அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7

 

 

மாற்றுமொழிபும் பௌத்தமும்

 

 

தலித்தியம் பௌத்தம் சார்ந்த என்னுடைய சிந்தனைகளை வடிவமைத்ததில் நண்பர் பிரேமுடனான விவாதங்களுக்குப் பெரும் பங்குண்டு. அதை இத்தருணத்திலே பதிவுசெய்ய விழைகிறேன். 1999ல் குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய பதிவுகள் இலக்கியப்பட்டறையில் அவரை நான் சந்தித்த முதல்நாளில் ஒரு பொது விவாதம் ஏற்பட்டது. நம்முடைய முற்போக்கு- பின் நவீனத்துவச் சிந்தனைகளைப்பற்றி நான் மிகக் கடுமையான ஓர் அவநம்பிக்கையை அன்று சொன்னேன்.

அவர்கள் மேல் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று, அவர்கள் அடிப்படையில் நடைமுறைத் தளத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் அதை அடிப்படையாக்கியே சொல்கிறார்கள். அவர்களுடைய எல்லா விவாதங்களையும் தர்க்கபூர்வமாக சாரவாதம் [ essentialism ] என்று சொல்லிவிடலாம். பின் நவீனத்துவ சிந்தனைகளாக அவர்களால் இங்கே முன்வைக்கப்படுபவை பழைய எளிய சமூகசீர்த்திருத்த கருத்துக்கள் மட்டுமே. கலைச்சொற்களை மட்டுமே மாற்றிக்கொண்டிருக்கின்றன, ஆனால் அவை விவாதிக்கும்கோணம் சாரவாதம் சார்ந்ததே. அது பிரபஞ்சத்தை, இயற்கையை, வாழ்க்கையை, கடைசியாக வகுத்து வைக்கும்தன்மை கொண்டது. அதை என்னால் ஏற்கமுடியவில்லை.

இரண்டாவதாக, முதலில் சொன்னதன் நீட்சியாக, அவர்களின் இந்திய மரபு மறுப்பைச் சொன்னேன். எந்த ஒரு விஷயத்தையும் அதன் ஐரோப்பிய மேற்கோளில் இருந்து ஆரம்பிப்பது, எந்த சிந்தனைக்கும் ஐரோப்பிய முத்திரை குத்திக்கொள்வது என்றே அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் நீண்ட சிந்தனை மரபில் எந்தப்புள்ளியிலும் அவர்கள் தங்களை பொருத்திக்கொள்வதில்லை.

மூன்றாவதாக, உன்னதமாக்கல் [sublimation] என்ற ஒரு இறுதி இலக்கு இல்லாமல் சிந்தனை இருக்கமுடியாது. மீட்பு, முழுமை என்றெல்லாம் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் உன்னதமாக்கலைச் சார்ந்தவையே. அவை இந்த விவாதங்களில் இல்லை.

பிரேம் அதற்கு விரிவாகப்பதில் சொன்னார். ‘நீங்கள் மார்க்சியத்தை அல்லது அதன் தத்துவ அடித்தளத்தை ஏற்றுக்கொண்டு மேலே சிந்திக்கும் சிந்தனைகளை மட்டுமே கணக்கில் கொள்கிறீர்கள்’ என்றார் ‘நவயான பௌத்தம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்றார். உண்மையில் நான் அப்போதுதான் அதைப்பற்றி கேள்விப்பட்டேன். ‘இல்லை’ என்றேன். ‘அது அம்பேத்கார் முன்வைத்த நவீனபௌத்தம். பௌத்தசிந்தனைகளை நவீனகாலகட்டத்துக்காக மறு ஆக்கம்செய்து அவர் உருவாக்கிய ஒரு ஞானமரபு அது. நவயானபௌத்தம் மிக வெற்றிகரமாகப் பின்நவீனத்துவ சிந்தனைகளுடன் உரையாட முடியும். அது தனக்கென ஒரு பின்நவீன முறைமையை உருவாக்கிக்கொள்ளமுடியும். அதன் மேல் நீங்கள் சொல்லும் இந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது’

