நிலைபெயராமையை நோக்கி ஒழுகிச் செல்லல் -ரம்யா

அன்பு ஆசிரியருக்கு,

தத்துவ வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் அமைந்தது. பலமுறை தட்டிபோய் இம்முறை வாய்த்தது. தத்துவ வகுப்பிற்கு வருவதற்கு ஒரு வாரம் முன் தான் வெண்முரசின் இமைக்கணம் முடித்திருந்தேன். வெண்முரசின் உச்சம் இமைக்கணம். உங்கள் எழுத்துகளின் வழியான இந்தப்பாதையில் அடையும் உச்சம் என்றும் தோன்றியது. மீண்டும் ஆரம்பித்த இடத்தை தரிசிக்க விரும்பினேன். உங்கள் புனைவுலகிற்குள் முதலில் நுழைந்தது விஷ்ணுபுரத்தில் தான்.

2019 டிசம்பரில் முதன் முதலில் விஷ்ணுபுரம் வெறி கொண்டு வாசித்து முடித்த அந்த ஒரு வார காலத்தை நினைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அதன் பொருட்டு எனக்கு விடிந்து கொண்டிருந்தது. அறிவின் மேல் தீராத பற்று எனக்கு அப்போது இருந்தது. என் நினைவு தெரிந்து அதன் பொருட்டு மட்டுமே வெறியோடு அலைந்திருக்கிறேன். ஆனால் எல்லைக்குட்பட்ட அறிவும், அனுபவத்தின் வழியாக வரும் சோர்வும், அலைக்கழிதலும், கேள்விகளும் பெருகி ஒரு மாதிரியான கைவிடப்பட்ட நிலையில் இருந்தேன். எல்லைக்குட்பட்டதையே புரிய முடிந்திருக்காத ஒருவரிடம் காணவே முடியாத அறியமுடியாமையின் எல்லையைப் பற்றிச் சொல்லி திகைத்து மலைக்க வைத்து அடுத்த தேடலுக்கான விதையை அளித்திருந்தீர்கள். அன்று நான் விஷ்ணுபுரத்தின் வழி என்ன அடைந்தேன் என்று சொல்வதற்கான மொழி என்னிடம் இல்லை. அதை அடையவே முதலில் எளிய கடிதங்களை உங்களுக்கு எழுதினேன். இன்று சொல்ல மொழி ஓரளவு கை கூடியுள்ளது. ஆனால் மொழி மட்டுமல்ல சீரான சிந்தனையும், அதைத் தொகுத்துக் கொள்ளும் அறிவும் வேண்டும் என்று புரிகிறது. அதை தத்துவ வகுப்பின் இறுதியில் அடைவேன் என நம்புகிறேன். அதன் பின் மீண்டும் சரியாக எழுதுவேன். இன்று, இப்போதைய எண்ணங்களை பெற்றுக் கொண்ட ஒன்றைச் சொல்ல விழைகிறேன்.

*

இமைக்கணம் முடித்த போது இயல்பாக விஷ்ணுபுரம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தத்துவ வகுப்பு வருவதற்கு ஒரு வாரம் இருந்தது. அதற்குள் செய்ய வேண்டுமென ஆரம்பித்தேன். மீண்டும் பீதாம்பரத்தை, திருவடியை, அனிருத்தனை, சங்கர்ஷணனை, லஷ்மியை, பிங்கலனை, சாருகேசியை, லலிதாங்கியை, பத்மாட்சியை, வீரவல்லாலனை, சித்திரையை, அஜிதனை, பவதத்தரை என யாவரையும் தரிசித்தேன். ஆனால் ஏனோ சென்று காசியபனாக சித்தனின் மடியில் அமர்ந்து கொள்ளவே பிடித்திருந்தது. காசியபன் வழியாக இவற்றைப்பார்க்கும் பார்வையிலேயே முன்பு போல இம்முறையும் நிலைத்திருந்தேன்.

