முஞ்சிறை:கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கைளப் புகழ்ந்து எழுத முடியாமல் இருக்க முடியவில்லை.
இந்தப் பதிவைப் படித்தவுடன் , மனம் நிறைந்தது.
அழகான புகைப்படம், இந்த ஊர்களை எல்லாம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தூண்டுகிறது. இந்தியாவில் பார்க்க வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

வணக்கம்.

வெற்றிமகள்

*

அன்புள்ள வெற்றிமகள்

 

இந்தியா என்பது பல்லாயிரம் வியப்புகளின் தொகுப்பு என்று சொல்வார்கள். குமரிமாவட்டம் வியப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்ட நிலம். பல காரணங்கள். கடற்கரைகள், மலைகள், சிவப்பு மண், கறுப்பு மண் வ்யல் வெளிகள் எல்லாமே கொண்ட நிலம். பாலை தவிர பிற நால்வகை நிலமும் இங்கே உண்டு. கோயில்கள் அந்த நிலத்தின் ஒரு பகுதியாக அழகிய சூழல்களில் அமைந்திருக்கும்– ஊர் நடுவே கோயில் இருப்பது குறைவு. மேலும் தமிழகத்தில் கிராமங்கள் பாழடைந்து கைவிடப்பட்டு கிடக்கும். இங்கே இன்னும் கிராமங்கள் செழிப்பாக உள்ளன
ஜெ

 

**

 

ஜெமோ  சார்,
உங்கள் இன்றைய பதிவில்  கோவில் சிற்பங்களைச்  சீர்(குலைக்கும்)  செய்யும்   முறைகளைப் பற்றிப் படித்து அதிர்ச்சியாக இருந்தது. நானும்  ஏன்  இப்படி வண்ணக்கலவைகளைக் கண் கூசும்படியாகச் செய்து வைத்திருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு.
இப்போது சிற்பங்களுக்கே  இந்த  நிலைமை வர  இந்தத் துறையில்  இருக்கும் வல்லுனர்களெ  செய்கிறார்கள் என்று
கேள்விப்படும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.
 
இதை நிவர்த்தி  செய்ய  வழிகள் உண்டா. வெறும் கேள்விகளோடு  நின்று விடுமா. தெரியவில்லை. ஆழ்வார்திருநகரியில்   ,ஆயிரமாண்டு புளிய மரத்தையே  சுரண்டியவர்கள் வேறு  என்ன  செய்ய மாட்டார்கள்.
 
அன்புடன்,
ரேவதி.
http://naachiyaar.blogspot.com

அன்புள்ள ரேவதி,

நீங்கள் கொள்ளும் கவலையையே நானும் இந்த தளத்தில் பகிர்ந்துகொள்கிறேன். உண்மையில் எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. கப்பலில் படியும் பாசியை சுரண்டுவதற்காக மணலை வேகமாக வீசும் கருவிகள் உள்ளன. அவற்றை தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வைத்திருக்கிறார். அவரே அவற்றைக்கொண்டு சிற்பங்களை சுத்தம் செய்யும் குத்தகைஎடுத்து  அழிக்கிறார் என்று சொல்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில்  மணல்வீச்சுமுறைக்கு தடை வாங்கி விட்டார்கள்– ஆனால் தடையே இல்லாமல் கோயில்களில் அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள். எங்கே அதைப் பயன்படுத்தினாலும் உடனே நீதிமன்ற டஹ்டை பெறுவதுதான் இப்போதுசெய்யக்கூடிய முறை. அதைப்போல வண்ணங்கள் பூசுவதையும் கண்காணிப்பதும் தடைபெறுவதும் நல்ல வழி. ஆனால் அதற்கான அமைப்புகள் ஏதும் நம்மிடம் இல்லை

ஜெ

 

**

 

ஜெ,

பல கிராமங்களின் புகழ் பெற்ற கோயில்களுக்கும் இன்று இதுதான் நிலைமை. கோயிலைப் பராமரித்துத் தினமும் விளக்கேற்றி ஒரு வேளையாவது நிவேதனம் செய்யக் கூட யாரும் முன் வருவதில்லை. இப்படி எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.  சில கோயில்கள் இருந்த இடமே தெரியாமல் அழிந்தும் போய் விடுகின்றது. வடுகச்சி கோட்டையைப் போல. மதுரையிலிருந்து பெரியகுளம் போகும் வழியில் ஒரு மலையே காணாமல் போய்விட்டது!

கீதா சாம்பசிவம்

 

அன்புள்ள கீதா,

நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதும் இதுதான். ஏரிகளும் கோயில்களுமே நம் முன்னோடிக்ள் நமக்கு விட்டுச்சென்ற பெரும் செல்வங்கள். இப்போது அவை முழுமையாகவே அழியவிடப்பட்டிருக்கின்றன. அவற்றுக்காக நம் சந்ததிகள் நம்மை சபிக்கும் காலம் வரும்

ஜெ

 

முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

சிற்பப் படுகொலைகள்…

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

முந்தைய கட்டுரைநெல்லை
அடுத்த கட்டுரைதமிழ் ஸ்டுடியோ