ஆலம் மின்னூல் வாங்க
ஆலம் நூல் வாங்க
அன்புள்ள ஜெ
ஆலம் நாவலின் முன்னுரை வாசித்தேன். நாவலை பற்றி தனியாக எழுத வேண்டும். ஏனெனில் ஆலம் அந்த கொலை தெய்வத்தை என்னுள் கண்டு கொண்ட வெவ்வேறு தருணங்களை நினைவுக்கு கொண்டு வந்தது. நாவலை முழுமையாக ஒரே வீச்சில் வாசிக்க வேண்டும். இந்த வடிவம் தனித்தனியாக வாசிக்கையில் விறுவிறுப்பாக செல்வது, முழுமையாக ஒருமுறையில் வாசிக்கும் போது ஈட்டி போல கூர்மையாக இறங்குவது. அதனால் தனியாக வாசிக்க வேண்டும். மேலும் இது விட்டு செல்லும் கேள்வியை தீவிரமாக என்னை நோக்கி கேட்டு கொள்ள நேரம் தேவைப்படும்.
சரி, நாவலை வாசிக்கையில் வெண்முரசின் நீர்க்கோலம் நாவலில் வரும் புஷ்கரன் நினைவு வந்தது. ஒருவகையில் அவன் சந்தானத்தின் வேறு வடிவம் என்று கூட சொல்லலாம். அடிப்படையான அக்கொலை தெய்வத்தின் ஊர்திகள். புஷ்கரனை தனியாக குறிப்பிட்டு எழுதுவதற்கு காரணம், நீங்கள் ஆலம் நாவலை எழுதிய 2017 இல் தான் புஷ்கரனும் நீர்கோலத்தில் வாழ்ந்திருக்கிறான் என்பதற்காக. படைப்பாளியின் மனம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது அம்சம் சார்ந்து செயல்படும் விதத்தை சிந்திக்க இத்தகவல் உதவும் என்பதால் – வேறு யாருக்கும் இல்லாவிட்டாலும் எனக்கு மட்டுமாவது :)
அன்புடன
சக்திவேல்
*
ஆசிரியருக்கு வணக்கம்
உங்களின் படைப்புகளை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். தீராநதியில் அதன் துவக்க காலத்தில் நீங்கள் எழுதியது முதல் இன்றுவரை உங்கள் எழுத்துகளின் தொடர் வாசகன். எத்தனையோமுறை உங்களுக்கு எழுத நினைத்தாலும் தயக்கம் காரணமாக எழுதவில்லை, ஆலம் தொடரை, தொடர்ந்து வாசித்து வருகிறேன், அதில் நீங்கள் குறிப்பிட்ட மோகூர் பாளையன் வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. அன்றைய மோகூர் இன்றைக்கு மோகனுர் என்ற பெயரில் அழைக்கபடுகிறது. இந்த ஊர்தான் எனக்கு சொந்த ஊர், நீங்கள் சொன்ன தொன்மைகதையை இந்த ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள்., ஆனால் ஒரு சிறுநகரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிந்த ஒரு விஷயத்தை உங்கள் எழுத்தில் பார்த்தவுடன் மிக சந்தோசமாக போனது.
நன்றி
K. S. M. ஜெயபால்
மோகனுர்