விஷ்ணுபுரத்தின் வழி ஒரு வாழ்க்கையை அல்ல, ஒரு காலகட்டத்தை அல்ல, ஒரு யுகத்தை மட்டுமல்ல, இந்தப் புடவி தோன்றி அமையும் காலமட்டுமல்ல, ஒட்டுமொத்தத்தின் ஜனன மரணத்தை வெறுமே நின்று சலனமற்று நோக்கும் ஒரு குழந்தைமனத்திற்குரிய பார்வையை அளித்திருந்தீர்கள். நான் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன் அல்லது “அது” என் வழியாக யாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. யாவுமே காலத்தில் ஒழுகிக் கொண்டிருப்பதாகப்பட்டது.

சாதாரணமாக நம்மை, நம் இருப்பை சிறிதாக்கிக் காணும் இந்த சிந்தனை அளிப்பது செயலின்மையை. செயலின்மை துறவின் வழியாக மட்டுமே இனிமையாக அமையக்கூடியது. அது வாய்க்கப்பெறாத எனக்கு செயலின்மை சுமை தான். என் பாதை செயலாகத்தான் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் குறிப்பிடுவது போல ஞானத்தின் பாதையை தேர்ந்தெடுப்பவனுக்கு மீட்பில்லை. “நீ கேட்டுவிட்டாய் குழந்தை. இனி முன்னால் மட்டுமே போக முடியும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லும் குருவின் குரல் ஒன்று இன்று வரை தொடர்கிறது. சரி செயல் தான் என் பாதை என்றால் அதை இனிமையாக எப்படிச் செய்ய என்ற கேள்வி எழுந்தது. அதற்கான விடையை இமைக்கணத்தில் தான் தெளிவாக அடைந்தேன்.

நான் வெறும் கருவி என்பதை உணர்ந்தேன். நான் மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கும் இம்மாபெரும் கூட்டு நிகழ்வின் ஒரு கண்ணி நான் என்பதை உணர்ந்தேன். என்னை பாதிப்பதும், நான் பாதிப்பதும் இந்நிகழ்தகவின் சிறிய விளையாட்டு தான் என உணர்கிறேன். எந்த ஒரு தாளமுடியாத நிகழ்வின் முன்னும் இதைச் சொல்லி என்னை இனி மீட்டுக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

இதை அறிந்தபின் வர வேண்டியது அமைதல் தானே. மெளனம் தானே. துறத்தல் தானே என்று தோன்றியது. ஆனால் நீங்கள் மேலும் மேலும் அறிதலை நோக்கி, செயலை நோக்கி, வாழ்வை நோக்கி, அழகை நோக்கி, ஒளி நோக்கி சென்று கொண்டே இருக்கிறீர்களே என்று கேள்வி எழுந்தது. அடைய முடியாது என்று அறிந்தும் மேற்கொள்ளப்படும் இந்தப்பயணத்தின் பொருள் என்ன என்று தோன்றியது. ஒரு போதும் சென்றடைய முடியவில்லை எனும் நிறைவின்மையை உணர்ந்தபின்னும் மீண்டும் உற்சாகமாக ஒவ்வொரு நாளும் முதலிலிருந்து குழந்தையைப்போல ஆரம்பிக்க வைக்கும் ஒன்று எது என்று யோசிக்கிறேன். அதையே நீங்கள் தத்துவார்த்தமாக எழுதி, விவாதித்து கண்டடைந்தீர்கள் என உணர்கிறேன். அதற்கு பெயர் வேதாந்தம் அல்லது என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

எந்த மனிதரையும் வெறுப்பதில்லை நீங்கள். எச்செயலையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தந்தைக்குரிய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றியது. ஆனாலும் அந்தச் செயல், வேகம் இருந்து கொண்டே உள்ளது. அது பயணத்தின் இறுதி வரை உங்களுக்கு இருக்கும் என நான் உணர்கிறேன். ஆனால் நான் அந்நிலையை அடையவில்லை. அலைக்கழிகிறேன். எளிய உணர்வுகளின் முன், செயல்களின் முன், வாழ்க்கை முன் சோர்ந்தமைந்து விடுகிறேன். இவ்வறிவை அனுபவமாக்கிக் கொள்ள விழைவு உள்ளது. அதற்கான முதல்படி பற்றற்றானின் பற்றினைப் பற்றுவது தான். அதை மட்டுமே இதுவரை செய்திருக்கிறேன்.

