அன்புள்ள ஜெ,
ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தைத் திட்டமிட்டு, எப்போது புறப்படுவோம் எனப் பயண நாளை எதிர்நோக்கி பொறுமையின்றிக் காத்திருந்து, களியாட்ட மனநிலையில் நண்பர்களை சந்தித்துப் பின் பிரிய மனமின்றி அடுத்த சந்திப்பை எண்ணி ஏக்கத்தோடு விடை பெறுவது, பள்ளி விடுமுறை நாட்களுக்குப் பின் பூன் முகாமில் மட்டுமே சாத்தியமாகியது. பூன் முகாம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது வெள்ளி என்றாலும், பெரும்பாலானோர் முந்தைய நாளே ஒன்றாக பயணத்தைத் தொடங்கி சந்திப்பைக் களைகட்ட வைத்துவிட்டனர். நாங்கள் ஒரு சிலர்(சிஜோ ரசிகர் மன்றம்), கலிபோர்னியாவில் இருந்து ஸ்ரீராம், விஜய் மற்றும் நானும், டல்லாஸில் இருந்து பாலாஜியும் இன்னும் ஒரு நாள் முன்னதாகவே அட்லாண்டாவில் சிஜோவின் இல்லத்தில் வந்திறங்கி, புதனன்றே முகாமை தொடங்கிவிட்டோம். மறுநாள் கார் பயணத்தின் போது சாரதாவும், ராதிகாவும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
சென்ற ஆண்டு பயணத்தில் மிக மிகப் பொறுமையாய் காரை ஓட்டி, பூனுக்குக் கடைசியாக வந்ததால் நாங்கள் அளித்த ‘ஜென்’ பட்டத்தை, “ஜென்னில் என்ன இருக்கிறது? கொஞ்சம் வானமும் , முதுகில் ஒரு அடியும் தானே” என்று மறுத்து, “புனிதர்” பட்டத்தைத் தானே கேட்டு வாங்கி கொண்ட சிஜோ இந்த முறை கார் ஓட்ட மறுத்து விட்ட நிலையில், “நான் ஜெ’க்கே கார் ஓட்டியவன், ஜெவின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநன் ” என்று அறிவித்து, அட்லாண்டாவில் இருந்து பூன் வரை எங்கள் காரை ஓட்டிச்செல்லும் பொறுப்பை ஸ்ரீராம் ஏற்றுக்கொண்டார். ஜெ’க்கு கார் ஓட்டும் போது, மிகு வேகத்திற்காக காவலரிடம் டிக்கெட் பெற்ற பெருமையை அவர் கூறுகையில் வண்டி அட்லாண்டாவை விட்டு வெகுதூரம் வந்திருந்தது. செய்வதற்கொன்றுமில்லை.
எங்கள் கார் பயணத்தின் போதே, முகாமில் விவாதிக்கப்பட உள்ள சிறு கதைகளையும், கவிதைகளையும் பற்றிய எங்கள் வாசிப்பனுபவத்தையும், புரிதலையும் பகிர்ந்துகொண்டோம்.
முக்கியமாக கவிஞர் இசையின் கவிதைகளை வாசித்து, ஒவ்வொருவரும் தான் உணர்ந்ததை முன்வைத்தபோது, அந்த கவிதைகளைப் பற்றிய எங்கள் புரிதல் பெரிதும் மேம்பட்டது. நண்பர்கள் அனைவரும் அந்தக் கவிதைகளை விளக்கமுற்படாது, அதிலிருந்து தான் பெற்ற அனுபவத்தை, மற்றவர் தவறவிட்ட இடத்தை எடுத்துக்கூறினர். நண்பர் விஜய் மறுநாள் தான் பேசப்போகும் “The Nine Billion Names of God” கதையை எங்களுக்கு விளக்கிச்சொல்லி, அவரும் தன்னைத் தயார் செய்துகொண்டார். எங்கள் விவாதத்திலும் தீவிரமாக பங்கு கொண்டு, காரையும் திறம்பட ஓட்டிக் கொண்டிருந்தார் ஸ்ரீராம். அதிகபட்சம் மூன்று ஹாரன் வசைகள் மட்டுமே வாங்கலாம் என்ற சிஜோவின் நிபந்தனையை மீறியதைத் தவிர வேறு ஒன்றும் குறை இல்லை. பத்திரமாக பூன் வரை கூட்டி வந்துவிட்டார். எங்கள் அனைவருக்கும் தங்குவதற்குப் பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், உங்களைச் சந்திக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் தவறவிட மனமின்றி, நேரே முதன்மை இடத்திற்கே வந்து சேர்ந்தோம்.
