பேச்சாளனின் உரையும் எழுத்தாளனின் உரையும்

அன்புள்ள ஆசிரியர்க்கு,

நேற்று நான் இரா. முருகன் படைப்புகள் பற்றிய கருத்தரங்குக்கு சென்றிருந்தேன் . மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட அமர்வு. தங்கள் இணையதளம் மூலம் அறிந்ததற்கு உளமார்ந்த நன்றிகள்.

ஒரே ஒரு ஏக்கம். பலஎழுத்தாளர்களால் அற்புதமாக எழுத முடிகிறது, ஆனால் ஏன்அதேயளவு அற்புதமாக பேசமுடிவதில்லையே? உரைநடை தமிழ் பேச நம்மால் ஏன் முடியவில்லை?

பேச்சுத்திறமைமிகு   பேச்சாளர்களால்தானே அரங்குக்கு பார்வையாளர்கள் நிறைய பேர் வருகின்றனர்?  எழுத்தாளர்கள் ஏன் மேடைப்பேச்சில் வெற்றி பெற கவனம் செலுத்துவதில்லை?

அன்புடன்

ஜெ. ஜெயகுமார்

அன்புள்ள ஜெயக்குமார்,

நீங்கள் சொல்வதில் ஒரு பகுதி உண்மை உண்டு. எழுத்தாளர்கள் கொஞ்சம் பேச்சுத்திறமையையும் வளர்த்துக் கொள்ளலாம்தான். குறைந்தபட்சம் கூடுமானவரை சிறப்பாகப் பேசவேண்டும் என்ற முடிவையாவது அவர்கள் எடுக்கலாம். அதற்கு முடிந்தவரை முயலலாம்.

அந்த எண்ணம் பல பேச்சாளர்களுக்கு இல்லை. பேசுவதொன்றும் பெரிய விஷயமல்ல என்னும் எண்ணமும் பாவனையும் உள்ளது. மேடையிலேயே சொல்லவும் செய்கிறார்கள். அவர்களுக்கு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஒரு கூட்டம் மெனக்கெட்டு வந்து அவர்கள் முன் அமர்ந்திருக்கிறது, அவர்களுக்கு அந்த நேரம் முக்கியமானது. அதை அவர்கள் பேச்சாளர்களுக்கு அளிக்கிறார்கள்

நிறைய மேடைகளில் அவையடக்கம் போல பல எழுத்தாளர்கள் நீண்டநேரம்பேசுகிறார்கள். எனக்கு பேச்சு வராது, சும்மா வந்தேன் பேசச்சொல்லிவிட்டார்கள், பேசக்கூப்பிட்டார்கள் நான் தயங்கினேன் இப்படியெல்லாம். இது அபத்தமான ஒன்று. இது முன்னால் அமர்ந்திருப்பவர்களிடம் தன் பேச்சு பயனற்றது என்று தானே சொல்லிக்கொள்வதுபோல. கேட்டிருப்பவர்களின் நேரம் முக்கியமானது என்னும் உணர்விருந்தால் அப்படிப் பேசமாட்டார்கள். அப்படிப் பேசும்படியான ஓர் உரையை ஆற்றவும் மாட்டார்கள்.

எந்த மேடை என்றாலும் அதில் ஏதோ ஒன்றைச் சொல்லியாகவேண்டும் எனும் எண்ணம் பேச்சாளருக்கு இருந்தாகவேண்டும். தன் முன் அமர்ந்திருப்பவர்கள்தான் பேச்சாளனுக்கு முக்கியம். அவர்களின் பொழுதை அவன் எடுத்துக் கொள்வதனால்அவர்களுக்கு சிந்திக்க, மகிழ எதையாவது அளித்தாகவேண்டும்.

அதற்குரிய சில அடிப்படை நெறிமுறைகளை எழுத்தாளர்கள் பேசும்போது கடைப்பிடிக்கலாம். ஒன்று, எழுதிவைத்து படிக்கலாகாது. அது முழுக்கமுழுக்க நேரவிரயம். ஒரு சொல்லைக்கூட ஒருவர்கூட கவனிக்கப்போவதில்லை. இரண்டாவதாக, நூல்களை கையில் வைத்துக்கொண்டு புரட்டிப்புரட்டி படித்து கருத்து சொல்லக்கூடாது. மூன்று பேச்சை திட்டமிடாமல் மனதில் தோன்றும் வரிசையில் பேசிக்கொண்டே செல்லக்கூடாது. அந்தப்பேச்சை கேட்பவர் பின்தொடர முடியாது.

கடைசியாக பேச்சுக்கு காலவரையறை இருந்தாகவேண்டும். வரவேற்புரை போன்றவை ஏழுநிமிடங்களைக் கடக்கலாகாது. பலர் பேசும் மேடையில் இருபது நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில் மட்டுமே பேசவேண்டும். சிறப்புரைகள் நாற்பது நிமிடம் செல்லலாம். ஒரே ஒருவர் மட்டுமே பேசும் பேருரைகள் மட்டுமே அதைவிட நீளம் இருக்க முடியும்.

