ஓவியக்கலை வகுப்பு – கடிதங்கள்

Danaë (Rembrandt )

அன்புள்ள ஜெ,

பயணிக்கிற புள்ளிதான் கோடு என்பது நியதி. கோடுகளின் வழியாகவே எல்லா ஓவியங்களும் பயணத்தைத் தொடங்குகிறது. அப்படியான ஒரு மேற்கத்திய காலக்கோடு நீண்டு நெளிந்து பயணிக்கத் தொடங்கிய புள்ளியும் புள்ளியின் அழுத்தமும் கோட்டின் உராய்வும் அந்த உராய்விலிருந்து தெறித்து ஒரு கனலை ஏந்தி இப்போது வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆசிரியர் ஏ.வி.எம்மிற்கு எங்கிருந்து இந்த கனல் வந்திருக்கும் என்பது ஆச்சரியமல்ல. அது எப்படி எரிந்தது என்பதுதான் ஆச்சரியம். ஒரு ஓவியனாக ஓவிய வகைமைகள்; கூறுகள் குறித்து நான் நன்கறிவேன். அதன் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பலமுறை எனக்குள்ளாகவும் என் நண்பர்களிடமும் கலந்துரையாடி நிறைவடைந்திருக்கிறேன். நவீன ஒவியங்களை பார்ப்பது குறித்த பொதுப் புரிதலும் கலைப் பரிதலும் என் ஆசிரியர்களிடமிருந்தும் மூத்த ஓவியர்களிடமிருந்தும் சக ஓவியர்களிடமிருந்தும் பெற்றிருக்கிறேன். ஓவியங்களின் ஓவியர்களின் வரலாறுகளை பாடத் திட்டத்தின் வழியாகவும் தன்னார்வ கலைத் தேடுதலின் வழியாகவும் அறிந்திருக்கிறேன்.

ஆனால் இது முற்றிலும் புதிது‌. இது முற்றிலும் மாறானது. இது முற்றிலும் வேறானது. ஒரு கேள்வி. என்ன இது? அது ஏன் எழுகிறது? அது எதன்மீது எழுந்திருக்கிறது? எதன்மீது எழுந்திருக்க முடியும்? ஏன் எழவேண்டும்? அவன் யார்? யாருக்கு இந்த ஓவியம்? என்ன பதில்? இதுதானே பதில்? நிறுத்த முடியாத கேள்விகளை அவை ஏன் எழுப்புகிறது? வெறும் ஓவியம்தானே? அனைத்தையும் அள்ளி என் தலைமையில் அமுக்கி படுத்தாலும் உறங்க முடியவில்லை

இத்தனை நாட்கள் இவற்றையெல்லாம் தேடாமல், இந்த வரலாறுகளைக் கொஞ்சம்கூட அறியாமல் என்ன வரைந்து கிழித்துக்கொண்டு இருந்தாய்? இதுதான் இப்போதைய மனவோட்டம். அவ்வளவு அழுத்தமாக ஏ.வி.எம் வரலாறுகளை ஆய்ந்து அழுத்தி தைத்து அனுப்பிவிட்டார். அவரின் முதல் வகுப்பு என்பதால் தட்டுத்தடுமாறி குழப்பத்தில்தான் ஆரம்பித்தார். அவர் அள்ளி எடுத்து வந்ததை எப்படி படையலிடுவது என்ற பெருங்குழப்பம். ஒருவழியாக முதல்நாளின் முடிவில் சலனமான சாமர்த்தியமான நகர்வோடு நாளை முடித்தார். மறுநாள் காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தவர் இரவு பத்தரை வரையிலும் கனரகமான வகுப்புகள். நேரமின்மையின் வேகம். இப்போது எங்களுக்குத்தான் குழப்பங்கள்! மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் நேர்த்தியான திருப்பலியை நடத்தினார். தேர்ந்த நகர்வுகள். நீங்கள் எந்த நோக்கத்தில் இதை அறிவித்தீர்களோ அதற்கான நியாயத்தோடு இறுதித் தீர்ப்பும் வந்தது. இறுதி விருந்தும் முடிந்தது.

பேரன்புடன்,

ஓவியர் மு.பிரகாஷ்

பேரன்புக்குரிய ஜெ,

நவீன ஓவியக்கலை அறிமுக வகுப்பில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும்பாக்கியம். ஆசிரியராக, புகைப்படக் கலைஞர் AV மணிகண்டன் அவர்கள் கலை அருவி போல பொங்கி பிரவாகித்தார். அவர் கற்றுக் கொடுத்த கலை அறிவு இரண்டு பெரும் பகுதி புத்தகங்களாக படித்து பயிற்சி பெறக்கூடியது. இரண்டரை நாளில் முழுவதும் புரிந்து கொண்டேன் என நான் நினைத்தால் அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வது. ஆனால் கலையை கலையுடன் அணுக என் முதல் அடியை எடுத்து வைக்க பெருமளவில் உதவியது

கல் முதல் கணினி வரையிலான மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சிக்கு அதன் ஊக்கசக்தியாக கலை வளர்ந்ததும், கலைஞர்களின் படைப்புகளும், கற்பனைகளும், கற்பிதங்களும், விவாதங்களும் என நவீனக் கலையை அவர் எங்களுக்கு எடுத்துரைத்த விதம் கற்றலின் ஆர்வம் தூண்டுபவை. காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து  இரவு 11 மணி வரைக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தார். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே இருந்தார். கடைசி நாளில் குரலில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு, இருந்தாலும் கூடுதல் சக்தியோடு கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

பிக்காசோ, மன்ச், டுஷாம்ப், மானெட் என மேற்கத்திய நவீன கலையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அறிஞர்களின் ஓவியங்கள் எழுப்பிய அதிர்ச்சிகள், விவாதங்கள் குறித்தும், இரண்டாம் உலகப்போருக்கு பின் உலகில்  கலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இதற்கு மேல் பயிற்றுவிக்க ஒருவரால் முடியுமா என தெரியவில்லை

இயற்கையில் ஆரம்பித்து  அரசன், கடவுள், மதம், சமூகம், நடுத்த மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் வரை கலையின் பயணம் குறித்து புரிதலை ஏற்படுத்தியதுடன், கலையின் வரலாறு, தத்துவம், அழகியல் குறித்து அறிந்து கொண்டது ஆசீர்வாதம். என்றே எண்ணுகிறேன்.

இது நடக்க காரணமாயிருந்த தங்களுக்கும்பயிற்சி ஆசிரியர் AV மணிகண்டன் ஐயாவுக்கும் செய்யும் குரு தட்சணை நாங்கள் திறம்பட கலையை கற்றுக் கொள்வதை தவிர வேறென்ன இருந்து விட முடியும்.

ராஜ்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2023 – யுவன் சந்திரசேகருக்கு.
அடுத்த கட்டுரைஇரா.முருகன் கருத்தரங்கம் உரைகள்