வகுப்புகள், கடிதங்கள்

நாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு

அன்புள்ள ஜெ

நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல். என் விசா பிரச்சினை. அதை விரிவாக எழுதியுள்ளேன். மன்னிக்கவும்

எஸ்

அன்புள்ள எஸ்

உங்கள் பிரச்சினையை புரிந்துகொள்கிறேன். நிகழ்ச்சியை தவிர்ப்பவர்கள் பற்றிய ஒரு கண்டிப்பு எனக்குண்டு. அதற்கான காரணம் நம் சூழலில் உள்ள மனநிலை சார்ந்தது

இங்கே ஒரு சோர்வு மனநிலை உண்டு. ஒருவர் தனக்கான ஆர்வத்தை, தன் துறையை கண்டடைந்தால்கூட எளிமையான சலிப்பு, தயக்கத்தால் அதை தவிர்த்துவிடுவார். ‘தொடங்குவதற்கான தயக்கம்’ என அதைச் சொல்வேன். பெரும்பாலான பெண்கள் அதிலேயே வாழ்ந்து முடிந்துவிடுவார்கள்.

எனக்கு அந்த மனநிலை மேல் ஒவ்வாமை உண்டு. அவர்களை கடுமையாகச் சீண்டிக்கொண்டே இருப்பேன். முதல் அடி எடுத்து வைக்காமல் இங்கே எதையும் செய்ய முடியாது.  அவ்வாறு ஒருவர் தன் தயக்கத்தால் ஒரு நிகழ்வை ஒருமுறை தவிர்த்தார் என அறிந்தால்கூட அதன்பின் அவரை எவ்வகையிலும் பொருட்படுத்த மாட்டேன். ஏனென்றால் அவர் இன்னொருவரின் இடத்தை பறிக்கிறார். அவரைப் போன்றவர்களை நம்பி ஒரு நிகழ்வை ஒருங்கிணைக்கிறோம். பாதிப்பேர் வரவில்லை என்றால் அந்நிகழ்வே களையிழந்துவிடும்.பொருளிழப்பையும் உருவாக்கும். அவ்வாறு தயங்குபவர் அதனூடாக பல நிகழ்வுகளை குலைக்கிறார். அவர் ஓர் அழிவுச்சக்தி என்றே மதிப்பிடுவேன்.  ஆகவேதான் அக்கண்டிப்பு. மற்றபடி நடைமுறையில் தவிர்க்கமுடியாச் சூழலில் உருவாகும் தடைகளை என்னால் புரிந்துகொள்ள முடியும். அது எவருக்கும் உரியதே.

 (ஆனால் என் 61 வயதுக்குள் எந்த தவிர்க்கமுடியாத சூழலிலும் எனக்குரிய ஒரு செயலை நான் செய்யாமல் விட்டதுமில்லை)

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் பயணம் செய்ய முடியாது. இணையம் வழியாக நாலாயிரத் திவ்யப்பிரபந்த வகுப்புகள் நிகழ்த்த ஆவன செய்யமுடியுமா?

எம்

அன்புள்ள எம்,

இணைய வகுப்பு வழியாக கற்பதென்பது ஒரு மாயை. அதன் வழியாகச் சில அறிமுகங்களை அடையலாம். கற்பதற்கு ஆசிரியர்களுடன் அமர்வது தவிர்க்கமுடியாது. நாங்கள் ஒருங்கிணைப்பது வெறும் வகுப்பு அல்ல. அச்சூழல், அம்மனநிலை அனைத்தும் அடங்கிய முழுமையான ஒரு கல்வி. அதற்கு ஓர் உணர்வுமாற்றம், ஒருங்கிணைப்பு அவசியம். நேரில் வந்தே ஆகவேண்டும்.

வரமுடியாதவர்கள் என்ன செய்வது என்று கேட்கலாம். உண்மையான ஆர்வம் கொண்டவர்கள் வரமுடியும். முடியாத சூழல் என உலகில் ஏதும் இல்லை. அதெல்லாமே ஒருவர் தனக்கே சொல்லிக்கொள்ளும் சாக்குகள்தான். அப்படியும் வரமுடியவில்லை என்றால் அது வைணவ நம்பிக்கையின்படி உங்கள் பிராப்தம். உங்களுக்கு இக்கல்விக்கான வாய்ப்பு இல்லை. எல்லாரும் கற்றாகவேண்டும் என்பது இல்லை. 

ஞானம், விடுதலை என்பவை எந்நிலையிலும் அனைவருக்கும் உரியவை அல்ல. அவை உண்டு என அறியாமலேயே மறைபவர்கள் உண்டு. அறிந்தும் அதைவிட மூன்றுவேளைச் சோறும் சுற்றத்தார் நடுவே தோரணையும் மட்டுமே முக்கியம் என நினைத்து தவறவிடுபவர்கள் உண்டு. வெவ்வேறு தளைகளை தங்களுக்கே போட்டுக்கொள்பவர்கள் உண்டு. இயல்பான தயக்கங்களால் தவறவிடுபவர்கள் உண்டு. வைணவ நம்பிக்கைப்படிச் சொல்வதென்றால், வேறேதும் பிறவியில் கல்வி உங்களுக்கு வாய்க்கலாம்.

வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகாதலால் நிரம்பிய மூன்று கதைகள்
அடுத்த கட்டுரைதமிழ்நேசன்