என்னால் அப்போது மேலே பேசமுடியவில்லை, காரணம் நவயானம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நான் கேட்டேன் ‘சரி, ஒரு நவயானி புராணங்களை உருவாக்க முடியுமா?’ பிரேம் சிரித்துக்கொண்டே ‘வெற்றிகரமாக உருவாக்கமுடியும். நானே உருவாக்கியிருக்கிறேன். என்னுடையதை நான் மாற்றுப்புராணம் என்றுகூட சொல்லமாட்டேன். அதைப்போலவே இதுவும் ஒரு மொழிபு மட்டுமே’ என்று சொல்லி தேவிபாகவதத்தின் கதையை அவர் மறு ஆக்கம் செய்திருந்ததைச் சொன்னார். அது தேவியை சிவை ஆக உருவகித்து மொத்த சைவ மரபையும் பெண்ணின் கோணத்தில் தலைகீழாக எழுதுவதாக இருந்தது. அந்தக் கதை அவரால் எழுதிமுடிக்கப்படவில்லை என நினைக்கிறேன். வந்திருந்தால் மரபின் தரப்பிலிருந்து வாய்நிறைய வசைகளை வாங்கியிருந்திருப்பார், அதன் கோணம் அத்தகையது.

அன்றிரவு பிறர் அருவியில் குளிக்கையில் நாங்களிருவரும் அவர்களின் சட்டைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். பிரேம் அன்று இந்திய சிந்தனையில் அம்பேத்காரின் பங்களிப்பு பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்தக்கோணத்தில் நான் அவரை அதுவரை புரிந்துகொண்டதில்லை.அவரது அரசியல் முகமன்றி வேறெதுவும் எனக்குத்தெரியாது. கடைசிக்காலத்தில் அம்பேத்கார் இந்திய வரலாற்றாய்வு இந்திய தத்துவசிந்தனை ஆகியவற்றுக்கு அளித்த கொடைகளைப்பற்றி பிரேம் சொன்னார். அதில் முதன்மையானது பௌத்தத்தை மீட்டு எடுத்து நிறுத்தியது

‘சாரமின்மை’ என்பது பௌத்த மெய்யியலின் முக்கியமான தரிசனம். அந்த ஒரு மையக்கூறினாலேயே பிற இந்திய வைதிக தரிசனங்கள் அனைத்திலிருந்தும் விலகி நிற்கிறது பௌத்தம். மொத்த இந்திய மரபுக்கும் பரபக்கமாக நிற்கும் வல்லமை கொண்டது அது. பௌத்த மெய்ப்பொருளையே அனாத்தம், அநித்தம், துக்கம் என மூன்று சொற்களாக வகுக்கலாம்.  சாரமின்மை வாதம் [அனாத்மவாதம்] நிலையின்மைவாதம் [அநித்தம்] துக்கம் [ அறியமுடியாமைவாதம்]

இந்தத் தத்துவக்கருவி,இந்தியசிந்தனைமரபில் ஒரு ஐநூறாண்டுகள் அனைத்து உறைவுநிலைகலையும் உடைக்கும் சுத்தியலாக இருந்துள்ளது. பொதுவாக எதிர்ப்புகள் எல்லாமே மறுப்புகளாக இருக்கும். எதிர்க்கப்படுபவற்றைவிடப் பெரிதாக ஒன்றை முன்வைக்கமுடிந்ததே பௌத்தத்தின் வெற்றி. இந்திய சமகாலச்சூழலிலும் பெரிய உடைப்புகளை நிகழ்த்த அதனால் முடியும், நவயான பௌத்தம் ஒரு பின்நவீனத்துவ தரப்பாக நிலைகொள்ளமுடியும், மார்க்ஸியர்களின் ஒரு பின்நவீனத்துவ வடிவமும் இங்கே புழக்கத்தில் இருக்கும், வேறு வழியில்லை என்றார் பிரேம்.

