ஓவியக்கல்வி, புதிய தலைமுறை- கடிதம்

அன்புள்ள ஜெ

மகன் பார்த்தா புகைப்பட/ஒவிய ஆர்வமுள்ளவன், சில வருடங்களாக அவனே யூடுயூப் மற்றும் வலை தளங்களில் உள்ள காணொளிகள் மூலம் வரைந்து கற்று கொண்டு வருகிறான், சில வருடங்களுக்கு முன் கல்லூரி செல்வதற்கும் ஒவிய கலை பற்றி தயாரிப்புகளுக்கும் ஒவியக்கல்லூரியில் படித்த சில நண்பர்களை கேட்ட பொழுது, அது அவனுக்கு தானாகவே வரும் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, அவனுடைய ஆர்வத்தை பொறுத்து தேடி கொள்வான் என்று பதிலளித்தார்கள். அது சரியா என்ற குழப்பம் இருந்தது, நமது முயற்சிகள் மூலம் ஒரு அடித்தளம் தரும் பட்சத்தில் ஒரு தூண்டுதலாகவோ, முறையான பயிற்சிகள் மூலம் சரியான பாதையில் பயணிக்க உதவியாக இருக்குமே என்று ஒரு எண்ணம் இருந்து வந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் உயர் பள்ளி முடிந்து கலைக்கல்லூரி செல்ல வேண்டும்.

ஏவி மணி அவர்களை உங்களுடைய தனித்திருத்தல் கட்டண உரையில் பெங்களுரில் தான் முதன் முதலில் சந்தித்தேன். முதல் நாள் மாலை உரையாடல் முடிந்து இரவு உணவின் பொழுது லண்டன் முத்து மணி உரையாடலில் அவருடைய வெண்முரசு பங்களிப்பு பற்றி அறிந்து “நீங்கள் தானே வெண்முரசுவுக்கு ஒவியம் வரைந்தவர்” என்று ஒரு பொதுவான பேச்சுடன் நானும் கலந்து கொண்டு அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில மாதங்கள் கழித்து, அகழ் இதழில் அவருடைய தையல் சொல் கட்டுரை படித்த பிறகு இவரிடம் கேட்டு பார்க்கலாமே என்று அவருக்கு குருஞ்செய்தி அனுப்பி கேட்டேன். மகனுடைய இன்ஸ்டாக்ரமை பார்த்துவிட்டு சில தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் அவை அவனுக்கு மேற்கத்திய ஓவியக்கலையின் பின்புலமாக உள்ள பண்பாட்டு வரலாறு பற்றிய புரிதலை அளிக்கும் என்றார். நானும் ஒரு அத்தியாயம் பார்த்தேன், மகனுக்கு அனுப்பி பார்க்க சொன்னேன், அவன் அதை பார்த்ததாக தெரியவில்லை, நானும் தான்!. அவர் சில மாதங்களில் இது சம்பந்தமாக தான் ஒரு பயிற்சி வகுப்பை எடுக்க இருப்பதாக சொன்னதும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தேன்.

இதற்கிடையில் அஜியின் மேற்கத்திய இசை சம்பந்தமான வகுப்பு அறிவிப்பு வந்த பொழுது அஜியிடம் பார்த்தாவின் வயது சொல்லி கலந்து கொள்ளலாமா என்றதற்கு, அவன் தான் அந்த வகுப்பிற்கு சரியாக இருப்பான் என்றார். வயநாட்டில் சில நாட்கள் அறிமுகத்தில் கிடாரில் கம்பிகளை சுண்டிக் கொண்டிருந்தான், சிறிய வயதில் முறையான சங்கீத வகுப்புக்கு ஒரு வருடம் சென்று விட்டு ஆர்வமில்லாமையால் நிறுத்தி விட்டோம். கலந்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு ஒரு மழுப்பலுடன் நழுவி விட்டான். அவனுடைய பள்ளிக்கு எந்த மரபு மீதும் ஒவ்வாமை உண்டு [பிகு படிக்கவும்], அதனால் அவனும் அவற்றை தவிர்த்து வந்தான். உங்களுடைய பனி மனிதன், அறம், பல சிறு கதைகள் (அம்மையப்பம், சிவம்,..) மற்றும் பல நகைச்சுவை பதிவுகளை இரவு வேளைகளில் படித்து காட்டியிருக்கிறேன். இவனை எப்படி ஒவியப் பயிற்சி வகுப்பிற்கு அழைத்து வருவது என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது உங்களுடைய அறிவிப்பை சொல்லி கேட்டேன், பார்ப்போம் என்றான், மனம் மாறும் முன் உடனே பதிவு செய்து அவனுக்கு தெரிவித்து தயாராக இருக்கும்படியும் அந்த தேதியில் வேறு எதுவும் வைத்துக்கொள்ளாதே என்றும் சொல்லி வைத்தேன்.

