அசோகமித்திரனின் மூன்று கதைகள் – முரளி

அன்புள்ள ஜெயமோகன்,

பிரயாணம் (சிறுகதை), இன்னும் சில நாட்கள் (குறுநாவல்), மானசரோவர் (நாவல்) சமீபத்தில் இந்த மூன்று அசோகமித்திரனின் படைப்புகளும் படித்துமுடித்த பொழுது அவருடைய மற்றப்படைப்புகளில் இருந்து இவைகள் வேறுபடுவது மட்டுமல்லாமல் அபத்தங்கள், அற்புதங்கள் மீதான ஒரு தொடர்ச்சியையும் முன்வைகின்றார்.

சிஷ்யன் தன்னுடைய குருவின் கடைசி விருப்பமான ஆறடி நிலமும், சில சொட்டு பாலுக்காக ஓநாய்களுடன் போராடி தானும் ஒரு விலங்காக மாறி சண்டையிட்டு, கடைசியில் குருவின் விருப்பமும் நிறைவேறாமல் நிற்கும் பொழுது ஏற்படும் வெறுமை, மறுபுறம் இன்னொரு குருவை அடைய எவ்வளவு நாட்கள் ஆகுமோ? என்ற சிஷ்யனின் தேடல் தொடரும்பொழுது இது ஒரு அபத்தம் தான், ஆனால் சலிப்பு இல்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

அசோகமித்ரனிடம் அன்றாடத்தில் இருக்கும் சலிப்பான நிகழ்வுகளில் இருந்து சிறந்த சலிப்பை வடிகட்டும் ஒரு வடிகட்டி அவரிடம் இருந்தது என்று எனக்கு தோன்றும். அது சலிப்பு இல்லை அவர் கண்டுகொண்ட ஒரு தருணம். ”இன்னும் சில நாட்கள்” சாமிநாதன் பதினோரு ஆண்டுகள் மூன்று மாதம் நான்கு நாட்களில் பெற்றதுதான் என்ன? விடுபட்ட மேலும் சில நாட்களை பற்றிய கேள்வி முதலில் தோன்றினாலும், ஏற்கனவே தவம் புரிந்த நாட்களில் நடந்தது என்ன, அந்தநாட்களில் சிந்தனையின் ஓட்டம் தான் என்ன போன்ற கேள்விகள் இல்லாமல் இல்லை.

விடுதலை (குறுநாவல்) பரசுராமய்யர் சேரியிலியே தன்னுடைய எஞ்சிய வாழ்க்கையை வாழவிரும்புவதும், கடற்கரையில் அவர் பெரும் விடுதலையும் எப்படி நிகழ்ந்தது?. பரசுராமய்யர் ஒரு குடும்ப தலைவன், குழந்தைகள், அம்மா, மனைவி எல்லோரும் இருக்கிறார்கள், பொறுப்புகள் அதிகம்.  ஆனால் அந்த பொறுப்புகளோடு, தான் விரும்பும் அல்லது தன் அகம் விரும்பும் ஒரு வழியில் பயணிப்பது சாத்தியமா?

அந்த அகத்தேடலிலும் சில இடங்களில் அவர் சறுக்கிக்கிறார், அது இயல்பே இவரும் மனிதர் தானே? ஆனால் பரசுராமய்யர் மேற்கொள்ளும் தவம் சாமிநாதனின் தவத்தில் இருந்து மாறுபட்டது.

மானசரோவர் கோபால்ஜி யோகமெல்லாம் ஒன்றும் வேண்டாம் கொஞ்சம் மனசு சுத்தமானால் போதும் என்கிறார். மனைவியும், மகளும் தொடும் தொலைவில் இருந்தாலும் இவரும் தன் அகம் விரும்பும் வழியில் செல்கின்றார்.பரசுராமய்யர் அல்ல கோபால்ஜி அவரின் அடுத்த பரிணாமம் என்று தான் நினைக்கமுடிகிறது. சத்தியன் குமாரை மீண்டும் அரவணைக்க ஒரு யோகநிலை கோபால்ஜியிடம் இருக்கிறது. ஆனால் யோகி அல்ல அவர்.

இவர்கள் உப்பு, மிளகாய் வாழ்க்கையில் உள்ளவர்கள் போன்று தோன்றினாலும், வாழ்க்கையின் சலிப்பிலிருந்து விடுபட்டு வாழ விரும்புகிறார்கள் அல்லது ஒரு புது சலிப்பை கண்டைக்கிறார்கள்.  மீண்டும் இவர்கள் பொறுப்பற்றவர்கள் இல்லை, கடமை தவறியவர்கள் இல்லை. இவர்கள் சாதாரணமானவர்கள் ஆனால் அசாதாரணமான தருணங்களை சாதாரணமாக கடந்து சென்றுவிடுகிறார்கள்.

இந்த படைப்புகளில் அசோகமித்திரன் எழுப்பும் வினாக்களுக்கும், தத்துவ தேடலை நோக்கிய பார்வையும் அதிகம்.சாதாரண கதைகள் போன்று தோன்றினாலும் விரிவான உரையாடலை வாசகனுடன் நிகழ்த்த அனைத்து வாய்ப்புகளும் உள்ள படைப்புகளே !

முரளி

முந்தைய கட்டுரைநாலாயிரம், கடிதம்
அடுத்த கட்டுரைபூன் முகாம், கடிதம்