ஒரு நகரை ஒரே வீச்சில் ஒரே நாளில் பார்ப்பதென்பது ஒரு பெரிய அனுபவம். ஒருநாள் ஒரு நகர் என நம் நினைவில் நின்றிருக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆராவமுதன் என்னும் நண்பருடன் இணைந்து ஒரே நாளில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை சென்னையை பார்த்தேன். என் நினைவில் நீடிப்பது அந்தச் சென்னைதான்.
அதன்பின் மெல்போர்ன், நியூயார்க், டோக்கியோ, லண்டன், பாரீஸ், டொரெண்டோ என பல பெருநகர்களை ஒரே நாளில் பார்த்திருக்கிறேன். திறந்த வண்டிகளில் அமர்ந்து பார்த்துச்செல்வது ஓர் அனுபவம். ஆனால் குளிர்நாடுகளில் அது கடினம். துபாயின் வெம்மையிலும் கடினமே.
செப்டெம்பர் 25 அன்று சான்யோ ஏற்பாடு செய்திருந்த ஒரு நகருலா. ஓட்டுநர் நகருக்குள் காரை ஓட்டிக்கொண்டு ஒவ்வொரு இடமாகச் சுட்டிக்கொண்டே வந்தார். அவற்றின் வரலாறு, அவை மாறிக்கொண்டே இருக்கும் விதம் ஆகியவற்றைச் சொன்னார். துபாய் மிக விரைவாக வளரும் நகரம். ஆகவே அவர் கண்ணெதிரே பாலைநிலங்கள் மறைந்து கட்டிடங்களும் பூங்காக்களும் ஆகிக்கொண்டிருந்தன.
நகருக்குள் நீண்டிருக்கும் குடா வழியாக ஒரு படகுப் பயணம் மேற்கொண்டோம். வெயில் தகித்தாலும் இருபுறமும் ஒரு நகரம் ஒழுகிக்கொண்டிருப்பது விந்தையான காட்சியாக இருந்தது. வெண்முரசில் துவாரகை நுரை என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படும். அந்த உளப்பிம்பம் எனக்கு எப்போது உருவாகியதென்று தெரியவில்லை.
துபாய் நூறாண்டுகளுக்கு முன்பு ஓர் எளிய மீனவக்கிராமமாக இருந்தது. துபாய் என்பது அங்கே இருக்கும் நீண்ட உள்கடல்தான். Dubai Creek என அழைக்கப்படுகிறது. அதன் கிழக்கு டெரியா என்றும் மேற்கு புர் துபாய் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளை பழைய துபாய் எப்படி இருந்ததோ அப்படியே மீண்டும் கட்டி தக்கவைத்துள்ளனர். அது முக்கியமான சுற்றுலாப் பகுதியாக உள்ளது.
மண்ணைக்குழைத்து சுவர் கட்டி, மேலே பாலைவன மரங்களாலான கழுக்கோல்களை பரப்பி, ஈச்சையோலைகளை வேய்ந்து கூரையிட்டு உருவாக்கப்பட்ட கட்டிடங்கள். வெளிப்பார்வைக்குத்தான். உள்ளே குளிர்வசதி செய்யப்பட்ட நவீன தங்குமிடங்கள் இவை. உணவகங்கள், கலைப்பொருள் விற்பனையகங்கள். சாலைகள் மேலே பெரிய துணிப்பாய்களை இழுத்துக்கட்டி நிழல் அளிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. குப்பைக்கூடைகள், மின்பெட்டிகள் எல்லாமே பழமையுடன் உருவாக்கப்பட்டிருந்தன.
ஒரு மாபெரும் ஹாலிவுட் அரங்க அமைப்புக்குள் இருப்பது போலத் தோன்றாமலில்லை. ஆனாலும் ஒரு காலப்பயண உணர்வும் உருவாகியது. படிகக்கற்கள், நறுமணப்பொருட்கள் ஆகியவற்றின்மேல் அராபியப் பண்பாட்டுக்கு மோகம் மிகுதி. அங்கே விற்கப்பட்டவை பெரும்பாலும் அவைதான்.
அதைத்தவிர கலைப்பொருட்கள். விலை லட்சங்களில். கம்பளங்கள் பொன்னூல் வேயப்பட்டவை. அரிய குடுவைகள். ஹூக்காக்கள். படிகக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள். அரேபியாவில் மலிவான கலைப்பொருளென ஒன்று இருக்க முடியாது. வெறுமே பார்த்துச்செல்வதொன்றே செய்யக்கூடுவது.
