போரில் வாழ்தல் – சக்திவேல்

போரும் அமைதியும் வாசிப்பும்

போரும் அமைதியும் மொழியாக்கங்கள்

போரும் அமைதியும் சினிமாவாக

அன்புள்ள ஜெ

போரும் வாழ்வும் நாவலை சென்ற புதனன்று வாசித்து முடித்தேன். ஏறத்தாழ ஒன்றரை மாத காலம் எடுத்து கொண்டேன். பெரும்பாலும் பேரிலக்கிய தகுதி கொண்ட நாவல்களை தொடங்கிய வேகத்தில் இடைவிடாமல் படித்து விட வேண்டும் என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு முறை தவிர அப்படியே செய்தும் வருகிறேன். நீங்கள் சொல்வது போல அந்நாவலை உள்வாங்குவதில் சிரமமும் தடைகளும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதன் உணர்வு தளம் நம்மை வந்து தொடுவதே இவ்வாசிப்பின் பெருத்த அனுகூலம். போரும் வாழ்வும் நாவலை அப்படி முடிக்க இயலவில்லை. அதற்கான முறையான பிரயத்தனத்தை பண்ணவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வாசித்த வரை மிக ஆழமான பிணைப்பை கொடுத்து விட்டது.

இதுவே டால்ஸ்டாய் எழுத்துகளிலே நான் முதலாவதாக வாசிக்கும் படைப்பு. சென்ற மே வில் ஒருமுறை தொடங்கி நூறு பக்கங்களுக்குள் நிறுத்தி விட்டேன். இந்த முறை அப்படி நடக்காமல் பார்த்து கொண்டேன். முதல் சில பக்கங்களிலேயே டால்ஸ்டாயை எனது எழுத்தாளர்களில் ஒருவரென உணர தொடங்கி விட்டேன். அன்னா பாவ்லாவ்னா ஷெரேர் நடத்தும் விருந்து எனக்கு அன்னியமானது தான். ஆனால் அதிகாரத்தை வெளிப்படுத்தும் அடையாள சடங்காக நடக்கும் சமூக நிகழ்வுகள் அத்தனையிலும் அன்னாவின் விருந்தினர்களை போலவே கரவு கொண்டவர்களையும் வெள்ளந்திகளையும் மூட்டாள்களையும் பார்த்து கொண்டே தான் இருக்கிறோம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குண இயல்புகளை விவரிப்பதன் வாயிலாக இச்சாரத்தை வெளிப்படுத்தி வாசகனை நாவலுக்குள் கொண்டு சென்று விடுகிறார் டால்ஸ்டாய்.

ஆனால் இப்படி நாவலின் மேலான என் அனுபவங்களை கூறுவதற்கு முன் ஒன்றை சொல்ல வேண்டும். எந்த பேரிலக்கியத்தையும் போலவே நான் செல்ல நிறைய தூரம் இருக்கிறது என்றும் என்னை அள்ளிபற்ற ஆயிரம் வேலைகள் உள்ளது என்றும் போரும் வாழ்வும் உரைத்தது. ஒன்று, அதன் வரலாற்று பின்புலம், ஐரோப்பிய வரலாற்றில் பொதுவான அறிமுகம் இருப்பது உதவிகரமாகவே இருக்கிறது. ஆனால் அது எவ்விதத்திலும் இந்நாவலில் டால்ஸ்டாய் வாதிடும் வரலாற்று நோக்கை புரிந்து கொள்ள போதுமானது. ஐரோப்பிய வரலாற்றை குறித்த விரிவான சித்திரமும் நெப்போலியனின் காலக்கட்டம் சார்ந்த நுணுக்கமான புரிதல்களும் இன்றுவரையிலான வரலாற்று வாதத்தின் வளர்ச்சியையும் குறித்து ஒரு வாசகனுக்கு எந்தளவுக்கு ஆழமான பரிச்சயம் உள்ளதோ அந்தளவு நாவல் விரிவடையக்கூடும்.

அடுத்து தத்துவ பகுதிகள் குறிப்பாக பின்னுரை இரண்டில் வரும் தொடர்ச்சியான தத்துவ கட்டுரைகள் இதுவரை சொல்லப்பட்ட நாவலின் கதையை முற்றிலும் புதிய விதத்தில் தீர்க்கமாக பார்க்க தூண்டுகின்றன. அந்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் தத்துவ விவாதத்தை புரிந்து கொள்ள ஒருவருக்கு ஐரோப்பிய தத்துவத்தில் ஆழமான பரிச்சயம் இருப்பது மிக நன்று. உடன் கிழக்கித்திய தத்துவத்தில் உறுதியான அடித்தளம் இருந்தது என்றால் ஒருபுள்ளி கூடுதல் என்றே சொல்ல வேண்டும். எனவே ஒட்டுமொத்தத்தில் போரும் வாழ்வும் இமய சிகரமாக வாசகன் முன் பெரும் அறைகூவல் ஒன்றை விடுக்கிறது. வரலாறும் தத்துவமும் சிறகுகளாக அமைய எழுந்து வா என்று. இன்று எளிய கால்நடை பயணியாக முதல் வாசிப்பில் அந்த மலையை பார்த்திருக்கிறேன். அதனுடன் ஒன்ற வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்ற வியப்பும் அப்படி செல்வ்வதற்கான பிரயமும் எழுகிறது.

த த்துவ பகுதிகள் சார்ந்து பேசும் போது மொழிப்பெயர்ப்பு குறித்து ஒன்றை கூற வேண்டும். இந்நாவலை தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்கள் மொழிப்பெயர்த்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது. இன்றும் இதன் வாசிப்பு சரளத்தில் குறைவே இல்லை. என்ன, இன்று நாம் முற்றிலும் வேறொரு காலத்தில் வாழ்வதால் பயன்பாட்டு சொற்கள் மாறியிருப்பதால் சில நேரங்களில் வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் சற்று கவனம் கொடுப்பவர்களுக்கு இது சிரமம் கிடையாது. வரலாறை பேசும் பகுதிகளை பொருத்த வரைக்கும் மொழிப்பெயர்ப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் பெரும்பாலான வரலாற்று வாத பகுதிகள் தகவல்கள் சார்ந்தும் நேரடி நிகழ்வுகளையும் மையப்படுத்தி இருப்பதால் குறைவு ஏற்படவில்லை. ஆனால் த த்துவ பகுதிகளுக்கு வரும் கலை சொற்கள் அதிக அளவில் முக்கியத்துவத்தை அடைகின்றன. சில இடங்களில் டால்ஸ்டாய் சொல்ல வருவது சார்ந்து சிறிய குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக சக்தி சார்ந்து கூறப்படுபவை. ஆனால் ஒட்டுமொத்தமாக த த்துவ பகுதிகளிலும் சொக்கலிங்கம் அவர்கள் தேர்ச்சியாகவே செயல்பட்டிருக்கிறார். இங்கே தமிழில் தொடர்ச்சியான நீடித்த தத்துவ விவாதங்கள் இன்மையால் இப்படிப்பட்ட குழப்பங்கள் நிகழலாம் என்று நினைக்கிறேன். மொத்தமாக பார்க்கையில் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழியாக்கம் முதல் தரமான ஒன்று தான்.

இனி நாவல் சார்ந்த என் அனுபவத்திற்கு வந்தால் இரண்டு அடிப்படை வினாக்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. மனிதனின் அடிப்படையான இரண்டு வினாக்கள் நான் யார் ? இவ்வுலகம் யாது ? சுருக்கமாக வாழ்க்கை என்பது என்ன ? டால்ஸ்டாய் ஒட்டுமொத்தமாக நம் முன்னால் ரஷ்ய உயர்குடிகளின் வாழ்க்கையையும் 1805 ஆம் ஆண்டு முதல் 1812 ஆம் ஆண்டு வரை நடந்த போரினையும் பக்கம்பக்கம் வைத்து விவரிப்பதனூடாக அதனை மொத்த மனித வாழ்க்கையையும் காட்டும் கண்ணாடியாக உருமாற்றம் செய்கிறார்.

எனவே தான் எடுத்து கொண்ட மனிதர்களில் அவர் மையப்படுத்தும் அனைவருடைய வாழ்க்கை குறித்தும் முழுமையான சித்திரத்தை வரைகிறார்.

நாவலை வாசித்து முடித்தவுடன் சிலநாட்கள் வரையிலும் இந்நாவலில் வரும் போர் நிகழ்வுகள் எப்படி மறுபுறம் காட்டும் தனிநபர் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்கின்றன என்பது குறித்த ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்கி கொள்ள இயலவில்லை. நேரடியாக பார்த்தால் ஆண்ட்ரூ போருக்கு செல்வது கோமகன் பால்கோன்ஸ்கியை பாதிக்கிறது. அதன் விளைவுகளை இளவரசி மேரி எதிர்கொள்ள நேரிடுகிறது. போரின் காரணமான ஆண்ட்ரூவின் பிரிவு மறைமுகமாக லிசாவை பாதிக்கவே செய்கிறது. அது அவளை மரணம் நோக்கி செலுத்தும் காரணிகளில் ஒன்றாக அமைகிறது. விளைவாக ஆண்ட்ரூவுக்கும் நட்டாஷாவுக்கும் காதல் ஏற்படுவதற்கான சாத்தியமும் அப்படியே காதல் ஏற்படுவதும் அக்காதலில் விரிசல் ஏற்படுவதில் ஆண்ட்ரூவின் போர் காயத்திற்கும் ஒரு பங்குண்டு. மீண்டும் அக்காதல் இணைவதும் பாராடினோ போரால் ஏற்பட்ட காயத்தாலேயே நடந்தேறுகிறது.

ஆண்ட்ரூ தந்தையின் இறப்பிற்கும் கூட போர் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. இளவரசி மேரிக்கும் நிக்கலஸ் ராஸ்டோவ்க்குமான காதல் போர் சூழ்நிலையின் விளைவாகவே சாத்தியப்படுகிறது. அந்த போரில் நிக்கலஸ் அடையும் மன எண்ணங்கள் அவனை சூதாட்டத்தில் ஈடுபட வைத்து பணத்தை இழக்க வைக்கிறது. அதன் தொடர் விளைவாக ஏற்கெனவே சரிந்து விழும் நிலையிலிருந்த ராஸ்டோவ்களின் சொத்து திவலாகி கோமகன் இலியாச் ராஸ்டோவ் பரலோகம் செல்வதில் முடிகிறது. அதே குடும்பத்தில் போர் நட்டாஷாவுக்கு ஒரு காதலையும் ஆறாத இனிய ரணத்தையும் கொடுக்கிறது. பெட்டியாவை எடுத்து கொள்கிறது. விளைவாக ஆரம்பத்தில் மிடுக்காக நம் கண்களை சந்திக்கும் கோமகள் ராஸ்டோவா முடிவில் காலத்தில் தங்கிய கிழவியாக உட்கார்ந்து விடுகிறாள். அக்குடும்பத்தின் இன்னொரு அங்கமான சோனியாவின் காதலும் நிறைவேறாமல் போகிறது. போர் ஏற்பட்டு பால்டு ஹில்ஸில் இளவரசி மேரியை நிக்கலஸ் சந்திக்காமல் இருந்திருந்தால் சோனியாவுக்கு சற்று அதிகப்படியான வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அப்போது கூட உறுதியாக சொல்ல முடியாது சோனியாவின் கதையை. இளவரசி மேரியின் வாழ்க்கையில் திருமணம் நடைபெறுவதை தன் உயிருள்ளவரை தடுத்து வைக்கிறார் கிழவரான கோமகன் பால்கோன்ஸ்கி. இப்போது எழுதி கொண்டிருக்கும் போது தோன்றுகிறது, அச்செயல் மகள் மேலான அதீத உடமையுணர்வு மட்டுமல்ல, போர் நடக்கும் காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் மருமகன் இறப்பதற்கான வாய்ப்பை நினைத்து அஞ்சியிருக்கலாம். ஏனெனில் ஆண்ட்ரூ ஆஸ்தர்லிட்ஜ் யுத்தத்தின் போது விடைபெற்று கொள்கையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் நெகிழ்வான மனநிலை இப்படி எண்ண வைக்கிறது. ஆனால் அச்சூழ்நிலையிலும் இருவருமே தங்கள் ராணுவத்தனமான இறுக்கத்தை விட்டுவிடுவதே இல்லை.

