முதற்கனல்  – பெருநாவலின் முதற்பொறி- கலைச்செல்வி

 

முதற்கனல் வாங்க

முதற்கனல் மின்னூல் வாங்க 

அஸ்தினபுரியின் மீது நெருப்பு பொறி வந்து விழுகிறது. ஏன்எதனால்.. காதலினாலா? காமத்தினாலா? துரோகமா? சினமா? அல்லது மண்ணாசையா? எதன் பொருட்டு கனல் அஸ்தினபுரியை அவியாக்கிக் கொள்ள எண்ணுகிறது? ஒரு அநீதியான அரசியல் செயல்பாடுதான் இதன் தொடக்கம். அது தனிமனிதரொருவரின் கடமையுணர்விலிருந்து உருவானதா? தந்தையின் மீதான அவரின் பெருவிருப்பத்தாலா? அவ்விருப்பமே தந்தை இறந்து விட்ட போதிலும் அவரது ஆசை மனைவியான  சின்னம்மையின் வாக்கை வேதமென்று கருத வைத்ததா? எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் அந்த பேரரசியிடம் உள்ளதென்று நம்பும் மனத்தை கொள்ள வைத்ததா? அல்லது தன் தந்தையின் நாடு தக்க வாரிசின்றி பிறிதொருவருக்கு உடமையாகி விட கூடாது என்ற தன்னுணர்வா? எந்த எண்ணம் அவரை வெற்றிக் கொண்டிருந்தாலும் அவர் மேற்கொண்ட நியாயமற்ற செயல்தான் இதன் முதற்சுழி.

தந்தையின் காமத்துக்காக தன் அரச நிலையையும் காமத்தையும் துறந்த பீஷ்மர் என்னும் பெருமனிதர் ஷத்திரிய நியாயத்தை கையிலேந்தி அதில்  காசி நாட்டின் மூன்று இளவரசிகளை பலவந்தமாக அமர வைத்து நோயாளியான தங்கள் நாட்டு இளவரசனுக்கு மணமுடிப்பதற்காக சிறைப்பிடித்துக் கொண்டு வருகிறார். அஸ்தினபுரியின் ஸ்திரத்தன்மைக்காக அவரது சிற்றன்னையான சத்யவதியின் பின்களமாடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஷத்திரிய தர்மம் அவரை அனுமதித்ததை போல அந்த அநீதியினுள் தொலைந்துப் போன மானுட தர்மம் அல்லது அறப்பிறழல் அவரை அனுமதிக்கவில்லை. அது எரிதழலென அஸ்தினபுரியின் மீது விழுகிறது. அதன் கதையைதான் முதற்கனல் பேசுகிறது. இதுவே பக்க எண்ணிக்கைகளாலும் கிளைக்கதைகளாலும் மூலக்கதையமைப்பாலும் பகவத்கீதை என்ற நெறிநுாலாலும் கட்டமைக்கப்படவிருக்கும் வெண்மையான முரசின் முதலாவதான நாவல். 

சமர்க்களத்தில் போரிட தயங்கி நிற்கும் அர்ஜுனனிடம் எதிரில் நிற்பவர்கள் உன் சகோதரர்கள் என்பதற்காக தயக்கம் கொள்ளாதே என்று கிருஷ்ணன் கூறுவதை போல தான் செய்யவிருக்கும் செயலின் நியாயமின்மை பீஷ்மரிடம் தயக்கத்தை ஏற்படுத்த ஷத்திரியனுக்கு இது தர்மமே என்று வியாசர் அதனை வென்று விடுகிறார். இப்பெருங்கதையில் பீஷ்மர் எப்போதுமே ஒரு கருவிதான். பீஷ்மரின் விருப்பம் என்பது எதுவாக இருக்க முடியும்? விருப்பம் என்பது காதல், காதல் என்பது காமம். அது அவருக்கும் பொருந்துவதுதான். ஆனால் தான் உருவாவதற்கான வாய்ப்பு அவருக்கு வாய்க்காமலே போய் விடுகிறது. அன்னையான கங்கையும் தந்தையான சாந்தனுவும் சிற்றன்னையான சத்யவதியும் பிறந்த குலமும் உடமை நாடும் கற்ற நெறிகளும் அவர் இப்படிதான் இருக்க வேண்டுமென  உருவகித்து விடுகிறது. அதனால்தான் அவர் தன்னை கண்டுப்பிடிப்பதற்காக அடிக்கடி கானகம் சென்று விடுவாராக இருக்கும். அது அவர் சிற்றன்னையின் ஆணை என்றாலும் அவருக்கும் அதில் விருப்பமிருந்திருக்கலாம். உள்நோக்கின், அவர் அமைதியானவர். அவரை அவர் போக்கில் விட்டிருந்தால் பட்டத்தரசி அம்பையோடு பல பிள்ளைகள் பெற்று ஏதோவொரு போரில் ஷத்திரியனாக உயிர் துறந்திருக்கலாம். இறுதியில் வாய்த்த பருவடிவான முள்படுக்கை, காலமெல்லாம் சூட்சமமாக அவரை தொடர்ந்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. அவரை பற்றிய தெளிவான கோணத்தை முதற்கனலின் கட்டமைப்பு முன் வைக்கிறது.   