உன்னதமாக்கல் என்பது இன்னும் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் இருப்பது பௌத்தத்தில். அதை அம்பேத்கார் முன்வைத்திருக்கிறார். தங்கள் எழுத்துக்களிலும் அதை உன்னதமாக்கல் என்ற சொல்லாட்சியுடனேயே பேசியிருக்கிறோம் என்று சொன்ன பிரேம் பின்நவீனத்துவத்திலேயே இம்மானுவேல் காண்டின் சிந்தனைகளை முன்வைத்து உன்னதமாக்கலைப்பற்றிப் பேசும் ஒரு பகுதி உண்டு என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால் எந்த அளவு அதெல்லாம் சாத்தியமானதென்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. தமிழ்ச்சூழலில் வழக்கமான அரசியல்பேச்சுகளில் சில பின்நவீனத்துவ கலைச்சொற்கள் கலந்தனவல்லாமல் ஒன்றும் நிகழவில்லை. எதையுமே ஆழ்ந்து வாசிக்கும், விவாதிக்கும் பண்பில்லாமல் அன்றாட அரசியலை மட்டுமே பேசும் ஒரு தரப்பால் பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் ஒட்டுமொத்தமாகக் கடத்திச்செல்லப்பட்டு காலிசெய்யப்பட்டன என்று நினைக்கிறேன்.

இங்கே நவயானபௌத்தம்நோக்கிச் செல்லப்போவதில்லை. நவயான பௌத்தம் என்பது பௌத்ததின் தத்துவார்த்தமான சாரத்தை எடுத்து நவீன சுதந்திரஜனநாயக சிந்தனைகளுடன் கலந்து மீட்டுருவாக்கம் செய்வதாகும். அம்பேத்கார் முன்வைத்த பௌத்தத்தின் சாத்தியங்களைப்பற்றிப் பிறிதொரு தருணத்தில் விரிவாகவே பேசவேண்டியிருக்கிறது.

அயோத்திதாசர் முன்வைக்கும் பௌத்தம் பழைமையான தமிழ் பௌத்தம். அடித்தள மக்களிடையே பலவாறாகச் சிதைந்து பல்வேறு நம்பிக்கைகளாகவும் ஆசாரங்களாகவும் நீடித்திருந்த ஒன்று. ஆகவே அது இயல்பாகவே புராணத்தன்மை கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவரது செயல்பாடுகளின் தளம் அது.

 

 

அயோத்திதாசரின் புராணமரபு

அயோத்திதாசரின் நூல்களில் குறிப்பிடத்தக்கதாக முன்வைக்கப்படுவது ‘புத்தரது ஆதிவேதம்’ என்ற நூலாகும். 1912ல் தனி நூலாக வெளிவந்த இந்த ஆக்கம்,இன்றைய நூல் வரையறைகளுக்குள் நிற்பதில்லை. இது ஒரு புராண-நீதி-வரலாற்று நூல். ராஜ்கௌதமன் போன்ற அக்கறைகொண்ட ஆய்வாளர்களே அயோத்திதாசர் முன்வைக்கும் இந்த மொழிபைப் ‘புனைவு’ என்ற எதிர்மறைத் தொனியில் சொல்லியிருப்பதைக் காணலாம். அயோத்திதாசர் முன்வைத்துப் போராடிய இலக்குகளின் அடிப்படையில் மன்னிக்கக்கூடிய அல்லது புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயமாகவே ராஜ்கௌதமன் இதைப்பார்க்கிறார்.

அயோத்திதாசர் இந்நூலைப் பாலிமொழிப் பிரதிகள், தமிழ்நாட்டுப் பழமொழிகள் மற்றும் அடித்தளமக்களின் நம்பிக்கைகள், குலக்கதைகள், தமிழ் செவ்வியல்நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதியிருக்கிறார். அயோத்திதாசர் அவர் எழுதிய இந்நூல் பிற மதத்தார் பௌத்தம் பற்றி எழுதிய நூல்களில் இருந்து வேறுபட்டது என்பதை தெளிவாகவே குறிப்பிடுகிறார்.அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது நூல் அசலானது என்பதே. அதாவது பாலி மூலநூல்கள் மற்றும் தமிழ்குலமரபுகளில் இருந்து அது உருவாக்கப்பட்டமையே அதன் தனித்தன்மைக்குக் காரணம் என்பது அயோத்திதாசரின் விளக்கம்.