நீங்கள் கலை, தத்துவம் மற்றும் வரலாறு அவற்றிற்கிடையே உள்ள இணைப்பு பற்றி நிறைய பதிவுகள் செய்திருக்கிறீர்கள், நான் தத்துவம் மற்றும் வரலாறு போதும் கலையை ஒரு அளவோடு வைத்துக்கொண்டிருந்தேன், கவிதைக்கும், புனைவிற்கும் குறைவாகவே எனது கவனத்தை கொடுத்து வந்தேன். உங்களுடைய கட்டுரைகள் ஒன்று விடாமல் படித்துவிடுவேன், ஆனால் சிறுகதை புனைவுகளை ஒரு சில தவிர அதிகம் படித்ததில்லை, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு படித்திருந்தாலும் நீர்ப்பூச்சி வாசிப்பு தான், என்னால் உள்ளே நுழைய முடிந்ததில்லை. வெண்முரசை படித்து முடித்திருந்தாலும் இளைய யாதவன், மகாபாரதம், காவிய நடை மற்றும் ஆன்மீகக் கேள்விகளுக்காக மட்டுமே படித்தேன்.

பயணங்களில் நமது முக்கியமான ஆலயங்களை பார்த்திருந்தாலும் (ஒரிசா, மத்திய பிரதேசம், ஹொய்சால, சோழர்..), அவற்றை முறையாக கற்காமல் பார்த்து வந்தேன், ஆலயக்கலை பயிற்சி வகுப்பையும் தவிர்த்து வந்தேன், ஆனால் அவர்கள் ஹம்பி செல்ல விருப்பதாகவும் ஆனால் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் சாம்ராஜின் பதிவு படித்தவுடன் அடுத்த வகுப்பிற்கு சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து கலந்து கொண்டேன். சிறப்பான வகுப்பு, பெரிய திறப்பு, இவ்வளவு நாட்கள் தவிர்த்ததை எண்ணி வருந்தினேன். ஜேகே தொடர்ந்து கவிதை நமது ஆலயங்களில் உள்ள சிற்பங்களை புரிந்து கொள்ள மிக முக்கியமானது என்று சொல்லிக்கொண்டிருந்தார். பக்தி சார்ந்த கவிதைகளில் அறிமுகம் இருந்தாலும் அழகியல் கவிதைகளை பெரும்பாலும் தவிர்த்து வந்தேன், தொடர் வாசிப்பு இல்லாததால் அவை திறந்தும் கொள்வதில்லை. கவிதைகளில் உள்ள படிமங்கள் எப்படி ஆலயங்களில் உள்ள சிற்பங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் என்று விளக்கியதும், சரி கவிதைகள் பக்கம் செல்ல வேண்டும் போல இருக்கே என்று நினைத்து கொண்டேன்.

ஒவியக்கலை பயிற்சி வகுப்பிற்காக இரண்டு நாட்கள் முன்பு கொஞ்சம் தயாரித்துக்கொள்வோம் என்று மணியின் தமிழ் விக்கி பக்கம் சென்று அவரைப் பற்றி படித்துவிட்டு, உசாத்துணையில் உள்ள ஆரண்யகம் என்ற இணைப்பு உங்களுடைய 60 நிறைவை ஒட்டி எழுதிய பதிவுகளை உடைய தளத்திற்கு சென்றது. அதில் மணி நான் ஆலயக்கலை வகுப்பில் அடைந்த உணர்வையும் கேள்வியையும் 2010ல் கேட்டிருந்தார், அதற்கு உங்கள் பதிலை படித்ததும் சட்டென்று சாட்டை சொடிக்கியது (மின்னல் அடித்தது பற்றி அவர் சொல்லி விட்டதால்) போன்று இருந்தது.