சிறைப்படபோகும் பெண்கள் மூவரில் மூத்தவள் அம்பை. அவளுக்கு சௌபநாட்டு அரசன் சால்வர் மீது காதல். அடுத்த இரு பெண்களும் மனதளவில் பெரிதாக வளர்ந்து விடவில்லை. அதிலும் இளையவள் மிகவும் சிறியவள். ஆனால் நியதிகளின்படி அன்று அவர்களுக்கு சுயம்வரம். எதிர்பார்ப்புகளும் விம்மும் ஆசைகளும் முதிரா எண்ணங்களுமாக இருக்கும் அப்பெண்களிடம் அவர்களின் அடுத்தக்கட்ட வாழ்க்கை நகர்வு குறித்து முதுபூசகி, “காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல இங்கிருந்து விலகிச் செல்கிறீர்கள்என்று கூறுவாள். உதிர்ந்தக் கனிகள் மீண்டும் ஒட்டுவதில்லைதான். ஆனால் அவை இத்தனை குரூரமாகவா நிகழ்ந்திருக்க வேண்டும்? அப்பெண்களின் தாயாரும் காசி நாட்டின் அரசியுமான புராவதி இருபதாண்டுகளுக்கு முன்பு தனது அக்கணத்தை எண்ணிக் கொள்கிறார். அது மீண்டு வராத வசந்தம். அந்த வசந்த காலத்தின் ஒவ்வொரு கணத்திலும் அதைத் தாண்டுவதைப் பற்றி துடிப்பே நிறைந்திருக்கும். அந்த வேகமே அதனை வசந்தமாக்கும். அந்த எல்லையை தாண்டிய கணம்தான் அது எத்தனை அபூர்வமானது என புரிய வைக்கும். அந்த ஏக்கமே வசந்தத்தை மகத்தானதாக ஆக்கி விடும். ஏக்கங்களுக்கு நிகரான இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கையாகிறது என்றெண்ணுகிறார். மகள்களுக்கு நடக்கவிருக்கும் சுயம்வரம் தோல்வியடைய போகிறது என்பதை அவர் மனஉறுத்தலாக உணர்கிறார். தன் பெண்களின் வாழ்க்கையில் இனி வசந்தமென்பதே இருக்கப் போவதில்லை என்ற அன்றைய நாளின் முடிவு அவரை துறவுக் கொள்ள வைக்கிறது. அவர் கணவரை விடுக்கும் தருணங்கள் அபாரமானவை. ஏனெனில் நெறிகள் அரசகுல பெண்களை விலங்காக பிணைத்திருப்பவை. மகள்கள் பலவந்தமாக கவரப்பட்ட பிறகு காசி மன்னன் பீமதேவன் என்னவாக இருக்க வேண்டும்? அரசனாகவா? தகப்பனாகவா? அவன் எப்போதைக்கும் அரசன்தான். 

பீஷ்மரின் தேர் கடத்தப்பட்ட பெண்களோடு ராஜபாட்டையில் தெறித்தோடுகிறது. பாரதவர்ஷத்தின் பெரும் வீரன். அஸ்தினபுரியின் காவலன் என்ற அவரின் பின்புலன்கள் மற்றவர்களை நடுங்க வைக்கிறது. சால்வன் சூதர்களின் பாடல்களில் விழுந்து அசிங்கமாவதை தவிர்க்கவோ என்னவோ சிறு எதிர்ப்பு செய்கிறான். “காசியின் படைகளை எங்களுக்குக் கொடுங்கள்.. நாங்களெல்லாம் எங்கள் காவல் படைகளுடன் மட்டுமே வந்திருக்கிறோம்என்கிறான்  சுயம்வரத்துக்கு வந்த மன்னன் ஒருவன்.

