ஆதிநஞ்சின் கதை

சில சமயம் சில கதைகளை நாம் சும்மா போகிறபோக்கில் எழுத ஆரம்பிப்பதுண்டு. எனக்கு கதை என்பது பொழுதுபோக்கு, விளையாட்டு எல்லாம்தான். எதையும் கதையாக்கிப் பார்ப்பது என் இயல்பு. வரலாறு, தத்துவம் எல்லாமே எனக்குக் கதைகள்தான். வாழ்க்கையே ஒரு மாபெரும் கதைக்குவியல்தான். அப்படி எழுதிய கதை இது. 

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 2017ல்,   வெற்றிமாறன்மிஷ்கின்கௌதம் மேனன் இணைந்து இயக்கும் ஒரு தொலைத்தொடருக்காக ஒரு கதை எழுதும்படி என்னிடம் கோரப்பட்டது. அதன்பொருட்டு நான் எழுதியது இந்நாவல். அன்று என்னை மிகத்தொந்தரவு செய்த விஷயம் பற்றியது இந்நாவல். இந்நாவலின் கருவை இதன் கதைநாயகனே என்னிடம் சொன்னார். சில செய்திகளை அன்று நெல்லையில் தி ஹிண்டு இதழின் விற்பனை மேலாளராக இருந்த செல்வேந்திரனும் சொன்னார். பல செய்திகள் நான் அறிந்தவை.

இரண்டு நாட்களில் இதை எழுதினேன். கோவிட் காலம் முடிந்து ஒவ்வொருவரும் வேறு வேறு திரைப்படத் திட்டங்களில் தீவிரமாகி சிக்கிக்கொள்ளவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. நாவல் அப்படியே கையில் நின்றுவிட்டது.

அண்மையில் நாவலைத் தற்செயலாக எடுத்துப் பார்த்தேன், நன்றாகத்தான் இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. அடிப்படையான ஒரு கேள்வி இந்நாவலில் இயல்பாக கூர்கொண்டிருக்கிறது. ஆகவே இலக்கியத்தரமானதே என்று பட்டது. வெளியிட முடிவெடுத்தேன்.

இந்நாவலின் கருவை முதலில் 2015 வாக்கில் என்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கோயில்பட்டிக்கார வழக்கறிஞர் சொன்னார். அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எல்லாமே கொலைவழக்குகள். “என்ன அண்ணாச்சி தொழில் நல்ல ஓட்டம் போல?” என்று கேட்டேன். “அதை ஏன் கேக்குதீக? எல்லாம் கொலக்கேஸுஎன்றார். “பெரிய கேஸுதானே?” என்றேன். “வாயில என்னமோ வருது….அண்ணாச்சி எல்லாம் முத்தின கொலகாரன். கையிலே பைசா கெடையாது. பெஞ்சாதிக்காரி தாலிக்கொடிய வித்துட்டு சாமீன் எடுக்க வந்து நிப்பா….மலைய பொரட்டணும், எலிய புடிக்கணும். என்னத்தச் சொல்ல?”

 

ஆலம் மின்னூல் வாங்க

அவருக்கு ஈரோட்டில் என் நண்பர் கிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மேல் உச்சக்கட்டப் பொறாமை . “கொளிக்கிறானுங்கண்ணாச்சி….தெனமும் செக்கு மோசடி கேஸு….கையிலே புளுத்த துட்டுள்ளவன் கிளையண்டு. வச்சு வீசுதானுக. நம்மள மாதிரி கொலகாரன் கோமணத்த கட்டிவிடுத பொளைப்பா?”

எனக்கு அப்படி ஒரு வழக்கறிஞரைப் பார்க்க வேடிக்கையாகவே இருந்தது. ஒரு அசல் விவசாயி மாதிரி இருந்தார். விவசாயியேதான். “இருவத்தஞ்சு ஏக்கர்லே மக்காச்சோளம் போட்டிருக்கேன். இந்த மயில்வாகனமாக்கும் நமக்க எதிரி பாத்துக்கிடுங்க…. அது தின்னு பேண்டதுபோகத்தான் நமக்கு கிடைக்கும்

அவர் சொன்ன நிகழ்வில் இருந்தது ஒரு அடங்காத பகையின் கதை. பேரன்பே பெரும் வஞ்சமாகத் திரிந்ததை மிக எளிதாகச் சித்தரித்தார். நான் கையில் கிடைத்த படிகக்கல்லை பார்ப்பதுபோல திருப்பித் திருப்பி அதன் எல்லா பக்கங்களையும் பார்த்தேன். மானுடகுலம் முழுக்க ஒரு நோயென பரவியிருக்கும் ஒன்றை சென்று தொட்டேன். எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது. பின்வாங்கிவிட்டேன், அப்படியே இந்நாவலை மறந்தும் விட்டேன்.

இந்நாவலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி. இந்நாவலை எழுதக்காரணமாக அமைந்தவரும், நண்பருமான வெற்றிமாறன் அவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

  

முந்தைய கட்டுரைமாதர் மனோரஞ்சனி
அடுத்த கட்டுரைநாலாயிரம், கடிதம்