இரா.முருகன், இலக்கிய ஒருங்கிணைப்பு

இரா.முருகன் கருத்தரங்கம் உரைகள்  


அரசூர் நாவல்கள்

இரா முருகன்

ஜெ

இரா.முருகன் கருத்தரங்குக்குச் சென்றுவந்தேன்

மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. பல கோணங்களிலாக ஓர் எழுத்தாளர் பற்றி நாள் முழுக்க நிகழும் ஒரு அரங்கு என்பது மிகமிக உதவியானது. நாம் அந்த எழுத்தாளரை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்போம். ஆனால் ஒட்டுமொத்தமாக அவருடைய கருத்து அல்லது எழுத்துமுறை பற்றி தொகுத்துப்பார்த்திருக்க மாட்டோம். அதை மிகச்சிறப்பாக இந்த வகையான ஓர் அரங்கு செய்துவிடுகிறது. நான் இரா முருகனை 20 ஆண்டுகளாக வாசிப்பவன். ஆனால் க.நா.சு உரையாடல் அரங்கில் அவருடைய பேச்சு வழியாகவே அவரை அருகே அறிந்தேன். ஆசிரியரை நேரில் பார்ப்பது பேசுவது அந்த படைப்புலகை நெருக்கமாக ஆக்கிவிடுகிறது.

இரா முருகனின் பகடிகள், நுட்பமான நையாண்டிகள் எதுக்கும் சம்பந்தமில்லாதவராக அவருடைய பெர்சனாலிட்டி இருந்தது. ஆனால் அதுவே அந்த எழுத்தை வசீகரமானதாக ஆக்கியது. வேறொருவர் எப்படி அவருக்குள் இருந்து வெளிவருகிறார் என்பது ஒரு பெரிய மர்மமாக இருந்தது. நான் அவர் எழுத்தை மேலும் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். இந்த கருத்தரங்கு வாசித்தவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கருத்துக்களாகப் புரிந்துகொள்ள மிக உதவியாக இருந்தது. ஒரு மிகச்சிறந்த அனுபவம். இத்தனை வாசகர்களைச் சந்தித்ததும் உரையாடியதும் மிக இனிய அனுபவமாக அமைந்தது. எல்லா உரைகளுமே சிறப்பாக இருந்தன. ஒவ்வொரு கோணத்தில் பேசினார்கள்.

மிகச்சிறப்பாக அமைந்த நிகழ்ச்சி.  இதை ஒருங்கிணைத்தவர்கள் விஷ்ணுபுரம் நண்பர்கள் என அறிந்தேன். நற்றுணை அமைப்பு இதைப்போல பல நிகழ்ச்சிகளை பல எழுத்தாளர்களுக்காக மிகச்சிறப்பாக நடத்தி வருகிறது. பேசியவர்களும் பெரும்பாலும் விஷ்ணுபுரம் நண்பர்கள். எந்த அரங்கிலும் விஷ்ணுபுரம் நண்பர்குழுவினர்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் எழுத்துக்களை மட்டுமே விஷ்ணுபுரம் வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்ற ஒரு அவதூறை பலரும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழிலுள்ள மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் விஷ்ணுபுரம் அமைப்புசார்ந்தவர்கள்தான். பேசுபவர்களும் அரங்கிலே திரள்பவர்களும் விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். நான் இரா முருகனின் வாசகன் என்றுதான் சொல்லிக்கொள்வேன். விஷ்ணுபுரம் அமைப்பை அதற்காக வாழ்த்துகிறேன்

ஶ்ரீனிவாசன் ராமானுஜன்

அன்புள்ள ஶ்ரீனிவாசன்,

விஷ்ணுபுரம் என்பது அமைப்பல்ல. ஒரு பொதுவான அறிவியக்கம் மட்டுமே.  எங்கள் நிகழ்ச்சிகள் வழியாக இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர்கள், எங்கள் நண்பர்களாகச் செயல்படுபவர்கள் அனைவருமே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே. நெருக்கமானவர்கள் என் நூல்களில் ஒன்றின் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். நற்றுணை அப்படி ஒன்று. அவர்கள் மேல் என் கட்டுப்பாடு அல்லது ஆதிக்கம் என ஏதுமுல்லை. நற்றுணை அமைப்பு அண்மையில் முன்னெடுக்கும் இலக்கிய நிகழ்வுகள் எல்லாமே மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. தமிழின் முக்கியமான படைப்பாளிகளை கௌரவித்து முன்னிறுத்தும் பெரும்பணியைச் செய்பவை.

நான் பலமுறை சொன்னதுபோல இது என் நண்பர்களால் ஆன இயக்கம் – என் வாசகர்களால் மட்டும் ஆனது அல்ல. நாங்களே தமிழின் தலைசிறந்த வாசகர்கள். எந்த நல்ல எழுத்தாளர் பற்றியென்றாலும் மிக அதிகமாகப்பேசப்பட்டது எங்கள் நட்புக்குழுக்களிலாகவே இருக்கும். யுவன் சந்திரசேகர், இரா.முருகன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் என அனைவரைப்பற்றியும் பேசுபவர்களாகவும் முன்வைப்பவர்களாகவுமே இருந்து வருகிறோம். இதில் அரசியல் இல்லை. ஆனால் இலக்கிய அளவுகோல் உள்ளது. பொது அளவுகோல் அல்ல- அந்தந்த இலக்கிய அமைப்பைச் சேர்ந்த நண்பர்களின் அளவுகோல் அது .

இந்த ஆண்டு டோக்கியோவின் நண்பர் செந்தில்குமார் ஒருங்கிணைக்கும் ‘துளிக்கனவு’ இலக்கிய அமைப்பின் விருந்தினராக சாரு நிவேதிதா ஜப்பான் செல்கிறார். நம் நண்பர் வல்லினம் நவீன் முன்னெடுப்பில் யுவன் சந்திரசேகர் மலேசியா செல்கிறார். இவை எதிலும் பொதுவான ஒருங்கிணைப்பு ஏதுமில்லை. இவை ஒவ்வொன்றும் பெரும்பணிகளை ஆற்றும் தனிப்பட்ட அமைப்புகள். நட்பால் அனைவரையும் ஒருங்கிணைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம், அவ்வளவுதான். எதிர்மறை மனநிலைகள் இல்லாமல், இலக்கியமென்னும் கலையை முன்வைப்பதன் வழியாக மட்டுமே இதை நிகழ்த்துகிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைகூழாங்கல்- மகாராஜன் அருணாசலம்
அடுத்த கட்டுரையுவன் கதைகள் பற்றி…