குள்ளச்சித்தன் சரித்திரம், கடிதம்

உடைப்பு எடுத்த பெருவெள்ளம் ஒன்று தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது போல் குள்ளச் சித்தன் சரித்திரம் யுவன் வழியாக தன்னை நிகழ்த்திக் கொண்டுள்ளது.குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல்  குள்ளச் சித்தன் கதை மட்டுமல்ல. ஹாலாஸ்யம், இன்ன பிற மற்றவர்களின் கதையும் தான் மலர்களைத் தொடுக்க உதவும் ஒரு வாழை நார் இழை மாதிரி தான் குள்ளச் சித்தனை பயன்படுத்தியிருக்கிறார். 

யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய, ஆனால் யாருமே தெரிந்து கொள்ள ஆசைப்படாத, ஒரு திறந்த ரகஸ்யம் இருக்கிறது. அதை அறிவதற்கு முயலப் போகிறேன்.இது நாவலில் ஒரு இடத்தில் முத்துச் சாமி ஹாலாஸ்யத்திடம் சொல்லும் விஷயம்.  வாஸ்வத்தில் இது யுவனின் வெளிப்படையான பிரகடனமென்றே நான் எடுத்துக் கொண்டேன்.

ஹாலாஸ்யம்.., நாம் சரித்திரம் என்று படிப்பதெல்லாம் , சரித்திராசிரியரின் பார்வையையும் அபிப்ராயத்தையும் தானே. எழுதப்படாத சரித்திரங்களிலிருந்து ஒருவன் தன்னிஷ்டப்படி உருவி எடுத்துதான் எழுதப்பட்ட சரித்திரம். விடுபட்ட சரித்திரத்தை அறிவதற்கு உள்ளுணர்வைத்தான் உபயோகப் படுத்த வேண்டும்.  

இந்த நாவலை அந்த உள்ளுணர்வோடுதான் வாசிக்க வேண்டும். அந்த உள்ளுணர்வைத் தூண்டுபவர்களாக வெங்கடேஸய்யர், பழனி, சிகப்பி என்கிற  கல் சிற்பம் போன்ற கருப்பி, செய்யது,மெளண்ட்பேட்டன் போன்றவர்கள் நாவலில் வருகிறார்கள்.

ரெண்டு வகையான விவரணைகள் இருக்கு. ஒண்ணு, பொது விவரணைகள். அதுலதான் பொம்பளையைப் பாத்தா, பொம்பளைன்னும் ஒட்டகச்சிவிங்கியைப் பாத்தா ஒட்டகச்சிவிங்கீன்னும் தெரியும். இன்னொண்ணு விசேஷ விவரணைகள் . இதுலதாம் பொம்பளை அம்மாவாத் தெரியறா. ஒரு ஆம்பளை என்னோட தம்பியாகவும், இன்னொரு ஆம்பளை வீட்டுல திருட வந்தவன்னும் தெரியுது.

இது English Grammar ல் சொல்லப்படுகிற Proper Noun, Common Noun க்கு மிக நெருக்கத்தில் வருகிறது.

குள்ளச் சித்தன் சரித்திரத்தை பொது விவரணையில் ஒரு புத்தகம் என்று சொல்லலாம். விசேஷ விவரணையில் ஓர் இலக்கியப் பிரதி என்றும் சொல்லலாம்.குள்ளச் சித்தன் கட்டை விரல் மாதிரி குட்டையா இருக்காரு.கட்டை விரலின் முக்கியத்துவம் அறிந்தே இங்கே சித்தன் கட்டை விரலென உருவகப் படுத்தப் படுகிறார்.

இந்த நாவலுக்குள் ஒரு நாவல் எழுதி வெளியிடுகிறார் மு.ஹாலாஸ்யமய்யர். அது தான் குள்ளச் சித்தன் நாவல்.   நோலன் படத்தில் வரும் கனவுக்குள் கனவு போல்.

நாவலில் ஒரு இடத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கிளையை விட்டு பறந்து சென்ற ஒரு புறாவைப் பற்றிச் சொல்வார்.

..presently it flew off and the branch was swinging up and down from the pressure of the flight .

இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு பறவை அமர்ந்திருந்த கிளை போல் மனம் அசைந்து கொண்டிருக்கிறது. 

சந்தானகிருஷ்ணன்  

முந்தைய கட்டுரைபிரியம்வதா, அமெரிக்காவில்
அடுத்த கட்டுரைதி. பரமேசுவரி