அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ஆலயக்கலை பயிற்சி முகாம் அறிவிப்பு ஒவ்வொருமுறை வரும்போதும் அந்த நாள்களில் வேறு நிகழ்வுகளுக்கு செல்லவேண்டியதிருக்கும். இப்படியே ஐந்துமுறை தவறவிட்ட பிறகு இனி எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை தவிர்த்துவிட்டு ஆசிரியர் ஜெயக்குமாரை சந்திக்கவேண்டுமென உறுதிகொண்டேன். இம்முறை அறிவிப்பு வந்தபோது அதே நாளில் எழுத்தாளர் கமலதேவிக்கு விருது வழங்கும் விழா. மனதைக் கல்லாக்கிக்கொண்டு சிற்பங்களைக் குறித்து அறிவதற்கு செல்வதென முடிவு செய்தேன். கமலதேவிக்கு இது முதல் விருதுதானே இன்னும் பல விருதுகள் அவர் பெறுவார், அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என மனதை சமாதானம் செய்துகொண்டேன்.
அந்தியூரில் என் மகன் மற்றும் என் அலுவலகத்திலேயே இன்னொரு துறையில் பணியாற்றும் தோழி ஹேமாவுடன் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து மடம் செல்லும் பேருந்தில் ஏறியபோது வெள்ளிமலைக்கு செல்கிறேன் என ஒருவர் அறிமுகம் செய்துகொண்டார். பெயர் சண்முகவேல் என்று அவர் கூறியபோது உடலில் ஓர் சிலிர்ப்பு பரவ வெண்முரசு ஓவியங்கள் அதிலும் குறிப்பாக நீலவண்ணனின் உருவங்கள் ஓர் தித்திப்பென நினைவில் எழுந்தன.
கிளம்பி பத்து நிமிடங்களிலேயே பேருந்து மலையில் ஏறத் தொடங்குகிறது. பேருந்தின் இடதுபுறம் அமர்ந்தால் காணக்கிடைக்கும் காட்சிகள் மனதை பிரமிக்க வைக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியும் அடுக்கடுக்கான மலைகள். பசுமையான வெவ்வேறு விதமான மரங்கள். பேருந்திலிருந்து குனிந்து பார்த்தால் ஒரே உயரம் கொண்ட மரங்களின் உச்சிகளோவென பச்சைக் கம்பளம் விரித்தாற்போல சமதளமாக காட்சியளிக்கிறது. யதி (பனிமனிதன்) மரங்களின் மேல் நடந்து வருவான் என வாசித்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் இக்காட்சியைக் கண்டபோது அவன் பிரமாண்ட உருவத்துடன் நடந்துவருதை கற்பனையில் காணமுடிந்தது. கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் நிகழ்வதல்ல வகுப்பறையை நோக்கி அடியெடுத்து வைக்கும்போதே தொடங்குகிறது. வழியில் காணும் அடையும் அனுபவங்கள் அனைத்தும் அதன் பகுதியே என்பதே என் எண்ணம். இத்தனை தூரம் பயணம் செய்து செல்வதென்பதே கல்வியை முக்கியமானதாக ஆக்குகிறது. அங்கு கற்றுத்தரப்படுபவை மனதில் என்றும் நிலைபெறுவதாகவும் அமைகிறது.