ஒரு கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள அது உருவான சமூகத்தின் தத்துவ வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். அந்தப் பண்பாட்டின் வரலாற்றை அறியவேண்டும், பிறகு குறிப்பிட்ட கலையின் வரலாறை இந்த இரு வரலாற்றிலும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மூன்றையும் அறியும்போது, குறிப்பிட்ட கலைஞர் எந்த தத்துவத்தின் நோக்கைச் சார்ந்தவர், எந்த அழகியல் மரபைச் சார்ந்தவர் என்பதை அறியலாம். அவருடைய கலை நோக்கு என்ன என்று துலக்கமாகும். தத்துவத்திலேயே ஒரு பண்பாட்டின் சிந்தனைகள் வேர்கொள்கின்றன. முதலில் இலக்கியத்தை பாதிக்கிறது, பிறகு காண்பியல் கலைஞர்களை பாதிக்கிறது. ஏனெனில் இலக்கியம், மொழியைப் பயன்படுத்துவதால், காண்பியல் கலைகளைவிட, தத்துவத்துக்கு நெருக்கமாக இருக்கிறது

புனைவுகள், கவிதைகளை உபாசனை செய்யாமல் தத்துவம் மற்றும் வரலாற்றை மற்றும் கற்றுவந்ததின் தவறு புரிந்தது. ஆலயக்கலை பயிற்சி வகுப்பும் இதை உறுதிப்படுத்தி விட்டது. சரி, நமக்கு இந்த தொடர்பு இப்பவாவது தெரிஞ்சதே என்று தேற்றிக்கொண்டு அவர் உங்களுக்கு எழுதிய கடிதங்கள் அவருடைய அகழ் கட்டுரைகள் மற்றும் இணைய தளத்தை படித்து தகவல்களை சேகரித்து கொண்டு கேள்விகளையும் குறித்துக்கொண்டேன். அந்தியூர் மணி அனுப்பிய வாட்ஸாப் குழுவில் வியாழன் அன்றே செல்ல இருப்பதாகவும் மூன்று பேர் சேர்ந்து கொள்ளலாம் என்று தகவல் பதிவு செய்தவுடன் மணி தொடர்பு கொண்டு பெங்களூரில் இருந்து வருவதாகவும் இணைந்து கொள்ளலாமா என்றவுடன், கும்பிட போன தெய்வக் குறுக்கே வந்த மாதிரி இருக்கே (தேய்வழக்கு!) என்று குதுகலத்துடன் ஊத்தங்கரை, தர்மபுரி அல்லது சேலத்தில் இணைந்து கொள்ளலாம் என்றேன். மகனை அறிமுகப்படுத்துவதற்கும் எனது கேள்விகளை கேட்பதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மகனுக்கு நாளை உனக்கு ஒருத்தரை அறிமுகப்படுத்துகிறேன் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.

திட்டமிட்டபடி தர்மபுரி பேருந்து நிலையத்தில் அவருடன் இணந்து கொண்டு மகனை அறிமுகப்படுத்தி அவனுடைய ஒவிய ஆர்வங்களை பகிர்ந்து கொண்டேன். காரில் ஏறியதுமே கேள்விகள் ஆரம்பித்து வெள்ளிமலையில் சேர்ந்து இரவு உறங்கும் வரை தொடர்ந்து உரையாடி கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருடைய புகழ்பெற்ற நீங்கள் கேதார்நாத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றியும் காட்சியை படிமமாக மாற்றாமல் பார்க்க முடியவில்லை என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் துணுக்குறலையும், திடுக்கிடலயும் தந்தது.

