அண்மையில் ஒரு புகழ்மிக்க ஆளுமையின் மகள் தற்கொலை செய்துகொண்டார். அதையொட்டி முகநூலில் எங்கு பார்த்தாலும் ‘பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும்’ என ஆளாளுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இம்மாதிரி ஒன்று நிகழ்ந்தால் அதற்கு பெற்றோரே முழுப்பொறுப்பு என்று சித்தரிப்பது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. இந்த மாதிரி நிகழ்வுகளில் உண்மையிலேயே பெற்றோரின் பங்கு என்ன? (என் தனிப்பட்ட கேள்வி இது. ஏனென்று உங்களுக்கு தெரியும்)
எம்
அன்புள்ள எம்,
எந்த ஒரு நிகழ்விலும் அதற்கு எவரையேனும் பொறுப்பாக்குதல் இங்கே பொதுப்புத்தியில் உள்ளது. சமூகம், அரசாங்கம், பெற்றோர், நிறுவனங்கள் எதையாவது குற்றம்சாட்டி நிறைவடைகிறார்கள்.
இணையவெளி என்பது பொதுப்படையான கருத்துக்களின் இடம். அங்கே முச்சந்தி அரட்டைதான் இன்னொருவகையில் நிகழ்கிறது. அது இன்னொருவரின் துயரில் மகிழும் உள்ளம் கொண்டது. அந்த மகிழ்வை போலி அனுதாபம் ,ஆலோசனை, சமூக அலசல் என விதவிதமான பாவனைகளில் கொண்டாடுகிறார்கள். அதை தவிர்த்துவிடுங்கள்.
இத்தகைய முடிவுகளுக்கு அகமும் புறமும் காரணங்கள் உள்ளன. அகக்காரணங்களே முதன்மையானவை. இன்றைய ஆய்வுகள் அகக்காரணங்களில் பெரும்பாலானவை மூளை சார்ந்தவை என்றே காட்டுகின்றன. மூளைநரம்பியல் மனித உள்ளம் என்பதை ஒருவகை மூளைரசாயனச் செயல்பாடாக விளக்குகிறது. 2000 த்தில் ஆலிவர் சாக்ஸ் போன்றவர்களின் ஆய்வுகளை முன்வைத்து இதை சொல் புதிது இதழிலேயே விவாதித்துள்ளோம்.
பழைய உளவியல் சார்ந்த கருத்துக்கள், உளவியல் ஆலோசனை முறைகளெல்லாம் ஓரளவுக்குமேல் பயனற்றவை என்றே இன்றைய மருத்துவம் சொல்கிறது. இயல்புநிலையில், எண்ணங்களின் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே உளவியல் ஆலோசனைகள் பயன் அளிப்பவை. எந்த வகை ஆலோசனைகளென்றாலும்.
இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் ஆழ்ந்த சோர்வு, அகநெருக்கடி போன்றவற்றுக்கு மூளையின் ரசாயன மாற்றங்களே பெரும்பாலும் காரணம். அதாவது பிற உளச்சிதைவுகள், உளப்பிளவுகளைப்போலவேதான் இதுவும். அவை பெரும்பாலும் பாரம்பரியமானவை. பலவகையான நரம்புப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவை. அரிதாகச் சில மருந்துகளும் இச்சோர்வை உருவாக்குவதுண்டு என்கிறார்கள்.
வெளிக்காரணங்கள் சமூகம் சார்ந்தவை. இன்றைய சூழல் அளிக்கும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சார்ந்தவை. அகக்காரணிகள் புறக்காரணிகளை கண்டடைந்து பெருக்கிக்கொள்கின்றன. புறக்காரணிகள் அகக்காரணிகளை வளர்க்கின்றன.
பிள்ளைகளைப் பெற்றோர் ‘வளர்க்கிறார்கள்’ என்பது போல பொய் ஏதுமில்லை. பிள்ளைகளின் ஆளுமையில் ஒரு பங்களிப்பை மட்டுமே பெற்றோர் அளிக்கமுடியும். அதுவும் தலைமுறை தோறும் பிரமிப்பூட்டுமளவுக்கு குறைந்து வருகிறது. பிள்ளைகளை திட்டமிட்டு வளர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பெற்றோர் ஒருவகை மாய உலகில் வாழ்பவர்கள். எல்லாம் சரியாக இருக்கும் வரை சொல்லிக்கொள்ளலாம், அவ்வளவுதான்.