அமைச்சர் ஃபால்குனர் அமைதியாக, “ஆணையிட வேண்டியவர் அரசர். அவர் இன்னும் ஆலஸ்யத்திலிருந்து மீளவில்லைஎன்கிறார். மன்னர் மனைவியின் கைகளில் கண்மூடிக் கிடக்க மருத்துவர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டிருந்தனர். மாகதன் சினத்துடன், “மன்னர் படைக்களத்தில் வீழ்ந்தால் நீங்கள் அப்படைகளுக்கு பொறுப்பேற்கலாம்என்கிறான்.

ஆம்ஆனால் அம்முடிவை நான் எடுக்க முடியாது. ஏனென்றால் இப்போது நெறிகளின்படி காசியின் கன்னியருக்கு மணம் முடிந்து விட்டது. இனி போர் எங்களுடையதல்ல. உங்களுடையது

நெறிகள் பாழாகட்டும்.

அம்பை ஆறு தரிசனங்களையும் ஆறு மதங்களையும் மூன்று தத்துவங்களையும் கற்றறிந்தவள். சகோதரிகளில் மூத்தவள் என்ற வயது அனுகூலமும் அவளுக்குண்டு. சுயமும் சிந்தனைத் தெளிவும் கொண்ட அவளால் குயவன் களிமண்ணைக் கையாள்வது போல அன்னிய ஆணொருவன் தன்னுடலை குழைப்பதையும் தன்னில் தான் விரும்பாதவொன்றை வடித்தெடுப்பதையும் ஏற்றுக் கொள்ளவியலாது. எந்த உடலும் அதன் ஆன்மாவுக்குச் சொந்தம். தன்னுடலை ஆன்மா வெறுத்து அருவெறுக்குமென்றால் அதுவே நரகம் என்கிறாள். சால்வரை எண்ணிய அவளால் மற்றொருவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பீஷ்மரிடம் வாதம் செய்கிறாள். அதற்கு, பெண்கள் கருப்பை வழியாகவே ஆண்களை அறிய முடியும். அதுவே இயற்கை நெறி என்று பதிலளிக்கும் பீஷ்மரின் ஆணாதிக்க வார்த்தைகள் அவர் மீது வெறுப்பையும் அதுசமயம் அவருடனான தொடர் விவாதம் அவர் மீது விருப்பையையும் அவளறியாது உட் செலுத்தியிருந்தது. 

ஆனால் அவள் அதை அப்போது உணர்ந்திருக்கவில்லை. சால்வன் அன்றி யாருடைய வாரிசையும் தன்னால் சுமக்கவியலாது என்று கங்கையின் மீது ஆவேசத்தோடு சூளுரைத்ததை கண்டு பீஷ்மர் விதிர்விதிர்த்துப் போகிறார். அவருள் அவள் வந்தமரும் தருணம் அதுவாகவுமிருக்கலாம். அதுவரை அவர் உறுதியான நிமிர்வான சூழ்ச்சிகளற்ற பெண்ணை பார்த்திருக்க மாட்டார். அவளின் வயது அளித்த எழிலும் களையும்முன் ரசிக்கும் அழகிய ஓவியம் போன்ற அவளின் தோற்றமும் அதற்கு துணை நின்றிருக்கலாம்.  அவள் தாங்கள் கொண்டு போகப்பட்ட படகிலிருந்து இறங்கியும் இறக்கி விடப்பட்டும் சொருபநாட்டுக்கு செல்கிறாள். சால்வனின் காதல், பீஷ்மரின் வீரத்துக்கும் சூதர்களின் பாடல்களில் வாழ ஆசைக் கொள்ளும் புகழ்போதைக்கும் முன்பு எடுபடாமல் போகிறது. வேண்டுமானால் காசியின் இளவரசியை ஆசைநாயகியாக வைத்துக் கொள்ளலாம் என்றளவுக்கு தேய்ந்தும் விடுகிறது. கணவனாக மனங்கொண்டவனின் நிராகரிப்புக்கு பிறகு அவள் பிறந்தகம் வருகிறாள், அங்கு அதை விட பெரிய நிராகரிப்பிருக்கும் என்பதை அறியாதவளாக. ஒருவேளை காசி மன்னன் தந்தையாகவும் நடந்துக் கொண்டிருந்தால், அவள் தகப்பனில் தன்னை கரைத்திருக்கலாம். தாயின் அணைப்பில் கரைந்திருக்கலாம். தங்கைகளை மீட்டு வர எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பையாவது உருவாக்கியிருக்கலாம். மகாபாரதத்தை மாற்றிக் கூட அமைத்திருக்கலாம். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. காசி, அவளை பார்த்தறியாத மனிதனின் மனைவியாக்கி பார்த்தறியாத அஸ்தினபுரியின் அரசியாக்கி அவளை விரட்டியடிக்கிறது. காரணம் நுால் நெறிகள் என்கிறது. அவளுக்கு அனுபவங்கள் கூடுகின்றன. கூடவே தன்னை உணரவும் தொடங்குகிறாள்.. விரும்புவனை தேடும்போது இழுத்துச் சென்றவன் மீது காதலா என்று விதிர்விதிர்த்துப் போகிறவளிடம் மனம், ஆம்அப்படிதான் என்கிறது நிதானமாக. அவள் பீஷ்மரை தேடி ஓடோடுகிறாள். 