*

இமைக்கணத்தின் வழி எனக்கான ஒன்றை தொகுத்துக் கொள்ள முற்பட்டேன். என் வாழ்வின் உச்சமான தருணமாக இமைக்கணத்தின் இறுதியில் வந்து நிற்கும் இந்தப்புள்ளியைச் சொல்வேன். மனித மனங்களின் அகத்தை இத்தனை ஆழமாகச் சென்று தரிசித்திருக்க முடிந்தது. புறத்தையும், புறத்திற்கு அப்பாலான விஷயங்களையும், நம் கையில் அல்லாத வேறின் ஆற்றல்களையும், அதன் சிந்தனைகளையும் கூட உணர முடிகிறது.

கீதை என்றவுடன் முழுமையாக அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது போல அமையும் என்று நினைத்தேன். ஆனால் யமன் வழியாக கர்ணன், சிகண்டி, விதுரர், யுதிஷ்டிரர், பீஷ்மர், உத்தங்கர், என அமைந்து யாவும் அர்ஜூனனின் கனவில் முடித்த விதம் முழுமையையும் ஒன்றுக்குள் அடக்கிக் கொள்ள ஏதுவாக அமைந்தது. கனவுக்குள் கனவுக்குள் என சென்று கனவைக்காண்பது கூர்மையான ஒரு நோக்கைத் தருகிறது. அதே சமயம் விலகி நின்று யாவையும் மாயை என்ற ஒற்றைச் சொல்லில் அழித்துக் கொள்ளவும் முடிகிறது.

இமைக்கணம் எனக்கு முதன்மையாக அளித்தது செயலுக்கும், செயல் யோகத்திற்கும் இடைப்பட்ட தெளிவான புரிதலைத்தான். வேறு எதற்காகவும் அல்ல விளையாட்டென இயற்றப்படும் செயல் தரும் உவகையைக் கண்டேன். என்னைச் சுற்றி நிலைபெயராது தங்கள் கடமைகளை யோகமென ஆற்றிக் கொண்டிருக்கும் மாபெரும் இயற்கையின் நியதியைக் காண்பித்து அதை எனக்கு ஆழமாகப் புரிய வைத்தீர்கள். நிலைபெயராமையைப் பற்றி அல்லது எந்தவித பலனையும் எதிர்பாராமல் தன் கடமையை செய்து கொண்டிருக்கும் ஒன்றை பிரம்மம், ’அது நான்’ என்று சொன்னபோது நான் இந்தப்பிரபஞ்சம் முழுவதையும் தரிசித்தேன். எதெல்லாம் தான் என அவன் தன்னை காட்டியபிறகு அதை நோக்கித்தானே செல்ல வேண்டும். பிறிதொன்றில்லை. “சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதானம்” – இவையனைத்தும் நானே நானன்றி முழுமுதன்மையானதென ஏதுமில்லை என எழுந்து தன்னை காண்பித்த பிறகு இப்பயணம் முழுமுதன்மையை நோக்கியதாகத்தான் அமைய வேண்டும் என்று கொண்டேன்.

