பூன் முகாம்

சௌந்தர்ராஜன் உரை

எல்லா மகத்தான முயற்சிகளும் ‘Why not?’ என்னும் ஒற்றைச்சொல்லில் இருந்து தொடங்குகின்றன என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. குறிப்பாக என் செயல்கள் எல்லாமே அப்படி தோன்றியதுதான். குஞ்சன் நம்பியார் துள்ளல்பாட்டில் சொல்வதுபோல “உண்டிருந்ந நாயர்க்கொரு வெளிபாடுண்டாயி’ (சாப்பிட்டுக் கொண்டிருந்த நாயருக்கு ஒரு ஞானம் உதித்தது) உருவானவை.

பூன் முகாம் இருவருக்கு அப்படி உருவான வெளிபாடு. ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம். நாங்கள் இருபத்தைந்தாண்டுகளாக ஊட்டியிலும் இப்போது ஈரோட்டுக்கு அருகிலும் நடத்திவரும் குருநித்யா ஆய்வரங்கு போல ஒன்றை அமெரிக்க மண்ணில் நிகழ்த்துவது. தோன்றியதுமே அது பாட்டுக்கு நிகழ்ந்துவிட்டது. ராலேயில் ராஜன் சோமசுந்தரம் இருக்கிறார். அவ்வட்டாரத்தில்தான் பிரகாஷ், முத்து காளிமுத்து, ரெமிதா, விவேக் என பல இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். ஆகவே அருகே பூன் என்னும் மலைமேல் முதல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. பூன் முகாம் என பெயர் பெற்றுவிட்டது.

இனி பெயரை மாற்ற முடியாது. ஆனால் ஏன் எமர்ஸன் பெயரால் அதை நடத்தக்கூடாது என எண்ணிக்கொள்கிறேன். எமர்ஸன் நினைவு இலக்கிய முகாம், பூன். எமர்சன் என் ஆதர்சம். நித்யாவுக்கும். அமெரிக்கா மிக விரைவாக இழந்துகொண்டிருக்கும் மானுடக்கனவு உருவான உள்ளங்களில் ஒன்று எமர்சனுடையது. எதிர்காலத்தில் வைட் மௌண்டேய்ன் போல வேறெங்காவது நிகழ்த்தினாலும் இப்பெயர் நீடிக்கலாம். ஏனென்றால் இரண்டாவது நிகழ்விலேயே ஓரளவுக்குமேல் பங்கேற்பாளர்களுக்கு இடம் அளிக்க முடியாமல் 20 பேரை தவிர்க்க வேண்டியிருந்தது. பூனில் இன்னும் பெரிய நிகழ்வை நடத்த முடியாது.

இது ஓர் இலக்கிய விவாத முகாம். ஆனால் எவரும் எதையும் பேசும் இடம் அல்ல. இலக்கியமறிந்தோர், தேர்வுசெய்யப்பட்டோர் வந்து கூடி உரையாடும் அமர்வு.முற்றிலும் அரசியல் கிடையாது. சமூகவியல் விவாதங்களும் இல்லை. இலக்கிய அழகியல், இலக்கியக்கொள்கைகள் மட்டுமே.  ஆகவே முழுநேரமும் கூர்மையான, தீவிர்மான விவாதங்களுக்கு மட்டுமே இடம். அவ்வாறே குரு நித்யா ஆய்வரங்கையும் இதுவரை நடத்தி வருகிறோம். ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ என வள்ளுவன் வகுத்த வகையிலேயே இவ்வரங்குகள் இது வரை நிகழ்கின்றன. கடும் விமர்சனங்கள் இல்லை. எந்த வகையான மனவருத்தங்களுக்கும் இடமில்லை. சிரிப்பும் கொண்டாட்டமுமாக நிகழ்ந்து இனிய நினைவாகவே முடிந்தாகவேண்டும்.

இத்தகைய நிகழ்வுகளின் தேவை என்ன? முதன்மையாக, இலக்கியவாசகர்களாகிய நாம் நம்மைப் போன்றவர்களை நேரில் சந்திக்கவேண்டும். நாம் ஒரு தனிச்சமூகம் என உணர்ந்தாகவேண்டும்.  நாமனைவருக்குமே நம்மைச் சூழ்ந்துள்ள அரசியல் காழ்ப்புகள், சாதிக்கசப்புகள், சில்லறைப்பேச்சுக்கள் மேல் கடும் ஒவ்வாமை உள்ளது. நாம் ஒட்டாமல் அச்சூழலில் வாழ்பவர்கள். நமக்கான உரையாடல்சூழலை நாம் உருவாக்கியே ஆகவேண்டும். நேரில் சந்திக்காமல் அது நிகழ்வதே இல்லை. ஓர் அறைக்குள் கூடியமர்ந்து, ஒரே உடலாக உணர்கையில் மட்டுமே அது நிகழ்கிறது.

இரண்டாவதாக, நாம் வாசித்தவற்றை எங்கேனும் பகிர்ந்துகொள்ளாவிட்டால், அவ்வாறாக நமக்கே தொகுத்துக்கொள்ளாவிட்டால் காலப்போக்கில் நம் வாசிப்பிலும் சிந்தனையிலும் பெரும் தேக்கம் ஏற்படும். அவ்வாறு உருவாகும் தேக்கம் நம் ஆளுமையையும் தேங்கச் செய்யும். சிந்திக்கும் பழக்கமும் வாசிப்பும் உடைய ஒருவர் அவற்றை இழந்துவிடுவார் என்றால் காலப்போக்கில் சோர்வும் சலிப்பும் கொண்ட எதிர்மறை ஆளுமையாக ஆகிவிடுவார். இது நமக்கு நாமே செய்துகொள்ளும் ஒரு காப்பு.