அவளுக்கும் அவருக்குமான உரையாடல் இருவரையும் வெளியே இழுத்துப் போட்டு விடுகிறது. ஞானமும் செருக்கும் இளவரசியாக இருந்த அந்தஸ்தும் அழகும் இளமையும் நிரம்பிய அந்த யுவதி, அத்தனையும் கொட்டி கவிழ்த்து விட்டு அவர் முன் சரிந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கையேந்துகிறாள். காணாமலே காதலித்து வந்த சால்வரும் அம்பையும் சுயம்வரத்தன்று ஒருவரையொருவர் பார்க்கும் ஆவலை கண்களில் தேக்கி மனம் முழுக்க அவர்களாகவே மாறியிருக்கின்றனர். அம்பை வருகிறாள். அவளால் சால்வனை அடையாளம் காண முடியும். அங்கமும் அகமும் மலர மலர்மாலையோடு முன்னடக்கிறாள். ஆனால் சால்வன் அவள் அழகிலும் தீட்சண்யத்திலும் உள்ளுர நடுங்குகிறான். அவளை நேருக்குநேர் நோக்கவியலாது அஞ்சுகிறான். இவையெல்லாம் அவள் கடத்தப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பானவை. பிறகெல்லாமே மாறி விட்டது. அது பீஷ்மர் அவள் மீது காதல் கொள்ளும் தருணமாகவும் இருக்கலாம்.  இருந்தும் ஆணவமாக மறுக்கிறார். அதற்கு அவர் வாக்கு, கடமை, நாடு என்று என்ன காரணம் வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும். அவர் செய்தது துரோகம். மாபெரும் இழிவு. ஆன்மபங்கம். ஒவ்வொரு ஆணும் வணங்க வேண்டிய பெண்மையின் அருங்குணத்தை அவர் அவமதித்திருக்கிறார். அவள் பித்தியாகிறாள். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல் நெருப்பில் எரிந்தாக வேண்டும். அவள் கையால்தான் அவருக்கு இறப்பு. உன் கனலை முற்றிலும் பெறுபவன் எவனோ அவனால் பீஷ்மன் கொல்லப்படுவான் என்று சிவனிடமிருந்து வரம் பெறுகிறாள். 

அன்பு, பாசம், நெகிழ்வு என்பதெல்லாம் தன் முன் வந்து சேரும் மானுடப் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கான அடையாளங்கள் மட்டுமே என்று கருதிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கண்களும் அம்பையின் கண்களும் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில், அவள் நம்பிக்கையுறுகிறாள். தான் அவரிடம் சொல்ல வேண்டியது எதுவுமில்லை என்றறிகிறாள். தன் வாசலற்ற கருங்கல் கோட்டைகள் அனைத்தும் புகையாலானவை என பீஷ்மரும் உணர்கிறார். நுண்ணிய தருணத்தின் நுணக்கமான வர்ணனைகளால் நாவல் அடர்கிறது. அந்த கணம் அவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து விடுகிறார். பிறகு உடனே இறந்தும் விடுகிறார். கழுத்து வெட்டுண்ட சடலம் போல தள்ளாடியவளாக அம்பை சில கணங்கள் நின்று பின் மெல்ல திரும்புகிறாள். பீஷ்மர் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம் போல மெல்ல அசைவது தெரிகிறது.

