யானை டாக்டரும் ஒரு யானையும்

அன்புள்ள ஜெ,

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேரளத்து யானை ஆட்கொல்லியாக மாறி 23 பேரை கொன்றது. அந்த யானையை சுட்டுக்கொல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த யானை அதிர்ஷ்டவசமாக தமிழகப்பகுதிக்கு வந்தது. தமிழகத்தில் அரசுப்பணியில் இருந்த கால்நடை மருத்துவர் அந்த யானையை மயக்கமருந்து ஊசி ஏவி பிடித்தார். அதை அன்பால் வசப்படுத்தி பழகிய யானையாக ஆக்கினார்.

அந்த யானை மனிதர்களிடம் அன்பாகி வாழ்ந்தது. மிகமிக சாதுவாக ஆகியது. அந்த யானைக்கு அந்த கால்நடை மருத்துவரின் பெயர் போடப்பட்டது.  

அந்த யானைபெயர் மூர்த்தி. அந்த யானையை காப்பாற்றியவர் யானை டாக்டர் என அழைக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ண மூர்த்தி என்னும் டாக்டர் கே. 

சிலநாட்களுக்கு முன் அந்த யானை மூப்பால் மறைந்தது. அச்செய்தியை நாளிதழில் வாசித்தேன். அதை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அந்த செய்தியை வெளியிட்டுள்ள இந்து நாளிதழில் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிச் செய்தியே இல்லை. கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு கால்நடை மருத்துவர் என்று சொல்லியிருக்கிறது. தமிழகத்தில் சிறுவர்கள்கூட பள்ளியில் படிக்கும் டாக்டர். கேயின் வாழ்க்கைக்கதையான யானை டாக்டரை இந்த இதழில் எழுதிய பத்திரிகையாளர் படித்திருக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இந்தப் பத்திரிகையாளர்களின் தரம் இவ்வளவுதானா? எதையுமே வாசிக்காமலா இவர்கள் பத்திரிகைப்பணி செய்கிறார்கள்? வருத்தமாக உள்ளது.

மூர்த்தி. எம்

முதுமலை | வளர்ப்பு யானை மூர்த்தி உயிரிழப்பு: ஆட்கொல்லியாக இருந்து சாதுவாக மாறியதை நினைவுகூர்ந்த வனத்துறையினர்

முந்தைய கட்டுரைபுதியவானம்
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல், திருவருட்செல்வி