இவை இந்த பக்கம் இருக்க பீயரின் வாழ்க்கையிலும் போர் வந்து நிற்கிறது. இல்லற வாழ்க்கையில் நிறைவில் இல்லாத அவர் தேடிக்கொண்டே இருக்கிறார். இறுதியில் தன் கிறுக்குத்தனமான எண்ணத்தின் படி நெப்போலியனை கொல்ல மாஸ்கோவிலேயே தங்கி அம்முயற்சி சாத்தியமே இல்லை என உணர்ந்து பிரஞ்சு படையின் கைதியாகி வாழ்க்கையின் மெய்யான பகுதியை உணர்ந்து தெளிகிறார். அவரது மனைவி ஹெலன் இறப்பதற்கு கூட போர் ஒரு காரணமாக அமைகிறது. இல்லையெனில் அவள் எதிர்பார்த்தபடி விவாகரத்து கிடைத்து இருவரில் ஒருவரை திருமணம் செய்து நோயில் விழாமல் தப்பித்திருக்கலாம். இப்படி அவர்களின் வாழ்க்கை பலவாறும் போரோடு நீடித்த தொடர்பை கொண்டுள்ளது. ஆனால் இவை எனக்கு போதவில்லை. ஏனெனில் மிக விரிவாக காட்டப்படும் போர் காட்சிக்கும் தனி வாழ்க்கைக்கும் இத்தனை குறைவாக தொடர்பிருப்பின் போர் நிகழ்ச்சிகளை ஒரு சுட்டுதலாக சொல்லி சென்றாலே போதுமானது. ஆனால் டால்ஸ்டாயின் நோக்கம் அதுவாக இல்லை. பிறகு ?

நாவல் தொடக்கத்தில் ஆஸ்தர்லிட்ஜ் யுத்தத்தை காட்ட தொடங்கியதிலிருந்து இறுதி போரான பாராடினோவும் பிரஞ்சுக்காரர்களின் மாஸ்கோவை கைப்பற்றல் பின்னர் பின்வாங்குதல் என்று தொடர்ச்சியாக திட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையேயுள்ள பாரதூரமான இடைவெளியயையும் போரில் ஏற்படும் அபத்த நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி ராணுவ ஜெனரல்களின் எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் உள்ள தொலைவை சொல்லி ஏன் இப்படி நடக்கிறது என வினா எழுப்பப்படுகிறது. இதே விஷயத்தை நாவலில் வரும் ஒவ்வொருவருடைய தனிவாழ்க்கையை நோக்கும் போதும் காண முடிகிறது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள விரும்பும் விதம் ஒன்றாகவும் வாழ்க்கை யதார்த்தத்தில் வேறொன்றாகவும் அமைகிறது. உதாரணத்திற்கு ஆண்ட்ரூவை எடுத்து கொண்டால், அவர் தன் மானசீக வெற்றி வீரராக கருதும் நெப்போலியனை வெற்றி கொள்வதையே தன் லட்சியமாக கொண்டு போருக்கு செல்கிறார். பிற பரிவார அதிகாரிகள் போலல்லாமல் களத்தில் இறங்கி குண்டடிப்படுவதே அதனால் தான். ஆனால் அங்கே அவருக்கு முற்றிலும் ஆண்ட்ரூ நினைக்காத விதத்தில் பிரம்மாண்டமான ஆகாயத்தின் ஒளியில் தூசிக்கு ஒப்பான நெப்போலியனின் தரிசனம் கிடைக்கிறது. அந்த ஞான திறப்பு அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது. இங்கே ஆண்ட்ரூ அந்த திறப்பை அடைவதற்கான காரணங்களை நாவலின் தொடக்கத்தில் அவருக்கும் பீயருக்கும் நடக்கும் உரையாடலில் இருந்து எடுத்து கொள்ள முடிகிறது. அந்த முதல் உரையாடலிலேயே ஆண்ட்ரூவுக்கு தன் இயல்பு வாழ்க்கையின் மேலிருக்கும் ஆழமான நிறைவின்மையை உணர்கிறோம். இப்படி ஒவ்வொருவரும் அவரவர் மன எண்ணங்களுக்கு மாறான ஒன்றை வாழ்க்கை சூழலால் வந்தடைகிறார்கள். அப்படி வந்தபின்பு அதை தங்கள் முயற்சியால் தான் வந்தோம் என எண்ணி நிறைவோ அல்லது மௌனமான ஏற்பையோ அடைகிறார்கள். போர் எப்படி இவர்களின் தனிவாழ்க்கையில் தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ அவ்வாறே இப்படிப்பட்ட தனிமனிதர்களின் வாழ்க்கை போரில் எவ்வாறு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பது நாவலின் தேடல்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் போர் முன்னர் வகுக்கும் திட்டங்கள் எதுவும் போர்க் களத்தில் செல்லுபடியாவதில்லை. அப்படியெனில் போரை நடத்தும் ஆற்றல் என்ன ? அது மக்களின் கூட்டு மன ஆற்றலால் நிகழ்கிறது என சொன்னால் தனிமனிதனின் மனச்சக்தியின் வெளிப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் கூட்டாக இணையும் போது என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பேசுகிறார். இந்த கோணத்தில் பார்த்தால் போர் என்பது சமுதாய வாழ்க்கை – அதாவது சமுதாய வாழ்க்கையின் சகல அம்சங்களும் உக்கிரமாக வெளிப்பாடு கொள்ளும் காலக்கட்டம். இந்த போர் என்ற திரைசீலையில் தனிமனித வாழ்க்கை எனும் ஒவியத்தை வரைந்து எந்த கணத்தில் ஓவியமும் திரையும் மறைந்து ஒரே கனவு காட்சியாக அவை பரிமளிக்கின்றன என்ற தேடல் போரும் வாழ்வும் நாவலின் மையங்களில் ஒன்றாக அமைகிறது.

மேலே ஆண்ட்ரூவும் பியரும் அன்னா பாவ்லாவ்னாவின் விருந்துக்கு பின் தங்கள் வீட்டில் சந்திக்கும் நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த முதல் வாசிப்பில் நாவலில் மனதில் நின்ற இடங்களை தொட்டு விரித்தெடுத்து கொள்ள, நினைவில் உள்ள சில புள்ளிகளை இட்டு வைக்க பிரியப்படுகிறேன். ஏனெனில் எந்த பெருநாவலையும் போல இதனையும் மறுவாசிப்புகளின் வழியாகவே முழுமையாக உள்வாங்க இயலும். இப்படிக்கு நான் முதல் வாசிப்பில் கண்டடைந்த ரசித்த இடங்களை தொகுத்து கொள்கிறேன்.

போரும் வாழ்வில் அன்னாவிற்கு அடுத்து சந்திக்கும் நபரே வாசைலி குராகின் தான். உண்மையில் ஹெலனின் திருமண திட்டத்திற்கு முன் வாசைலியை பற்றி டால்ஸ்டாய் வர்ணித்திருப்பது தான், சூழ்ச்சிக்காரர்களை குறித்த நான் வாசித்த மிகச்சிறந்த வரிகள் என்பேன். பெரும்பாலும் ஒவ்வொரு நிகழ்வையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தெரியாதவர்கள் சூழ்ச்சிக்காரர்களை பார்த்தவுடன் நினைப்பது அவர்கள் திட்டமிட்டு தந்திரங்களை தயார் செய்து கொண்டு வருவார்கள் என்று. ஆனால் நடப்பது என்னவென்றால் டாலஸ்டாய் சொல்வது தான். அவர்கள் அப்படி எந்த திட்டத்தையும் முன்னதாக தயார் செய்வதில்லை. வெறுமே அவர்களின் மூளை எப்போதும் அப்படிப்பட்ட திட்டங்களின் ஊடாக சென்று வந்தபடியே இருக்கிறது. போகிற போக்கில் ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் தனக்கு என்ன லாபம் கிடைக்குமோ அதற்கான சொற்களை சொல்கிறார்கள். எப்படி ஒருவரால் தந்திரமாக நடந்து கொள்ள முடியாதது ஒரு இயல்போ, அதே போல இன்னொருவரின் இயல்பே தந்திரங்களால் அமைந்ததாக இருக்கிறது.

அடுத்து இந்த நாவலில் எவரையும் கவரக்கூடிய ஆண்கள் என்றால் அது ஆண்ட்ரூவும் பியரும் தான். இவர்கள் இருவருக்கும் நடுவில் வரும் நட்டாஷா மொழிப்பெயர்ப்பாளர் உரையில் சொக்கலிங்கம் அவர்கள் சொல்வது போல பல லட்சம் பேரின் உள்ளங்களை கவர்ந்து கொண்ட தேவதை என்றே சொல்ல வேண்டும். ஆனால் விசித்திரமான ஒரு அனுபவத்தை சொல்ல வேண்டும். பியர் ஃப்ரிமேஸன்களின் சங்கத்தில் ஞானஸ்நானம் பெறும் அவரிடம் ஒரு ஜோடி கையுறைகள் கொடுக்கப்பட்டு எந்த பெண் உமது ஆன்மீக பயணத்தில் வாழ்நாள் முழுமைக்கும் துணை வருவாளோ அவளுக்கு இக்கையுறைகளை கொடுப்பாயாக என்று சொல்வார்கள். அதை படித்து கொண்டிருக்கும் கணம் நட்டாஷா என்று நினைத்தேன். அப்போது பியருக்கு விவகாரத்து ஆகியும் இருக்கவில்லை. ஆண்ட்ரூவுக்கும் நட்டாஷாவுக்கும் தீவிரமான காதல் உருவாகும் என்றும் தெரியாது. ஒரே ஒரு வாய்ப்பு ஹெலனிடமிருந்து பியர் பிரிந்து வாழ்வதால் நட்டாஷாவை காதலிக்க வாய்ப்புண்டு என்பது மாத்திரமே. ஆனால் அந்த சமயத்தில் நட்டாஷாவும் பீயரும் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்து இருந்தார்கள். அதுவும் சில வருடங்களுக்கு முன் நட்டாஷாவின் பிறந்த தின விருந்தில் உணவு மேசையில் எதிரெதிர் வரிசையில் ஒரு புன்னகையை பரிமாறி கொள்வதுடன் நின்று விடுகிறது. அந்த புன்னகை கூட பியருக்கு மட்டுமேயென்று விசேஷமாக அளிக்கப்பட்டதல்ல. அப்போது அவளை கவர்ந்தவர் போரிஸ் தான். எனவே ரகசியமாக போரிஸை அழைத்து முத்தமிடுகிறாள். இத்தனை குறைந்த தகவல்கள் இருக்கும் போது இப்படி ஒரு துளி எண்ணம் உருப்பெற்று அதுவே நாவலின் பிற்பகுதியில் வாசிக்க கிடைப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்னொரு வகையில் இதே போன்ற அனுபவத்தை வெண்முரசு வாசிப்பில் அடைந்திருக்கிறேன். எனவே அத்தனை பேரிலக்கிய தகுதி கொண்ட நாவல்களும் எங்கோ ஓரிடத்தில் முதல் சில நூறு பக்கங்களிலேயே வாசகனை தங்கள் கனவு தளத்துக்கு அழைத்து சென்று விடுகின்றன என எண்ணுகிறேன்.