சில இடங்களை வெண்முரசு ஆசிரியர் கடக்கும் விதம் அபாரம். அம்பை பித்தியாவது, வராகியாவது, பன்றியின் வடிவா..? மனித உருவா..? ஆணாபெண்ணாஅதே ஜென்மமாமறு ஜென்மமாமூலநுாலில் என்னவிருக்கிறதோ, ஆனால் இந்நுாலில் அதை காலத்திற்கேற்ப சாதுர்யமாக சமன் செய்திருப்பதாக நான் புரிந்துக் கொள்கிறேன். அன்னையின் வீரியம் உள்ளமென விரிய அவள் முன் திகைத்து நின்ற தந்தையின்பீஷ்மரின் பலவீனம் உடலாக, உறுமலும் தீவிழிகளுமாக உருவாவது அம்பையா, சிகண்டியா?

அஸ்தினபுரியின் மீது விழும் தீக்கனல் அம்பையால் மட்டும் உருவானதல்ல. வாழ்வின் யெவன பருவம் மொத்தத்தையும் தொலைத்து விட்ட அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு நடைபிணங்களோடு இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய பீஷ்மரின் பாட்டியான சிபி நாட்டு இளவரசி சுனந்தையின் சாபமும் இதில் சேரும். அவளது கணவர் பிரதீபர் அவளை காத்திருக்க வைத்து மணமுடித்து வயதான காலத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக்கி, சுமப்பது மட்டுமே கடமை என வலியுறுத்தி அவளுடைய இறப்புக்கு காரணமாகி,.. குடிகளில் இம்மாதிரி ஆயிரம் நிகழ்வுகளிலிருக்கலாம். அரசக்குடிகளின் சாபம் அரசக்குலங்களில் விழுந்து விடுகிறது. 

சுனந்தையின் மகன்களான தேவாபி, சாந்தனு, பால்ஹீகன் என்ற மூவரில் யாருமே இயல்பானவர்களாக இருக்கவில்லை. தாயற்ற சிறுவர்களான அம்மூவரில் பெரியவனும் சிறியவனும் ஒருவருக்கொருவர் தாயாகிக் கொள்கிறார்கள். அவர்களுடைய உலகில் சாந்தனுவுக்கு கூட இடமில்லை.  வெயிலையே காண முடியாத நோய் கொண்ட மூத்தவனை வேறு வழியின்றி அரியணையில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த நிலையில் விதி வழியே சாந்தனு அரசனாகிறான். தேவாபி பந்தமறுத்து கானேறுகிறான். தமையனை பிரியும் ஆத்திரமும் செய்வதறியாத இயலாமையும் சேர்ந்துக் கொள்ள பால்ஹீகன், “எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும்என்று தீச்சொல்லிடுகிறான். பிறகு அவன் அங்கிருக்கவில்லை. தனது தாயின் நாட்டுக்கு சென்று விடுகிறார்.

முதற்கனல்

முழுதான என்பதற்கும் மேலான உடல் மற்றும் மன தகுதிகளை பெற்ற தாய் வழியில் கங்கரான சாந்தனுவின் மகன் பீஷ்மன் மணிமுடி சூட மாட்டேன் என வாக்குறுதி அளித்து விட்டமையால் சத்யவதியின் மகன்கள்தான் அரசாள வேண்டும். மூத்தவன் சித்ராந்தகன் இறந்து விட விசித்திரவீரியன் வழியாகதான் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று அஸ்தினபுரியின் அரசநிலை ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆனால் விசித்திரவீரியன் அதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை. நுால்நெறிகள், சூதர்களின் பாடல்கள் வழியாக உலகை அறிகிறான். நோய், மருந்து, மருத்துவம் என்று தன்னைச் சுற்றி எப்போதும் புழங்கும் வார்த்தைகள் அவனை எதுவும் செய்து விடவில்லை. ஞானமும் அறமுமாக சுடர் விட வைக்கும் பாத்திரப்படைப்பு அவனுடையது. மகாபாரதத்தில் அவன் பங்கு சிறிதென்றாலும் வெண்முரசில் அவனுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. அவனுடலின் அநாகதத் தாமரையில் அனலில்லை என்கின்றனர் சித்தர்கள். அவனோ பாட்டி சுனந்தையின் குளிர்ந்த கண்ணீர் அங்கே தேங்கிக் கிடக்கிறது என்கிறான். வீரியமற்ற உடலுக்குள் வீரியமான உள்ளம். இறப்பை கூட அதன் வழியாகவே ஏற்றுக் கொள்கிறான்.