அவர் தன் நூலை எழுத ஆரம்பிக்கும்போது பௌத்தத்தை மீட்டு எடுத்து நிறுவியவையாகப் புகழ்பெற்ற மூன்று ஐரோப்பிய மூலநூல்களும் வெளிவந்துவிட்டன. [ ஆல்காட்டின் பௌத்த ஞானச்சுருக்கம், பால் காரஸின் புத்தரின் நற்செய்தி, ரய்ஸ்டேவிட்ஸின் பௌத்த இந்தியா]  அந்நூலாசிரியர்களில் ஒருவரை அயோத்திதாசர் நன்கறிவார்;ஒருவரை  நேரில் சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் இன்னொன்று எழுதுகிறார், மொழியாக்கம் செய்யவில்லை என்பதைக் கவனிக்கலாம். அவரது நூலில் அவர் இந்த மூன்று பேரறிஞர்களை மேற்கோள்காட்டவுமில்லை.

அயோத்திதாசர் உருவாக்கியது ஒரு முழுமையான தமிழ்நூல். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்தால் பௌத்த நிபுணரான ரய்ஸ் டேவிட்ஸ் மீண்டும் அசலான ஆய்வுகளுக்குப்பின்னரே அதை வாசிக்கமுடியும். நான் அயோத்திதாசர்ரை மூலச்சிந்தனையாளர் என்று சொல்வது இந்தத் தனித்தன்மையாலேயே. தன்னுடைய அசல்தன்மையின் மதிப்பைப்பற்றிய தன்னுணர்வுள்ள ஒரு பேரறிஞனாலேயே இந்தத் தன்னம்பிக்கையை அடையமுடியும்.

தமிழில் எழுதப்பட்ட முக்கியமான மூலநூல்களில் ஒன்றாக அயோத்திதாசரின் இந்த ஆக்கத்தை நான் சொல்வேன். பிறிதொரு தருணத்தில் இந்நூலை தர்மானந்த கோசாம்பியின் ’பகவான் புத்தர்’, அம்பேத்காரின் ’புத்தரும் அவரது தருமமும்’ மயிலைசீனி வேங்கடசாமியின் ’பௌத்தமும் தமிழும்’ ஆகிய நூல்களுடன் ஒப்பிட்டு எழுதலாமென நினைத்திருக்கிறேன். நான் இந்நூல்களை ஒப்பிட்டுக் குறிப்புகள் எடுத்து எட்டு வருடங்களாகின்றன. பல பல்கலைகளில் பௌத்தம் கற்பித்த பௌத்த அறிஞரும், நடராஜகுருவின் மாணவரும் , இப்போதைய நாராயணகுருகுல தலைவருமான முனி நாராயணபிரசாத் அவர்களுடன் இதைப்பற்றி விவாதித்துள்ளேன். மேலதிக விவாதங்கள் நிகழாமல் அவர் நோயுறவே அந்தத் திட்டம் அப்படியே நிலைத்தது

அயோத்திதாசர் அவரது நூலை சித்தார்த்தர் உத்பவகதை முதல் ஆதிவேத விளக்கம் வரை 29 அதிகாரங்களில் அமைத்திருக்கிறார். இந்நூலின் அமைப்பு இன்றைய மேலைநாட்டுக்கல்விபெற்ற வாசகர்கள் உள்ளே செல்ல மிகத் தடையானது. ஏற்கனவே சொன்னதுபோல பல்வேறு ஞானமுறைகளின் கலவையாக ஒரு முழுமைநோக்காக அவரது அணுகுமுறை உள்ளது. இதிலுள்ள திதிகள் பட்சங்கள் பற்றிய சோதிடத் தகவல்கள் பல எனக்குத் தலைகால் புரியவில்லை.