மதியம் அங்கே ஒரு லெபனான் உணவகத்தில் சாப்பிட்டோம். ஒட்டக இறைச்சியில் செய்யப்பட்ட ’மந்தி’ (காரமில்லா பிரியாணி) கிடைக்குமா என தேடினோம். கிடைக்கவில்லை. ஆகவே லெபனானுக்கு வாய்ப்பு. உப்புச்சுவை மட்டுமே கொண்ட இறைச்சி எனக்கு எப்போதுமே உவப்பானது. நான் சாப்பிட்ட சிறந்த உணவுகளில் ஒன்று அது. பரிமாறும் பையன்கள் இந்தி நடிகர்களை விட அழகாக இருந்தனர்.
மதியம் கடந்து துபாயின் ஆடம்பரமான மறுபக்கம் சென்றோம். நியூயார்க்கின் மன்ஹாட்டன் வான்முனையை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இடம் அது. கடலுக்குள் மணல்கொட்டி நிரப்பி உருவாக்கப்பட்டது. ஈச்ச மரத்தின் இலைகளின் வடிவில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் வணிகப்பகுதிகள். இந்தியாவின் செல்வந்தர் என்றால் அங்கே ஒரு வீடு இருக்கவேண்டும் என்பது மரபு. நானறிந்த எல்லா நடிகர்களுக்கும் அங்கே வீடு உண்டு.
மதியத்தில் வானைப்பார்க்கையில்தான் நாமிருப்பது ஒரு பாலைநிலத்தில் என்னும் எண்ணம் உருவாகிறது. மேகமே அற்ற, முற்றிலும் காலியான, வானம். செப்டெம்பரானதனால் நீலநிறமும் இல்லை. வெளிர்சாம்பல் நிறம். உண்மையில் வானமே இல்லாமல் ஒரு திகைப்பூட்டும் வெற்றிடம் தலைக்குமேலே இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது.
ஆனால் கடல்நீர் அடர்நீலம். வங்கக்கடல் மரதகம், அரபிக்கடல் நீலக்கல். இது குமரியின் ஒரு சொலவடை. அரபிக்கடலில் பேராறுகளேதும் கலக்காமையால் நீரின் உப்பு அடர்த்தி சற்றே மிகுதி என்கிறார்கள். அதற்கேற்ப மீனின் சுவையும் மிகுதி என கேரளமக்கள் சொல்லிக்கொள்வதுண்டு.
பகல் முழுக்க நகரில் அலைந்துகொண்டிருந்தோம். விதவிதமான வேடிக்கைகள். பாலையின் நடுவே ஓர் அருவியை அமைத்திருந்தனர். நான் சைதன்யாவிடம் வடிவேலு குரலில் “குற்றாலம் பாத்திருக்கியா? குற்ற்ற்ற்றாலம்? நம்மூருதான்” என்று சொன்னேன். அரபுக்குழந்தை ஒன்று குற்றாலத்தை பார்த்தால் என்ன நினைக்கும்? மாபெரும் தீம்பார்க் என எண்ணிக்கொள்ளுமா?
ஐஸ்கிரீம் கடையொன்றில் ஒருவர் ஐஸ்கிரீம் வித்தையொன்றை காட்டினார். ஐஸ்கிரீமை நீட்டுவார். அதை நாம் வாங்கமுயன்றால் கைக்கு வராது. விதவிதமாக ஏமாற்றிக்கொண்டே இருப்பார். சைதன்யாவை அவர் பலவாறாக ஏமாற்றினாலும் சுகிர்தராணியையை ஏமாற்றியது சைதன்யாவுக்குப் பிடித்திருந்தது. பொதுவாக தெனாவெட்டாக இருக்கும் பாப்பு சுகிர்தராணியிடம் மட்டும் கொஞ்சம் பம்மி இருந்தாள். என் இரண்டு குழந்தைகளுக்குமே டீச்சர் என்றால் பயம்.
மாலை மீண்டும் புர்ஜ் கலிஃபா சென்றோம். வெயிலிருக்கையிலேயே சென்று அங்குள்ள கட்டிடங்களில் ஒவ்வொரு விளக்காகக் கண்திறப்பதை பார்த்தோம். கட்டிடங்கள் மிகப்பெரிய பொன்வண்டுகளாக மாறின. சிறகு விரித்து ர்ர்ர்ர் என பறந்துசென்றுவிடுமென எண்ணச் செய்தன.