வாரிசற்ற ஷத்திரிய அரசுக்கு வாரிசுண்டாக்க வேண்டிய பொறுப்பு  சத்தியவதியிடம் வந்து சேருகிறது. அதற்கென சிறுவயதில் பித்தியாக அலைந்தபோது பராசரரின் வழியே தனக்கு பிறந்த குழந்தையான வியாசரின் உதவி அவளுக்கு தேவைப்படுகிறது. பீஷ்மருடனான கலந்தாலோசனைக்கு பிறகு விசித்திரவீரியனின் இறப்பு இன்னும் உலகுக்கு அறிவிக்கப்படாத நிலையில் வாரிசுண்டாக்கும் கருவியாக வியாசர் அங்கு வருகிறார். விசித்திரவீரியனின் மனைவிகள் இருவரும் சினைப்பிடிக்க வைக்கப்படுகின்றனர். கருணை என்றறிந்த இடத்தில் காமமும் கலந்து விட்டமையால் ஒழுக்கம் என்ற விழுமியம் கேள்விக்குள்ளாக, வியாசர் குற்றவுணர்வோடு கால்கள் போன திசையில் நடக்கிறார். மகன் சுகனை தேடுகிறது அவருள்ளம். 

தந்தையேஅவற்றை ஒற்றை சொல்லால் என்னால் சொல்ல முடியாது. கோடி சொற்களால் சொல்ல வேண்டியவர் தாங்கள். நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர் முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்சுகனின் வார்த்தைகள் வரமாசாபமா என்றறியாத நிலையில் தலைமுறைகள் கடந்து விடுகின்றன. நடக்கக்கூடாதவைகள் நடந்து விடுகின்றன. அஸ்தினபுரி என்ற உயிர்ப்பின் சாற்றை விசித்திரவீரியனின் வாரிசுகள்(?) உறிஞ்சி விட உயிர்கள் உயிர்ப்பின்றி பயிர்கள் செழிப்பின்றி சூனியத்துக்குள் ஆழ்ந்து விடுகிறது அஸ்தினபுரி. எஞ்சியது அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் மனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தை பரிட்சத் மட்டுமே.  எப்படியோ அவனை மீட்டெடுக்கின்றனர். அரசனாக முடிச்சூடி, பிள்ளைகள் பெறும் அவன், பிறகு நாகத்தின் விஷத்தால் இறந்து விடுகிறான். அவனுக்கு பிறகு அரசநிலை எய்துகிறான், அவரது மகனான ஜனமேஜயன். இவனே இப்பெருநாவலின் தொடக்கமாக வருகிறான். 

குருகுல மன்னர்களை நாகங்கள் பின்தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. சர்ப்பசாந்தி வேள்விகள் வழியாக நாகங்களை நிறைவு செய்யலாம். ஆனாலும் அவை கிளைப்பன என்கிறார் வைசம்பாயனர், பேரரசர் ஜனமேஜயனிடம். ஆனால் இனி இந்த மண்ணில் குருஷேத்திரங்கள் நிகழ்வதையோ குருதி விழுவதையே தன்னால் அனுமதிக்க முடியாது என்கிறார் மாமன்னர். அதற்கு அதர்வ வேதம் சர்ப்பசத்ர வேள்வி என்ற நிவாரணத்தை வைத்திருக்கிறது. இதனை நடத்தி முடித்தால் காமமும் அகங்காரமுமாக விண்ணிலும் மண்ணிலும் பாதாளத்திலும் நிறைந்திருக்கும் நாகங்களை முழுமையாக அழித்து விடலாம் என்கிறார் வைசம்பாயனர். மனித குலத்தின் உள்ளங்களுக்குள் உறைந்திருக்கும் மொத்த இருட்டையும் இந்த வேள்வித் தீயில் எரித்து அழிக்க வேண்டும். கடைசி பாம்பும் எரிந்தழியும்போது மனிதர்களின் உள்ளம் முழுக்க துாய வெளிச்சம்தான் மிஞ்சியிருக்கும். அங்கு போட்டி பொறமை காமம் வெறுப்பு போர் எதுவுமே இருக்காது உலகத்தில் தீமையே இருக்காது என்று மகிழ்வு கொள்கிறார் மாமன்னர். பார்த்து பார்த்து ஏற்பாடுகள் ஆகிக்  கொண்டிருந்தன. வேள்வியில் மும்பத்து முக்கோடி வானவரும் மும்மூர்த்திகளும் மூதாதையரும் அவயளித்து நிறைவு செய்யப்படுகின்றனர். திசைதேவர்களும் விண்ணக முனிவர்களும் வேதமூர்த்திகளும் மகிழ்விக்கப்படுகின்றனர். காவல்பூதங்களும் கானக தேவதைகளும் கனிய வைக்கப்படுகின்றனர்.

