காவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்,

காவல்கோட்டம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு வந்துள்ள மறுப்பை கவனித்தீர்களா? உங்கள் மதிப்புரையை எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் உங்கள் கருத்துக்கள் மீது எனக்கு மரியாதை உண்டு.

http://www.keetru.com/literature/essays/manimaran.php

சிவராம்

அன்புள்ள சிவராம்,

காவல்கோட்டம் நான் இன்னும் வாசிக்கவில்லை. என் மனநிலை வாசிப்பு எல்லாமே இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில எழுத்துக்களில் மாட்டிக்கிடக்கிறது. இது என் வழக்கம். ஒரு குறிப்பிட்ட சூழலில் உள்ள எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்தபின்னர்தான் விடுபடுவேன்.

காவல்கோட்டம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றித்தான் இப்போது எல்லாரும் பேசுகிறார்கள். பொதுவாக ராமகிருஷ்ணன் படைப்புகளைப் பற்றிய கருத்துக்களை அச்சில் சொல்பவர் அல்ல. பேசுவதுடன் சரி. இப்போது இந்தக் கட்டுரைக்கான காரணம் தெரியவில்லை. நான் அறிந்தவரை எஸ்.ராமகிருஷ்ணன் நெடுங்காலமாகவே சு.வெங்கடேசனின் நெருக்கமான நண்பர். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி முதலிய நூல்களுக்கான அடிப்படைத்தரவுகளை சு.வெங்கடேசன்தான் அளித்திருக்கிறார். மணிமாறன் ராமகிருஷ்ணனின் ‘உயிர்’ நண்பர். ஒரே ஊரைச்சேர்ந்தவர்.

சு.வெங்கடேசன் கள்ளர்- நாயக்கர் வாழ்க்கைமுறைகளைச் சார்ந்து நெடுங்காலமாக ஆய்வுகளைச் செய்துவருபவர். அரசியல்வாதியாக அம்மக்களுடன் நேரடியான உறவு கொண்டவர். உண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடும் ஆய்வாளர்கள் உட்பட பலர் சு.வெங்கடேசனிடமிருந்துதான் தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிவரும் ‘அசோகவனம்’ நாவலுக்காக மதுரை பற்றிய ஏராளமான அடிப்படைத்தரவுகளை சு.வெங்கடேசனிடமிருந்துதான் பொதுவான நண்பரான வசந்தகுமார் மூலம் சேகரித்துக்கோண்டேன் என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

மணிமாறன் கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் ‘எழுத்து வியாபாரி’ என்று திடீரென கண்டடையப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை இவர்களின் எல்லா கூட்டங்களுக்கும் சிறப்பு விருந்தாளியாக அழைக்கும்போதும், காவல்கோட்டம் குறித்தே பேச அழைக்கும்போதும் பாபா பிளாக் ஷீப் எழுதியவர் அவர் என்பது தோன்றாமல் போனது ஆச்சரியமளிக்கவும் இல்லை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

<<பொதுவாக ராமகிருஷ்ணன் படைப்புகளைப் பற்றிய கருத்துக்களை அச்சில் சொல்பவர் அல்ல>>
ஆனால் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அதை ஓர் இந்துத்துவ நாவல் என்று சொல்லி அதில் உள்ள தகவல்பிழைகளை எல்லாம் ‘கண்டடைந்து’ ஒரு நீள கட்டுரை எழுதியிருக்கிறார்.  அந்தத் தகவல்பிழைகள் எல்லாம் மிக அபத்தமானவை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ‘யானைக்கு மதம் பிடிக்க அது என்ன நாயா?’ ‘ தமிழ்நாட்டில் மலைமீது பெருமாள் கோயில் இருப்பதில்லை’ என்ற தகவல்கள் எல்லாம் ராமகிருஷ்ணனால் சொல்லப்பட்டன என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்நாவலில் உள்ள முகப்புபகுதி நாவலுக்குள் வரும் ஒரு காவியத்தின் சபைவணக்கச் செய்யுள் என்றுகூட புரிந்துகொள்ளாமல் அதை நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொண்டு அவர் அதை ஒரு இந்துத்துவ பிரதி என்று எழுதியிருந்தார். பிறகு பிரேம் அந்தக் கட்டுரையை ராமகிருஷ்ணன் விஷ்ணுபுரம் நாவலின் 50 பக்கங்களைக் கூட படிக்காமல் எழுதியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நாங்கள் நினைவுகூர்கிறோம். இப்போது நீங்கள் ராமகிருஷ்ணனிடம் ‘சமாதானமாக’ போய்விட்டதனால் இதெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?
சிவராம்

அன்புள்ள சிவராம்,

விஷ்ணுபுரம் வெளிவந்த போது அதை உள்வாங்க பெரும்பாலும் அனைவருக்குமே சிரமம் இருந்தது. எனக்குத்தெரிந்து மூன்றேமூன்று விமரிசனங்கள்தான் அதை பாராட்டின. மீதியெல்லாமே முழு நிராகரிப்புகள். இப்போது அது ஒரு முக்கியமான செவ்வியல் படைப்பாகவும் நாவல்களில் திருப்புமுனையாகவும் ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே விமரிசனங்கள் எதையும் நிறுவிவதில்லை. அவற்றை அவற்றின் காலம் கடந்து சுமந்து கொண்டுவரவேண்டிய தேவையும் இல்லை. நூல்கள் தங்கள் சுயபலத்தால் நிற்கக்கூடியவை.

ராமகிருஷ்ணன் இன்று தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. அதைச்சொல்ல நான் அவரிடம் ‘சமாதானமாக’ போக வேண்டுமா? அப்படியானால் சமாதானமாகப் போவதுதானே முறை?

ஜெ

காவல் கோட்டம், கடிதங்கள்

‘வெண்ணிலை’,’காவல்கோட்டம்’—விருதுகள்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவல் கோட்டம்:எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்