புர்ஜ் கலிஃபா வெளியே நின்று பார்க்கையில் ஓர் அம்பு போலிருந்தது. அதன்மேலே நிற்கக்கூட இடமிருக்காதென்று தோன்றியது. வி.கெ.என் எழுதிய கதையொன்றில் உலகவரைபடத்தை பார்க்கும் ஒருவன் பிரேஸிலில் கவனமாக நடக்காவிட்டால் கால் வழுக்கி கடலில் விழவேண்டியிருக்கும், அவ்வளவு இடுங்கலான இடம் என சொல்வதை நினைவுகூர்ந்தேன். அந்த இடமே நியூயார்க் டைம் ஸ்குயர் போல முகங்களால் கொப்பளித்துக் கொண்டிருந்தது. விதவிதமான முகங்கள். பெரும்பாலான வெள்ளையர் பழைய ருஷ்யாவில் இருந்த இன்றைய இஸ்லாமிய குடியரசுகளைச் சார்ந்தவர்கள்.
முகங்கள் வழியாக தேசங்களை ஊகிப்பதென்பது ஓர் இனிய விளையாட்டு. ஆனால் துபாய் போன்ற ஒரு அனைத்தின நகரில் நீண்டகாலம் வாழ்பவர்களால் மட்டுமே அதை சரியாகச் செய்ய முடியும். நண்பர் ஜெயகாந்த் ராஜூ அனேகமாகச் சரியாகச் சொல்லிவிடுவார். துபாயில் தென்படும் நம்மைப்போன்ற முகங்கள் எகிப்து, பாகிஸ்தானைச் சேர்ந்தவை. ஆனால் அராபியர் போலவே தெரியும் மலையாளிகள் பலர் உண்டு. தனித்தன்மை கொண்ட முகங்கள் துருக்கியர்களுக்குரியவை. மலையாளிகளிலும் அதேமுகங்கள் உண்டு.
இந்தியாவின் கடலோரப்பகுதிகள் குறைந்தது இரண்டாயிரமாண்டுகளாக அராபியர், எதியோப்பியர், ரோமர் ஆகியவர்களின் வணிகத்துடன் தொடர்புகொண்டவை. பழைய நாட்களில் ஒரு குலத்திற்காக பெண்களை விலைகொடுத்து வாங்குவது அனுமதிக்கப்பட்டிருந்தது. என் குடும்பத்திலேயே அப்படி பெண்கள் வாங்கப்பட்டதாகக் கதைகளுண்டு. இளம் ஆண்களையும் வாங்குவதுண்டு, பெண்கொடுத்து சேர்த்துக்கொள்வதுமுண்டு. அவர்களெல்லாம் அந்தச் சாதிக்குள், குலத்துக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
ஏனென்றால் பெண் குலம் பெருக மிகமிக அவசியமானவள். குழந்தைச்சாவு உச்சத்தில் இருந்த காலம். சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாகவேண்டும் என்பதே அன்றைய உலகின் முதற்கவலை (க.நா.சுவின் சர்மாவின் உயில் நாவலில் அக்கா எனப்படும் பாட்டி அதை மட்டுமே தன் வாழ்க்கையின் முதல் அக்கறையாகக் கொண்டிருப்பதை வாசிக்கலாம்) அன்றைய சமூகம் போரிட்டு நிலைநின்றாகவேண்டியது. வீரர்களை குடியில் சேர்த்துக்கொண்டாக வேண்டும். ஏனென்றால் வென்றாக வேண்டும்.
ஆகவே ரத்தத் தூய்மை, குலத்தூய்மை என இன்று பேசப்படும் கருத்துகளெல்லாமே அபத்தமான பிற்காலப் பிடிவாதங்கள். இந்தியா என்றோ ஒரு புள்ளியில் தன்னை இறுக்கிக்கொண்டபின் உருவானவை. அனேகமாக பிரிட்டிஷ் அரசு உருவாகி, சட்டம் ஒழுங்கு நிலைகொண்டு, நவீன மருத்துவமும் கொஞ்சம் அறிமுகமானபின் உருவான கட்டுப்பெட்டித்தனம் அது. வெற்றிபெற்று, நிலம் வைத்து, அரசாண்ட எந்த குடியும் குருதித்தூய்மையை சொல்லிக்கொள்ளமுடியாது என்பதே உண்மை.
இந்தியர்களின் முகங்களில் ஆப்ரிக்கர்கள், சீனர்கள், அராபியர்கள், மங்கோலியர்கள் என அனைவரின் சாயல்களும் உண்டு. இது ஓரு கண்கூடான உண்மை. கேரளச்சூழலில் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு பகடியாக பேசப்படுவதும்கூட. இனத்தூய்மை அல்லது சாதித்தூய்மை போல அங்கே கேலிசெய்யப்படுவது பிறிதில்லை. இனத்தூய்மையை பிடிவாதமாகப் பேணியவர்கள், கலப்புக்கு வழியற்றவர்கள் பொதுவாக சிறிய எல்லைகளுக்குள் வாழ்ந்த பழங்குடிகளும் சாதிப்படிநிலைகளில் கீழே வாழ்ந்தவர்களும்தான்.