பேருந்து ஈரட்டியிலிருந்து உள்முகமாக திரும்பிச் செல்கிறது. ஆரம்பப்பள்ளி பயிலும் பிள்ளைகள் பலர் பேருந்தில் இருந்தனர். ஓர் ஆரம்பள்ளியை எல்லையாகக் கொண்டு பேருந்து வட்டமடித்து நின்றது. அவர்களை இறக்கிவிட்டதும் அங்கே நின்று கொண்டிருந்த சீருடை அணிந்த உயர்நிலைப்பள்ளியில் பயிலும் சற்று பெரிய பிள்ளைகள் பேருந்து நிறையுமளவிற்கு ஏறினார்கள். செல்லும் வழியில் இன்னும் பலர் ஏறினார்கள். மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியருகில் அவர்கள் மொத்தமாக இறங்கிக் கொண்டார்கள். இந்தப் பிள்ளைகளை பள்ளியில் விடவும் திரும்ப கொண்டு விடவும் காலையும் மாலையும் பேருந்து இந்த வழியில் வந்து திரும்புமாம். தமிழும் கன்னடமும் கலந்து புரியாதவாறு உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த அப்பிள்ளைகளைக் கண்டபோது ஆலயக்கலை வகுப்பிற்கு தாமதமாகிறதே என்ற கவலை மறந்து ஒரு நிறைவு தோன்றியது. தமிழக அரசின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் இந்த மலைப்பகுதியிலும் கல்விக்கு ஒரு கட்டமைப்பு இருப்பதும் மாணவர்களின் போக்குவரத்திற்கு பேருந்து வசதி செய்துள்ளதையும் எண்ணியே அந்த நிறைவு எனப் பிறகு புரிந்தது.
பத்துமணிக்கு பேருந்திலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து நித்யவனம் என்ற பெயர்ப்பலகையைக் கண்டதும் உள்ளெழுந்த பரவசத்தை அனுபவித்தபடியே நடந்து வகுப்பிற்குள் நுழைந்தபோது ஆசிரியர் ஜெயக்குமார் பேசிக்கொண்டிருந்தார். வகுப்பைத் தொடங்கும்போது அவர் பாடியதை தவறவிட்டிருந்தோம்.
ஆலயக்கலை வகுப்பை ஆலயம் என்ற கட்டடத்திலிருந்து தொடங்காமல் ஆலயம் என்ற சொல்லில் இருந்து தொடங்கினார் ஜே. கே.(ஜெயக்குமார் என்பதன் சுருக்கம்– நண்பர்களுடன் பேசும்போது இப்படி குறிப்பிடுவதே வழக்கம்). கோவிலைக் குறிக்கும் பல பெயர்களையும் அச்சொற்கள் தமிழிலக்கியத்தில் முதன்முதலில் இடம்பெற்ற பாடல்களையும் விவரித்தார். இந்தத் தொடக்கமே ஆசிரியரின் முழுமையான பரந்துபட்ட அறிவிற்கும், பிறருக்கும் அதைக் கற்பிக்கும் அவரின் விழைவிற்கும் சான்றாகும்.
முற்காலத்தில் கோவில் எந்த வகையில் கட்டப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும் அதனால்தான் அவை இப்போது காணக்கிடைக்கவில்லை என்றும் ஒரேயொரு தரைக்கட்டுமானம் மட்டும் தற்போது காணக்கிடைப்பதையும் குறிப்பிட்டது வியப்பாயிருந்தது. கோவில்களின் கட்டுமானத்தை தனித்தனி பாகங்களாக விவரித்தார். உபபீடத்தில் தொடங்கி அதிட்டானம், பாதவர்க்கம்,பிரஸ்தாரம், சாலை, கர்ணகூடம், கிரீவம், சிகரம் என்று வரிசைபடுத்தி கலசத்தில் முடித்தபோது மனதிலோர் உவகை தோன்றியது. தினம் பார்க்கும் கோவில்களின் பாகங்களை தனித்தனியாக நுணுக்கமாக அறிந்ததின் உவகை.
மூன்று நாளுமே இந்த உவகை தொடர்ந்து கொண்டேயிருந்தது. கோவில்களை அமைப்பதற்கான முறைமை, அமைக்க உபயோகப்படுத்தும் பொருட்கள், அதை அமைப்பவருக்கான தகுதிகள் என விவரித்துக் கொண்டேயிருந்தார். இதனூடாக ஸ்தபதி என அழைக்கப்படும் கோவிலை நிர்மாணிப்பவருக்கு இசையும் நாட்டிய சாஸ்திரமும் சிற்பசாஸ்திரமும் இலக்கியமும் கற்கள் உலோகங்களின் தன்மைகள் பற்றிய அறிவும் அத்துடன் பூமியின் தன்மையும் தெரிந்திருக்க வேண்டும். அவரே சிறந்த ஸ்தபதி எனக் குறிப்பிட்டார். நம்முன் பிரமாண்டமாய் ஆயிரமாண்டுகளாய் ஓங்கியுயர்ந்து நிற்கும் கோவில்களை அமைத்தவர்கள் எத்தனை கலைகளில் ஞானமுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் எழுந்தபோது உவகையின் அளவு கூடியது.