மீண்டும் பியருக்கும் ஆண்ட்ரூவுக்கும் திரும்புகிறேன். இருவரும் இரண்டு விதமான மெய்மைகளை இருவேறு விதங்களில் அடைகிறார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அது ஒரு மின்னல் வெட்டி இடி போல இறங்குகிறது. எனவே அவர் வாழ்க்கைக்கு அப்பால் உள்ள வெளி நோக்கி நகர்த்தப்படுகிறார். பியர் வாழ்க்கை என்ற காட்டாற்றை நோக்கி பாலைவனத்து யானையாக நீர்தேடி அலைகிறார். இறுதியில் தான் உள்ளதே அருந்த அருந்த தீராத காட்டாற்றில் தான் என்பதை உணர்ந்தவுடன் தெளிவடைகிறார். நிறைவான வாழ்க்கையை பெறுகிறார். நட்டாஷாவை பியரை மூழ்கடிக்கும் அந்த காட்டு நதி என்றே கூற வேண்டும். அவள் மொத்தமாக அவரை எடுத்து கொள்கிறாள். தான் எதிர்பார்த்த ஒன்றுக்கு முன்னால் – நட்டாஷாவின் காதலுக்கு முன்னால் – பீயர் தன்னை அளிக்கிறார்.

பியரும் ஆண்ட்ரூவும் அடையும் மெய்மைகளுக்கு பின்னால் அவர்களது இயல்புகளின் தன்மை தெளிவாக முன்வந்து நிற்கிறோம். ஆண்ட்ரூவுக்கும் பியருக்கும் இரண்டு இடங்களில் நீண்ட உரையாடல் நடக்கிறது. ஒன்று, அன்னா பாவ்லாவ்னாவின் விருந்துக்கு பின் ஆண்ட்ரூ வீட்டில். இரண்டு ஆஸ்தர்லிட்ஜ் போருக்கு பின் உயிர்பிழைத்து மீண்டுவந்த ஆண்ட்ரூவுக்கும் பீயருக்கும் பாகுசாரா தோட்டத்தில் நடப்பது. மூன்றாவது, நட்டாஷாவுடனான ஆண்ட்ரூவின் காதலில் விரிசல் ஏற்பட்டு ஐரோப்பிய பயணத்தை முடித்து வந்த ஆண்ட்ரூவிடம் பியர் பேச முயல்வது. அந்த சந்தர்ப்பத்தில் ஆண்ட்ரூ வலுக்கட்டாயமாக உரையாடலை தவிர்க்கிறார். ஆக முதலிரண்டு சந்திப்புகளை நோக்கும் போதே அவர்களின் இயல்புகள் தெரிய வருகின்றன.

முதல் சந்திப்பில் பேசும் போதே உயர்குடிகளின் படாபடோபமான வாழ்க்கையில் தனக்குள்ள சலிப்பை வெளிப்படுத்துகிறார். அதே போல இல்லற வாழ்க்கையிலும் கூட தனக்குள்ள விலக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு மாற்றாக அவர் முன்வைப்பது இராணுவ சேவையில் ஈடுபடுவது. அங்கும் கூட அவருக்கு யுத்த களத்தில் வெற்றி வீரராக புகழடைய வேண்டும் என எண்ணமிருக்கிறதே தவிர மேல் பதவிகளை மட்டுமே குறிவைத்து போரிஸ் அல்லது பெர்க் போல பயணப்பட விருப்பமில்லை. ஆண்ட்ரூவின் புகழாசையில் கூட ஆழத்தில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற வேட்கையே உள்ளது. மாறாக, புகழ் அதன் விளைவாக பிறர் மனதில் உயர்ந்து செல்வாக்கு பெறுதல் என்ற போக்கை வலுவாக காண முடியவில்லை. இல்லையென்று முழுக்க மறுக்கவும் முடியாது. ஆனால் இந்த வேறுபாட்டை முதல் முறை போர்க்களத்தை சந்திக்கும் நிக்கலஸ், ஆண்ட்ரூ இருவரின் மனநிலைகளையும் பக்கம்பக்கம் வைத்து பார்ப்பதன் மூலம் தெளிவுப்படுத்தி கொள்ள முடிகிறது. நிக்கலஸ் எளிதாக உயரதிகார வட்டடத்தில் தன்னை நுழைத்து கொண்டிருக்கலாம்.. அவரோ சிப்பாயாக போய் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து பெரிய அந்தஸ்தை அடைய எண்ணம் கொண்டுள்ளார். அதேபோல ஆண்ட்ரூ திறந்த வானின் கீழ் சின்னஞ்சிறிய நெப்போலியனை பார்ப்பது உச்சக்கட்ட தருணங்களில் ஒன்று. அதற்கு நிகராகவே நிக்கலஸ் அலெக்ஸாண்டரை களத்தில் இருந்து ஓடிவந்து தன்னந்தனியாக கையாலாகதவனாக சோர்ந்து அமர்ந்திருப்பவரை பார்க்கும் தருணமும் நிற்கிறது. ஆண்ட்ரூ போர்க்களத்திற்கு பின் இரண்டாவது முறையாக பிரெஞ்சு மருத்துவ காப்பில் காயமடைந்தவர்களின் படுக்கையில் கிடக்கும் போது நெப்போலியனை பார்க்கிறார். பிறரை குறித்த நெப்போலியனின் சிரத்தையின்மையையும் தான் அகங்காரத்தையும் அதன் அற்பத்தன்மையையும் உணர்கிறார். இவர்கள் இவ்வளவு தான் என்ற முடிவிற்கு வந்து சேருகிறார். அதன் அதிகாரத்தின் பிரதிநிதிகளாக வெளிப்பாடு கொள்ளும் தனிமனிதர்கள் மேலான தன் வழிபாட்டு உணர்வை கைவிட்டு ஆன்மீக தளம் மேலும் முன்னேறுகிறார். மறுபக்கம் ஜார் சக்கரவர்த்தியை கண்டுவந்த நிக்கலஸ் அந்த உண்மையை ஏற்க முடியாமல் அன்றிரவு குடித்து தன் நினைவை, உளக்கொந்தளிப்பை அடக்க நினைக்கிறார். அந்த தன்மை அவரை விசுவாசமுள்ள சிறப்பான குடிமகனாக நிலைநிறுத்துவதில் சென்று முடிகிறது.

தன் வாழ்க்கையில் மூன்று முறை பிறந்து இறக்காதவன் வாழ்வை நிறைவு செய்வதில்லை என்ற வாக்கியத்தை ஆண்ட்ரூவுக்கு தான் சொல்ல வேண்டும். முதல் மறுபிறப்பு அதிகார வட்டங்கள் மேலான அவரது பிணைப்பை அறுத்து விடுகிறது. இரண்டாவது வாழ்க்கையில் நட்டாஷாவுடன் காதல் கொள்கிறார் அந்த காதலின் விரிசல் அவரை இரண்டாம் முறை இறக்கவும் அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறவும் அழைத்து செல்கிறது. வயிற்றில் குண்டடிப்பட்டு அனடோலை சந்திக்கும் இடம் அந்த இரண்டாம் இறப்பு நிகழ்வின் உயர்தருணம். அங்கே அறிகிறார், தான் காதல் கொண்டது தசையும் இரத்தமுமாக இருக்கும் நட்டாஷா மேல் அல்ல, சாரம்சமாக அவளில் வெளிப்படும் வாழ்க்கையின் உயிர் சத்தின் மேல் என்று. அது அனடோலையும் நேசிக்கும்படி செய்கிறது. இது உறவுகள் மேலான அவரது பிணைப்பை தளர்த்துகிறது. ஆனால் நட்டாஷாவை சந்தித்தவுடன் வாழ்வதற்கான வேகம் அவரில் பெருகத்தான் செய்கிறது. எனினும் பழுத்த கனி உதிர்வது போல இன்றியமையாமல் மரணத்தை நோக்கி சென்று முழுமையான விடுதலையை அடைகிறார்.