சூரியன் தோன்றி மறைவதற்கும், மழை தன் காலத்தில் பெய்வதற்கும், மலை நிலையாக நிற்பதற்கும், பூக்கள் தங்கள் காலத்தில் பூத்து நிறைவதற்கும், பறவைகள் வலசை செல்வதற்கும் எந்த ஊக்கியும் தேவையில்லை. இன்னும் எண்ணற்றவைகளை, நிலைபெயராமல் தன் செயலை யோகமென ஆற்றிக் கொண்டிருக்கும் அத்தனை உருக்களையும் அன்று அசைபோட்டிருந்தேன். புதிய திறப்பு அது. செயலின் பயன் கருதாது தன் இயல்பின் நிமித்தம் ஆற்றப்படும் செயல் நோக்கிய இடைவிடாத தவம் என்ற ஒரு கருத்து என்னை முழுவதும் இன்று சூழ்ந்துள்ளது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதும் அருகிலிருக்கும் செயற்களங்களையும், செயலின் மனிதர்களையும் காண்பித்தது. அதுவல்லாது செயல்பட்டு மாளும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் கண்டேன்.

உங்களில் வந்த எனக்கு நீங்கள் திறந்து வைத்திருப்பது இலக்கியம் எனும் கடலை. அதே சமயம் அதை விட வாழ்வின் பெருங்கடல்களையும் காண்பித்து நாம் துன்பங்கள் என நினைத்து மாள்பவை எத்தனை சிறியது என்ற பிரக்ஞையயும் அளித்திருக்கிறீர்கள். இந்தப்பரந்த இலக்கியப் பரப்பில் இருப்பது சின்னதும் பெரியதுமான குமிழிகள் மட்டுமே என்று உணர்கிறேன். இங்கு நான் என்ன செய்ய முடியும்? அதே சின்னதும் பெரியதுமான குமிழியாக ஆக முடியும் அவ்வளவு தான். ஆனால் முன்பு இந்த சிந்தனை சோர்வுக்கும் செயலின்மைக்குமே இட்டுச் சென்றிருக்கிறது. இலக்கியம் என்றல்ல யாவுமே சின்னதும் பெரியதுமான குமிழிகள் மட்டுமே என்றால் நான் ஏன் இதில் ஈடுபட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அன்றாடத்தின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்றால் எவ்வகையிலேனும் பணத்தையும், புகழையும், அதிகாரத்தையும் பெருக்கி அதில் கணகணமும் மகிழ்ந்திருப்பவர்களும், பகட்டாக இருப்பவர்களும், விழைவின் பொருட்டு உலகியலில் ஓடுபவர்களும் செய்வது சரிதானே என்று நினைத்திருக்கிறேன். எதுவுமே தவறல்ல, எல்லாத்தரப்பிலும் நியாயம் உள்ளது என்றால் நான் மட்டும் ஏன் பிரயத்தனமாக நல்லவற்றை பின்பற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் எது செயல். எது செயல்யோகம் என்பதை இமைக்கணம் வழியாக வரையறுத்துக் கொள்ள முடிந்ததபோது அந்தக் கேள்வி மறைந்துவிட்டது.

இந்தப்புள்ளியில் நின்று நான் வெறுப்பவர் என இந்த உலகில் யாரும் இல்லை ஜெ. யார் மேலும் எந்தக் குறையும் சொல்ல எதுவும் இல்லை. வந்து நின்றிருக்கும் இந்த இடத்திற்கு நான் மேற்கொண்ட பயணத்தையும், நானல்லாது பிறிதொன்று எனக்காக தேர்ந்தெடுத்த பாதைகளையும் நின்று தரிசிக்கிறேன். இனி செல்லப்போகும் பயணம் என்ன என்று தெரியவில்லை. காலத்தைப் பொறுத்தும் கூட நீண்ட தொலைவா அல்லது சிறிய தொலைவா என்றும் நிச்சயமாக என்னால் கூற இயலவில்லை. ஆனால் எனக்கான செயற்களம் என்ன என்பதை தொகுத்துக் கொள்ள முடிந்தது. பிறவை யாவும் அன்றாடமும், காலமும் தேர்ந்தெடுக்கும் என்று நினைக்கிறேன். ஒழுகிச் செல்ல மட்டுமே விழைகிறேன்.