ஆகமங்களைப் பற்றி மிக விரிவாக விவரித்தார். ஒவ்வொரு இந்து மதத்திற்கும் (சைவம், வைணவம், சாக்தம் போல) வெவ்வேறு ஆகமங்கள் உண்டென்பதையும் அவற்றில் ஒன்று மட்டுமே (ரௌரவ ஆகமம்) எஞ்சியுள்ளதையும் கூறியபோது நம் பெரும் ஞானங்கள் தொடர்ந்து அழிவதை தடுக்கமுடியாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவே இப்போதுவரை இருந்துவரும் நம் மக்களின் தடித்தனத்தின் மேல் ஒவ்வாமை தோன்றியது.
சிற்பங்களின் அமைப்பு பற்றி ஜே. கே. விவரித்தபோது மனம் ஒருவித பரவசநிலையிலேயே நிலைத்திருந்தது. புதிதாய் ஒன்றை அறியும் பரவசம் சூடமிட்டாயைப்போல சுறுசுறுவென தழலாடியது. முக்கியமாக தெய்வ வடிவங்களின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்காத ஒன்று. (உதாரணமாக முருகனுக்கு 30 வடிவங்களாம்).
சிற்பங்களை செய்வதற்கான மூலப்பொருள் கல், மண் மற்றும் உலோகம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் பத்து பொருட்களால் செய்யப்படுகிறது என விவரித்தார். சிற்பம் என்பவை வெறுமனே உருவத்தை செதுக்குவதல்ல, மூன்று தெய்வ வழிபாட்டு முறைக்கேற்ப எத்தனை பரிமானத்தில் இருக்கவேண்டும் எந்த உணர்வை( ரசம்) வெளிக்காட்ட வேண்டும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு செய்யப்படுவது என்பதை உணர்த்தினார்.
சிற்பங்கள் அமைந்துள்ள நிலையினைக் கொண்டு அது சுட்டுவதென்ன என்பதையும் அதற்கான பெயர் என்னவென்பதையும் மிக விரிவாகவே படங்களுடன் விவரித்தார். வகுப்புக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவரங்கள் அறிந்தவர்களாக இருந்தார்கள். காலை வகுப்பில் ஜே. கே. கூறியதை மாலை வகுப்பில் திரும்பக் கூறும் திறன் படைத்தவர்களாய் இருந்தனர். வகுப்பில் அவரிடம் கேட்பதைவிட தேநீர் குடிக்கவும் விடாமல் அவரிடம் மேலதிக விவரங்களை கேட்ட வண்ணம் இருந்தனர். முகத்தில் புன்னகையை மாற்றாமல் ஜே.கே.வும் பதில் கூறிக்கொண்டிருந்தார். நூல்களில் படிப்பது மட்டும் போதாது ஆசிரியரிடம் நேரடியாக கற்கவேண்டும் எனக் கூறப்படுவதன் பொருள் தெளிவாகப் புரிந்தது.