தான் அந்த புகைப்படத்தை எடுக்கும் பொழுது அவ்வாறு அமையும் என்று நினைத்தோ, தயாரித்தோ எடுக்கவில்லை, எடுத்த பிறகு தான் அது திறந்துகொண்டது என்றார். நமது ஆழுள்ளம் அந்த காட்சியை கேமிரா வழியாக எடுக்கும் முன்னரே கண்டைந்து நம்மை எடுக்க வைத்து பிறகு அர்த்தங்களை தருகிறது என்பதை விளக்கினார். நாம் நம்மை தொடர்ந்து இவ்வாறு படிமங்களை, ஒவியங்களை, கவிதைகளை, புனைவுகளை வாசித்து பயிற்சி செய்து வந்தால், அவை தானாகவே திறக்கும் என்றார். அடுத்த நாள் காலை நடையில் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் பிரதிபலித்த வானம், மரம் புகைப்படத்தை வைத்து மறுபடியும் விளக்கினார். பயிற்சியின் இறுதி நாளன்று தான் பம்பாய் சென்றபொழுது எடுத்த புகைப்பட புத்தகம் ஒன்றை பகிர்ந்து, அதில் தொடர்ச்சியாக உள்ள ஒன்று என்ன என்று எங்களை கேட்டார், நான் ஒன்றை சொன்னேன், மற்றொரு நண்பர் சரியாக கணித்ததும் [அடுத்த வகுப்பில் கேட்கும் பொழுது சுவாரசியம் கருதி பதிலை மறைத்துவிட்டேன்] பொழுது இது அந்த புகைப்பட புத்தகத்தை மறுபடியும் காட்டிய பொழுது அது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துள்ளதை சுட்டி காட்டி, தங்கியிருந்த இடத்தின் அருவருப்பான நிலையால் மனம் அமைதி இழந்திருந்தாலும் அதில் அது பதிவாகியுள்ளது தான் அறியாமலேயே அமைந்தது என்றும் அது நமது ஆழ்மனத்தின் செயல் என்று பதிலளித்தார்.

இதை நீங்கள் பயணங்களில் தொடர்ந்து செய்வதையும், பயணக்கட்டுரைகளில் பதிவு செய்துள்ளதையும், சென்ற மழைப்பயணத்தில் ஈரோடு கிருஷ்ணன் நிலக்காட்சியை எப்படி இடதிலிருந்து வலமாக, வலதிலிருந்து இடதாக பார்ப்பது பற்றி சொன்னதையும் நினைவு கூர்ந்தேன். இவ்வளவு தகவல்கள் உள்ளே இருந்தாலும் ஒரு இணைக்கும் புள்ளியாக இந்த பயிற்சி வகுப்புகள் மிக மிக முக்கியம் என்பதும் நீங்கள் இவற்றை ஒருங்கினைப்பதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.

பார்ப்பதை படிமமாக மாற்றுவது மனதின் இயல்பு, உயிரியலின் தற்காப்புக்கான தன்னிச்சை செயல் என்றும் அதை வலுக்கட்டாயமாக செய்யாமல் அதை மேலும் உன்னதமாக மாற்றுவதே சரியான முறையாக இருக்கும் என்றார்.

30, 000 வருடம் முதலான கலை வரலாற்றையும் மேற்கத்திய கலை வரலாற்றை மிக விரிவாக கிரேக்க, ரோமன், கோதிக், மறுமலர்ச்சி, பரோக், ரோகோகோ, ரொமாண்டிசம், தேசியவாதம், இம்ப்ரெஷனிசம், சம்பிரதாயம்(ஃபார்மலிசம்), மறுமலர்ச்சி, நவீனகாலம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின் பின்நவீனத்துவம் என்று பிரித்து அழகியல் மற்றும் தத்துவ வளர்ச்சிகள் எவ்வாறு மாறி வந்ததையும் தத்ரூபம், வண்ணங்கள், ஒளி, ஆடம்பரம், எளிமை, கேதலிக், ப்ராட்டஸ்டண்ட் மதங்களின் பங்களிப்பு, ஆக்கபூர்வமான மாற்றங்கள், அழிவுகள், காலனி ஆதிக்கத்தினால் ஏற்பட்ட கலப்புகள், இனவாதம் பெண்ணீயம் ஏற்படுத்திய பாதிப்புகள் அவற்றிலிருந்து கற்று அடுத்தடுத்து அவர்கள் அடைந்தவற்றை ஒரு வரைபடம் போன்று விளக்கினார்.