கடைசியாக, அமெரிக்கவாழ்க்கை (இன்றைய இந்திய வாழ்க்கையும்கூட) விரைவோட்டமாக ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஓட்டம். நின்றுநோக்க நேரமில்லை. அலுவலகம், தொழில் ஒருபக்கம். குடும்பத்தை நிகழ்த்துவது இன்னொரு பக்கம். குடும்பத்தை கணவன் மனைவி இருவருமே ஒவ்வொரு நாளும் ஒருங்கிணைத்து நடத்துவது என்பது இன்றுபோல இத்தனைபெரிய பணியாக இருந்த காலமே இல்லை. இந்த ஓட்டத்தின் நடுவே சற்றேனும் இளைப்பாறலிடங்களை கண்டடைந்தாகவேண்டும். இல்லையேல் வாழ்வே பெரும் சுமையென ஆகிவிடும்.

அமெரிக்காவில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் கிளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. க.நா.சு இலக்கிய அரங்கு என்ற பேரில் தொடர்ச்சியாக இலக்கியவாதிகளுடனான காணொளி உரையாடல்களை நடத்தி வருகிறது. பலவகையான காணொளி நிகழ்வுகள் நண்பர்களிடையே நிகழ்கின்றன. பூன் முகாம் ஒன்றே நேர்ச்சந்திப்பு. சென்ற ஆண்டு ஐம்பதுபேர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு எழுபதுபேர். சென்ற ஆண்டு ஒரே கட்டிடம். இவ்வாண்டு ஒரே தெருவில் நான்கு கட்டிடங்களை எடுக்கவேண்டியிருந்தது.

இரண்டுநாட்கள் தொடர்ச்சியாக அரங்குகள். நவீன இலக்கிய அரங்கில் ஜோ.டி.குரூஸ், கமலதேவி, விஷால்ராஜா என எல்லா தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளின் கதைகளைப் பற்றியும் உரைகளும் விவாதமும் இருந்தன. கம்பராமாயண அரங்கு, ஷேக்ஸ்பியர் அரங்கு, அமெரிக்க கவிதைகள் பற்றிய அரங்கு, அறிவியல் புனைவு சார்ந்த விவாதங்கள், வடகிழக்கு இந்தியாவின் புனைகதைகள் பற்றிய விவாதங்கள் என முழுநேரமும் இலக்கியவிவாதம். ஸ்கந்தநாராயணனின் மிருதங்கம், கஞ்சிராவுடன் சங்கர், பழனி ஜோதி, ராஜன் சோமசுந்தரம் ஆகியோரின் பாடல்கள்.

இலக்கிய ரசனை அறியா ஒருவர் வந்தால் பெரும் சுமையாக உணரக்கூடும். இலக்கிய ரசனைகொண்டவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஒருகணமும் வீணாகாத, கூர்மையை ஒரு போதும் இழக்காத விவாதங்கள். ஓராண்டுக்குரிய இலக்கியப்பேச்சு இரண்டு நாளில் நிகழ்ந்து முடிவதைப்போல. இத்தகைய ஒரு சந்திப்பின் ஆற்றல் ஓராண்டு முழுக்க நீடிக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே அறிவர். இது தொடரவேண்டும்.

அமெரிக்கா சார்ந்து இன்னும் விரிவான இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்க திட்டமுள்ளது. ஏற்கனவே அப்படி ஒரு கனவு இருந்தது. அன்று உடனிருந்தவர்களின் அரசியல் சார்பு அதை கலைத்தது. இப்போது எனக்குரியவர்கள் வந்தமைந்துள்ளனர். அரசியல் இலக்கியத்தின் உள்ளடக்கமாக முக்கியமானது – ஆனால் அது ஆசிரியரின் தனித்தேர்வே ஒழிய இலக்கியத்தின் அடிப்படை அதுவாக இருக்க முடியாது. இலக்கியம் அதன் அழகியல் அடிப்படையில் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசியல் இலக்கியத்தின் அழகியலை கலைப்பது, சிதைப்பது. அரசியல் கலந்த இலக்கிய அரங்கு அதன்பின் அரசியலரங்கே ஒழிய இலக்கிய அரங்கு அல்ல. (ஆனால் அதை அரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் அரசியலை மட்டுமே எண்ணுவார்கள், தங்களிலும் பிறரிலும்.)

கலை, பண்பாடு , இலக்கியம் சார்ந்த தன்னியல்பாக திரண்டு நிகழும் ஓர் இயக்கமாகவே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவகிக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் மேலும் விரிவாக வேர்விட்டு கிளை எழுந்து பரவ வேண்டும். கேளிக்கை, மதம், அரசியல் சார்ந்த நிகழ்வுகள் வேறொரு களத்தில் நிகழ்பவை. அவை ஒருவகையில் தேவைதான். அவற்றுக்கு அப்பால் இப்படி ஓர் உலகம் சிலருக்காவது தேவையாகும். அது இல்லை என இருக்கலாகாது. ஆகவேதான் இதை ஒருங்கிணைக்கும் துடிப்பு கொண்டிருக்கிறேன். செயலூக்கம் கொண்ட நண்பர்கள் முன்னெடுக்கிறார்கள்.

For Contact [email protected]

முந்தைய கட்டுரைகொல்லிப்பாவை
அடுத்த கட்டுரைStories of The True இறுதிப்பட்டியலில்…