திரை ரசனைப் பயிற்சி முகாம்

திரைப்படங்கள் பற்றிய பேச்சுகளே இந்தியச் சூழலில் மிகுதி. காரணம் அது இந்நூற்றாண்டின் கலை. ஆனால் அக்கலையை ஓரளவேனும் அறிந்திருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள். சினிமா பற்றி இங்கே அதிகமாகப் பேசுபவர்களும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசுபவர்கள்தான். அந்த உள்ளடக்கத்தையே கூட அந்த சினிமாக்கள் உருவான பண்பாட்டுப் பின்னணி, அந்த சினிமா அமைந்துள்ள  அழகியல் மரபு ஆகியவற்றுடன்  அறிந்திருப்பவர்கள் மிக அரிதானவர்கள்.

ஆகவே ஆலயக்கலை, நவீன ஓவியம், மேலையிசை ஆகியவற்றைப் போலவே திரை ரசனைக்கும் ஒரு பயிற்சி முகாம் ஒருங்கிணைக்கும் எண்ணம் உருவானது. காட்சிச் சட்டகம் (Frame) காட்சியோட்டம் (Shot) ஆகிய தொழில்நுட்பச்செய்திகளுடன் சேர்த்து திரைக்கலையை பயிற்றுவிக்கும் ஓர் அரங்கு இது.

சற்று திரைத்தொழில்நுட்பம் அறிமுகமானதுமே திரைமொழி நமக்கு முற்றிலும் புதிய ஒன்றாக விரிய தொடங்குவதை நாமே வியப்புடன் உணரமுடியும். நாம் திரைப்படத்தை முற்றிலும் வேறொன்றாகப் பார்க்க ஆரம்பிப்போம். திரைப்படக் கலையை கற்றுக்கொள்வதற்கும் இது ஒரு தொடக்கம்.

ஆனால் அக்கல்விக்கு திரைப்பட பெருந்தலைகளின் உரைகள் உதவாது. பொதுவான பேச்சுகளும் பயனற்றவை. அதற்கென்றே அமர்ந்து, முறையாகப் பயில்வதொன்றே வழி. இது அதற்கான கல்வி.

இது திரைப்பட உள்ளடக்கம், அதன் அரசியல் அல்லது சமூகவியல் பற்றிய பேச்சுக்களுக்கான அரங்கு அல்ல. திரைக் கலை, திரைத்தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி மட்டுமே. திரைக்கலையை பயில விழைபவர்கள், திரைப்பட ரசனையை உருவாக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கான அமர்வுகள்.

ரத்தசாட்சி திரைப்படத்தின் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் இந்த அமர்வை  நடத்துகிறார். ரஃபீக் இஸ்மாயீல் தமிழின் மாற்றுத்திரைப்பட இயக்கத்தில் பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருபவர். திரைக்கலை அறிந்த பிறரும் உடனிருப்பார்கள்.

இந்த அரங்கு வரும் அக்டோபர் 13 , 14 , 15 தேதிகளில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழும். பங்கேற்க விரும்புபவர்கள் எழுதுக

[email protected]

முந்தைய கட்டுரைஅமெரிக்கா, கனடா- பயணமும் நிகழ்வுகளும்
அடுத்த கட்டுரைநூறுநூறாண்டுகளாக…