைகளை கருத்தில் கொண்டு திருப்பாவை, திருமாலை போன்ற நூல்களை முழுவதுமாக கற்றால் அது உயிர்ப்பயனளிக்கும் என நான் நம்புகிறேன். முடிந்தால் திவ்ய பிரபந்தத்தை ஒவ்வொரு நூலாக கற்பிக்க முயலலாம். இது ஆலோசனை அல்ல. கோரிக்கை

சில ஆண்டுகளுக்கு முன் வயது குறித்த ஒரு பதைபதைப்பு எனக்கு தோன்றியது. இன்னும் சில ஆண்டுகள் போய்விட்டால் என்னால் எதையும் கற்க முடியாமல் போய்விடுமோ என அஞ்சினேன். அந்த அச்சத்தில் இருந்த காலத்தில்தான் திருப்பாவை கேட்க வாய்த்து, அதனை மனனம் செய்து கொண்டேன். முப்பத்தேழு கடந்தபின் அது ஒரு தொடக்கம். ஆனால் உயர்திரு. மாலோலன் அவர்கள் தன் ஒட்டுமொத்த இருபத்தொன்பது வயதையும் நாலாயிரம் பாடல்களை மனனம் செய்ய கொடுத்திருக்கிறார். நாலாயிரம் பாடல்களின் பொருள் அறிய இன்னும் ஆயுள் இருக்கிறது. பிழைத்துழலும் பேதைகளுக்கு மத்தியில் ஒரு அரிய வாழ்வு அமைந்த பாக்கியவான் உயர்திரு. மாலோலன் அவர்கள். முதல் நாள் பாடல்களை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தவர் இரண்டாம் நாள்முதல் சில வைணவ சம்பிரதாயங்களை பற்றி இடை இடையே பேசினார். அவர் பேசிய அனைத்தும் எனக்கு பெரும் பாடங்கள். ஆசார்யன் அருகிருந்து கற்பது பெரும்பாக்கியம்

இந்த நாலாயிரம் பாடல்களை கற்பதற்காக அவர் கொடுத்த லௌகீக இழப்பை மென்னகையோடுதான் சொல்லிக்கொண்டிருந்தார். செருப்பணியாத அவரின் அடிப்பாதங்களை பார்த்தேன். தோல் முரடு தட்டி பலகை போன்றிருந்தது. ‘சுவாமி புறப்பாடு போகும்போது எத்தனை டிகிரி வெயிலிருந்தாலும் செருப்பில்லாமல்தான் திவ்ய ப்ரபந்தத்தை பாடிக்கொண்டு நடப்போம், எந்த வெயிலையும் என் பாதங்கள் தாங்கும்என்றார் உயர்திரு மாலோலன். அரசனின் முன்பு காலணிகளோடு நிற்பதற்கு மாலோலன் தயங்குகிறார். ஆம். அரங்கன் இன்றும் உயிர்த்திருக்கிறான். என்றென்றும் அவ்வண்ணமே.

மூன்று நாட்களும் எங்களைத் திளைப்பிலேயே தக்க வைத்திருந்திருந்தனர் ஜா ரா வும் திரு. மாலோலனும். அந்த திளைப்பு புகழுரைகளாய் அவர்கள் செவிகளில் விழுந்த கணமே, அதனுரிமையை ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியார்களுக்கும் அர்ப்பணித்தார்கள். “எந்தரோ மகானுபாவுலு, அந்தரிக்கி வந்தனமுலு“.

அந்தியூர் மணி அண்ணன் ஏற்பாடுகள் அனைத்தும் இனிமை. நட்டம், ஆடல் ஆகியவற்றுக்கான விளக்கத்தை மணி அண்ணன்தான் கொடுத்தார். ஒரு பிராண்டட் சைவர் மூன்று நாட்களும் நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்புகளை வேவு பார்த்தார் என சொல்லலாம்.

இரண்டாம் நாள் வகுப்பில் ஆண்டாளின்

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு

நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்.

நூறுதடா நிறைந்த அக்காரடிசில் சொன்னேன் 

ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ.

என்ற பாடல் பேசப்பட்ட போது யாரோ ஒரு நண்பர் அக்கார் அடிசில் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார். அடுத்த நாள் பகலுணவில் திரு. பாலாஜி அவர்கள் எங்கள் தட்டில் அக்காரடிசிலை பராவி வைத்தார். அரங்கன் அருளை ஆண்டாள் எங்களுக்கு பரிமாறியதாகவே எனக்கு தோன்றியது. வைணவம் எத்தனை இனிமையானது என்பதை சொல்ல பெரியாழ்வாரின் இப்பாடலை அடிக்கடி நண்பர்களுக்கு சுட்டுவேன்.

நெய்யிடை நல்லதோர் சோறும்

நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு

காதுக்கு குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்தென்னை

வெள்ளுயிர் ஆக்கவல்ல

பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்

பல்லாண்டு கூறுவனே.

ஆழ்வார்கள் வாழி. அருளிச் செயல்கள் வாழி. அரங்கன் திருவடிகள் வாழி.

அன்பன்

அ மலைச்சாமி

கண்ணூர், கேரளா

முந்தைய கட்டுரைகாண்டேகரின் யயாதி – மணிமாறன்
அடுத்த கட்டுரைமதுரை, ஜெர்மனி,குலசை- வேலாயுதம் பெரியசாமி