அயோத்திதாசர் மரபான புராணங்களைப்போல முதலில் சாக்கிய குல வரலாறையும் பின்னர் சாக்கிய சங்க வரலாற்றையும் கதையாகக் கொடுக்கிறார். கதைகளும் தகவல்களும் பின்னிப்பிணைந்த ஒரு வடிவம் அது. அதன்பின்னர் புத்தரின் கொள்கைகள். அதில் அயோத்திதாசர் அநித்தம், அநாத்தம் என்னும் இரு கொள்கைகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறார். தத்துவமளவுக்கே அறநெறி போதனைகளையும் முக்கியப்படுத்திப்பேசுகிறார்.

அயோத்திதாச பண்டிதரின் நூல்வரிசையில் பலநூல்கள் புராணங்களாகவும் புராணங்களுக்கான மறுவிளக்கங்களாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அவரது இந்திரர் தேச சரித்திரம போன்ற நூல்களை இன்றைய வாசிப்பில் பல கோணங்களில் மறு ஆய்வுக்குட்படுத்த முடியும்.  ஒரு ஒட்டுமொத்தப்பார்வையில் இந்திரனின் பரிணாமம் ஆச்சரியமான ரகசியங்கள் கொண்டது. வேதகாலத்து முதற்கடவுளான இந்திரன் மெல்ல பிராமணமதங்களால் கைவிடப்படுவதை நாம் காணலாம். இந்துப்பெருமதங்களில் எங்கும் இந்திரனுக்கு ஆலயமோ வழிபாடோ இல்லை.

ஆனால் சங்ககாலத்தில் மருதநிலத்துத் தலைவனாக இந்திரன் இருக்கிறான். மருதத்தின் குணாம்சமான பரத்தையர்கூடலும் களியாட்டமும் இந்திரனின் இயல்புகளும்கூட என்பது கவனத்துக்குரியது. மழைக்கடவுளான இந்திரனை விவசாயம்செய்த மக்கள் கடவுளாக எண்ணியிருக்கலாம். மெதுவாக ஏதோ ஒருகாலகட்டத்தில் இந்திரன் அந்தமக்களின் கடவுளானார்.  பின்னர் பௌத்த சமண மதங்களில் இந்திரன் முக்கியமான இடத்தைப் பெற்றார், வைதிக மதத்தில் இடத்தை இழந்தார். சங்கம் மருவியகாலம் வரை தமிழர்களின் பெருவிழாவாக இந்திரவிழா இருந்திருக்கிறது

இந்தப்பின்னணியில் இந்திரர்தேச சரித்திரம் போன்ற நூல்களை வாசிப்பது பல்வேறு திறப்புகளை உருவாக்குவதாக அமையும்.  இந்திரர் தேசபுராணம் இந்தியாவின் வரலாறு பற்றிய ஒரு புராணச்சித்தரிப்பு. இந்நூல்களை ஒருவகை மாற்றுப்புராண முயற்சிகள் என்றே நினைக்கிறேன். அவற்றின் செறிவான குறியீட்டுத்தளம் விரிவான இலக்கியத்திறனாய்வுமுறைகள் மூலம் மீட்டு எடுக்கப்படவேண்டிய ஒன்று.

 

 

 

முதற்சிந்தனை என்னும் அடர்காடு

 

 

இங்கே நான் முதற்சிந்தனையாளர் என்று குறிப்பிட்ட மூவரையுமே [எஸ்.என்.நாகராஜன்,முதளையசிங்கம்,அயோத்திதாசர்] ஓர் அம்சத்தில் பொதுமைப்படுத்தலாம். மூவரின் எழுத்துலகுமே மிகக் குழப்பமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது. அரைகுறை முயற்சிகள்,வெறும் மனப்பதிவுகள் ஆகியவற்றுடன் அதீதமான தாவல்கள் கொண்டதாகவும் காணப்படுகிறது.