மறுபக்கம் பியர் எப்படி இருக்கிறார். ? பியரின் இயல்பை குறித்து சொல்ல வேண்டும் என்றால் நினைவிற்கு வருவது கோமகன் பெஜுகாவ் இறந்தவுடன் அன்னா மிக்காய்லாவ்னாவில் வழிநடத்தி செல்லப்பட்டு பெரும் பணக்காரராக மாறும் நிகழ்வை தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் வெறும் சம்பவமாக நமக்கு காட்டப்படும் அந்நிகழ்வு நாவல் செல்லச் செல்ல விரிவான அர்த்த ஏற்றத்தை அடைந்த படியே வருகிறது. பியர் திடகாத்திரமான உடலும் நல்ல வலுவும் நீடித்து சிந்திக்கும் திறனும் கொண்டவர். கனவுஜீவி, விளைவாக நடைமுறை வாழ்வில் ஏராளமான மறதியும் கணக்கு வழக்கில்லாது தனக்கு கிடைத்த செல்வத்தை எவருக்கும் கொடுத்துவிடும் அசடும் கூட. இவற்றில் அவரது அஜானுபாகுவான தோற்றமும் சிந்தனை திறமும் பியருக்கு மதிப்பை கூட்டுவதற்கு பதிலாக பெஜுகாவின் சோரப்புத்திரன் என்ற தகுதியால் சற்று எள்ளலுடன் தான் பார்க்கப்படுகிறது என்பதை அன்னா பாவ்லாவ்னாவின் ஏற்பாட்டில் அமையும் முதல் விருந்து காட்சியிலேயே பார்த்து விட முடிகிறது. வெட்ட வெளிச்சமாக சொல்லப்படாமல் ஊள்ளூர வளைய வருகிறது. இதனால் தான் அங்கே வரும் ஹெலனுக்கு பியர் இருப்பதே கண்ணுக்குப்படவில்லை. இங்கே ஆண்ட்ரூ பியரின் முதல் உரையாடலையும் அதற்கு முன்னதாக ஷெரேரின் விருந்தில் பியர் பாதிரியாருடன் உரையாடுவதையும் இணைத்து கொள்ள வேண்டும். அங்கிருந்தே பியர் சென்றடையும் மெய்மையை புரிந்து கொள்ள முடிகிறது. பியர் இருவரிடமும் ரூஸோ சொல்லும் லட்சிய சமுதாயத்தை குறித்து உரையாடுகிறார். தீவிரமாக அதை ஏற்று முன்வைக்கிறார். லட்சிய வாழ்க்கைக்காக கனவு காண்கிறார். அதே உரையாடலில் ஆண்ட்ரூ பியருக்கு கொடுக்கும் அறிவுரை முக்கியமானது. குராகின்களுடன் சேராதே என்பதே அந்த அறிவுரை. ஆம் நண்பா, இனி நான் அந்த காட்டுத்தனமான வாழ்க்கைக்கு செல்ல மாட்டேன் என சத்தியம் செய்கிறேன். எத்தனை நேரத்திற்கு சத்தியம் ? அடுத்த அரைமணிக்கு. பின்னர் பழைய குருடி கதவ தெறடி கதையாக தன் உணர்ச்சிகளின் குருட்டுத்தனத்திற்கு ஆட்பட்டு அனடோல் ஆட்டம் போட போய் விடுகிறார். அதன் உச்சம் ஹெலனை திருமணம் செய்வது தான். எனவே பியர் உயர்ந்த கனவுகளுக்கும் விலங்கு உணர்ச்சிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஊசலாடுகிறார். ஹெலனை விட்டு பிரிந்து அவர் மாஸ்கோவிற்கு தனியாக வருவது முதல் திருப்பு முனை. தன் லட்சிய கனவுகளை பியர் தரையில் சந்திக்கும் முக்கியமான இடம் ஆண்ட்ரூவின் நிச்சயதார்த்தை முறித்து கொண்டு அனடோலுடன் ஓடிப்போக முயன்று தோற்று தன் மேலேயே கசப்பு கொண்டு நிற்கும் நட்டாஷாவை மரியா அக்ராமசிவ்னா வீட்டில் சந்திக்கும் தருணம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மானுட மனம் எத்தனை வேகமாக மானுட மனம் நம்முடைய சமூதாய நம்பிக்கைக்குள் சென்று தன்னை இறுகி மூடி கொள்ளும் என்பதை கவனித்து பார்த்தால் தெரியும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஊரே நகையாடும் நட்டாஷாவை அவளது துயரத்துடன் ஏற்று கொள்வது முக்கியமான திருப்புமுனை. அங்கே வெளிப்படும் காதல் வெறும் உடலுணர்ச்சி கிடையாது. முதல்முறையாக பியர் தான் படித்து வந்த ஃப்ரிமேஸன்களின் கொள்கையான பிறரின் துயரத்திற்கு இறங்குதல் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார். ஆனால் அதுவும் கூட சட்டென்று சுயநலம் சார்ந்த காதலாக மாறிவிடுகிறது. உண்மையில் இந்த நாவல் முழுக்க அப்படி ஏராளமான இடம் உண்டு. உண்மையில் அப்போதெல்லாம் டால்ஸ்டாயை பார்த்து செல்லச் சிணுங்கலை காட்டாமல் இருக்க முடியவில்லை. நான் கேட்க விரும்புகிறேன், தாத்தா எப்போதாவது முழு மானுட நன்மையை கனவு கண்டு அப்படியே எழுதுவீரா என்று. அவர் சொல்லக்கூடும் பேராண்டி அப்படி ஒன்றை எழுதினால் மனிதனே இருக்கமாட்டான் என்று. ஒவ்வொருமுறையும் உணர்ச்சிகரமான கற்பனாவாதத்திற்கு பதில் சமநிலையான யதார்த்தவாத செவ்வியல் படைப்பாளியாக டால்ஸ்டாயை காட்டுவது இத்தகைய நுண் அவதானிப்புகளின் மூலம் தான். இவை சமநிலையை மட்டுமல்ல, மானுட மனதின் ஆழத்தை குறித்த விசாரணைக்கு வாசகனை சட்டென்று அழைத்து செல்கின்றன.

நாட்டாஷாவை சந்தித்த அந்த தருணத்திற்கு அப்பால் பாராடினோ யுத்தத்தை பியர் காண செல்லுமிடம். உண்மையில் அந்த இடத்திற்கு செல்லும் பீயரை பார்க்கும் போது, என்னவொரு கிறுக்குத்தனமான பேர்வழி என்ற நினைப்பு உதடுகளின் புன்னகையாக வழியவே வாசித்தேன். இதுபோன்ற இடங்களில் தான் பியர் தன் தந்தையின் இறப்பிற்கு செல்லும் காட்சியை நினைவுப்படுத்தி விடுகிறது. விசாலமான இருள் சூழ்ந்த அரண்மனையின் வாயிலாக முற்றிலும் அன்னியனாக தன் சுயலாபத்திற்காக வழிகாட்டி அழைத்து செல்லப்படும் அன்னா மிக்காய்லாவ்னாவை தொடர்வது போலவே வெவ்வேறு மனிதர்களை பின்தொடர்ந்து செல்கிறார். இறுதியில் அவர் இறந்து போன தந்தையையும் பெரும் பணத்தையும் பெறுகிறார். போரில் கூட அவரது அசட்டு கனவுகள் இறந்து பதிலுக்கு வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை அடைகிறார்.

பாராடினோ யுத்தத்தில் பங்குபெறும் சிப்பாய்களை பார்க்கையில் தான் வேலையில் உள்ள மானுட இன்பத்தையும் மண்ணில் மட்டுமே காலுன்றி நிற்பதன் நிறைவையும் முதல்முறையாக உணர்கிறார். அதற்கடுத்து மாஸ்கோ நகரத்தில் பிரஞ்சு அதிகாரியை துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவித்து பழக்கமாவது. இதனுடன் இணைந்து கொள்வது பிரஞ்சு சிப்பாய்களுடன் அவருக்குள்ள இணக்கம். அந்த பிரஞ்சு அதிகாரிகளும் படைவீரர்களும் தனிப்பட்ட முறையில் மிக இனிமையாக பழகுகின்றனர். ஆனால் பிரஞ்சு மாஸ்கோவை விட்டு பின்வாங்க தொடங்கியவுடன் பழையபடி ராணுவ கண்டிப்பையும் இரக்கமில்லாத தன்மையையும் அடைந்து விடுகிறார்கள். அவர்கள் அடையும் முகபாவத்தை பார்க்கையில் பியர் தன் கண்ணெதிரே ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வையும் அப்போது சிப்பாய்களின் முகத்தில் ஏற்பட்ட உணர்வுகளையும் நினைவு கூர்கிறார். அந்த சிப்பாய்கள் தனித்தனியாக பார்க்கையில் அந்த செயலலிருந்து விடுதலையை எதிர்பார்ப்பவர்கள் போல தென்படுகிறார்கள். ஆனால் கூட்டாக அந்த வன்முறையில் திளைக்கிறார்கள். அப்போது பியரின் வழியாக நாம் அடைவதெல்லாம் ஏன் என்ற ஒற்றை வினாவை தான். தனிமனிதர்களாக ஒருவருக்கொருவர் பேதமில்லாமல் பழகும் தன்மையை கொண்டவர்கள், ஏதேனுமொரு திரளுடன் தங்களை அடையாளப்படுத்தி கொண்டவுடன் மூர்க்கமான வன்முறையில் ஈடுபட தயாராவது ஏன் ? அந்த திரள் தேசம், மொழி, மதம், இனம் என எதுவாக இருந்தாலும் விதிவிலக்கில்லை. இதே கேள்வியை கிரம்ளின் மாளிகை முகப்பில் ராஸ்டப்சைன் ஆணையிட வெராகின்னை கூட்டுக்கொலை செய்யும் பொதுஜனத்தை பார்க்கையிலு்ம் கேட்க தோன்றுகிறது ? அப்படியெனில் நாம் வன்முறையில் ஈடுபட ஒரு சந்தர்ப்பதிற்காக காத்து கொண்டிருக்கிறோமா ?

கைதியாக இருக்கும் காலத்தில் பியர் சந்திக்கும் முக்கியமான மனிதன் பிளட்டோன் காரட்டோவ். தனக்கு கிடைத்த வாழ்க்கையை முழு மனதாக ஏற்று கொள்வதும் தன் அன்றாடத்தில் மகிழ்வை கண்டடைந்து நிறைவு கொள்வதுமான அற்புதமான மனிதன். பிளட்டோன் காரட்டோவை சந்தித்த பின் பியரில் நடக்கும் மாற்றத்தை, அதுவரை அவர் தூர பிரதேசங்களை தொலைநோக்கி வழியாக பார்த்து கொண்டிருந்தார். அந்த தூரத்து இட்சியங்கள் தெளிவற்று மங்கலாக பார்க்க பார்க்க குழம்பிய படியே சென்றன. காரட்டோவை சந்தித்த பின் தன் காலடிகளை கவனிக்க ஆரம்பித்தார், ஒவ்வொன்றும் முழுமையாகவும் மகிழ்வாகவும் நிறைவும் கொண்டிருந்தன என்பதை உணர்ந்தார் என டால்ஸ்டாய் வர்ணிக்கிறார். அந்த தன்மையை பியரை முற்றிலுமாக விடுதலை செய்கிறது. அப்புறம் அவர் கைதியாக இருக்கும் ஒருமுறை கூட தன்னை கோமகன் பெஜுகாவ் என அறிமுகப்படுத்தி கொள்வதில்லை. முதலில் நெப்போலியனை போட்டு தள்ளவேண்டிய தன் பிறப்பு ரகசிகயத்திற்காகவே அப்படிப்பட்ட மகோன்னத முடிவை எடுக்கிறார். ஆனால் பிரஞ்சு அதிகாரியை பார்த்த பின் வாழ்க்கையை அறிந்து கொள்ள துடிக்கும் அவரது தீராத வேகம் அந்த யோசனையை மிக சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார். அங்கே தான் தன் பியர் தன் எல்லைகளையும் சுதந்திரத்தையும் ஆற்றலையும் கண்டடைகிறார்.

அதன் பின் அவர் மனிதர்களுடன் பழகுவதும் நட்டாஷாவை திருமணம் செய்வதும் இறுதியாக நிக்கலஸுடன் விவாதம் செய்வதும் ஃப்ரிமேஸன் கொள்கைக்காக பாடுபடுவதும் அதை நடைமுறையில் கொண்டு வரும் திட்டங்களை வகுப்பதும் என முழு மனிதர் ஆகிறார். ஆனால் இப்போதும் அவர் ஒரு கனவுஜீவியே தான். கனவுகளை மண்ணில் கொண்டு வருவதை செய்யக்கூடிய மெய்மையை கண்டடைந்தவராக முழுமை அடைகிறார்..

ஆனால் பியர் பிளட்டோன் காரட்டோவிடமிருந்து விலகும் புள்ளியை கவனிக்க வேண்டும். காரட்டோவ் குணமாகாமல் பிரஞ்சு படையால் சுட்டு தள்ளப்படுவார் என்பதை மாஸ்கோவை விட்டு பிரெஞ்சு துருப்புகள் பின்வாங்கும் போதே பியர் அறிந்து கொள்கிறார். எனவே கொஞ்சமாக கொஞ்சமாக காரட்டோவிடமிருந்து விலகி கொள்கிறார். சுட்டு கொல்லப்படுவதற்கு முன்னம் பிளட்டோன் பியரை பார்த்து கையசைத்து அருகே வரும்படி அழைக்கிறான். இவரோ விலகி கைதிகளுடன் நடந்தபடியே இருக்கிறது. ஆனால் மொத்த பிரக்ஞையும் காதில் கூடிகொண்டு பிளட்டோனை கவனிக்கின்றன. கனவுஜீவிகள் அப்படித்தானே இருக்கமுடியும். யதார்த்தத்தை பார்த்து அவர்கள் அச்சமும் ஏக்கமும் மாற்ற வேண்டும் என்ற தன்முனைப்பையும் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். பிளட்டோன் வளர்த்த சாம்பல் நிற நாயின் ஊளை பியரின் மனக்குமுறலும் கூடத்தான். எனவே மிகுந்த யதார்த்தவாதியான பிளட்டோனிடமிருந்து விலகி ஓடுகிறார். ஒருவேளை ஆண்ட்ரூ அங்கே இருந்தால் பக்கத்தில் இருந்து கண் கொட்டாமல் பார்த்திருப்பார்.

