தன்மீட்சி நூல்கொடைஇயக்கம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய இணையதளத்தில் வாசக நண்பர்களின் கேள்விகளுக்குத் தன் வாழ்வனுபவம் சார்ந்த கண்டறிதல்களை பதில்கடிதமாக எழுதிவந்தார். அக்கடித உரையாடல்களைத் தொடர்ந்து வாசித்தபொழுது, நமக்கு மட்டுமே உள்ள இடர்கள் என நாங்கள் எண்ணிக் கொண்டிருந்த பல உளநிலைகள் இச்சமூகத்தில் இன்னும் நிறையபேருக்கும் இருப்பது தெரியவந்தது. ஆகவே, அக்கடிதங்களின் இணையதள முகவரியை குக்கூ நண்பர்கள் குழுவுக்குள் மட்டும் பகிர்ந்துகொண்டோம். ஆனால், நாளடைவில் அக்கடிதங்களின் வாசிப்புவட்டம் நம்பமுடியாத அளவிற்கு விரிந்துபரவியது. மானுடமனம் விழைவுகொள்ளும் ஏதோவொரு மெய்யுரைப்பும், செயற்தூண்டலும் அப்பதில்களுக்குள் நிறைந்திருப்பதாக நண்பர்கள் உணர்ந்தார்கள்.

ஆகவே, இளையதலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் ஜெயமோகன் அவர்கள் உரையாடிய கடிதங்களைத் தொகுத்து அதை ஒரு நூலாக்குவது என்ற முடிவு தன்னியல்பாக உருவாகி எழுந்தது. தன்னறம் பதிப்பகம் துவங்கிய காலகட்டத்தில்தன்மீட்சிஎனும் தலைப்புடன் அந்நூலினை உருவாக்கும் பணியையும் தொடங்கினோம். ஆனால், அந்நூலினை  வெறுமனே ஓர் தன்னம்பிக்கை நூலாகச் சுருங்கவிடாமல், தன்னூக்கம் சார்ந்த ஓர் இயக்கமாக இளையவர்களிடம் முன்னெடுக்க வேண்டும் என விரும்பினோம். அதை நிறைவேற்றஆயிரம் இளைஞர்களுக்கு தன்மீட்சி விலையில்லா பிரதிகள்என்கிற திட்டத்தை முன்னெடுத்தோம். அதன் விளைவாக, தன்மீட்சி நூல் இன்றுவரையில் நான்காயிரம் புத்தகங்கள் விலையில்லா பிரதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

பொருளியல் சவால்களைக் கடந்து இம்முயற்சியை நிறைவேற்ற மனதுக்குள் ஓர் காரணம் இருந்தது. நாங்கள் சந்திக்கிற ஒவ்வொரு இளைஞரிடத்திலும் ஏதோவொருவகையில், இவ்வாழ்வு குறித்த மிதமிஞ்சிய சலிப்பும் சோர்வும் மிகுதியாகக் காணப்பட்டது. குடும்பத்தின் மீதும் சமூகத்தின் மீதும் ஓர் அவநம்பிக்கை உணர்வை அவர்கள் தங்களையறியாமலேயே வளர்த்திருந்தார்கள். அவற்றுக்குச் சில நியாயமான காரணங்கள்கூட அவர்களிடமிருந்தன. டேனிஷ் தத்துவஞானிசோரன் கீர்கிகாட், “பின்னோக்கிக் காண்பதன் வழியாக மட்டுமே இவ்வாழ்வை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணத்திற்குக் கணம் அது முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதுதான் அதன் நீங்கா மர்மம்என்றுரைத்துள்ளார்.

எனவே, சமகால இளம் மனங்களுக்கு இவ்வாழ்வின் மீது விருப்புறுதியை வழங்குவதற்கும், செயலாற்ற முனைவதைத் தடுக்கும் சுயதடைகளை வெல்வதற்குமான வழிகாட்டி நூலாகதன்மீட்சிநிலைபெற்றது. இலக்கிய அழகும், தத்துவ ஆழமும், வாழ்வனுபவ உண்மையும் இந்நூலின் உள்ளடக்கத்தை எல்லோரையும் விரும்பி ஏற்கவைத்தன.

