நான் நாகர்கோவில் மாவட்ட நூலக உறுப்பினர்.தங்கள் நூற்கள் வாசிக்க கிடைப்பது அரிதாக இருக்கிறது. என் போன்ற ஏழை வாசகர்கள் தாங்கள் எழுதும் நாற்களை விலை கொடுத்து வாங்கும் நிலையில் இல்லை. தாங்கள் ஏன் அரசு நூலகங்களில் உங்கள் நூற்களுக்கு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தக்கூடாது?
தா.சிதம்பரம்.
தோவாளை.
கன்னியாகுமரி மாவட்டம்.
அன்புள்ள சிதம்பரம்,
பல்வேறு அரசியல் காரணங்களால் என் நூல்கள் நூலக ஆணைக்குழுவால் பல ஆண்டுகளாகவே வாங்கப்படுவதில்லை. நான் அதற்கு முயல்வதுமில்லை. (விற்கும் நூல்களை ஏன் நூலகங்களுக்கு பாதிவிலைக்கு தள்ளிவிடவேண்டும் என்னும் எண்ணமும் பதிப்பகங்களிடம் உண்டு) ஆகவே என் நூல்களை நூலகங்களில் பார்க்கமுடியாது.
இது ஓர் இழப்பே. புதிய வாசகர்களை நான் இழக்கிறேன். ஆகவே பெரும்பாலான நூல்களை இலவசமாகவே இணையத்தில் அளிக்கிறேன். ஆனாலும் ஒரு சாரார் வந்தடைவதில்லை. என் வாசகர்கள் என் நூல்களை வாங்கி நூலகங்களுக்கு இலவசமாக அளிக்கிறார்கள். ஆனால் அவற்றையும் நூலகர்கள் பெற்றுக்கொள்வதில்லை. வந்து குவியும் குப்பைகளை வைக்கவே இடமில்லை– இது ஒரு நூலகர் சில மாதங்களுக்கு முன் சொன்னது. இப்போதைக்கு செய்வதொன்றும் இல்லை
ஜெ