சரி இந்த பயணம் பியருக்கு தொடங்குவது எங்கிருந்து ? அது ஹெலன் – டோலகோவ் பிறழ் உறவில் இருந்தும் அனடோலுடன் ஹெலனுக்கு இருக்கும் தகாத பழக்கமே ஆகும். ஆண்ட்ரூவின் அறிவுரையை கேட்டு திரும்பி செல்லும் பியர் எல்லாவற்றையும் உதறிவிட்டு மிருக உணர்ச்சிகளே நிறைவு தருபவை என நீந்தி திளைக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் டோலகாவ் உடன் ஹெலனுக்கு இருக்கும் கள்ளவுறவை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. டூயல் சண்டைக்கும் அழைத்து விடுகிறார். அந்த சண்டையுமே ஒருவகை அபத்தமான முறையில் நடந்தேறுகிறது. துப்பாக்கியே பயன்படுத்த தெரியாத பியர் டோலகாவை சுட்டுவிடுகிறார். அப்படி சுட்டப்பின் தன்னை சுட்டுவிடு என்று பியர், டோலாகாவ் முன்னிலையில் சென்று நிற்பது முக்கியமான தருணம். அங்கே தான் குற்ற செயல்களுக்கு பின்னால் வருந்தும் தன் நெஞ்ச துடிப்பை கேட்கிறார். அது அவரை வினாவாக மாறி விரட்டுகிறது. இது என்ன வாழ்க்கை என்றும் இவ்வளவு தானா வாழ்க்கை என்றும் வாழ்க்கை என்பது என்ன தான் ? இந்த துன்பகரமான நிகழ்வுகளெல்லாம் ஏன் நடக்கின்றன என்று. பற்பல ரூபங்களில். அந்த பயணத்தில் ஃப்ரிமேஸன் சங்கத்தவரான ஜோசப் அலெஸிவிச்சை சந்திக்கிறார். அந்த சங்கம் பியருக்கு தற்காலிக விடுதலையை தன் கொள்கையின் மூலம் தருகிறது. ஆனால் முற்றிலும் உண்மையில்லை என்பதால் பியரை நிறைவு கொள்ள வைப்பதில்லை.

அதனால் அவர் தன் எஸ்டேட்களுக்கு சென்று தொண்டாற்ற முனைகிறார். ஆனால் செயலில் இறங்குவதற்கு தடையான இயல்புகளால் வெறுமே தனக்கு தானே நடித்து கொள்கிறார். அங்கே மேனேஜர்கள் முதலாளிகள் ஏமாற்றும் சித்திரம் அற்புதமானது. எப்போதும் நடந்து வருவது. பின்னர் மீண்டும் தன் கேளிக்கை உலகமான மது, சூதாட்டம், கிளப், விருந்து என மூழ்கி தன்னை இழக்க நினைக்கிறார். ஆனால் அழுத்தப்படும் பந்து ஆழ செல்லச்செல்ல வெளிவரும் விசை அதிகரிப்பது போல அந்த கேள்விகள் அமிலம் உள்ளூக்குள் அவரை அரிக்கின்றன. ஒருநாள் மாஸ்கோவில் தலைமறைவு வாழ்க்கையை எதிர்கொள்வதில் வெடித்து கிளம்பி நிறைவுறுகிறது.

அதேபோல பியரிடம் நட்டாஷா ஆண்ட்ரூவை பற்றி பேசுவதேயில்லை. ஏனெனில் அவர் பொறாமை கொண்டிருப்பதாக நினைத்தாள் என சொல்கிறார். ஆம் அது உண்மை தான் என்றாலும் பியருக்கும் டோலகாவுக்கும் டூயலுக்கு முன்னால் நடக்கும் பேச்சு முரணை அவள் அறிவாள். அதுமட்டுமல்ல அந்த பகுதி, தன் மனைவியை இன்னொருவனிடம் இழந்த அவமானத்தை துல்லியமாக பியரின் நடத்தை வழியாக மட்டுமே காட்டுவது. என்னதான் ஆருயிர் நண்பன் என்றால் தந்தை மைய சமூகத்தின் ஆணால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஆண்ட்ரூ, பியர் இருவரையுமே ரிஷித்தன்மையை கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். புராண கதைகளில் தவம் செய்யும் ரிஷிகள் பரம்பதம் ஆடியே பரலோக ராஜ்யத்தில் பிரவேசம் பண்ணுகிறார்கள். இவர்களும் அப்படித்தான் ரோலர் கோஸ்டர் பயணத்தில் கிடந்து மிதந்து மீட்படைகிறார்கள்.

கண்ணன் என்னுள்ளம் உள்ளம் கவர் கள்வன் அவன். நான் நட்டாஷாவிற்கு இவ்வாக்கியத்தை சொல்ல விரும்புகிறேன். பதின்மூன்று வயது பதின்வயது சிறுமியில் இருந்து இருபத்தெட்டு வயதில் ஏழு குழந்தைகளின் அன்னையாக பொலிவது வரை ஒரு முழுப் பயணம். நட்டாஷாவை நோக்கி நம்மை ஈர்ப்பது எது ? வாழ்க்கையின் சுதந்திர உணர்ச்சி தானா ? ராஸ்டோவ்களின் வீட்டில் நாம் முதலில் காணும் பிறந்த தின விருந்தில் இருந்து அவளில் வெளிப்படுவது மீறல் என்ற அம்சம். அது அவளை அந்த விருந்தில் துடுக்காக பேச வைக்கிறது, போரிஸை முத்தமிட சொல்கிறது, டெனைசாவை காதல் பேசுமளவுக்கு கள்ளமற்று பழக வைக்கிறது. ஆண்ட்ரூவுடன் காதல் கொள்ள வைக்கிறது. அந்த காதலில் திளைக்கவும் அப்படியே திடிரென்று அதைவிட்டு விட்டு அனடோலுடன் ஓடிப்போகவும் பியரின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் மீண்டும் ஆண்ட்ரூவுடன் இணைந்து காதலில் திளைப்பதும் பின்னர் பியரை திருமணம் செய்து அன்னையாவதும் என நிறைவு கொள்கிறது. நட்டாஷாவின் பரிணாமத்தை ஒரு கன்னி அன்னையாக மலர்வது என சுருக்கி சொல்லலாம். கன்னித்தன்மை என்று நாம் உணர்வது வாழ்க்கை மீதான பெருவிருப்பமும் அதன் விளைவாக உண்டாகும் சுதந்திரமும் அதி நுண்ணுணர்வும் தான். அந்த பூ மலர்கையில் பெருவாசம் வீசி நம்மை ஈர்க்கிறது. கனியாகி அமுது சொரிகிறது. ஆண்ட்ரூ, பியர் இருவருமே இந்த நாவலின் இரு தூண்கள் போல நம்மை பாதிக்கிறார்கள். முன்னவர் சுதந்திரத்தையும் பின்னவர் மகிழ்ச்சியையும் தேடி தத்தம் வழிகளில் கண்டடைகிறார்கள். அந்த இருவருக்கும் நடுவில் தோன்றும் நட்டாஷா அவர்களின் பாதம் ஊன்றி நிற்கும் நிலமாக இருக்கிறாள். உண்மையில் தன் காதலர் இருவர் அறிந்த மெய்மையையும் அவளறிவாள். அறிந்தும் தன்னை அன்னையாக உணர்ந்து நிறைவு கொள்கிறாள். ஒருவகையில் இவர்கள் இருவரையும் விட அவள் ஒருபடி மேலானவள்.

நட்டாஷாவை டால்ஸ்டாய் அறிமுகப்படுத்தும் விதம் சுவாரசியமானது. சரியாக பூ பூக்கும் பருவ தொடக்கத்தில் தான் அவள் நம்முன் கண் முன்வந்து நிற்கிறாள். அங்கே தான் அவளது நுண்ணுணர்வையும் சுதந்திரமான போக்கையும் காண்கிறோம். அவளது பால்ய வாழ்க்கை நமக்கு தெரியாததனால் இந்த போக்குகளை ஆச்சரியத்துடன் கண் விரித்து நோக்குகிறோம். ஆனால் ஒரு பெண் குழந்தையை பற்றி நமக்கு நிறைய தெரிந்திருந்தாலும் கன்னியான பின் அவள் கொள்ளும் போக்கை காணுகையில் ஆச்சரியம் ஏற்படாமல் இருப்பதில்லை.

நட்டாஷாவின் முதல் காதல் ஆண்ட்ரூவுடன் தான் தொடங்குகிறது. அவரை கடற்கரை மாளிகையின் அரச விருந்தில் சந்திப்பதில் இருந்து அது தொடங்குகிறது. பித்து நிறைந்த நாட்கள். உண்மையில் பியருக்கும் நட்டாஷாவிற்கும் காதல் தோன்றுவதில் சில காரண காரியங்களை வரிசைப்படுத்த முடிகிறது. ஆனால் ஆண்ட்ரூவுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்படும் போது காட்டுத்தீ பற்றி கொள்வதை போல தான் இருக்கிறது. எப்போதும் ஏற்பட சாத்தியமான, ஆனால் ஏற்படாமல் போகவும் செய்ய கூடிய தீ அது. ஒருபக்கம் நட்டாஷா தன் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேற துடிப்பு கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் ஆண்ட்ரூ அரசவை வாழ்க்கையில் இருந்து வெளியேற வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறார். இரண்டும் முனைகளும் உரசி கொள்கையில் தீ எழுகிறது. அது இருவரின் வாழ்க்கையையும் பிரகாசமாக்குகிறது. என்ன தீக்குச்சியையும் தீப்பெட்டியையும் உரசினால் தீக்குச்சி எரிந்து தீர்வதும் தீப்பெட்டி அப்படியே இருப்பதும் போலவாக ஆண்ட்ரூ தான் தேடி கொண்டிருந்த சுதந்திரத்தை அடைகிறார். நட்டாஷா வாழ்க்கையில் இனிய வடு ஒன்றை நெஞ்சில் சுமக்கிறாள்.

அவளது காதலின் வசந்தத்தில் நட்டாஷாவின் மனநிலைகளின் தாளத்தை வர்ணிக்கும் விதம் நாமே அவளாக மாற செய்கிறது. அங்கே கனிந்து ஏங்கி ஒருகட்டத்தில் இனிப்பே திகட்டி பயணத்தில் உள்ள ஆண்ட்ரூவின் கடிதங்களை புறக்கணிக்கிறாள். அக்காலத்தில் தான் நிக்கலஸின் வேட்டைக்குழுவுடன் பயணம் செய்கிறாள். இப்படி தளும்பி நிற்கும் குடமாக தன்னை உணர்பவள் வெவ்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு சமநிலை கொள்கிறாள். அது அனடோலை சந்திக்கும் வரையில் நீடிக்கிறது. பின்னர் அந்த தளும்பல் இன்னொருவரால் வந்ததல்ல, தன்னிலிருந்து ஊறி நிறைவது என உணர்கையில் அசைக்க முடியாத சமநிலையை கைக்கொள்கிறாள். இந்த பயணம் கடும் வலியை கொண்டதாகவே அவளுக்கு அமைகிறது.

