அன்புள்ள ஜெ,
நானும் என் நண்பனும் ஒரு சுவாரஸ்யத்திற்காக இலக்கியமா திரைப்படமா எது முதன்மை கலை என்னும் தொடர்விவாதத்தில் இருக்கிறோம். இலக்கியம் என்பது என் தரப்பு. அவ்வப்போது சில சிறந்த திரைப்படக் காட்சித் துணுக்குகளை அவன் அனுப்புவான். சிறந்த சில கதைகள், வாக்கியங்கள், இலக்கியத்தை விதந்தோதும் பேச்சுக்களை நான் அனுப்புவேன். பெரும்பாலும் அவை உங்களுடையதாக இருக்கும். தனிப்பட்ட உரையாடல்கள் இல்லாத, தரவுகள் மட்டுமேயான வாட்ஸப் விவாதம். அப்படி சமீபத்தில் நான் பகிர்ந்தது, சாம்ராஜ் எழுதிய ‘செவ்வாக்கியம்’ என்ற கதையில் வரும் வரிகள்,
“எப்போவோ ஒருமுறை அவள் உறங்கியும் விழிப்பும் இல்லாத சமயத்தில், அவள் மேல் முன்னும் பின்னும் இயங்குவான். பிறகு அந்த உருவம் திண்ணையில் படுத்துக் கொள்ளும். செவ்வாக்கியம் அதை கணவன் என்றே நம்பினாள்.”
திரைப்படத்தில் பல ‘ஷாட்’ கள் காட்டி தொடர்புறுத்த வேண்டிய விஷயத்தை, மிகக் காட்டமான பெண்ணியக் கருத்தை, கதையில் எழுத்தாளர் மூன்றே வரிகளில் சொல்லிவிட்டார் என்று தோன்றியது.
‘செவ்வாக்கியம்’, ‘ஜார் ஒழிக’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதை. புத்தகத்தில் பெரும்பாலான கதைகள், பகடி மொழியில் அமைந்த, அழகிய மான் போன்ற துள்ளு நடை கொண்டவை. ஈரோட்டிலும், ஹம்பியிலும் நேரில் சந்தித்தபோது, எழுத்தாளரின் பேச்சும் அப்படித்தான் இருந்தது. எப்போதும் அவரைச் சுற்றி ஆட்கள் இருப்பார்கள். சினிமா சம்பவங்கள், மதுரைக்காரர்கள், மலையாளிகள் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மனிதர்கள் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டவராகத் தெரிந்தார். ஹம்பியில் விஷ்ணுபுரமும், வண்ணதாசன் கவிதைகளும் எங்களுக்காக வாசித்தார்.
ஆலயக்கலைப் பயிற்சி முகாம்-2 ல் முதல்முறையாக எழுத்தாளர் சாம்ராஜை பார்க்கும்போது அவரின் படைப்பு எதையும் படித்திருக்கவில்லை. சில காணொளிகள் மட்டுமே பார்த்திருந்தேன். ஹம்பி பயணத்திற்கு அவர் வருகிறார் என்று தெரிந்ததும் அவரின் ‘ஜார் ஒழிக’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். நண்பர் பா.கா.முருகேசன் ‘பட்டாளத்து வீடு’ படித்தார். அதை ரயிலில் தானம் கேட்டு வந்த வாசிப்பு பழக்கம் உள்ள திருநங்கைக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார். உடன் வந்த லிங்கராஜ் ரயில் பயணத்திலேயே இரண்டு புத்தகங்களையும் வாசித்து, வாசிக்க வாசிக்க எங்களுடன் விவாதத்தில் கலந்து கொண்டார்.
பத்து கதைகள் கொண்ட ‘ஜார் ஒழிக’ சாம்ராஜின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. அரசியல், பெண்களின் வாழ்க்கைப்பாடுகள் போன்ற பல களங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள். ‘சன்னதம்’, ‘மரிய புஷ்பம் இல்லம்’ போன்ற சிறுகதைகள் ஒரு முழு வாழ்க்கையையும் ஒவ்வொரு புகைப்படமாகக் காட்டிச் செல்கின்றன. கதைகளின் காலம் பொதுவாக எண்பது, தொண்ணூறு. கதைக்களன் மதுரையும், மதுரை சார்ந்த இடமும். மதுரையைத் தாண்டினால் கோட்டயம்.
சாம்ராஜ் பற்றி தமிழ்விக்கி பார்க்காமல் இந்த கதைகளை வாசிப்பவர்கள் கூட இவர் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆள் அல்லது காட்சி நுண்ணுணர்வு அதிகம் கொண்ட எழுத்தாளர் என்பதை ஊகிக்கலாம். முதல் கதையான ‘குள்ளன் பினு’ -வில், பினுவின் தோற்றத்தை விவரிக்க ‘நடிகர் கொச்சின் ஹனிபாவை குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்தது போல கட்டம் போட்ட கைலியும் கை வைத்த பனியனுமாய் இடுப்பில் தடித்த பெல்ட்டு மாய்’ என்று சினிமாவில் வரும் ஒரு கதாபாத்திரத்தை உதாரணம் காட்டுகிறார். பிறகு ‘மூன்றாம் பிறை படத்தில் வரும் சுப்ரமணி’ என்பது போன்ற பல சினிமா உதாரணங்கள். முக்கியமாக அவரின் இட வர்ணனைகளும், காட்சி விவரிப்புகளும் வாசிக்கும்போது சிறிய சொற்றொடர்களில் சிறு சிறு காட்சிகளாகக் காட்டிக்கொண்டே செல்கிறார். ‘இயேசு படத்தின் முன் சிறிய மின்விளக்கு பதட்டமாய் மினுங்கி கொண்டிருக்க’ என்றும் ‘ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது’ என்றும் அந்தக் கதைகளின் அந்த நேரத்து மனநிலைகளைக் காட்டுகிறார்.
