காடு-ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இம்முறை நான் கடலுக்கு வரும் பொழுது தங்களின் ‘ காடு’ நாவல் கொண்டுவந்தேன். எனக்குக் காலை 6மணி முதல் மாலை 6மணி வரை பணி இருக்கும். இரவு 9 மணிக்கு மேல் கடலின் அழ்ந்த அமைதியில் ‘காடு’ படிக்க ஆரம்பித்தேன். மிக அற்புதமாய் விரிகிறது. இத்தனை ஆண்டுகளாய்ப் படிக்காமல் விட்டதை நினைத்துக் கவலைப் பட்டேன். மிகத் துல்லியமான நடை. மனதுள் காடு,தன் பரப்பினை விரித்துப் பரந்து செல்கிறது.

நான் தற்பொழுது இருக்கும் Off Shore Oil Rig மும்பையில் இருந்து 150 கடல் மைல்கள் தள்ளி…இருக்கிறது . எண்ணெய்க் கிணறுகள் கடலுள் போட்டுக் கொண்டிருக்கிறோம். சுற்றிலும் வெறும் விரிந்து பரந்த கடல் மட்டுமே, மேலே பரந்த வானம். இச் சூழலில் காடு வேறொரு பரிமாணத்தைக் காட்டி மிகவும் மன நிறைவைத் தருகிறது.

கிரிதரனும், குட்டப்பனும், ரெசலமும், குருசும், மிளாவும் கண் முன்னே வருகிறார்கள். அந்தமானில் கப்பலில் பணி புரியும் போது அங்கே ‘கேம்பல் பே ‘ எனும் தீவில் நாங்கள் சிலர் அடர் காட்டுக்குள் சென்று வழி தவறி ஓர் இரவினைக் காட்டுள் கழித்தது நினைவுக்கு வந்தது. அது சிறிய தீவு தான் , ஆனால் பெருங் காடும் இருளும் மழையும் எங்களை பயமுறுத்தியது . ‘பெடாக்’ எனும் அசுர மரங்கள் நிறைந்த தீவு . மழை நீர் பெரிதாகத் தரையில் படாத அளவிற்கு அடர்ந்த மரங்கள் .. காற்றின் வேகத்தால் கடலலைகள் உயர்ந்தன . எப்படியோ போய் இந்தியாவின் ‘கடைதென் முனை ‘ என்று அழைக்கப் பட்ட ‘ இந்திரா பாயிண்ட் ‘ கலங்கரை விளக்கத்தில் தங்கினோம்.(இப்பொழுது அந்த இடம் இல்லை… சுனாமியில் கடல் கொண்டு போயிற்று ).

காடு மிக அற்புதமான எழுத்து… மிகவும் பெருமையாகவும் இருக்கிறது … உங்களுடன் என்னால் பழக முடிந்ததை நினைத்து. இம்முறையும் ஊரில் உங்களை சந்திக்க இயலவில்லை. ப்ரேமானந்தனின் மரணம் எனக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. அவன் நினைவை விட்டு அகலவே மாட்டேனென்கிறான். மிகப் பெரிய அடி எனக்கு.கடலில், யாருமற்ற வெளிப்புற புகை பிடிக்கும் தளத்தில் இரவில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘காட்டில்’ வரும் நீலியின் உருவம் கடலின் அலைப் பரப்பில் நகர்வது போலத் தோன்றும். இடை இடையே ப்ரேமானந்தனின் மெலிந்த தேகமும்..

அன்புடன்

பத்மநாபபுரம் அரவிந்தன்.

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6
அடுத்த கட்டுரைஒரு படம்