இப்பயணத்தின் ஒருபகுதியாக பியருக்கும் நட்டாஷாவுக்குமான அந்த சந்திப்பு நிகழ்கிறது. அந்நிகழ்வு பின்னர் மறுமுறை பியரும் அவளும் சந்திக்கையில் நட்டாஷா சொல்லும் வார்த்தைகள் முக்கியமானவை. அன்று நீங்கள் சொற்கள் எனக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை வார்த்தை சொல்லவியலாது என்கிறாள். அதுவரை அவளில் இருந்த கள்ளமின்மை தான் அனடோலுடன் ஓடிப்போக சொல்லியது. அந்த அறியாமைக்கு பின்னால் கிடைத்த விளைவுகள், இந்த உலகின் கொடுங்கரங்களை காண்பிக்கிறது. தன் சுதந்திரத்தின் எல்லையை, பிறர் தன் மேல் கொண்டுள்ள அன்பின் எல்லையை, தான் பிறர் மேல் கொண்டுள்ள அன்பின் எல்லையை என முப்பரிமாணத்தை அஅவளுக்கு காட்டுகிறது. அவளது தற்கொலை மனநிலையின் உச்சக்கணத்தில் வந்து சேரும் பியரின் சொற்கள் இந்த திறப்புகளை அவளுக்குள் நிகழ்த்துகிறது. எனவே காதல் கொள்வதற்கு முன்னம் பியரை சக மனித உயிர் என்ற வேறொரு தளத்தில் மிக அணுக்கமாக புரிந்து கொள்கிறாள். அங்கே தொடங்கும் அவளது தெளிவு தேவ மாதாவின் கோவிலில் அனடோலையும் மன்னிக்கும் போது முழுமை அடைகிறது. இதே போன்ற தருணத்தையும் மன விரிவையும் ஆண்ட்ரூ போர்க்கள மருத்துவமனையில் கால் இழந்து கதறும் அனடோலை தானும் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி உணர்கிறார். அங்கே தான் அவருக்கு நட்டாஷா என்ற உடல் வடிவான பெண் அல்ல, அவளில் வெளிப்படும் அழியாத இளமையின் சாரத்தின் மேல் தான் காதல் கொண்டோம் என உணர்கிறார். நாம் காதல் கொள்வது அந்த ஆதி உத்வேகத்தின் மேல் தானே ? இதை முன்னமே நட்டாஷாவை மன்னிப்பதன் மூலம் அடைந்திருக்கலாம். போர்க்களத்திற்கு சென்று கல்லறையில் அடங்காமல் இருந்திருக்க முடியும். ஆனால் அப்படி நடக்க எந்த வாய்ப்பு கிடையாது. பியர் அதுகுறித்து பேசுவதற்காக அழைக்கும் போது முற்றாக மறுத்து விடுகிறார். ஆண்ட்ரூவில் அவரது தந்தை கோமகன் பால்கோன்ஸ்கியின் தாக்கம் மிக அதிகம் உண்டு. தன் தந்தையின் இறுக்கத்தை அவருடன் தங்கி இருக்கையில் அப்படியே பிரதிப்பலிக்கிறார். தந்தையிடமிருந்து விலகிய பின் தலையில் வந்து விழும் இடியினால் தான் இந்த ஞானோதயத்தை பார்க்கிறார். இதே விஷயத்தை மேரிக்கும் நட்டாஷாவுக்குமான நட்பிலும் பார்க்கலாம். பியரிடம் நட்டாஷாவை பற்றி மேரி விசாரிக்கும் போது தன்னை அறியாமலேயே தனது தந்தையின் பாவனைகளை வெளிப்படுத்துவதை கவனிக்கிறாள். அப்போது பியர் எதிர்ப்பார்த்த படியே நட்டாஷாவுக்கும் மேரிக்கும் இடையில் உறவு துளிர்க்கவில்லை. பின்னர் தந்தை இறந்து அண்ணனின் முன்னிலையில் சந்திக்கும் போது தான் நட்பு கொள்கிறார்கள். நாமெல்லாம் வலுவான தாக்கம் செலுத்தும் மனிதர்கள் கூட வாழ்கையில் – குறிப்பாக பெற்றோருடன் – என்னதான் முயன்றாலும் அவர்களின் குண அம்சங்கள் நம்மில் பிரதிப்பலிப்பதை தடுக்க முடிவதில்லை. பால்கோன்ஸ்கி போன்ற உறுதியும் தீவிரமும் கொண்ட ஆளுமைகளின் தாக்கம் அளப்பரியது. கோமகன் பால்கோன்ஸ்கி மாறாத மரபின் பிரதிநிதியாகவே உருவகம் கொள்கிறார். இடையில் ஒரு விஷயத்தை கூறாமல் விட்டுவிட்டேன். ஆண்ட்ரூவை விட நட்டாஷா விரைவில் மன்னிக்கும் மனநிலையை அடைகிறாள். ஆண்களை விட பெண்களின் உள்ளம் விரிய அதிக சாத்தியத்தை கொண்டிருக்கிறது.

நட்டாஷாவை பற்றி பேசும் போது அவளது இணைபிரியா இளமைக்கால தோழியான சோனியாவை பற்றி பேசியாக வேண்டும். இருவருமே காதல் கொள்கிறார்கள். முன்னவளுடையது நிறைவேற பின்னவளுடையது அல்லாது போய்விடுகிறது. சோனியாவின் காதல் நிறைவேறாமல் போனது குறித்து நட்டாஷாவும் மேரியும் பேசி கொள்கையில், நம்மை போல அவள் போராடுவது இல்லை என்ற நட்டாஷாவின் கூற்று மிக முக்கியமானது. சோனியாவிற்கு போராட வாய்ப்பிருந்ததா என்பது அடுத்த கேள்வி. யாருமில்லாமல் அந்த குடும்பத்தால் ஆதரித்து வளர்க்கப்படும் அவள் போராடி தோற்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டியது தான். நட்டாஷா போல ஓடிப்போக கூடியவள் அல்ல சோனியா. அத்தகைய குருட்டுத்தனமான தீரம் எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் சோனியாவை நடத்தும் கோமகளின் பிரியம் என்பது என்ன ? அது தன் சொத்துக்கு, கௌரவத்திற்கு குறைவு வருமென அறிந்தவுடன் திரிந்து விடுகிறது. எனவே கோமகள் ராஸ்டோவா முடிந்த போதெல்லாம் சோனியாவை கண்டிக்கிறாள். கடைசியில் அவள் எதிர்பார்த்த படியே நிக்கலஸுக்கு ஒரு கடிதத்தை எழுத வைத்தும் விடுகிறாள்.

அந்த கடிதத்தை எழுதுவதற்கு பின்னுள்ள சோனியாவின் மனநிலையை டால்ஸ்டாய் வர்ணிப்பது இருக்கிறதே, இந்த மாதிரியான இடங்களில் அவரது கூரிய அவதானிப்புகளை கண்டவுடன் கூச்சலும் சினமும், பின்னர் தணிந்து அப்படித்தானே என்ற புன்சிரிப்பையும் அடைந்த தருணங்கள் ஏராளம் உண்டு. எப்படியும் ஆண்ட்ரூ பிழைத்து நட்டாஷாவை திருமணம் செய்து கொள்வார். நமக்கே மீண்டும் நிக்கலஸ் கிடைத்து விடுவார் என்ற சுயநல தியாக உணர்ச்சியால் உந்தப்பட்டு சோனியா அக்கடிதத்தை எழுதி நிக்கலஸை தன் காதலில் இருந்து விடுவிக்கிறாள். பாவம், விதி விளையாடி விடுகிறது. அவளை போன்றவர்களால் எப்படி அதன் பின்னும் இயல்பாக தனக்கு நிகழ்ந்ததை ஏற்றுக்கொண்டது போல நடமாட முடிகிறது ? நிறைவேறாமையின் ஏக்கம் அந்த நெஞ்சில் இருந்து வருத்தி கொண்டு தானே இருக்கும் ?

இன்னொரு பக்கம் சோனியா நட்டாஷாவின் பிறந்த தின விருந்தில் சிறு பிள்ளையாய் இருக்கும் போது எதிர்பார்ப்பற்ற காதல் பற்றி கூறுவாள். அப்படியே அவளுக்கு வாழ விதிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் வாழ்க்கையின் சூழ்நிலைகளில் எவருமே அப்படி எதிர்பார்ப்பற்ற அன்புடன் இருப்பதில்லை. இதனுடன் பியர் தன் மாஸ்கோ எஸ்டேட்களுக்கு வந்து அடிமைகள் உதவி செய்ய முனைவதும் ஆண்ட்ரூ நட்டாஷாவிற்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்ட பின்னும் அவள் நிச்சயதார்த்தத்தை முறித்து கொண்டாள் என்பதற்காக கோபம் கொண்டதும் இறுதியாக அவர் இறப்பிற்கு முன்னால் நிற்கும் போது அன்பு என்பது என்ன ? என்று வினவி கொள்வார்.

அது ஆண்ட்ரூவின் வாழ்க்கையோடும் பொருந்த கேள்வி மட்டுமல்ல, மொத்த நாவலுக்கும் விரிகிறது. அதிலிருந்து எழுந்து நம் வாழ்க்கையை தொடுகிறது. அன்பு என நாம் உணர்கிறோம் அது என்ன ? மகனுக்காக நெகிழும் அதே தந்தை தான், அவரது விருப்பத்திற்கு மாறாக நட்டாஷாவை திருமணம் செய்து கொள்ள மகன் முடிவு செய்தவுடன் மறுப்பு தெரிவித்து மகனையும் தன்னையும் தன் மகளையும் சேர்த்தே வதைக்கிறார். அப்படிப்பட்ட உறவுகளை தான் எங்கும் காண்கிறோம். அதே விஷயம் தான் சோனியாவிலும் நட்டாஷாவிலும் பியரிலும் என ஒவ்வொருவராக விரிகிறது. கனிவென ஒருமுகம் காட்டுவது மறுபுறம் கசப்பென்று நம்முன் தோற்றம் கொள்கிறது. இருத்தலுக்கும் இன்மைக்கும் எத்தனை தொலைவோ அதுவே அன்பேன நாம் அழைப்பதின் தன்மையிலும் உள்ளது. உண்மையில் அன்பென்பது என்ன தான் ?

