மாயையை காவல் வைத்தல்

வெண்முரசு இசைக்கோலம் கேட்டேன். இசைக்கோலம். நான் திரும்பத் திரும்ப இந்நாள் வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கமல்ஹாசனின் ஆண்மையான குரல், ஶ்ரீராம் பார்த்தசாரதியின் குழைவு, சைந்தவியின் இனிமை எல்லாம் சேர்ந்து மறக்கமுடியாத ஒரு அனுபவம். அதில் எனக்கு எப்போதும் ஒரு கேள்வி வரும். காத்தருள்க என் மகவை என்னும் வரிக்கு முன்னால் துயரே, மயக்கே என்றெல்லாம் அழைக்கப்படும். அது புரியவில்லை. கண்ணனை அப்படி அழைப்பதா? இல்லை கடவுளை அப்படி அழைப்பதா? எல்லாமே கடவுள்தான் என்றாலும் அப்படி ஒரு தோத்திரப்பாடலில் இருக்க வாய்ப்புண்டா?

அதற்காகவே நீலத்தை வாசித்தேன். சட்டென்று பிடிபட்டது. மெய்சிலிர்த்துவிட்டேன். தேவகியாக நின்று அன்னை அழைப்பது மாயையை. கண்ணன் கைக்குழந்தையானாலும் பரம்பொருள். அவனை காத்தருள்க என எவரிடம் கேட்கமுடியும்? பரம்பொருளை மறைக்கும் வல்லமை கொண்டது மாயை ஒன்றே. ஏனென்றால் அதுவும் பரம்பொருளின் இன்னொரு வடிவம்தான். விசிஷ்டாத்வைத தத்துவத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது நீலம். அதில் மாயை என்பது மட்டுமே பெருமாளை மேகம் சூரியனைப்போல தற்காலிகமாகவேனும் வெல்லும் தன்மை கொண்டது.

பாடல்கள் எப்போதுமே இசையால்தான் கவர்கின்றன. பல பாடல்களில் வெறும் அழகிய சொற்கள்தான் இருக்கும். சிலசமயம் சில வரிகள் கவிதைகளாக இருக்கும். ஆனால் பூடகமாக ஏதும் இருக்காது. நேரடியாக, உணர்ச்சிகரமாக இருக்கும். நீலம் என்னும் காவியத்திலுள்ள வரிகள் என்பதனால் எல்லா வரிகளுமே இந்த இசைக்கோலத்தில் ஆழமானவை. சிந்திக்கும்தோறும் பெருகுபவை. அவற்றை தேர்வுசெய்த குழு பாராட்டுக்குரியது.

அருண் பார்த்தசாரதி


நீலம் செம்பதிப்பு வாங்க

நீலம் மின்னூல் வாங்க
முந்தைய கட்டுரைஉயிரோடுயிர்
அடுத்த கட்டுரைஎழுதுதல் என்பது-கடிதம்