வட இந்தியாவின் வறட்சி மாநிலங்களில் குளக்கட்டுமான நுட்பங்கள், அதை உருவாக்கும் மனிதர்கள், தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் என

ஒவ்வொன்றாகத் தேடித்திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தி எழுதிய இந்தியச் சூழலியலாளர் மற்றும் நீர்மேலாண் அறிஞர்அனுபம் மிஸ்ராவின் ‘The ponds are still relevent’ எனும் நூல்ஆங்கிலம், இந்தி, மற்றும் பிராந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் பிரதியாக அச்சடிக்கப்பட்டு பொதுசனங்களிடம் சென்றடைந்தது. அன்னதானம் போல இந்நூலை புத்தக தானமாக அங்குள்ளவர்கள் அளிக்கிறார்கள். கோவில் திருவிழாக்கள் முதல் வீட்டு சுபநிகழ்வுகள் வரை அந்நூல் இடம்பெற்றுள்ளது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளால் அந்நூல் பல லட்சம் பிரதிகளைத் தாண்டி இன்றுவரை மக்களிடம் சென்றடைந்து வருகிறது.

அதேபோல தமிழ்ச்சூழலில் சமகால இளையவர்களிடம் மீட்சிக்கான உளவிசைகளை உருவாக்கும் நேர்மறை நூலாக நாங்கள் கருதுவதுதன்மீட்சிநூலைத்தான். பலநூறு இளைஞர்களின் தன்னுணர்வு நிரம்பிய சத்திய வார்த்தைகளைக் கேட்டுணர்ந்த பிறகே இதை அறிவிக்கிறோம். ஒன்றடுத்து ஒன்றென மனிதர்களிடம் விரவிச்செல்லும் ஓர் பெருவிசை இந்நூலுக்குண்டு. மனவறட்சிக்கு இந்நூல் மருந்தென மாறி பலருக்கு திசைதிறந்திருக்கிறது. இந்நூலின் வாசிப்பனுபவம் குறித்து எங்களுக்கு வந்திருக்கும் சிலநூறு மின்னஞ்சல் கடிதங்களே அதற்கான சாட்சியம்.

நல்லதிர்வின் நீட்சியாகதன்மீட்சி நூல்கொடை இயக்கம்என்கிற முன்னெடுப்பை துவங்குகிறோம். இவ்வியக்கத்தின் மூலம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து அவற்றை கல்லூரி மாணவர்கள், சமூகம் சார்ந்து இயங்கும் களப்பணி இளைஞர்களுக்கு விலையில்லா பிரதிகளாக வழங்க முடிவுசெய்துள்ளோம். விலையில்லா பிரதிகள் அனுப்புவதில் நாங்கள் நேருணர்ந்த அனுபவ உண்மை ஒன்றுண்டு, ஒருவருக்கு புத்தகம் அனுப்பினால் அவர் தானறிந்த இன்னொருவருக்கு அப்பிரதியைப் பகிர்ந்துகொள்கிறார். அவ்வாறு ஒரே பிரதி நிறைய மனிதர்களைக் கடந்து பரவியிருக்கிறது. இந்நூல் குறித்து அறியாதோருக்கும் இதன் சொல் சென்றடைவதுதான் இதை ஓர் இயக்கமென மாற்றுகிறது.