இம்மாதிரியான முகாம்களில் முக்கியமானவை ஆசிரியர் கூறும் பாடத்தை கவனிப்பது, அவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவது என்ற இரண்டுக்கும்மேல் ஒத்த மனதுடையவர்களுடன் தங்கள் மனதை பகிர்ந்து கொள்வதும்தான். வயதிலும் உருவத்திலும் படிப்பிலும் பணியின் தரத்திலும் பல்வேறு படிநிலைகளில் இருக்கும் அனைவரும் சமமானவர்கள் என ஒவ்வொருவரும் உணரும் தருணம் விஷ்ணுபுர கூடுகைகளிலேயே நிகழும். இதுவொரு பரவச மனநிலை. இதை அடைவதற்காகவே இந்நிகழ்வுகளில் பங்கேற்பதாக கூறியவர்களும் உள்ளனர். தோழி ஹேமா புதுசா இருக்கு.. ரொம்ப பிடிச்சிருக்கு என்ற வார்த்தைகளால் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அங்கு வந்தவர்களுடன் உரையாடும்போது உணர்ந்து கொண்ட ஒரு விசயம் உள்ளது. உங்கள் படைப்புகளின் துணை கொண்டு தங்கள் வாழ்வின் பேரிடரிலிருந்து வெளிவந்தவர்கள் பலநூறு பேர் இருக்கக்கூடும். உங்கள் படைப்புகளை வாசித்ததன் மூலம் இளமையிலேயே தங்களுக்கென ஒரு இலக்கை வகுத்துக்கொள்பவர்கள் ஒருபுறமிருக்க மத்திம வயதில் உங்களை கண்டடைந்ததன் வழியாக வாழ்வின் இன்பத்தை அறிபவர்கள் ஒருவகை. அதில் இன்னொருவர் தோழி பத்மாவதி. அரசு அதிகாரியாக பணியாற்றும் அவர் தன் கணவருடன் வந்திருந்தார். தன் வாழ்வின் மிக இக்கட்டான காலகட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து நைந்திருந்தபோது உங்களின் படைப்புகளை பற்றுக்கோடாக கொண்டு மீண்டு வந்ததை பரவசத்துடன் கூறினார். இலக்கியம் வாசிப்பதால் என்ன பயன் என்பது எப்போதுமிருக்கும் கேள்வி. இதற்கு பதிலளிக்கும் விதமாக நிகழ்ந்த அவர் வாழ்வின் பல தருணங்களை கூறினார். அவர் கூறியதையே தொகுத்து செல்வேந்திரன் எழுதிய “வாசிப்பது எப்படி” என்ற நூல் போல “ஏன் வாசிக்கவேண்டும்” என ஒரு நூலாக எழுதுங்கள் எனக் கூறினேன். அவர் சற்று தயக்கத்துடன் இருந்தார். அவரை எழுத வைப்பதற்காகவே இங்கே குறிப்பிட்டுவிட்டேன். பேராசிரியை லோகமாதேவி போல சிறப்பான எழுத்தாளராக கோவை பத்மாவதியும் வருவார் என்பது என் நம்பிக்கை.
திருவள்ளூரிலிருந்து தினம் சென்னை அண்ணாசாலையிலுள்ள அலுவலகத்திற்கு வந்து செல்லும் சண்முகவேலும், இந்திய கடற்படையில் பணியாற்றும் செந்தூரும் உங்கள் படைப்புகளால் தாங்கள் அடைந்தவற்றை பகிர்ந்து கொண்டார்கள். “தஞ்சை சிறுமி” கடிதம் மூலம் புகழடைந்துள்ள நிவேதிதாவும் அவரின் தந்தை நண்பர் வீரராகவனும் வந்திருந்தார்கள். பாவாடை சட்டையணிந்தபடியான புகைப்படத்தில் பார்த்தபோது வளர்ந்த பெண்ணாக தெரிந்த நிவேதிதா சிறு பெண்ணாகவே இருந்தார். அவரிடம் உரையாடியபோது அவரின் அவதானிப்புகளை அறிய முடிந்தது. வகுப்பிலும் ஜே.கே.வின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நல்ல வாசகியாக உள்ள அவர் எழுத்தாளராகவும் வருவார் என்பது திண்ணம்.
