அன்புள்ள ஆசிரியருக்கு,
திருவருட்செல்வி சிறுகதை தொகுப்பை சில வாரங்கள் முன் வாசித்திருந்தேன். வாசித்து முடித்துவிட்டேன் என்று சொல்லத் துணியவில்லை. எளிமையான கதைகள் போல தோற்றம் அளிப்பவை. ஆனால் என்னுள் வளர்ந்த வண்ணம் செல்கின்றன. மீண்டும் இதன் வரிகளுக்குள் அவ்வப்போது சென்று கொண்டிருக்கிறேன்.
“தூரமா இருந்தா அலை வரக்கூடதுல்லம்மா?”, கடல் சிறுகதையில் ஜான் அம்மாவிடம் கேட்பது. “வராதுல்ல” என்று சொல்லி இருந்தால் அது சந்தேகத்தை உறுதி செய்து கொள்வது. “வரகூடாதுல்ல” என்பது எவரோ ஆட்டத்தின் விதியை மீறி விட்ட பரிதவிப்பின் புகார்.
அதன்பின் ஜான் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்பான். ஆனால் அவனுக்கு புரிந்திருக்கும் இங்கே எல்லாம் நிலை குலைபவை என்று. எங்கும் குழப்பங்கள்.
வலியும் துயரும் இழப்பும் மரணமும் பேருரு எடுத்து நின்றால் எதை பற்றிக்கொள்வது? இக்கதைகளில் வரும் அம்மாவும் அப்பாவும் (எல்லோரும்) கூட அனுபவரீதியாக உணர்ந்த ஒன்றை, தாங்கள் முழுதும் புரிந்து கொள்ளாத ஒன்றைத்தானே பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கினால் உடையக் கூடும் என்று அறிந்திருப்பார்கள் போலும். மீறி எழும் கேள்விகளுக்கு, அவை சித்தத்தை எட்டும் முன்னரே, அதே நம்பிக்கையில் இருந்து சமாதானத்தை எடுத்துக் கொண்டு விடுவார்கள். கேள்வியே எழாது. இப்படி எழுப்பப்படாத கேள்விகள் கதைகளுக்குள் வந்த வண்ணம் இருக்கின்றன. தேவ பயம். தேவ விசுவாசம்.
எத்தனை பெரிய பலம் அது. திருவருட்செல்வி கதையில் வரும் செல்வியும், சாட்சி கதையில் வரும் மாலாவும் குழப்பங்கள் அற்றவர்கள். எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக்கொள்ளும் என்று முன் நகர்கிறார்கள். மாலா இன்னும் ஒரு படி முன் சென்று வேறொன்றை காட்டுகிறாள். கை விடப்பட்ட நிலையில், “மனசாட்சி வேணாமா” என்று கேட்கும் தோறும் மனதில் ஒரு பதற்றம் குடிகொள்கிறது. நாம் மனசாட்சிக்கும் மானுட அறத்திற்கும் பதில் சொல்ல கடமை பட்டவர்கள் இல்லையா. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நமக்கு நாம் வகுத்துக் கொண்ட பற்றுதல். அதை உடையாமல் தளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை அல்லவா. இவை என்னுள் வளர்ந்தவை, கதைகளின் ஒரு கோணம் மட்டுமே. ஒவ்வொருவருக்கு வெவ்வேறு வகையில் விரியும் சாத்தியங்கள் கதைகளில் உள்ளன.
இத்தொகுப்பில் வரும் மனிதர்கள் தெரிந்தவர்கள். அணுக்கமானவர்கள். அவர்களை மேலும் அணுக்கமாக உணர முடிகிறது. சிறு விஷயங்கள் என்று கருதிவிடக்கூடிய இடங்களில் எழுத்தாளர் கதை மாந்தர்களின் உளவியலை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். தன்னைத் தானே தேற்றி கொள்பவர்கள், மீளவே முடியாமல் மாறியவர்கள், குழந்தையாக இருந்தே பெரியவர்கள் ஆனவர்கள், பெரியவர் ஆகாத வளர்ந்தவர்கள், குழப்பத்தில் தத்தளிப்பவர்கள், நம்பிக்கை உடையும் தோறும் பற்றிக்கொள்பவர்கள், பயமே அற்றவர்கள் என வேறுபட்ட முகங்கள்.
விஷால் ராஜா சூழலின் உணர்வு நிலையை துல்லியமாகவும் குறிப்புகள் மூலமும் கவனமாக கடத்துகிறார். தத்தோவஸ்க்கி படிக்கவில்லை என்றாலும் ஓரளவு புரிகிறது. இத்தொகுப்பின் வழி அவரை அறிமுகப்படுத்தி கொண்டதில் மகிழ்ச்சி.
மேலும், அட்டைப்படத்தில் உள்ள பூனையின் குறுகுறுப்பை சற்று குறைத்து கொள்ள சொல்லுங்கள். கதைகளில் சத்தமில்லாமல் ஊடுருவி உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றி,
சரண்யா