இன்று சைன் வளைவை வேறு மாதிரியாகக் காண்கிறேன் ஜெ. முன்பு அதை நான் வாழ்க்கையில் மாறிமாறி வரும் இன்ப துன்பத்தையும், ஏற்ற இறக்கங்களையும்  குறிப்பதாகவே பார்த்திருந்தேன். ஆனால் இன்று அதன் உச்சியில் நின்று கொண்டு வேறொரு சிந்தனையை செய்ய முடிந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு உச்சதருணம் ஒன்று உள்ளது. அதன் பின் மனம் எடை நீங்கி விடுகிறது. எல்லா ஆற்றலையும் திரட்டி மேலேறி உச்சமடைந்து பிறகு நாம் மேற்கொள்ளும் பயணம் கீழிறங்குவதல்ல என்று தோன்றுகிறது. உச்சமடைந்த பின் நாம் நம் எடையை இழந்து விடுகிறோம் அல்லது எடையென நினைத்த யாவும் கையை விட்டு இலவம் பஞ்சு போல வெடித்து வெளியேறிவிடுகிறது. மிகப்பெரிய அடியை வலியை துரோகத்தை ஏமாற்றத்தை சந்தித்த பிறகு, அதை தெளிவாக வகுத்து அறிந்தபின் கூட இந்த எடையின்மை வந்து விடுகிறது. அதன் பின் ஒழுகிச் செல்லல் மட்டுமே. நம்மால் செய்ய முடிந்தது என எஞ்சுபவையை தரிசித்துவிட்ட பிறகு தீவிர செயலும், ஒரு பார்வையாளராக, வேடிக்கை பார்த்துக் கொண்டே மிச்சமுள்ள தூரத்தை கடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இனி மனிதர்களை, காலத்தை, வரலாற்றை, தத்துவத்தை, அரூபத்தை, இயற்கையை அவ்வாறே கடப்பேன் என நினைக்கிறேன். அனுபவங்கள் நிறைய காத்துக் கிடக்கின்றன. செயல்களும்.

மேலும் முக்கியமான தரிசனமாக ஊழ் அமைந்தது. ஊழ் என்பது இளவயதில் எனக்கு ஒவ்வாமையான ஒரு வார்த்தை. ’என் வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் என்னால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய ஒவ்வொரு சிந்தனையும், செயலும் நாளையை தீர்மானிக்கிறதே தவிர ஊழ் அல்ல’ என்றே நினைத்திருக்கிறேன். ஓரளவுக்கான உண்மை மட்டுமே இது. ஊழ் என்ற இன்னொரு உண்மையும் சேர்த்துக் கொள்ளும் போது அது தரும் சித்திரம் மிகப் பெரியது. முழுமையானது. அதை உணர்ந்தேன். “ஆனாலும் ஒருவரின் ஊழை அவரே கூட தீர்மானிக்கமுடியாதென்றும் அறிவேன். செய்யவேண்டிய ஒன்றை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமலிருக்க ஒருவருக்கு தோன்றுவதுகூட ஊழ்தான்.” என்று நீங்கள் இப்போது சொல்லும் ஒன்றை ஆழமாகப் பார்க்க முடிகிறது.

ஒரு முறை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது “இப்போதெல்லாம் எந்த மனிதரிடமும் எத்தனை கீழ்மையான குணத்தைப் பார்த்தாலும் சிறு திருக்கிடலைத்தாண்டி பெரிய அதிர்ச்சி எல்லாம் ஆவதில்லை. Afterall நீ ஒரு மனுஷன் தானேனு தோணுது” என்று சொன்னீர்கள். அங்கு வந்து நீங்கள் அமைந்த பயணம் எத்தனை பெரியது என்று பார்க்கிறேன். அது இளைய யாதவனின் மாயப்புன்னகையை நோக்கிய பயணம். ஒழுகிச்செல்லலின் பயணத்தின் உச்சியில் நிகழும் புன்னகை அது. யாவற்றையும், தன்னையும் அறிந்தபின் ஒழுகிச்செல்லும் போது குடிகொள்ளும் புன்னகை அது.