இவை அனைத்துக்கும் அடிநாதமாக சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுக்கும் உள்ள முரண்பாடு (லட்சியவாதம், புறவயமான உண்மை) ஆதாம் ஏவாளுக்கு ஏற்பட்ட பாவ உணர்வு ஆகியவை உள்ளது, அவர்களுடய ஆன்மீக வறுமையினால் இரண்டு உலகப்போர்களின் அழிவுகளை கடந்து வர நெடுங்காலம் ஆனது என்றார்.

அறிமுகமான மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள் டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ரெம்ப்ராண்ட், ரஃபயல், வான்கா மற்றும் கேள்விப்படாத ஆனால் முக்கியமான பலரைப்பற்றி நுணுக்கமான விவரங்கள். சிந்தனையாளர்கள் கண்ட், வால்டேர், ருசோ, எமெர்சன், தோரோ, ப்ளூம், டேவிட் ஹுயூம், தத்துவாதிகள் ஹெகல், ஷோப்பனோவர். இசையில் பைரன், பீத்தோவான் போன்றவர்களின் முக்கியமான பங்களிப்புகள் இணந்துகொண்டதும் வரலாறு மேலும் துலங்கிவந்தது.

மேற்கில் கலை சார்ந்த கல்வி சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது நம்முடைய சமூகம் அவ்வாறு செய்யாத்தால் ஏற்படும் அழகியல் வறுமையே நம்முடைய கலை வரலாறை பற்றிய அறியாமை மற்றும் கலைச்செல்வங்களை உதாசினப்படுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்க்கும் முதன்மையான காரணம் என்றார்.

பார்த்தா இந்த அனுபவம் புதியது என்பதால் முதல் நாள் ஆர்வமாக கேட்டான், இரண்டாவது நாள் காலை மேற்கத்திய வரலாற்றின் செறிவு கொஞ்சம் நெளிய வைத்தது, மதியம் செறிவு குறைந்து ஒவியங்கள் நிறைய வர ஆரம்பித்தவுடன் உற்சாகம் அடைந்து கவனமாக கேட்க ஆரம்பித்தான். வகுப்பிற்கிடையில் நண்பர்கள் எல்லோரும் கேள்விகளை முன்வைப்பது அதற்கு மணி பதில் சொல்வதை முதல் நாள் தவிர்த்தவன் பிறகு கலந்து கொண்டு கவனமாக கேட்க ஆரம்பித்தான். காரில், வகுப்பில் மற்றும் உரையாடல்களில் எவ்வளவு கேட்டான், புரிந்துகொண்டான் என்று கேட்டதற்கு நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொன்னாலும் இது ஒரு திறப்பாகவும் அவனுடைய கலைப்பயணத்திற்கு ஒரு அடிப்படையை தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

2019ல் மூன்று வார ஐரோப்பிய பயணத்தை கலை, பண்பாடு மற்றும் வரலாற்றை மையமாக்கி பாரிஸ் (லூவர் மியூசியம்), சுவிட்சர்லாண்ட், ம்யூனிக் (டாக்கா வதை முகாம்), வெனிஸ் (சதுக்கம்), ஃப்ளோரன்ஸ் (சர்ச், டேவிட்), ரோம் (வாடிகன்), லண்டன் (பிரிட்டீஷ் மியூசியம்) சென்று அங்கிருந்த முக்கியமான மியூசியம் மற்றும் வரலாற்று தலங்களை இந்த புரிதல் இல்லாமல் என்ன பார்த்தேன் என்பது குறித்து யோசித்தும், இந்த புரிதல் இருந்திருந்தால் என்றும், மீண்டும் வாய்ப்பு அமையுமா என்று எண்ணி பெருமுச்சு விடுவதை தவிர வேறு என்ன செய்வது!

இந்த பயிற்சி வகுப்பிற்கு பிறகு இவ்வளவு தகவல்களையும் தொகுத்து, புத்தகங்கள், காணொளிகள், கட்டுரைகள், புகைப்படங்கள், ஒவியங்கள், சிலைகள் வழியாக செய்ய வேண்டிய பயணத்தை யோசித்தால் ஒரு சமயம் மலைப்பாகவும் ஒரு பக்கம் இனி வாழ்நாள் முழுவதும் நேரமில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை.