நாகற்குல தலைவியான மானஸாதேவிக்கும் ஜரத்காரு ரிஷிக்கும் பிறந்தவனான ஆஸ்திகன் என்ற ஆறு வயது சிறுவன் இருநுாற்றெழுபது நாட்கள் நடந்து கடந்து அஸ்தினபுரிக்கு வருகிறான். அன்றைய தினம் பல கட்டங்களாக ஐந்து மாதங்களாக நடத்தி வரும் சர்ப்பசத்ர யாகத்தின் இறுதி நாள். ஆஸ்திகன் நைஷ்டிக பிராமணன் என்ற தன் அறிமுகத்தை கூறிக் கொண்டு வேள்வியில் கலந்துக் கொள்கிறான்.  

யாகம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் தட்சணை தவிர அனைத்து பாம்புகளும் வேள்வித் தீயில் வந்து விழுந்து மறைந்துப் போயின. தட்சணும் எப்படியோ வரவழைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் வேத அதிகாரம் கொண்ட பிராமண ரிஷியின் மைந்தனான ஆஸ்திகன் தட்சன் உயிரை தட்சணையாக கேட்க யாகம் நிறைவடையாமல் நின்று விடுகிறது. மன்னர் ஸ்தம்பிக்கிறார். வியாசர் அழைத்து வரப்படுகிறார். 

மாமன்னரே, இப்புடவியானது சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க எண்ணுவதன் மூலம் இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்”  என்கிறான் ஆஸ்திகன். ஆஸ்திகனின் சாங்கிய தரிசனக் கருத்தை வியாசரும் ஆதரிக்கிறார். நீ இல்லையேல் என் காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. உனது தர்மத்தை நீ செய்வாயாக. உன் குலம் முடிவிலாது பெருகட்டும். இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்வாயாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தட்சணை ஆசிர்வதித்து அனுப்புகிறார், தட்சன் பின்னகர்ந்து நெளிந்து தன் வளையை நோக்கிச் செல்கிறான். அவனும் துணைவியும் மண்ணுக்குள் மறைகின்றனர். 

நாவலின் இறுதியில் சிகண்டி தன் எதிரியை சந்திக்கிறான், அவர் யாரென்றியாமலேயே. பீஷ்மரிடம், தன் பிறப்பு பீஷ்மரை அழிப்பதற்கானது என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இலக்குதான் அவன் பிறப்பு. இன்னும் அதே இலக்குடன்தான் இருக்கிறாயா? என்கிறார் பீஷ்மர். இப்போது அவன் கொள்கையிலிருந்து நீர்த்து இலக்கில் துல்லியமாகியிருந்தான். நான் இருக்கிறேன் என்பதனாலேயே நான் அவரை கொல்வதும் இருக்கிறது. இந்த இச்சை மட்டுமே நான். பிறிதொன்றில்லை என்கிறான். அவரைக் கொல்ல அவரிடமே வித்தை கற்றுத்தருமாறு கோருகிறான். அவரும் சம்மதிக்கிறார், பின்னர் வீரனேநீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒரு கணமும் வருந்த மாட்டாய்.  வீரர்களுக்குரிய விண்ணுலகை அடைவாய், என்று ஆசிர்வதி்க்கிறார். நாகங்கள் அழிவில் தொடங்கும் நாவல் அதன் மீளளில் முடிகிறது.