என்னளவில் இந்த இரண்டு முகாம்களும் எனக்களிப்பது ஒரு பெரிய உளத்திறப்பை. புதியவர்களுடன் பழக எப்போதும் தயங்கும் எனக்கு, விஷ்ணுபுரம் நண்பர்கள் மத்தியில் வெகு இயல்பாக இருக்க முடிந்தது. சென்ற ஆண்டு முகாமில் அறிமுகம் கொண்ட பெரும்பான்மையான நண்பர்களை மீண்டும் நேரில் சந்தித்த போது நடுவில் ஓராண்டு இடைவெளி இருந்த சுவடே இன்றி விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்குவது போல மிக இயல்பாக பேச முடிந்தது. இங்கு நான் சந்தித்த ஒவ்வொருவரும், தங்கள் அறிதலை பிறர்க்கு இயல்பாகக் கடத்திக்கொண்டிருந்தனர். ஒருவரின் உற்சாகம் மற்றவர்க்கும் தொற்றிக்கொண்டது.
கடந்த வெண்முரசு நாள் நிகழ்வில், ஜெயஸ்ரீ கசந்த்சாக்கிஸ் குறித்து கேட்ட கேள்வியும், அதற்கு நீங்கள் அளித்த பதிலும் தந்த உத்வேகத்தில், பூன் முகாம் வீட்டுப்பாடத்தை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு (சௌந்தர் மன்னிப்பாராக) சோர்பா என்னும் கிரேக்கனை வாசித்ததை ஜெயஸ்ரீயிடம் பகிர்ந்து கொண்டேன். கசந்த்சாக்கிஸ் பேரைச் சொன்னவுடன் அவரின் மலர்ந்த முகம் இன்னும் மிகப் பிரகாசமானது. அடுத்து The Last temptation of Christ நாவலைக் கண்டிப்பாக வாசிக்கிறேன் என்று அவரிடம் வாக்கு கொடுத்திருக்கிறேன்.
கவிஞரும்,விஞ்ஞானியுமான வேணு தயாநிதியை முதல்முறை நேரில் சந்தித்தேன். ஜூம் உரையாடல் வழி முன்பு பார்த்திருந்தபோது மிகக் கண்டிப்பான ஆளுமை எனக் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் நேரில் வெகு இயல்பாக பழகி, இனிய தோழமை ஆகிவிட்டார். அவரும் மதுரைக்காரர், மதுரைக்கல்லூரியின் முன்னாள் மாணவரெனத் தெரிந்தபோது இன்னும் நெருங்கிவிட்டோம். ஜெ–வை சுற்றி எப்போதும் கேள்விக்கணைகளோடு நண்பர்கள் சூழ்ந்திருக்கையில், நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என வேணுவிடம் கேட்க, “இது நான் கேள்வி கேட்கும் இடமல்ல. ஜெ.வின் அருகில் எப்போதும் ஒரு கடற்பஞ்சைப் போன்றே இருப்பேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் உறிஞ்சி எடுத்துகொள்வேன்.” என்ற அவரது பதில் எப்போதும் நினைவிலிருக்கும்.
தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடும், ஆழ்ந்த வாசிப்பும் கொண்டவரும், எங்கள் வாட்ஸாப் குழுமத்தில் தொடர்ந்து தத்துவ விசாரணைகள் செய்பவருமான நண்பர் விவேக், பூனில் இருந்த மூன்று நாட்களும் “சாரதி, உங்கள் காலணியின் உண்மையான நிறம் எது? தொலைவில் வேறொரு நிறம் எனத்தெரிவது , அருகில் வருகையில் வெறும் கருமை என்றாவது ஏன்?” எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது அவரது தத்துவச் சிந்தனையின் ஒரு பகுதி தானா என்று இன்னும் ஐயமாகவே உள்ளது.
சௌந்தரின் பொறுப்பான வழிகாட்டலும், ராஜன் மற்றும் பழனியின் பற்றிக்கொள்ளும் உற்சாகமும், சிஜோ, பிரகாசம், முத்து , விவேக் மற்றும் இன்னும் பலப்பல நண்பர்களின் கடும் உழைப்பும், இந்த இரண்டாவது முகாமையும் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டியது. நண்பர்களுக்குள் நன்றி சொல்வது விஷ்ணுபுரம் வழக்கமல்ல என்று நீங்கள் கூறியதை நினைவில் கொண்டு, இவர்களுக்கு நன்றி ஏதும் சொல்லாது, அந்தக் கடனை எப்போதும் என்னுடன் வைத்துக்கொள்கிறேன்.
வாழ்வின் மிக இனிய நினைவொன்றை, கற்றலின் இனிமையை, மனதிற்குகந்த தோழமைவட்டத்தை உருவாக்கிக் கொடுத்த ஆசிரியருக்கு வணக்கம்.
அன்புடன்
சாரதி