ஏற்கனவே விரிவாக இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். ஏழுநிமிட உரைக்கான பயிற்சிவகுப்புகளையும் நடத்தியுள்ளேன்

*

ஆனால் ’பேச்சாளர்’ பேசுவதற்கும் எழுத்தாளர் பேசுவதற்கும் வேறுபாடுண்டு. அதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பேச்சு என்பது ஒரு கலை. நிகழ்த்துகலை, மேடைக்கலை. பாடுவது போல. நாடகம் போல. அந்தக் கலையை எழுத்தாளர் பயிலவோ நிகழ்த்தவோ முடியாது. கூடாது. ஆகவே பேச்சாளர்களிடமுள்ள ஏற்ற இறக்கங்கள், குரல்வல்லமையும் ஒலித்தூய்மையும், தன்நடிப்பு போன்றவற்றை எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்கலாகாது.

பெரும்பாலான பேச்சாளர்கள் ஒரே பேச்சை திரும்பத் திரும்ப நிகழ்த்துபவர்கள். ஆகவே அப்பேச்சை நன்றாகவே பயின்றிருப்பார்கள். நகைச்சுவைகள் கூட திரும்பத் திரும்ப வருபவையே. ஆகவே அவர்களின் பேச்சில் ஓர் தயங்காமை, ஓர் ஒழுக்கு இருக்கும்.

எழுத்தாளர்களின் பேச்சு என்பது ஒவ்வொரு மேடைக்கும் புதியதாக நிகழ்வது. அவர்கள் அப்போது சிந்திப்பதை மேடையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அதில் பயிற்சியின் விளைவான தேர்ச்சி இருக்காது. சொற்களில் தயக்கம் இருக்கலாம். நடுவே அவர்கள் யோசிக்கலாம்.  சிந்தனைகளில் தடங்கலும் இடைவெளிகளும் இருக்கலாம். நினைவுப்பிழைகளும் முன்பின் முரண்களும்கூட இருக்கலாம்.

ஏனென்றால் மேடையில் பேசும் எழுத்தாளன் அங்கே தன் சிந்தனையை முன்வைக்கிறான். அது திட்டமிட்டு வரையறை செய்து வெளிப்படுத்தும் அறிக்கை அல்ல. முழுமைப்படுத்தப்பட்ட ஒரு பிரகடனம் அல்ல. அது ஒரு நிகழ்வு. வாசகனுக்கு அது முக்கியமானது. ஏனென்றால் அவன் கூர்ந்து வாசிக்கும் ஓர் எழுத்தாளனின் சிந்தனை நிகழும்போது கூடவே செல்லும் வாய்ப்பு அவனுக்கு அமைகிறது. அது குதிரையுடன் ஓடி ஓட்டம் கற்றுக்கொள்வதுபோல.

எனக்கு என் ஆசிரியர்களின் தன்னுரைகள், மேடையுரைகள் இரண்டுமே அவ்வகையில் முக்கியமானவையாக இருந்துள்ளன. அவர்கள் எங்கே தொட்டு எங்கே தாவி எப்படி தங்கள் கருத்துக்களைச் சென்றடைகிறார்கள், எப்படி கருத்துக்களை தொடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நான் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.

ஒரு கட்டத்தில் என் சிந்தனையும் அதேபோல பாயத் தொடங்கியது. தொடக்க காலத்தில் நான் ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி ஆகியோரின் மொழி, முகபாவனை ஆகியவற்றைக்கூட என்னையறியாமலேயே நகலெடுப்பவனாக இருந்தேன். நானே சிந்திக்கத்தொடங்கி, எனக்கான சிக்கல்களில் உழன்று, எனக்கான மொழியை அடைந்தபின்னரே என் தனித்தன்மை உருவானது.

ஆகவே வாசகனுக்கு எழுத்தாளனின் உரையே முக்கியமானது. பேச்சாளர்களின் மேடைநிகழ்வுகளை அவன் பெரிதாக ரசிப்பதில்லை.  நான் ஜெயகாந்தன் பேசுவதை கூர்ந்து கேட்டிருக்கிறேன். அவர் எங்கே சட்டென்று தாவி புதிய ஒரு கருத்தை அடைகிறார் என்று கவனித்துக்கொண்டே இருப்பேன். அந்தக் கணம் எனக்கு பெரும் பரவசத்தை அளிப்பது. ஒரு வகையான பறத்தல் அது. கூடவே நானும் பறப்பேன்.