அதே போல தியாகம் என்ற உணர்ச்சி. எல்லா சமூகங்கங்களிலும் உயரிய விழுமியமாக முன்வைக்கப்படுவது. அது வெளிப்பாடு கொள்ளும் மனிதர்களை புனிதர்களாக போற்ற செய்வதும் இயல்பு. டால்ஸ்டாய் இங்கே பயன்படுத்தும் அருமையான சொல் ஒன்று உண்டு, சுயநல தியாகம். அவரது புனைவுலகை பார்க்க பார்க்க சுயநலமில்லாது தியாகம் நடைபெறுவதில்லை என்றே தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஆத்ம திருப்தி என்ற ஆசையாவது இருக்கிறது. போரும் வாழ்வும் நாவலின் உலகத்தை எத்தனை தூரம் தீவிரமாக நோக்குகிறேனோ அத்தனை தூரம் அதன் மாந்தர் காலத்தில் பின்னகர்ந்து தூசிகளாக மறைகிறார்கள். இங்கே அன்பும் தியாகமும் வன்முறையும் மனிதர்களில் உச்சமாக வெளிப்பாடு கொள்ளும் அரிய கணங்கள் உண்டு. அவை புல்லாங்குழலின் இசை போன்றவை தான். அதன் வடிவம் அந்த இசையை எழுப்ப உதவுகிறது. ஆனால் அந்த இசை அதனுடையது அல்ல. மனிதரில் வெளிப்படும் விசைகள் அப்படியே. அவை வெளிப்பாடு கொள்ள மனிதன் இசைவாக உள்ளான் என்ற தகுதிக்கு அப்பால் மனிதனும் காலத்தின் துளிகளில் ஒருவன் மாத்திரமே. இந்த தரிசனத்தை வந்தடைவது ஆ்ண்ட்ரூ போல ஆகாயத்தை பார்க்கும் நிகழ்வு தான். ஒரு மலைப்பு அவ்வளவு தான்.

அன்பு பேசி ஆகாயத்திற்கு தாவி விட்டேன். விமானத்தை மீண்டும் தரைத்தளத்தில் சற்று நேரம் இளைப்பாற விடுவோம். அன்பின் வண்ண பேதங்களில் தவறாமல் எண்ணப்பட வேண்டியது, இளவரசி மேரிக்கும் அவளது தந்தை கோமகன் பால்கோன்ஸ்கிக்கும் உள்ள நெல்லிக்காய் உறவு. அந்த பகுதியில் மேரிக்கும் கோமகன் நல்லது என நினைத்து செய்யும் எல்லாம் துன்பத்தை தான் கொடுக்கின்றன. அவளுக்கு ஈடுபாடில்லாத விஷயங்களில் கட்டாயத்தால் சிக்கி வலியை பெறும் காட்சியையே மேரியின் அறிமுகத்தில் காண்கிறோம். அங்கிருந்து தனக்கு விருப்பமில்லாத திருமணம் ஆசையை அவள் கொண்டிருக்கிறாள் என்று தெரிவதும் பின்னர் ஆண்ட்ரூவின் காதலும் அதற்கு மேரியின் ஆதரவும் கோமகன் அவள் மேல் வன்மம் கொள்ள காரணமாகின்றன. தான் நேசித்து வளர்த்த சொந்த மகளை முடிந்தளவுக்கு மன வேதனை கொள்ள செய்கிறார். அன்பு எனும் பெயரால் நடக்கும் குடும்ப வன்முறை என்று தான் சொல்ல வேண்டும். இன்றும் நம் உறவுகளில் இதை அனுபவித்து தானே வருகிறோம். ஆனால் இதை அன்பில்லையென்று முழுக்க மறுக்கவும் முடியாது. இத்தனை கொடுமைகளை மகளுக்கு செய்துவிட்டு பார்க்கும் போதெல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போ என வையும் கோமகன் இறப்பின் தருவாயில் அவளை பார்க்க விரும்புகிறார். அது வெறும் குற்றவுணர்ச்சியால் மட்டுந்தானா ? அதுவும் இருக்கிறது, ஆனால் அதற்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருப்பதாகவே உணர்கிறோம்.

தந்தையின் இறப்பிற்கு பின் மேரி அடையும் உளக்கொந்தளிப்பு அவளது அன்பின் தன்மையை அவளே மறுவிசாரணை செய்வதாக உள்ளது. அவள் முதலில் தன்னை மாசுமறுவற்று அன்பு செலுத்துபவள் என கற்பிதம் செய்து கொள்கிறாள். ஆனால் அவரது இறப்பு நெருங்க நெருங்க இவர் இறந்து விட்டாலே நிம்மதி என நினைக்கிறாள். பின்னர் அவர் அவளுக்காக ஏங்கும் அந்த கடைசி இரவில் தான் அனுபவித்தற்கு சமானமான வலியை அவ்வறைக்குள் செல்லாமல் அளிக்கிறாள். அப்படி அவள் உணர்வது செயலற்று நிலைக்கும் சோர்விக்கும் மேரியை கொண்டு செல்கிறது. பால்டு ஹில்ஸில் இருந்து கிளம்பியாக வேண்டிய போர்க்கால சூழ்நிலை, அவளை எழுந்து நிற்க செய்கிறது.

மேரிக்கு கடவுளின் குழந்தைகள் என்ற நடோடி யாத்ரீக குழுவினர் மேல் இருக்கும் ஈர்ப்பையும் தொடர்பையும் அவளது தந்தையின் பிடியை மீறுவதற்கான முயற்சி என்றே பார்க்கலாம். அந்த வீட்டில் அப்படிப்பட்ட நாடோடி குழுக்கள் நுழைவதை விரும்பாதவர் கோமகன். ஆனால் அதையும் மீறி மேரி அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களின் கதைகளை கேட்கிறாள். நாம் என்னதான் ஒருவருக்கு முழு விசுவாசத்தை காட்டுவதாக நினைத்து கொண்டாலும் அப்படியல்ல. மனித இயல்பே எங்கோ ஒரு மீறலை – மிக இரகசியமான, அதேநேரம் பொருளற்ற செயலாக கூட இருக்கலாம் – தக்கவைத்து கொள்ளும்.

மேரியுடன் நினைவிற்கு வரும் குமாரி பௌரியனை மறக்க முடியுமா ? நல்ல கள்ளி அவள். ஏதேனும் ஒரு குதிரை தென்படுமா என்று பார்க்கிறாள். போரிஸை மேரி மணந்திருந்தால் அது நிறைவேறி இருக்கும். ஆனால் அதற்குள் சந்தர்ப்பம் தவறிவிடுகிறது. முதலில் பௌரியனை பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. இப்போதும் அது போன்ற செய்கைகளை சரியென்று என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் அவளை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தால் நானும் அப்படித்தான் செய்வேனோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. இது போன்ற குறுகிய எல்லைகளை கொண்ட துணை கதாபாத்திரங்களின் வாழ்வை காணும் போது பின்னுரையில் எழுப்பப்படும் நமக்கு சுதந்திர விருப்பம் எந்தளவிற்கு உள்ளது என்ற கேள்வி எதிரில் வருகிறது. ஏன் இவர்களை சந்திக்கும் போது வருகிறதென்றால் பணம் இல்லாமை தான் நமது விருப்பத்தை கட்டுப்படுத்தும் ஓரே காரணி என நமக்கு பொது கற்பிதம் உள்ளது. எனவே சோனியாவை, பௌரியனை பார்க்கும் போது அப்படி கேள்வி எழுகிறது. ஆனால் போர் கைதியான பியர் மகிழ்ச்சியை உணரும் விதத்தை நினைத்து கொள்கையில் ஒன்றை சுதந்திர விருப்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்பது மட்டுமல்ல, பணக்காரனோ, ஏழையோ, அடிமையோ எங்கும் பகல் கனா காணும் சுதந்திர விருப்பம் அன்றாட வாழ்க்கையில் சாத்தியமில்லை என்று.

கோமகன் பால்கோன்ஸ்கியை பற்றி யோசிக்கையில் மரபின் இறுகிய உருவகம் என்பதுடன் நிற்காமல் மாறி வரும் காலத்தை ஏற்க முடியாத ஒருமனம் மெல்ல மெல்ல தன்னைத்தானே சிதைத்து கொண்ட கதையாகவும் அவரது வாழ்க்கையை வாசிக்கலாம்.

மேரிக்கும் நிக்கலஸுக்கும் காதல் அரும்பும் கணத்தையும் சொல்ல வேண்டும். பால்டு ஹில்ஸில் தனித்து மாட்டி கொண்டு தவிக்கும் மேரியை நிக்கலஸ் வீரத்தனமாக காப்பாற்றும் கணமே அந்த காதலின் முதல் விதை. பின்னர் அது கோமகள் ராஸ்டோவாவின் தோழியால் சூழ்நிலைகள் அமைத்து கொடுக்கப்பட்டு வளர்ச்சிடை அடைகிறது. எப்போதுமே ஆண்களுக்கு தன்னை வெல்லுமே பெண்கள் மேலும் தான் வென்ற பெண்கள் மேலும் ஈடுபாடு அதிகம். முடிந்தால் அவளையே அவன் திருமணம் செய்து கொள்வான். காதலில் கருணை என்பதற்கு பெரிதாக இடமில்லை. தன்னை சமர்ப்பணம் செய்யும் பெண்ணுக்கு இரங்கலாம், இணங்க முடியாது. அந்த சமர்ப்பணத்தில் கூட வெல்ல வேண்டிய ஏதோவொன்று தேவைப்படுகிறது. அந்த ஒன்றை என்னவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அது சோனியாவிடம் இல்லை என்றே தோன்றுகிறது. எனினும் முதலில் அந்த பனிவெளியில் சோனியாவிடம் நிக்கலஸ் தன் காதலை சொல்லும் நாவலின் பரவசமான இடங்களில் ஒன்று. இப்படியெல்லாம் எண்ணும் போது ஒரு புன்னகையுடனேயே எழுத வேண்டியிருக்கிறது. ஏனெனில் டால்ஸ்டாய் உருவாக்கும் சித்திரம் வாழ்க்கையளவுக்கே விரிவானது. இதனால் தான் அது நடந்ததா அதனால் தான் அது நடந்ததா என்பது கேள்விக்குரிய வினா தான். நிக்கலஸின் குடும்ப பொருளதார நிலை சரிவடைந்து போகாமல் இருந்தால் வேறு வகையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் நாம் பேச வருவதே அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதையும் அந்த மனநிலைகளை தாம் அனுபவிப்பது குறித்தும் தான். நிக்கலஸை பொருத்த வரையில் ஆரம்பத்திலிருந்தே அவர் சோனியாவிடம் ஒரு விலக்கத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்வதை பார்க்கிறோம். அந்த குணக்கூறின் மேலிருந்து இப்படி நினைக்கிறேன்.

நிக்கலஸை எண்ணிப் பார்க்கையில் இளைஞராக இராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்து படிப்படியாக உயர்ந்து பரிவார அதிகாரிகளின் குழுவிலும் பின்னர் கமாண்டராகவும் ஆவது அவரது லட்சிய கனவு. படிப்படியாக உயர்வதில் எந்த குறையும் இல்லை. என்ன, நல்ல கோமகனாக திறமையான விவசாயியாக திருப்தி அடைகிறார் என்ற மாற்றத்தை தவிர. அலெக்ஸாண்டரை பார்த்த பிறகு வரும் உடைவு ராஜ கம்பீரத்தின் மேலுள்ள கண்மூடித்தனமான வழிபாட்டுணர்வை மட்டுப்படுத்துகிறது. ஆஸ்தர்லிட்ஜ் யுத்தத்தில் குதிரையிலிருந்து விழுந்து அடிப்பட்டு தப்பி பிழைத்து உயிருடன் ஓடி வருவது போர் என்றால் என்ன என்பதன் முழு அர்த்தத்தை உணர வைக்கிறது. அதன் பின் பாராடினோ போர்க்களத்தில் இருக்கையில் தன்னை போலவே வந்த இன்னொரு இளைஞனை சந்திக்கிறார். புன்னகைத்து கொள்கிறார். தன் பிரியமான மேலதிகாரி டெனைசாவிற்காக பரிந்துரை கடிதத்தை எடுத்து கொண்டு உயரதிகார வட்டத்தை சந்திக்கையில் தான் அதிகார வட்டத்தின் நுண் விளையாட்டுகளை புரிந்து கொள்கிறார். ஆனால் நிக்கலஸ் எங்குமே இவற்றை கண்டு உள விலக்கம் கொள்வது கிடையாது. அவருக்கு தான் செல்ல வேண்டிய பாதை தெளிவாகிறது. விதிவசத்தால் தாய் இட்ட ஆணைக்காக இராணுவத்தில் இருந்து விலகி அரசு பணிக்கு செல்கிறார். மேரியை மணந்த பின் கோமகன் அந்தஸ்த்துடன் முழுநேர தீவிர விவசாயியாக மாறிவிடுகிறார். அந்த விவாசய மனநிலைகளை படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நூற்றாண்டு காலங்கள் தாண்டியும் வெறொரு மண்ணில் இருந்தும் அதே விவசாய மனநிலையை என் தந்தையில் எஞ்சியிருக்கும் விவசாயின் சொற்களில் காண்பதுண்டு.