இத்தனை சிந்தனைக்குப் பின்னும் நான் மிகச்சரியாக இருந்துவிடுவேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் முழுமுற்றாக பிரக்ஞயுடன் நான் செய்ய வேண்டியதை செய்து கொண்டிருப்பேன். என் கையில் அல்லாதவையும் இங்கு இருக்கிறது என்ற விடுதலையை தந்தமைக்கு மிக்க நன்றி ஜெ.

இந்தப்புள்ளியிலிருந்து முன் சென்று இந்த பிரபஞ்சத்தின் தொடக்க காலம் வரை தொட்டு மீண்டு வந்து மூப்படைந்து இல்லாமலாகி அன்னையின் கருவுக்குள் நுழைந்த பரமார்த்திவ பார்த்திபனுவாக மாறிய அனுபவத்தை இமைக்கணம் அளித்தது

அறிவியலால் புரிந்து கொள்ள முடிந்த நிலைபெயராத சுழற்சிகளுக்கு மத்தியில் வாழும் சிறிய சுழற்சியின் செயல்கள் நாம். நிலைபெயராமையே நம்மின் உச்சபட்ச அடைதலாக இருக்க வேண்டும். அது அடைய இயலுமா என அறியேன். ஆனால் அதை நோக்கிய பயணம் தான். இவற்றை அறிந்து கொள்ளாதவர்கள், அவர்களின் எளிய மகிழ்ச்சி, அறமீறல், பிறழ்வு, உலகியல் யாவும் “நான்”, “பிறவற்றில்” ஏற்படுத்தும் தாக்கம் பற்றி சிந்தித்திருக்கிறேன். அது என் சிந்தைக்கு அப்பாற்பட்டது என இன்று உணர்கிறேன். ஆனால்  ”ஒரு அணுவிடை அறம் பிழைக்குமென்றால் விண்மீன் திசை மீறிச் சிதறும்” என்ற வரியை  துணையாகக் கொள்ளும் போது இக்கவலை முழுமை கொள்கிறது.

இனி என்ன? என்று தோன்றியது. வெண்முரசில் இமைக்கணத்திற்குப்பின் ஒழுகிச்செல்லும் பாதை. விஷ்ணுபுரத்தின் மணிமுடிக்குப் பின் அதை ஓரளவு தான் அறிந்திருந்தேன். ஆனால் இன்று தீர்க்கமாக அந்த ஒழுகிச் செல்லும் பாதையை உணர்கிறேன். மனிதனை மட்டுமே மையமாக்கி, அவன் உணர்வுகளை, பார்வைகளையே யாவுமாக்கி சுழலும் என்னைச்சுற்றியுள்ள யாவையும் விலக்கிக் கொள்கிறேன். அதற்கும் மேலான ஒன்றின் பார்வையைப் பெற்றுக் கொண்டு ஒழுகிச் செல்லும் பாதையைப் பெற்றுக் கொண்டேன். நன்றி ஜெ.

*

தத்துவ வகுப்பை இப்பயணத்தின் நீட்சியாகப் பார்க்கிறேன். புனைவுகள் வழியாக, உங்கள் சிந்தனைகள் வழியாக அடைந்த ஒன்றை அமைதியாக நின்று தொகுத்துப் பார்க்கும் முயற்சி இது. எந்த அறிதல் தளத்திலிருந்து இந்தப் படைப்புகளைப் படைத்தீர்களோ அந்தப் பீடத்திலிருந்து யாவற்றையும் தரிசிக்கும் ஒரு வாய்ப்பு இது. வரலாற்று ரீதியாக கால நெடுகிலும் தத்துவ சிந்தனை வளர்ந்து வந்த சித்திரமும், அக ரீதியாக ஒவ்வொரு சிந்தனையும் ஆதிச்சிந்தனையாளனிலிருந்து செய்யும் பயணத்தையும் தரிசிக்க முடிந்தது. நான் நின்றிருக்கும் இந்த எளிய இடத்திலிருந்து என்னைத் தூக்கிக் கொண்டு போய் (அரூபமாக மட்டுமே) மிகப்பிரம்மாண்டமான இப்பிரபஞ்ச தரிசனத்தைக் காண்பித்தும், அங்கிருந்து அப்படியே கைவிட்டு எறிந்து சிறு குமிழியாக என்னை உணரவைப்பதுமான அதீதமான பயணங்களை உணர்ந்தேன். சொல்வளர்காடு வாசித்தபோது இப்படி உங்கள் அருகமர்ந்து மாணவராக கற்பனை செய்திருக்கிறேன். அது நிஜத்தில் வாய்க்கப்பட்டது மகிழ்ச்சி.