பயிற்சி முகாமில் கலந்துகொள்ளாமலேயே ஹம்பி பயணித்தில் பங்குகொண்ட ஓவியர் ஜெயராம் அதை நேர் செய்வதற்காக வந்திருந்தார். தனக்கேயுரிய உற்சாகத்துடன் இருந்தார். முதல் வரிசையில் அமர்ந்து ஜே.கே காட்டிய சிற்பங்களின் படங்களை அதைப்போலவே தன் குறிப்பேட்டில் வரைந்து அவருக்கு இருபுறம் அமர்ந்து வரைய திணறிக்கொண்டிருந்த எனக்கும் பத்மாவதிக்கும் சங்கடத்தை உண்டாக்கினார்.
இரண்டாம் நாள் வகுப்பில் கோவில்களின் அமைப்பைப் பற்றியும் அதற்கான தத்துவங்கள் பற்றியும் ஜே.கே. விவரித்தார். பல்லவர் மற்றும் பாண்டியர் காலகக் குடைவரைக் கோவில்கள் பற்றி புகைப்படங்களுடன் தான் சென்று வந்த அனுபவத்தையும் தற்போது அவை இருக்கும் நிலையினையும் கூறினார்.
அடுத்தடுத்த வகுப்புகளில் மாமல்லபுர சிற்பங்கள் பற்றியும் முற்கால பாண்டியர்களின் கோவில்களைப் பற்றியும் முழுமையான சித்திரத்தை அளித்தார். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தஞ்சைப் பெரியகோவின் அமைப்பையும் அதன் சிற்பங்களையும் மற்ற கோவில்களில் இல்லாது இக்கோவிலில் மட்டும் அமைந்துள்ள சிறப்புகளையும் நிதானமாக தெளிவான புகைப்படங்களை காட்டி விளக்கினார். தஞ்சை கோவிலில் அமைந்துள்ள பரவலாக வெளித் தெரியாத பலவிசயங்களை பிரமிப்புடனும் பெருமிதத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிந்தபோது அனைவரின் முகத்திலுமே ஒருவித பரவச பாவம் மிளிர்ந்தது. எப்போதும் சென்று வருவதுபோல கோவிலில் இருந்து இனி உடனே திரும்ப முடியாது. ஒவ்வொருமுறை செல்லும்போதும் ஜே.கே. கூறியதை நினைவு கூர்ந்தபடி நிதானமாய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக கண்டு ரசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே உற்சாகமளித்தது. கற்றலின் இன்பத்தை மீண்டுமொருமுறை உணர்ந்தேன்.
ஒட்டு மொத்தமாக, வகுப்பு நிறைவானதாக எப்போது எண்ணினாலும் ஒரு இனிமையை மனதில் நிறையச் செய்யும் அனுபவமாக அமைந்தது. அதற்கு முதன்மையான காரணம் ஆசிரியர் ஜெயக்குமாரின் பல்கலை அறிவும் அதனை பிறருக்கு பிரியத்துடன் பகிரும் திறனும்தான். அவர் இசையில் பயிற்சியுடையவராகவும் கல்வெட்டுகளை வாசிப்பவராகவும் சிற்பங்களைப் பற்றியும் கோவில்களைப் பற்றியும் முழுமையாக அறிந்தவராகவும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் தேர்ச்சியுடையவராகவும் உள்ளார். இத்தனையையும் இளம் வயதிலேயே கற்றுணர்ந்துள்ளார் என்பதுதான் இன்னும் சிறப்பானது. ஒரு ஸ்தபதி பல கலைகளை அறிந்தவராக இருக்கவேண்டும் எனக் கூறியபோது சிறிய சந்தேகம் வந்தது. இப்போது யார் இத்தனை திறனோடு இருக்கப் போகிறார்கள் என. வகுப்பின் பாதியிலேயே அந்த சந்தேகம் அறவே நீங்கி நம்பிக்கை வந்துவிட்டது. இவரே உதாரணமாக உள்ளாரே என்று.
இத்தகைய முகாம்களை ஒருங்கிணைப்பது மூலமாக நம் மரபையும் பண்பாட்டையும் பல்லாயிரம் பேருக்கு கடத்தமுயலும் உங்கள் முயற்சி குரு நித்யாவின் ஆசியால் முழுமையாக வெற்றியடையும். உங்களுக்கும் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இளம் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
கா. சிவா