குழந்தைகள் தனிமனிதர்கள். தனி மூளைகள். அங்கே என்ன நிகழ்கிறதென்பது எவராலும் சொல்லிவிட முடியாதது. பெற்றோர் தங்கள் மரபணுத்தொடர்ச்சியை அளிக்கிறார்கள். அத்துடன் பிள்ளைகளுக்கு ஒரு குடும்பச் சூழலை உருவாக்கி கொடுக்கிறார்கள். அவ்வளவுதான் பெற்றோரின் பங்களிப்பு.
குறைவாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமோ வழிகாட்டியோ ஆகிறார்கள். அதுவும்கூட பெற்றோரை கண்டு பிள்ளைகள் இயல்பாக அப்படி முன்னுதாரணமாகக் கொள்வதுதானே ஒழிய எவரும் முன்னுதாரணமாக திட்டமிட்டு திகழ முடியாது. அக்குழந்தையின் உணர்வுகளும் அறிவுநிலையும் பெற்றோரை ஏற்கும் சாதகநிலையில் இருக்கவேண்டும். அந்தச் செல்வாக்குகூட மிக நீண்ட கால அளவில் நிகழ்வது மட்டுமே.
இன்றைய சூழலில் மிக இளம் அகவையிலேயே குழந்தைகள் வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுவிடுகின்றன. அனேகமாக பேச்சு வருவதற்கு முன்னரே . கல்விநிலையங்களில் நம் சமூகத்தின் சிறிய ’மாதிரி வடிவம்’ உள்ளது. சமூகத்தின் நம்பிக்கைகள், சிந்தனைகள், மோஸ்தர்கள் எல்லாமே உள்ளன. அவை ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு களத்தை உருவாக்கி அளிக்கின்றன. அங்குதான் அப்பிள்ளைகள் தங்கள் தனித்தன்மையை கொண்டு முட்டி மோதி தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன.
மிக இளம் வயதிலேயே இன்று பிள்ளைகளை தகவல் தொழில் நுட்பம் வந்து எடுத்துக்கொள்கிறது. அவர்கள் அதனூடாக உலகுடன் தொடர்பு கொள்கிறார்கள். இன்றைய பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் வெளியுலகிலிருந்து சிந்தனைகள், மோஸ்தர்கள், செய்திகள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
பிள்ளைகளின் தனிமூளையின் விளைவான அகஇயல்புகளும் இந்த வகையான வெளிச்சூழலும் இரு விசைகளாகச் செயல்படுகின்றன. அவை இணையும் ஒரு சமரசப்புள்ளியாக அப்பிள்ளைகளின் இயல்பு உருவாகிறது. அவ்வியல்பும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகள், பரிணாமங்கள் வழியாகக் கடந்துசெல்கிறது. அவையே அந்த பிள்ளைகளின் அடையாளமாக காலப்போக்கில் ஆகிறது.
இன்றைய நவீன உலகம் தனிநபர் அந்தரங்கங்களை பேணுவது. ஒருவர் உலகில் இன்னொருவர் நுழையவே முடியாது. உங்கள் பிள்ளைகளின் உலகில் சிறு பகுதியையே நீங்கள் அறிய முடியும். இந்நிலையில் எந்தப்பெற்றோரும் பிள்ளைகளை முழுக்க அறிந்திருப்பதோ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோ வழிகாட்டுவதோ இயல்வது அல்ல. அதெல்லாம் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமே.
எல்லா அகவையிலும் மானுட உள்ளம் தனித்துவம் கொண்டதே. ஒரு தனி உள்ளம் என்பது எவ்வளவு சிக்கலானது, எவ்வளவு தற்செயல்கள் வழியாக அது திகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதையே இலக்கியம் பேசுகிறது. இலக்கியவாசிப்பு என்பது அந்த நுண்மையை உணர்வதற்காகத்தான். பிள்ளைகளை ‘வடிவமைப்பது’ ‘வார்த்தெடுப்பது’ போன்ற அபத்தங்களை கொஞ்சம் நுண்ணுணர்வு கொண்டவர்கள் சொல்ல மாட்டார்கள்.
பலநூறு சரடுகள் பின்னிப்பின்னி உருவாகும் உள்ளம் எனும் நிகழ்வின் பல்லாயிரம் தற்செயல்புள்ளிகளில் ஒரு தருணம். அதை ஊழ் என்று கொண்டால் அதுவும் ஒருவகையில் சரிதான். அதற்குமேல் பொறுப்போ பழியோ எவருக்கும் இல்லை. எவரும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியதுமில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வதில் ஒரு தன்வதை உள்ளது. ஆனால் நுட்பமாகப் பார்த்தால் அது அகங்காரமும்கூட.
ஜெ