நிக்கலஸின் பொறுப்பான தன்மையிலும் கூட ஒருவளர்ச்சியை காண்கிறோம். முதலில் தன் தந்தையை போலவே தடுமாறுகிறார். சரிவுகளை சந்திக்கிறார். ஆனால் அவரை காப்பற்றியது அந்த வேட்டையாடும் மனநிலை என்றே தோன்றுகிறது. ஒரு ரஷ்ய வேட்டையின் காட்சியையும் அதன் பின்னுள்ள மனநிலையையும் அந்த பகுதியில் பார்க்கிறோம். அந்த உத்வேகம் தான் நிக்கலஸை சரியாமல் நிற்க செய்கிறது.

கோமகன் இலியாச் ராஸ்டோவும் ஒரு மனிதராக நினைவில் தங்கி உள்ளார். ஆனால் அவரை பற்றி கூறுமளவு ஏதேனும் நினைத்து இருக்கிறேன். அப்படிப்பட்டவர்களை ஒருவகையான அசடுகள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படுதுண்டு. மற்றபடிக்கு எதுவும் தோன்றுவதில்லை.

கோமகளை பற்றி கூற வேண்டுமென்றால் ஒரு அன்னையின் வெவ்வேறு முகங்களை நாம் அவளில பார்த்து கொண்டே வருகிறோம். இறுதியில் மகன் பெட்டியா, கணவர் இலியிச் இருவரும் போனப்பின் ஊக்கம் வடிந்து விடுகிறாள். அப்படிப்பட்ட பெண்களை நாம் கேள்விப்படவும் பார்க்கவும் செய்தபடியே இருக்கிறோம்.

இவர்கள் அல்லாது தன் தேவைக்காக மட்டுமே பிறரை அணுகும் அன்னா மிக்காய்லாவ்னா, வாசைலிச் போன்றவர்களும். இங்கே ஒன்றை கூற வேண்டும், மிக்காய்லாவ்னா முதலில் வாசைலியிடம் உதவி கேட்கிறாள். அதை பெரிதாக எடுத்து கொள்ளாதது காட்டிக்கொள்ளும் வாசைலி பின்னர் போரிஸுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்கிறார். ஏன் அவர் அப்படி செய்தார் என்பது புதிர் தான். ஒருவேளை பின்னர் ஏதாவது அனுகூலங்கள் கிடைக்கும் என அவர் எதிர்ப்பார்த்திருப்பார். மாறாக வியாகூலமடையும்படி செய்து விடுகிறாள் மிக்காய்லாவ்னா. அவள் பியரை பெஜுகாவின் இறப்பிற்கு அழைத்து செல்லும் வாசைலியும் பியரின் மைத்துனியும் உயிலை தேடும் சதி திட்டக்காட்சி மிக சிறப்பானது. அங்கே மிக்காய்லாவ்னா சாமர்த்தியமாக செயல்பட்டு அதை முறியடித்து விடுகிறாள்.

இதே போல நேர்மாறாக கொடுத்து கொள்வது டோலகாவ் – நிக்கலஸ் உறவிலும் நடக்கிறது. பியரின் குண்டுப்பட்ட டோலகாவை நிக்கலஸ் கவனித்து கொள்கிறார். பதிலுக்கு டோலகாவிடமிருந்து தான் ஒரு குண்டடி – அதாவது கடன் – படுகிறார்.
டோலகாவையும் அனடோலையும் ஒரே கூட்டத்தில் தான் சேர்க்க வேண்டும். இன்றுக்கு அப்பால் துளியும் சிந்தனை அற்றவர்கள். தங்கள் இச்சைகளால் வழிநடத்தப்படுபவர்கள். அனடோல் போன்ற ஒருவரால் நட்டாஷா ஈர்க்கப்படுகிறாள். ஓடிப்போக கூட தயராகிறாள். அப்போது அதை எப்படி எடுத்து கொள்வது என்றே தெரியவில்லை. இப்போதும் எழுதும் போது நட்டாஷா அளவுக்கே பியரும் அனடோலால் ஈர்க்கப்படுகிறார் என்ற நினைவு வருகிறது. இருவரையுமே பூமி நோக்கி இழுக்கும் விசையின் சின்னமாகவே அனடோல் தென்படுகிறார். அனடோலை அழைத்து பியர் பீட்டர்பர்க்கிற்கு செல்லும்படி கேட்டுகொள்கையில் அனடோல் அதை ஏற்பது வித்தியாசமானது தான். தன் மேல் எந்த பலத்தையும் செலுத்திவிட முடியாத ஒருமனிதரின் சொல்லுக்கு மதிப்பளிப்பது எதனால் ? ஒருவேளை இனி தன் காரியம் கைக்கூடாது என்ற நினைப்பாலா ? இல்லை, நான் இப்படிப்பபட்ட நல்ல பேர்வழிக்கும் அருள் செய்யும் தனவான் என்ற செருக்காலா ?

போரும் வாழ்வின் கதைமாந்தர்களின் வாழ்க்கையை நிறைய சொல்லிவிட்டேன். இன்னும் நினைவுகள் தோன்றியபடியே இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒழுங்கமைத்து சொல்ல வேண்டும் எனில் இன்னொரு முறை நாவலை வாசிக்க வேண்டும். இப்போது சொன்ன வரைக்கும் அதன் முதுகெலும்பான சம்பவங்களை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் நிறைவே இல்லை. மீண்டும் வாசிக்க வேண்டும்.

போர்க்காட்சிகளையும் நடவடிக்கைகளையும் பொறுத்தவரை கலைந்து கலைந்து காட்சிகளாக மட்டுமே நினைவில் தங்கி உள்ளதை தெளிவாக உணர முடிகிறது. மனதில் முக்கியமாக நிற்கும் மனிதர் என்றால் அது குட்டுஜோவும் நெப்போலியனும் தான். அதிலும் டால்ஸ்டாய் காட்டும் குட்டுஜோவ் ஒருபடி மேலானவர். நெப்போலியனை தலைக்கனத்தால் கண் தெரியாது போன குருடனாக தான் டால்ஸ்டாய் பார்க்கிறார் என்றால் மிகையில்லை. குட்டுஜோவை ஒருபடி மேலாக தன் எல்லைகளை உணர்ந்து செயலாற்றுபவராக காண்கிறார். இருந்தாலும் இருவரையும் வரலாற்றின் போக்கில் உருவான மனிதர்கள் என்பதற்கப்பால் துளி கூடுதல் மரியாதையும் கொடுப்பதில்லை. ஜாரை பற்றி இன்னும் குறைவாகவே எழுதி உள்ளார். டால்ஸ்டாய் வரலாற்று நோக்கு இன்றும் கூட பொது போக்கில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. அவர் மக்களையோ மன்னர்களையோ ஆற்றல் மூலங்களாக பார்ப்பது இல்லை. கால்வாயில் நீர் போவது போல மக்கள் வழியாகவும் மன்னர் வழியாகவும் வரலாறு என்ற சக்தி – நாம் மொழியில் ஊழ் எனலாம் – செல்கிறது. அதன் தன்மையை எப்படி கணக்கிடலாம் என்பது குறித்த தத்துவ விசாரமாகவே பின்னுரை பகுதிகள் அமைந்துள்ளன.

குட்டுஜோவின் இரண்டு முக்கியமான துணைவர்கள் காலமும் பொறுமையும். அவர் போர்க்களத்தில் நாவல் படித்து கொண்டிருந்தார் என்று வாசிக்கையில் வெண்முரசின் இளைய யாதவரின் சில சாயல்கள் நினைவிற்கு வந்தது. அவரை சுற்றி அதிகாரத்தை அடையத் துடிக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எவருக்குமோ பொது நன்மையின் மீது உண்மையான எந்த ஈடுபாடும் இல்லை. தங்கள் சுய லாபங்களுக்காக வெவ்வேறு திட்டங்களை தீட்டி கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்க அடியில் கண்ணுக்கு தெரியாது அந்த இயந்திரத்தில் உராய்வை உண்டாக்கபடி நடக்கும் டாக்டுரானோவ் போன்ற அதிகாரிகளும் இருக்கிறார்கள். இந்த வகையான அதிகார பேதங்களில் இருந்து சலிப்படைந்து வெளியேறி கொள்ளும் ஆண்ட்ரூவும் இருக்கிறார்.

நாவலை வாசித்த பின் விக்கிபீடியா பக்கத்தை திறந்து வாசித்து கொண்டிருந்தேன். இந்நாவல் வெளிவந்த காலத்தில் வடிவம் சார்ந்த ஒரு புரியாமை இருந்ததை காட்டியிருந்தது. எல்லா பேரிலக்கியங்களுக்கும் நடப்பது தான், புதிது ஒன்றுமில்லை. ஆனால் இன்று பேரிலக்கிய தகுதி கொண்ட நாவல்களுக்கான வடிவ இலக்கணமாகவே போரும் வாழ்வும் நிலைபெற்று விட்டது. எனக்கு உடனடியாக நான் நீண்ட காலம் எடுத்து வாசித்த வெண்முரசு நினைவுக்கு வந்தது. இந்நாவல் வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் தனக்குள் பொதிந்து வைத்து கொள்ளும் தோற்றத்தை அடைகிறது. அது வாழ்வை போலவே இதனை முடிவில்லாமல் விரித்து கொள்ளும் சாத்தியத்தை அளிக்கிறது. இப்போது எழுதும் போது எத்தனை விதமான வெவ்வேறான வாழ்க்கைகள் ஒன்று கூடி இருக்கிறது என நினைவெழுந்து பிரமிப்படைகிறேன். நான் நினைத்தவற்றை முழுவதுமாக எழுத இயலவில்லை. அதற்கு மொழி போதாமையும் வாசிப்பின் போதாமையும் மிகுதியாகவே இருக்கிறது. சிலநாள்கள் கழித்து வாசிக்கையில் எதையெல்லாம் எழுதியிருக்கிறேன், எவற்றையெல்லாம் எழுத நினைத்து எழுதாமல் விட்டுவிட்டேன் என்று தெரியும். அடுத்தமுறை வாசித்து எழுதும் போது முன்னகர்ந்திருக்கிறேனா என்று பார்த்து கொள்ளலாம்.

அன்புடன்
சக்திவேல்

போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…

போரும் அமைதியும் வாசிப்பும்

தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

முந்தைய கட்டுரைபிரபந்தம், கடிதம்
அடுத்த கட்டுரைகோ.முனியாண்டி