ஆலம் மின்னூல் வாங்க
ஆலம் நூல் வாங்க
அன்புள்ள ஆசானுக்கு வணக்கம்,
ஆலம் நாவல் தொடங்கிய பொழுது கே.ஜி.எப், விக்ரம், ஜெயிலர் போன்ற பிரமாண்ட சினிமாக்களின் வரிசையில் ஒரு பிரமாண்ட நாவல் என நினைத்தேன். கொலைகள், மேலும் கொலைகள். அடுத்தது என்ன? கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பார்கள்? ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும் கதையில் ஒரு திருப்பம் வரும். வேறு கொலையாளி வருவார் என துள்ளிக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்தடுத்த அத்தியாயங்கள் – நீங்கள் கதையில் கூறியதைப்போல – என்னை ஜெல்லியில் இருப்பவன் போல உணரச்செய்துவிட்டது. துள்ளிக்கொண்டிருந்த மனம் ஸ்தம்பித்துவிட்டது.
வித,விதமான மக்கள் வாழ்க்கைகள், அவர்களின் பல்வேறுப்பட்ட கணக்குகள், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் தற்செயல்கள், அதற்கான அவர்களின் ரியாக்ஷன்ஸ், புதிய கணக்குகள் உள்நுழைந்து எதையும், யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலை என மனம் நிலைத்துவிட்டது.
முடிவில் எப்படியும் எதனாலோ, எப்படியோ ஆட்கொள்ளப்பட போகிறோம். ஆனால் கவனமாக மற்றவர்களுக்கு தீங்கை வரவழைக்கிற, நமக்கும் நோயை வரவழைக்கிற சக்திக்கு ஆட்படாமல், நீங்கள் எப்பொழுதும் கூறுவதைப்போல நமக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிற ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
இருபத்தோரு நாட்களில் ஒரு நூற்றாண்டு மக்களின், ஒரு பிரிவினரின், வாழ்க்கையையும் மனநிலையையும், அதே குறிப்பிட்ட மனநிலை அடுத்த நூற்றாண்டில் தொடர்வதையும், வேறுகளங்களில் தொடரப்போவதையும் அறிந்துக்கொள்ள செய்ததற்கு தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தீபன்.
அன்புள்ள ஜெ,
“ஆலம்” கதை வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. தொலைத்தொடருக்காக எழுதப்பட்டது என்பதையும் சொல்லிவிட்டீர்கள். எனவே அப்படித்தான் இருக்கும். கதையின் தொடக்கத்திலேயே அதன் கரு தெளிவாக வந்துவிட்டது. பூஞ்சைகள் தான் பரவுவதற்காக நாய்களைப் பயன்படுத்திக்கொள்வதுபோல் “கொலைவெறி” என்னும் ஆலகாலநஞ்சு தான் பரவுவதற்காகவே மனிதகுலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. அந்த நச்சுக்கிருமியின் ஆட்டத்தையே கதைமுழுவதும் காண்நேர்கிறது.
“அதுகளுக்கு என்ன வேணுமோ அதை நாம செய்வோம். கரோனா வைரஸ் வந்தவங்க பலபேரு மதில் ஏறிக்குதிச்சு தப்பியிருக்கான்… ஏன்? நாம நினைக்கிறதில்லை, வைரஸ் அப்டி நினைக்க வைக்குது. அது பரவணும்ல?”
“வைரஸ் வாழணும், அதுக்காகத்தான் அது மனுஷனை வாழவைக்குது. நம்மளை அது தன் விருப்பப்படி வளக்குது.”
“எந்தக் கேஸ்லயும் குற்றத்தை குற்றம்சாட்டப்பட்டவர் செஞ்சாரா இல்லியான்னு வாதமே நடக்கிறதில்லை. கேஸோட டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கா, புரசீஜர்ஸ் சரியா இருக்கா, சாட்சிகள் முரண்பாடில்லாம இருக்கா இது மூணும்தான் பாக்கிறாங்க. அதிலே நாலு ஓட்டையை உக்காந்து கண்டுபிடிச்சா எந்த கொடுங்குற்றவாளியும் ஜாலியா போய்ட்டே இருக்கலாம்.”
“நெல்லை பகுதிகளில் பைக்கில் ஹெல்மெட்டுடன் செல்லக்கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்தி”
“எந்த தண்டனையும் இல்லாமல் கிரைமிலே திளைக்கிறவன் கிரிமினல் லாயர். அந்த கொண்டாட்டத்தை அவன் விடவே மாட்டான்”
கதை வாசிக்கும்போது கதிரேசனும் சந்தானமும் சந்திக்கும் ஒருகட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். சந்தானம் தன்மகன் இறந்துபோகும் வரையில் சூதுவாது தெரியாமல் இருந்த மனிதர். “காந்தி, நேரு, விவேகானந்தர்” என்று பேசிக்கொண்டிருந்தவர். மகனின் இறப்பால் கொலைமாடசாமி ஆனவர். கதிரேசன் தந்தையின் இறப்பால் அவ்வாறு ஆனவன். இருவரும் சந்திக்கும் கட்டத்தை எப்படி எழுதியிருப்பீர்கள் என்று இப்போதும் பார்க்க ஆவல்.
கதைசொல்லி நாகர்கோயில்காரரும் சினிமாவுக்கு எழுதிக்கொண்டிருப்பவருமான ஒருவரைச் சந்திக்கும் இடம் கதையில் வருகிறது. [நீங்கள் எழுதிய தொலைத்தொடரிலும் அந்தக் கதாபாத்திரம் இருந்ததா?] கதைசொல்லி தான் அறிந்த கொலைக்கண்ணிகள் குறித்து அங்கலாய்க்கும்போது இவை அனைத்தையும் விளையாட்டாகக் கடந்துசெல்லும் ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருப்பதாக நாகர்கோயில்காரர் பதிலளிப்பார். ஆனால் கதை நேர்மாறாக முடிகிறது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த கதிரேசனைக் கொலைச்சீக்கு ஆட்கொண்டுவிட்டது. தமயந்தியின் பிள்ளைகளையும் ஆட்கொள்ளப்போகிறது. அவர்களை உசுப்பேற்ற கிருஷ்ணசாமியும் கதைசொல்லியும் தயாராகிவிட்டார்கள். கொலைக்கண்ணி இன்னும் பல ஆண்டுகள் தொடர்வதற்கான வரிசையும் தொடங்கிவிட்டது.
வாசித்தபிறகு எனக்குத் தோன்றிய கேள்வி இதுதான். ஹெல்மெட் அணிந்து செல்லமுடியாத நிலையிலா இன்றைய நெல்லை இருக்கிறது? இன்றைய தலைமுறை இதை “விளையாட்டாக” எடுத்துக்கொள்ளாமல் கொலைக்கண்ணியைத் தொடர்கிறார்களா? இதற்கும் நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.
அன்புடன்,
த.திருமூலநாதன்.