 

முதற்சிந்தனையாளர்களிடம் இந்தச் சிக்கலைத் தவிர்க்கமுடியாதென்பதே என் கருத்தாகும். இதை மு.தளையசிங்கம் பற்றிய என் கட்டுரையில் விரிவாகவே பேசியிருக்கிறேன்.

 

வழிச்சிந்தனை ஏற்கனவே மாற்றுத்தரப்புடன் நீண்ட விவாதத்தை நிகழ்த்திக்கொண்ட ஒன்று. ஆகவே அதற்கு ஒரு கட்டுக்கோப்பும் வாதநேர்த்தியும் உருவாகியிருக்கும். மேலும் அந்தச் சொற்களன் நமக்குப் பழகியதாகவும் இருக்கும். ஆனால் மூலச்சிந்தனையாளர்கள் நாம் கொஞ்சம்கூட அறியாத ஒரு அறிவுத்தளத்தில் நிற்கிறார்கள். அவர்களின் சொற்களனில் நாம் கவனமாக உழைத்தே உள்ளே செல்லமுடிகிறது. அவர்களின் கலைச்சொற்களை நாம் அவர்களின் பேசுதளத்திற்குச் சென்று பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது.

அத்துடன் முதல்சிந்தனையாளர்கள் எல்லாருமே சற்று அதீதமாகத் தாவியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வனவற்றில் ஒரு கணிசமான பகுதி மிகையாக, பொருந்தாமல்தான் இருக்கிறது.  இந்த மிகை காரணமாக அவர்களின் பேச்சுகளில் முரண்பாடுகள் நிறைய சிக்குகின்றன. மு.தளையசிங்கம் , எஸ்.என்.நாகராஜன், அயோத்திதாசர் மூவருக்குமே இந்த இயல்பு இருக்கிறது. அவர்கள் ஒரு கோணத்தில் சிந்தனைசெய்து பார்க்கிறார்கள். அந்தக் கோணத்தின் தீவிரமே அவர்களை முன்னெடுத்துச் செல்கிறது. அந்தத் தீவிரம் காரணமாகவே அவர்கள் சமநிலையற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு பொதுப்புத்தித்தர்க்கம் மூலம் அவர்களை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.

அயோத்திதாசர் அவரது நூல்களில் சாதிகள், கடவுள்கள் பற்றிக் கூறிய பல விஷயங்களை வரலாற்று நோக்கில் நிராகரிக்க முடியும். பல விஷயங்களை அவர் வேண்டுமென்றே அதீதமாகச் சொல்லியிருக்கிறார். அவரது இயல்பு எப்போதுமே வீச்சுடன் முன் செல்வதே. அந்த இயல்புக்கான விலையாக இந்தப் பிசிறுகளைச் சுட்டிக்காட்டலாம்.

அயோத்திதாசர் தமிழின் இன்றைய சிந்தனையை நாம் முழுமையாகவே மறுமொழிபுக்கு ஆளாக்குவதற்கான ஒரு முன்வரைவை அளித்திருக்கிறார். நிறையத் தடுமாற்றங்கள்,நிறைய சிக்கல்கள்,நிறைய அதீதப்பேச்சுகளுடன் இருந்தாலும் முக்கியமான ஒரு முன்வரைவு அது. அந்த முன்வரைவை முற்றிலும் நம் மண்ணில் நின்றுகொண்டு அடித்தளமக்களின் மரபில் வைத்து எழுதும் ஒரு வழியையும் காட்டியிருக்கிறார். அந்த முன்னோடி முயற்சியே அவரை தமிழின் முதல்சிந்தனையாளர்களின் மிகமிகச் சிறிய பட்டியலில் சேர்க்கிறது.

வணக்கம்

[முழுமை]

 

[30- 7-2011 அன்று அயோத்திதாசர் ஆய்வுநடுவம் சார்பில் மதுரையில் பேசிய உரை]

 

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3

 

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

 

 

 உரை ஒலிவடிவம்

முந்தைய கட்டுரைகலை உலகை சமைத்த விதம்
அடுத்த கட்டுரைஒரு கவிதைச்சாதனை