இன்னொரு மிகமுக்கியக் காரணமாக தன்மீட்சி நூலை வாசித்தவர்களில் பலர் தெரிவித்தது, ‘தற்கொலை எண்ணத்தில் இருந்து இப்புத்தகம் மீட்டெடுத்ததுஎன. உண்மையில், சமகாலச்சமூகம் சந்திக்கும் மீப்பெரும் சிக்கல் இந்த தற்கொலை உளநிலைதான். அத்தகைய எண்ணம் கொண்டிருக்கும் மனது  தன் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் நிதானத்தை வழங்கும் வழியை இந்நூலின் படைப்பாழம் சுமந்திருக்கிறது. தனக்குரிய செயலைத் தேர்ந்தெடுத்த மனிதருக்கு தற்கொலை எண்ணம் தவறெனத் தெரிந்துவிடுகிறது அல்லது அந்த முடிவுக்கு அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன்னறம் பதிப்பகத்திற்குத் தந்துதவிய படைப்புகளின் மூலம் ஒவ்வொரு வருடமும் சேர்கிற காப்புரிமைத் தொகையை பாரம்பரிய மரபுமரங்கள் வளர்த்தெடுக்கும் நாற்றுக்கூடத்தை அமைப்பதற்கு செலவிடுகிறோம். இன்றுவரை அப்பச்சையம் துளிர்த்துவருகிறது. அதேபோல, இனிமேற்கொண்டு ஆசிரியரின் நூல்கள் வழியாகத் திரளும் காப்புரிமைத் தொகையில்தன்மீட்சி விலையில்லா பிரதிகள்அச்சிட்டு வழங்க முடிவுசெய்துள்ளோம். கூடியவிரைவில் இந்நூல் மக்கள் பிரதியாக மாறி தமிழ்ச்சூழலில் நிறைந்துபரவும். அதற்கான பெருங்கனவு இக்கணம் கருக்கொள்கிறது.

இன்னும் சென்றடையாத ஆயிரமாயிரம் இளைய மனங்களிடம் இம்முயற்சியின் வாயிலாக இந்நூலின் தன்னூக்கச் சொற்கள் சென்றடையும். இவ்வாழ்வை விரும்பி நேசித்து செயலாற்றத் துணியும் அகத்தெளிவை அந்த இளம் மனங்கள் பெற்றடைவார்கள். வாழ்வை ஏற்கவைக்கிற வலுவைத் தரக்கூடிய சொற்களைக் கொண்ட எந்தவொரு படைப்பும் காலத்தால் தன்னை உருமாற்றி முன்னகர்ந்து செல்ல வேண்டும். தனக்குரிய சிக்கல் என்று ஒருவர் எண்ணியிருப்பவை எல்லாமே இங்கு தலைமுறைகளாகத் தொடர்பவை. ஆகவே, இடரின் ஆழத்தை அறிந்து அதிலிருந்து விடுபடும் விழைவைப் பெருக்கிக்கொள்ள நமக்குப் புறத்திலிருந்து ஓர் தூண்டல் தேவைப்படுகிறது. தன்மீட்சி நூல் அவ்வகையில் மிகச்சிறந்த உளவூக்கி.

அக்டோபர் மாத இறுதியில், ‘தன்மீட்சி நூல்கொடை இயக்கத்தின்முதலாவது ஆயிரம்பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இளையவர்களுக்கு அனுப்பப்படவுள்ளது. நண்பர்களின் உடனிருப்பு இச்செயலை அதன் நோக்கத்தடத்தில் வழிப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். “மலை உச்சிக்குத் தன் படகை இழுத்துச் செல்லவேண்டிய சூழல் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒவ்வொரு மனிதனுக்கும் வரும்…” ஜெர்மானிய திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்ஜாக்கின் வசனவரிகள் இவை. மலையுச்சி நின்ற அனைவரும் காண்பது விடாதுதொடரும் மலையுச்சிகளை. ஆனால், ஒருமுறை மலையேறியவர் மனம் மற்ற மலைகளைக் கண்டு அஞ்சுவதில்லை. அச்சம் நீங்கிய அந்த தன்னிலைதான் செயல்வெற்றியைத் தீர்மானிக்கிறது. துயர்கடந்தவர் ஒவ்வொருவரும் அடைந்திருப்பது ஓர் அனுபவ உண்மை. தன்மீட்சி நூல் நேர்நிலை சார்ந்த அந்த நிகரனுபவத்தை நமக்குள் விதைத்து செயலாக வளர்த்தெடுக்கும் ஓர் நம்பிக்கைப் படைப்பு.

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

9843870059, www.thannaram.in

முந்தைய கட்டுரைஆட்கொள்ளல்
அடுத்த கட்டுரைபேரிலைப் பகன்றை