இரண்டாவது நாள் நீங்கள் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த மழை பொழிந்தது. மழை என்று வெறுமே சொல்லிவிடமுடியாதபடிக்கு அது மேகத்தைப் பிளந்து கொட்டிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் கீறிக்கொண்டிருந்தது. பேச்சுச் சத்தம் கூட கேட்கமுடியாதபடிக்கு அது உலோகக் குடிலின் மேல் பொழிந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. ஒரு விளக்கைத் தவிர பிறவற்றை அணைத்துக் கொண்டு வெறுமே மழையை அதன் சத்தத்தை உணர்ந்திருந்தோம் யாவரும். எனக்கு முன்னே இருந்த வாயிலின் வழி பச்சை மலை தெரிந்தது. அதன் உச்சிக்கு சரிசமமாக போடப்பட்ட பீடமாக வகுப்பறை அமைந்திருந்தது. அங்கிருந்து நீண்ட ஊசியான வெள்ளிச் சரங்களென வேகமாக மண்ணைப் பிளந்து அணைவது போல மழையின் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சாட்சியாகப் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருப்பது போல உங்கள் முகம் இருந்தது. ஊட்டி நாராயணகுருகுலத்தில் நீங்கள் யதியின் வகுப்பில் இருக்கும்போது பெய்த மழையைப் பற்றியும், அந்த உரையாடலைப் பற்றிய உங்கள் கட்டுரையும் நினைவிற்கு வந்தது. நிகழ்வுகளை மாயமாக்கும் இயற்கையின் தருணத்தில் பிரமித்தவாறு யாவரும் வெறித்தபடி அமர்ந்திருந்தோம். வாழ்வின் மறக்க இயலாத காட்சியாக அமையப்போகும் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன்.  இயக்குனர் ரஃபீக் அத்தருணத்தை காணொளிப்பதிவு செய்திருந்தார். அற்புதமான நினைவுச் சேகரம் அது. அன்று அத்தருணத்தை மேலும் இனிமையாக்க மழைப்பாடலின் மழை வேதம் வாசிக்கக் கேட்டோம்.

”ஆண்டுமுழுக்க தவம்செய்த தவளைகள்
நெறிமுழுமைசெய்த வைதிகர்களென
மழைத்தேவனுக்கு பிடித்தமான
குரலை எழுப்புகின்றன…

எனத் தொடங்கிய பாடல் அது..

தவளைகளே!
உங்களில் ஒருவன் இதோ
குருவிடம் கற்கும் மாணவனைப்போல
இன்னொருவனின் குரலை பின்பற்றுகிறான்.

என்ற வரி எப்போதும் என் நினைவில் நிற்பது.

மழை சற்று அடங்கியபோது தவளைகளின் வேதம் தொடங்கியது. அந்த இரவு இனிமையும் நிறைவும் கூடியது எனக்கு. பின் வகுப்பு, இரவுணவு,  இரவின் அரட்டைகள், சிரிப்புகள், பாடல்கள் என நாள் முடிந்தது.

