இச்சாமதி -கடிதங்கள்

இச்சாமதி புதிய சிறுகதை- ஜெயமோகன் ஓலைச்சுவடி இதழ்

அன்புள்ள ஜெ,

இச்சாமதிசிறுகதை வாசித்தேன். கதை முழுவதும் தனித்துவிடப்பட்ட பெண்கள் பற்றிய‌ சித்திரம். கணவனால் கைவிடப்பட்டவர்கள். விதியால் தனித்துவிடப்பட்டவர்கள். பெற்றோரால் கல்கத்தாவுக்குத் தள்ளிவிடப்பட்டவர்கள். அவர்கள் எவரும் வாழவில்லை. ஏனென்றால்வாழ்க்கை என்பது சென்றுகொண்டிருப்பது. நின்றுவிடுவது மரணம்“. எனவே அனைத்துவகையிலும் நின்றுபோன வாழ்க்கை. ஜான்னவியும் அத்தகைய வாழ்வையே வாழ்ந்திருக்கிறாள். இச்சாமதி அவளுக்கு வேண்டியதை அளித்து அவளை விடுதலை செய்திருக்கிறாள். அந்த விடுதலை நமக்குப் பிரியமானதாக இருக்கவேண்டியதில்லை. அதைவிட முக்கியமானது இச்சாமதி ரமாவுக்கு அளித்தது. அவள் தன் எதிர்காலக் கணவனைக் கண்டடைகிறாள். அதன்வழியாகத் தன்வாழ்வைப் பொருள்மிகுந்ததாக ஆக்கிக்கொள்கிறாள்.

கதையை வாசித்தவுடனேயே விபூதிபூஷண் பந்தோபாத்யாய பற்றிய தமிழ்விக்கி பதிவைப் படித்தேன். தமிழ்விக்கியில் உள்ள ஆளுமை பற்றி நீங்கள் எழுதும் குறிப்புகள் பலவற்றில் அந்த ஆளுமையின் வாழ்க்கையின் பல தருணங்கள் நாவலாக எழுதத்தக்கவை என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுபோல் விபூதிபூஷண் பந்தோபாத்யாயவை ரமா சந்திக்கும் அத்தருணம் அழகிய சிறுகதையாக மாறியுள்ளது. உண்மையில்உபேக்ஷிதாநாவலை வாசிக்கவேண்டும் என்ற தூண்டுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்புடன்,

.திருமூலநாதன்.

அன்புள்ள ஜெ

இச்சாமதி ஓர் அழகான, கவித்துவமான கதை. மிக எளிமையான நிகழ்வுகள் வழியாக ஓடும் கதை பல்வேறு குறிப்புகள், படிமங்கள் வழியாக சிக்கலாக ஆழத்தில் விரிகிறது. இச்சாமதி, சீதை என பல படிமங்கள் பிடித்ததை விடாத முதலைகளும்கூட. இச்சாமதி நான் நினைத்ததையும் தருவாள் என்னுமிடத்தில் கதை அழகான ஒரு கூர்மையை அடைகிறது. 

கதையை வாசித்தபின் நேராகச் சென்று தமிழ் விக்கியில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவை வாசித்தேன். இந்தக் கதையின் அடிப்படை உண்மை நிகழ்வு என்பது இன்னும் அழுத்தமான அனுபவமாக ஆகிறது

சந்திரசேகர் 

முந்தைய கட்டுரைமதுரையில்…
அடுத்த கட்டுரைமேடையுரைப் பயிற்சி, கடிதம்