அவர் கதைகளில் அதிகம் பகடி செய்வது புரட்சிகர கம்யூனிச இயக்கங்களைப் பற்றி. பதின்பருவத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். அவர்களை கவனித்திருக்கிறார். அந்த அனுபவப் பின்புலமும் அவர்கள் மேல் கரிசனமும் கொண்டவர். தலைப்புக் கதை ‘ஜார் ஒழிக’ அந்த அரசியல் பகடியும், அதே சமயம் தீவிரமும் கொண்ட முக்கியமான கதை. சுவரில் விளம்பரம் எழுதும் ஒருவன், புரட்சிகர இயக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து வேலைசெய்கிறான். லட்சிய உணர்வு கொண்ட அவர்கள் நடைமுறை சாத்தியப்பாடுகள் குறைவான பெரிய திட்டங்கள் கொண்டவர்கள். அதன் காரணமாக எழுத்தாளரால் கதையில் பகடி செய்யப்படுபவர்கள். ஆனால் கதையின் இறுதியில் தோழர்களின் சமூக பங்களிப்பு என்ன என்று காட்டி முடிக்கிறார்.
‘மூவிலேண்ட்’ என்னும் கதையே இந்த தொகுப்பில் மிகச்சிறந்த கதை. சினிமா பார்ப்பதில் தீவிர விருப்பம் கொண்ட பெண் சினிமா கொட்டகையில் வேலை செய்பவனை காதலித்து அவனுடன் ஓடிப் போகிறாள். அவள் அண்ணனால் பிடித்து வரப்பட்டு, அடிவாங்கி ஒரு காதும் கேட்காமல் போகிறது. வேறொருவனுடன் திருமணமாகி, நிறைமாச வயிறுடன் சினிமா காணச் செல்கிறாள். பேற்றுவலி வந்து குழந்தை பிறக்கிறது. கணவனும், மற்றவர்களும் அவளுடைய சினிமா பார்க்கும் ஆர்வத்தைத் திட்டுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். சினிமா பார்ப்பதை மொத்தமாக நிறுத்தி விடுகிறாள். எல்லாரும் எவ்வளவோ வற்புறுத்தியும் வருவதில்லை. சினிமா என்ற வார்த்தையைக் கூட அவள் உச்சரிப்பதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் ஊர்த் திருவிழாவில் அவள் பழைய காதலனைப் பார்க்கிறாள். அவன் அவளருகே வந்து அவள் காதில் ரகசியமாக எதையோ சொல்லிவிட்டு போய்விடுகிறான். அது அவளின் கேட்காத காது. அவள் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். கதை முடிகிறது. அவன் என்ன சொன்னான்? அன்று என்ன நடந்தது என்றா? இவ்வளவு நாள் வராமல் இருந்ததற்கான காரணமா? இனி என்ன செய்யலாம் என்பதற்கான திட்டமா? என்னவாக இருந்தாலும் அவள் அதை எல்லாம் கேட்டால் என்ன கேட்காமல் இருந்தால் தான் என்ன?
சாம்ராஜின் எல்லாக் கதைகளிலும் இந்த அம்சம் உண்டு. கதை முடியும் இடத்திலிருந்து வாசகனை சிந்திக்க வைத்தல், உரையாட அழைத்தல். பல இடங்களில் கதை வாசகனை சீண்டுகிறது. ஏன் எழுத்தாளன் மீள மீள இந்த சமூகத்துடன் உரையாடுகிறான்? நம் வாழ்வை, செயலை விமர்சித்து நம்மை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கிறான்? எல்லாவற்றிலும் வேறொரு கோணத்தை முன்வைத்து இப்படியும் பார் என்கிறான்? வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளில் அவனும் உழன்று நம் நிம்மதியையும் குழைக்கிறான்?
சுந்தர ராமசாமி சொல்வது போல, தனக்குத்தானே சிலை வைக்கத் தானா?என்றெல்லாம் முன்பு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் யோசித்ததுண்டு. ஆனால் இன்று, சகஉயிர்கள் மீதான அன்பும், கருணையுமே ஒருவனை எழுத்தாளனாக்குகிறது, ஒரு நல்ல கதையை எழுத வைக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு கோவையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ‘அடிப்படையில் நல்லவனாக இல்லாத ஒரு எழுத்தாளனால் ஒருபோதும் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது’ என்றார். உண்மை தான். எழுத்தாளர் சாம்ராஜ் மிக நல்ல மனிதரும் கூட.
ரதீஷ் வேணுகோபால்