அந்தப் பகடியைத்தான் பத்துலட்சம் காலடிகளில் ஔசேப்பச்சன் சொல்கிறார். அது உண்மையில் இங்குள்ள உயர்சாதியினரின் சாதித்தூய்மைவாதத்திற்கு எதிரான விமர்சனப் பகடி. அத்தகைய பகடிகளைப் புரிந்துகொள்ளுமளவுக்கு இங்கே பொதுவாசகச் சூழலில் புழங்கும் அரசியல்மண்டைகளுக்கு அறிவில்லை. அத்துடன் தமிழகம் நீண்டகாலமாக இனவாத அரசியலை பேசிக்கொண்டிருப்பது. இனத்தூய்மைவாதம் அதன் அடிப்படை. இனத்தூய்மை வாதத்தின் அடியிலிருப்பது இடைநிலைச் சாதியினரின் சாதித்தூய்மைவாதமே.
அதாவது திராவிடர் என்றோ தமிழர் என்றோ அவர்கள் சொல்லும் இன மக்களிலேயே எல்லா மானுட இனங்களின் கலவையும் உண்டு என்று சொன்னால் அவர்களால் தாங்க முடிவதில்லை. ஆனால் துபாய் போன்ற ஒரு பல்லின மண்ணில் நின்று முகங்களை பார்க்கையில் அதை எவரும் உணரமுடியும். இனக்கலப்பு என்பதை இழிவாக அன்றி சிறப்பாகவே நான் பார்க்கிறேன். உலகுடன் கொண்ட உறவாடலின் அடையாளம் அது. இயல்பாகவே பல்லினக் கலப்புச் சமூகமாக இருப்பதே இந்தியாவின் தனித்தன்மை, குறிப்பாக தென்னகத்து கடற்கரைப்பகுதிகளின் வெற்றி.
இரவில் ஒரு ஆடம்பரப் படகில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். துபாய் குடா வழியாக அந்தப்படகு மெல்லச் சுற்றிவந்தது. கூடவே நல்ல விருந்துணவு. இசைக்கு சில சர்தார்ஜிகள் நடனமாட தமிழ்ப்பாட்டு போட்டேயாகவேண்டும் என்று தேவா சுப்பையாவுக்கு விழைவு எழுந்தது. பொன்னியின் செல்வனின் பாட்டுக்களை போட்டனர். ஆடுவார் என எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார்.
நள்ளிரவில் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை கிளம்பி ஒரு ‘ஷாப்பிங்’. வழக்கம்போல வாசனைத்திரவியங்கள், பேரீச்சைவகைகள். பேரீச்சை எனக்கு மிகவும் பிடித்த பழம். ஆனால் இம்முறை நான் ஊர்திரும்பியதுமே அமெரிக்கா செல்லவேண்டும். பேரீச்சையை கொண்டுசெல்ல முடியாது.
மதிய உணவுக்கு விழாவின் புரவலர்களில் ஒருவரும், கணக்காயருமான சோனா ராம் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தோம். இந்திய உணவு. அல்லது பாகிஸ்தானிய உணவு. கடையலைதல் முடிந்து உணவுக்குச் செல்ல மாலையாகிவிட்டது. அதற்குள் ஊருக்குக் கிளம்பும் பொழுது அணைந்துவிட்டது.
விடுதிக்கு வந்து பெட்டிகளை கட்டும்போதே கிளம்பும் மனநிலை அமைந்துவிட்டது. இரவு ஒன்பது மணிக்கு எங்களுக்கு விமானம். ராஜா துரைராஜ் எங்களை காரில் விமானநிலையத்துக்கு கொண்டுவந்து சேர்த்தார். சான்யோ டாஃப்னி, சங்கர் மகாதேவன் ஆகியோர் விமானநிலையம் வந்திருந்தனர்
விமானத்தில் ஏறி அமர்ந்ததும் சென்ற ஆறுநாட்களும் மிக மிக விரிந்துகிடப்பதை உணர முடிந்தது. வெவ்வேறு உலகங்கள் வழியாக சென்று மீள்வதை உணர்வதுதான் ஒவ்வொரு பயணத்திலும் அடையும் நிறைவு.
திருவனந்தபுரம் வந்து டாக்ஸிக்காக நிற்கையில் சைதன்யாவிடம் கேட்டேன். மொத்த பயண அனுபவமும் சுருங்கிவிட்டதுபோல இல்லையா என்று. ஆம் என்றாள். ஆனால் பின்னர் நினைவில் அவை பெருகி வரும். தனக்கே உரியமுறையில் பயண அனுபவம் நம்மில் முளைத்தெழும் என்றேன்.
(நிறைவு)