அது மேடைப்பேச்சாளர் வித்தாரமாகவோ உணர்ச்சிகரமாகவோ ஒன்றைச் சொல்லும்போது எழும் கைதட்டல் போன்றது அல்ல. நமக்கு தெரிந்த, நாம் ஏற்கிற ஒரு கருத்தைக் கேட்கும்போது நாம் மகிழ்ந்து அளிக்கும் ஏற்பும் அல்ல. அது முற்றிலும் இன்னொன்று. அதை அறியாதவர்களிடம் பகிரவே இயலாது. அது இரண்டு வகையினரிடமே மேடையில் நிகழும். ஒன்று, மேடையில் நிகழும்எழுத்தாளர்கள், இரண்டு, மேடைப்பேச்சை ஊடகமாகக் கொண்ட சிந்தனையாளர்கள்.

நான் எம்.என்.விஜயன், எம்.கே.சானு போன்ற மாபெரும் பேச்சாளர்களின் ரசிகன். இன்று கல்பற்றா நாராயணனின் பேச்சின் ரசிகன். அது ரசனை அல்ல. அவர்களுடன் சிந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பமைகிறது.’என்னை தோற்கடியுங்கள் என்று மன்றாடும் அவநம்பிக்கையாளனான தீர்க்கதரிசியைப்போல’ என ஒரு வரி கல்பற்ரா நாராயணனின் பேச்சில்ன் நிகழ்ந்தபோது அந்த உள எழுச்சியை அண்மையில்அடைந்தேன்.

என்னுடைய உரையை கூடுமானவரை பயனுள்ளதாக, என்னால் முடிந்தவரை திறனுள்ளதாகவே அமைத்துக் கொள்கிறேன். முழுத்தயாரிப்புடன் அன்றி மேடையேறியதில்லை. ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் மீண்டும் சொன்னதே இல்லை. ஒரே தலைப்பென்றாலும்கூட புதியதாகவே பேச்சு நிகழும்.

என் உரை எனக்கு அணுக்கமான முகங்கள் என் முன் பரவியிருக்கையில் அவர்களுடன் நான் கொள்ளும் ஓர் உரையாடல். அவர்களை அழைத்துக்கொண்டு நான் செய்யும் ஒரு சிந்தனை. அது முழுக்க முழுக்க என் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. காரணம் அது ஒரு திறமை அல்ல. பயின்று அடைந்தது அல்ல. அது நிகழவேண்டும்.

பலசமயம் மிகமெல்ல அது உருப்பெறத் தொடங்கும். எங்கோ ஒரு புள்ளியில் தன் வழியை அது கண்டடையும். அரங்கில் ஆர்வமின்மை இருந்தால், அரங்கிலிருக்கும் நாலைந்துபேர் அமைதியின்மையை உருவாக்கினால்கூட அந்த சிந்தனை ஒழுக்கு நிகழாமலேயே போய்விடும். அப்படியே அறுந்துவிட நான் திகைத்து நின்றுவிடுவேன். ஆகவேதான் மேடைகளை தெரிவுசெய்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். கல்லூரிகள், பொது நிகழ்வுகளுக்கு கூப்பிட்டபடியே இருக்கிறார்கள். ஒரு லட்ச ரூபாய் ஊதியம் வரை கல்லூரி ஒன்றில் பேசினார்கள். எனக்கு மேலும் தயக்கமே உருவானது.

அவ்வாறு புதிய சிந்தனைகள் நிகழும்போது நானே பரவசம் அடைகிறேன். பல மேடைகளில் நான் பேசியவை மேடையேறுவதற்கு முன்புவரை நான் சிந்திக்காதவை. அங்கே உருவானவை. ஆகவே அவை முழுமையானவையாகவும், முற்றிலும் தர்க்கபூர்வமானவையாகவும் இருப்பதில்லை. ஆனால் புதியவை. ஆகவே எனக்கும் என் வாசகர்களுக்கும் மிக முக்கியமானவை. அவற்றை நான் வளர்த்துக்கொள்ளலாம். அவர்களும் தங்கள் கோணத்தில் விரிவாக்கிக் கொள்ளலாம். என் உரைகளெல்லாமே இது, இப்படி என்று சொல்பவை அல்ல. இப்படி ஏன் பார்க்கலாகாது என்று உசாவுபவை மட்டுமே.

ஆகவேதான் எழுத்தாளர்களின் உரைகள் முக்கியமானவை- வாசகர்களுக்கு. பொதுவாக மேடையில் இருந்து ஒரு அறிவார்ந்த கேளிக்கையை மட்டும் எதிர்பார்ப்பவர்களுக்கு அவ்வுரைகள் பயனற்றவையாகவே இருக்கும்

ஜெ

கனடா டொரெண்டோ உரை.

நாள் அக்டோபர் 21,

இடம் Markham City Council Chambers

தொடர்புக்கு: 905 201 9547 , 416 731 1752 , 512 484 9369 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி
அடுத்த கட்டுரைபெண்கள் யோக முகாம், கடிதங்கள்