அடுத்த நாள் இறுதி நாள் என்ற எண்ணம் வந்தபோது எப்போதும்போல் சோகமாக ஆனது. முன்னெப்போதையும் விட இம்முறை குறைவான சோகம் என்பதை உணர்ந்தேன். சற்று முதிர்ச்சியாகியிருக்கிறேன் என்று தெரிந்தது. பிரிவுகள் பழக ஆரம்பித்துவிட்டது. காலை சிறிது தனிமையில் இருக்க விரும்பினேன். நீங்கள் தேர்வு வைப்பீர்கள் என்று சொன்னதால் வகுப்பு குறிப்புகளை மீள் வாசிப்பும் செய்ய வேண்டுமென நினைத்து தனியாக அந்தப்பாறை மீது அமர்ந்திருந்தேன். ஆனால் படிக்காமல் மலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பாறைக்கு நேர்கீழே தான் சீரற்ற இடைவெளியில் நண்பர்களின் சிரிப்பு சத்தம் கேட்டது. நீங்கள் காலை நடை உள்ளேயே தான் சென்றிருக்கிறீர்கள் என அப்போது தான் புரிந்தது. அங்கேயே அமர்ந்து அந்த சிரிப்பொலிகளைக் கேட்டுக் கொண்டே வெறுமே அமர்ந்திருந்தேன்.

எழுந்து வகுப்புக்கு வரும்போது நீங்கள் வேகமும், உற்சாகமும், சிரிப்புமாக மாணவர்களுடன் எதிர்ப்பட்டீர்கள். பின்னர் தேர்வும், இறுதி வகுப்புமென முடித்துத் திரும்பினேன். இறுதியாக மதிய உணவு அருந்தும்போது “ஜெ நீங்க எங்க இருந்து இந்த ஒட்டுமொத்தத்தையும் பார்க்கறீங்கன்னு இப்ப புரியுது. அதை தூரம்னு சொல்றதா, உயரம்னு சொல்றதான்னு தெரியல.” என ஏதோ பயபக்தியாக உளறினேன். சோற்றுத்தட்டுடன் அந்த உளரலைக் கேட்டுக் கொண்டே நீங்கள் அருகே அமரும்போது, “அந்த மரியாத…  இருக்கனும் என்ன?” என நக்கலாகச் சொன்னீர்கள். சிரிப்பு வந்துவிட்டது.

”வாழ்க்கையை அந்த உயரத்திலிருந்து மதிப்பிடுவது ஒரு புறம். இதன் மூலம் இலக்கியத்தை, புனைவுகளை, ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பை நாம் மதிப்பிடும் அளவுகோள் உயரும். பயணத்தின் தேடலாக அமையும் புனைவுகளின் கரு அடிப்படையானதையும், ஆழமானதையும் நோக்கி அமையும்.  அபுனைவுகள் எழுதுவதன் செறிவு அதிகரிக்கும்.” இந்த வார்த்தைகளையும் கூட உளறி வைத்தேன்.

நீங்கள் அபுனைவுகளின் முக்கியத்துவத்தை, வரலாறு, தத்துவம் ஆகியவற்றை வாசிப்பதன் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்தீர்கள். புனைவுகளை மட்டுமே வாசிப்பேன், புனைவுகளை மட்டுமே எழுதுவேன் என்று சொல்பவர்களிடமும், ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர்களை, அபுனைவை புனைவுக்கு இணையாக வாசிப்பவர்களை, எழுதுபவர்களை கிரியேட்டிவிட்டி குறைவானவர்கள் என்று சொல்பவர்களிடமும் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன்.

நீங்கள் எங்கள் முன் வைப்பது பேரறிஞர்களை, பெரும்படைப்பாளிகளை. நீங்கள் காட்டுவது அவர்களின் வழியைத்தான். முன்னால் செல்லும் இந்த வழியில் மின்மினி விளக்கென ஒவ்வொரு அடியிலும் உங்கள் சொல்லை வழித்துணையாகக் கொள்கிறேன். மேலும் தத்துவ வகுப்புகளுக்காக ஆவலுடன் இருக்கிறேன். அதன் முடிவில் சிந்தனைகளை சரியாகக் கோர்த்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நன்றி ஜெ.

பிரேமையுடன்

ரம்யா.

முந்தைய கட்டுரைபாலை மலர்ந்தது – 5
அடுத்த கட்டுரையுவன் – கலைச்செல்வி