சரியான ஆசிரியர் மூலம் ஒருங்கினைத்த உங்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்கள், 8 மாத தவம் செய்து தயாரித்து, தொகுத்து எங்களுக்கு பகிர்ந்த ஏ.வி. மணிகண்டன் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கமும், நன்றியும், உரையாடல்களில் கலந்து கொண்டு பதிலளித்தும் செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ஈந்த அந்தியூர் மணிக்கும் நன்றி.

அன்பும் வணக்கமும்,

திரு

திருவண்ணாமலை

பி.கு. இந்த கடிதம் எழுதிய பிறகு மகனுடைய வழிகாட்டியிடம் இந்த வகுப்பு பற்றியும், நம்முடைய படிமங்கள் மதத்தில் இருக்கிறது ஆனால் அதை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று உரையாடிய பொழுது, தான் மரபை அவர்களுக்கு தரவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை, நீங்கள் வீட்டில் அதை தரலாம் என்ற வகையில் இதைப்பற்றி மேலும் உரையாட இந்த வகுப்பும் கடிதமும் வாய்ப்பாக அமைந்தது.

பார்த்தா தமிழில் கடிதம் எழுது தயங்கியதால், ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்க்கலாம் என்று முயற்சித்தோம், அவனுக்கு மேலும் சில நாட்கள் பிடிக்கும் என்பதால், ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்.

Dear Je,

Combining art, philosophy and literature was a shaking revelation that I didn’t see coming. I wasn’t exactly comfortable with art becoming a theory and words when I have been accustomed to practical aspects of it without an understanding of such co-parts that come along with Art and Aesthetics. I heard very little about the conductor from Appa and I was astonished to see how much he was grounded to his contemporary surroundings and aware of the movements in both art and the world. Couldn’t have asked for a better combination when looking back at art’s history and growth.

The art class was a highly influential and perspective-changing experience for me, to have had walls broken down to reveal centuries deep gears working on even today’s artwork and visions of the past and present revisited through aspects that usually are neglected in areas of Art. Manikandan Anna had also worked quite long, in fact 8 months, and I am sure its paid off, if you also count the content we couldn’t cover since he had prepared quite intricately in every topic. For his first presentation along with the varied audience he kept it quite balanced in humouring now and then to ward off any slackness or grogginess in the radiating afternoon heat. There were moments where he was so engrossed by the topic he was speaking that he would take a while to notice that he had trailed off and come back on track, not that it was irrelevant. What I think could have been better is the audience interacting including myself which I feel would have made it livelier for him. Also as assurance that we are receiving what he is trying to communicate, but yeah we were a bit hesitant initially to engage on interactive sessions. To add a little more on the structure of the sessions, it too wasn’t constructive but it didn’t impact much because the second day everyone were pushing themselves to cover topics.

What I loved about the time in Vellimalai attending this class was the meal times where without any pre planning we would gather and talk about anything anyone might have to clarify. These talks were what i would say was the sessions consolidation in small and personal levels that helped everyone. Manikandan Anna was so patient and attentive and returned the question with his thoughts. For me, just being there listening to the waves of the conversation pulled me closer to the group and in the journey of this class with him. I heard the current rainy environment caused hindrances in the past, but this time all of us were ready to be a bit uncomfortable and still learn. Definitely i could see him being breathless and nervous quite often, and his liveliness and spontaneity which added made me feel more comfortably in that learning space with him. Overall i think i owe a lot to him for enabling the opportunity of me growing as an artist and widening my perspective immensely. So much that I had a mini crisis on holding and implementing this information in my art ,and when applicable, in daily life. I still do but knowing that i have been given a glimpse of the vision and its importance makes a huge difference and i hope it is so for others as well.

Regards

Partha

முந்தைய கட்டுரைநாலாயிர திவ்விய பிரபந்தம்- ஒரு பயிற்சி வகுப்பு
அடுத்த கட்டுரைமுடியாட்டம்