இதில் கையாளப்படும் வர்ணனைகளும் வரிகளும் உவமைகளும் உருவகங்களும் மொழியும் மயங்க வைப்பவை. மிக நீண்ட வெண்முரசின் வாசிப்புக்கு இது பெரிய பக்கபலம் என்றாலும் சில சமயங்களில் அது தொடர்வாசிப்பை தடையும் செய்கிறது. அதேசமயம் நாவலின் ஆழமான அர்த்தப்பூர்வமான வார்த்தைகள் வாசகர்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்தும் விடுகிறது. விசித்திரவீரியனை முழுமையான ஆண்மகனாக உணர்ந்து கணவனின் (?) இறப்பினால் நிலைக்குலைந்துக் கிடக்கும் மருமகள் (?) அம்பிகையின் மீது சத்யவதிக்கு ஒரு கணம் எழும் பொறாமை, பீஷ்மரின் படகிலிலிருந்து இறங்கி மீண்டும் பீஷ்மரின் படியேறி இறைஞ்சும் வரையிலான அம்பையின் உடல்ரீதியான மொத்த அலைக்கழிப்புகளின் ஒற்றைச்சாட்சியான படகோட்டி நிருதன் அம்பையின் மீது கொள்ளும் சகோதர பாசம் போன்ற ஆழ்மன விசித்திரங்களை தொடும் தருணங்கள் நாவலில் அதிகமுண்டு. மானுடமும் மரபும் நெறிநுால்களின் வாதமும் ஆம்இது இதிகாசம்தான். இதிகாசமேதான் என்கிறது. இந்நுாலின் வழியே ஆசிரியர் தமிழுக்கு நிறைய வார்த்தைகளை கொடையளித்திருக்கிறார். 

இந்நாவலை மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தின் முதற்தொடக்கம் என்பதை மனம் முடிவு செய்துக் கொள்வதால் அறிமுகப்பகுதி என்றளவிலேயே இதன் மீதான வாசிப்பை தொடங்க முடியும். ஆனால் முடிக்கும்போது இதனையே தனி நாவல் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். நேரடியான கதையோடு பல கிளைக்கதைகளும் இதிலுண்டு. ஒரு நுாலை மறு ஆக்கம் செய்வதற்கும் உருவாக்கம் செய்வதற்கும் பெரியதாக வித்தியாசம் இருக்க முடியாது. ஏனெனில் அவை மொழிப்பெயர்ப்பல்ல. மறு ஆக்கம். கதையின் உட்கரு வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால் மறுஆக்கத்திற்கு நிறைய மெனக்கெடல்கள் தேவைப்படும், குறிப்பாக மகாபாரதம் போன்ற பெருங்கதைகளின் மறுஆக்கம் உருவாக்கத்திற்கு நிகரான உழைப்பை கோருபவை. முதலில் மூலநுாலை அதன் காலத்தோடும் நியாயத்தோடும் உள்வாங்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்நுாலின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.   இரண்டு சப்தத்துக்குள்ளிருக்கும் ஒரு அமைதியை அல்லது இருளை ஒளியாக்க வேண்டும். காலத்திற்கேற்ப ஒப்பனைகள் செய்ய வேண்டும். கதாபாத்திரங்களை விரிக்கவோ சுருக்கவோ(?) அனுமதி உண்டென்றாலும் அதன் தன்மை மாறாது வரையறைக்குள் மட்டுமே இயங்கியாக வேண்டும் (கற்பனாசக்தி மிகுந்த புனைவாளர்களுக்கு இது ஒரு சவால்தான். எங்கெங்கோ மனதிலெழும் பல திறப்புகளை மௌனமாக கடக்க வேண்டியிருக்கும்). மாய நிகழ்வுகள், நம்பவியலாத செயல்கள் இவற்றையெல்லாம் சமாளித்து எழ(எழுத) வேண்டும். இந்திய ஞான மரபைக் குறித்த சிந்தனை தெளிவு இருக்க வேண்டும். நாடு போற்றும் இதிகாசம் என்பதாலும் முன்னரே அறிந்திருப்பதால் கோர்வையாக வந்து விழும் விஷயங்களை ஒருங்கமைவு செய்ய வேண்டும். அதற்கான தெளிவான எழுத்து திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பார்க்காத கோட்டைகளையும் அரண்மனைகளையும் அணிகலன்களையும் போரையும் ஊரையும் நிலத்தையும் நீரையும் பேச்சையும் செயலையும் தெருவையும் வணிகத்தையும் நாவாய்களையும் துறைமுகங்களையும் மனிதர்களையும் உணவையும் பறவைகளையும் பட்சணங்களையும் மனம் செய்துக் கொள்ளும் கற்பனையின்  எழுத்து வடிவம் கச்சிதமாக எழுந்து வர வேண்டும் போன்ற பலவேண்டும்களால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த நாவல் அதனை செய்திருக்கிறது. அதற்கு மேலும் செய்திருக்கிறது.

***

 

முந்தைய கட்டுரைஅமெரிக்காவில் ஓர் உரை
அடுத்த கட்டுரைபெண்கள் யோக முகாம், கடிதம்