ஆயுர்வேதம், கடிதம்

இடது கையின் கட்டை விரலையும் சுண்டு விரலையும் கொண்டு வலது கை மணிக்கட்டை பிடியுங்கள். இரு விரல்களும் தொடவில்லை என்றால் நீங்கள் கபப் பிரகிருதி. தொட்டால் பித்தம். தொட்டு ஒன்றை ஒன்று தழுவித் தாண்டி நீண்டால் வாதப் பிரகிருதி.

சுனீல் சொன்னதுடன் வகுப்பில் ஒரே சலசலப்பு. பிரகிருதி ஒருவரது உடல் மற்றும் மனதின் இயல்பு. வாதப் பிரகிருதி லகுத்தன்மை கொண்டது கபம் கனமானது என்று வகுப்பில் சுனீல் சொல்லியிருந்தார். லகு என்ற சொல்லே இனியது, சுறுசுறுப்பானது. எனவே, கபமாக இருந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டு விரல்களை ஒட்டவைக்க முயன்றோர் உண்டு.

இது தோராயமான உத்தி. தோராயமான இன்னொரு உத்தி உண்டு. கால் கட்டை விரலுக்கும் பக்கத்து விரலுக்கும் உயரம் சமமாக இருந்தால் பித்தம். கட்டை விரல் நீளமாக இருந்தால் கபம். பக்கத்து விரல் நீளமாக இருந்தால் வாதம். முதல் உத்தி ஒருவரை கபமாகவும், இரண்டாவது உத்தி அவரையே பித்தமாகவும் அடையாளப்படுத்துவதும் நடந்தது.

பின்னர் ஒவ்வொரு பிரகிருதிக்கும் 30 கேள்விகள் கொண்ட பட்டியல். அதில் தூக்கம், கனவு, தாகம், வியர்வை, உடல், நிறம், உறவு, மனம், பணம் என பல கோணங்களில் கேட்கப்பட்ட கேள்விகளைக்கொண்டு பிரகிருதியை கண்டுபிடித்து ஒரு முடிவுக்கு வந்தோம்.

ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தியாவது தனது பிரகிருதியைக் கண்டுபிடிக்க வெளிநாட்டவர் ஆர்வம் காட்டுவது உண்டாம். முகாமில் இரு அமர்வுகளில் கற்பிக்கப்பட்ட ஆயுர்வேத மெய்யியல் கூறுகளில் பிரகிருதியும் ஒன்று. இதைக் கற்றவுடன் மருத்துவராகிவிட்டோம் என ஒரு மயக்கம் வரும், நம்பிவிடவேண்டாம் என சுனீல் எச்சரித்தார். முன் தயாரிப்பாக ஆயுர்வேத வரலாறு மற்றும் மெய்யியல் வகுப்புகளுக்குப் பிறகே இந்த பிரகிருதி மதிப்பீடு நடந்தது. வாதம், பித்தம், கபம் என்னும் முக்குற்றங்கள் பிரகிருதியை சமைக்கின்றன. இந்த முக்குற்றங்களுக்கும் ஐம்பூதங்களுக்கும், ரஜோ சத்வ தாமசம் என்னும் மூன்று குணங்களுக்கும், ஆறு சுவைகளுக்கும், சூடு/குளிர்ச்சி போன்ற ஆறு குணங்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவு பற்றி இந்த வகுப்பில் கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த ஆயுர்வேத மெய்யியல்தான் நமது பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படை சட்டகம்.

வகுப்பில் முதல் ஆச்சரியம் ஆயுர்வேதத்தில் அனைவருக்குமான மருந்து என ஒன்று இல்லை. வாதப் பிரகிருதி கொண்ட ஒரு நோயாளிக்கு வறட்டு இருமல் இருந்தால் கொடுக்கும் மருந்துக்கும், கபப் பிரகிருதி கொண்ட ஒருவருக்கு வறட்டு இருமல் இருந்தால் கொடுக்கும் மருந்துக்கும் வித்தியாசம் உண்டு. ஒரே நோய்க்கு பல்வேறு மருந்துகளும் உண்டு. மருத்துவர்களும் அவர்களது அனுபவத்திலிருந்து நன்கு பலனளிக்கும் மருந்துகள் என்றொரு பட்டியலை இறுதிசெய்து வைத்திருப்பார்கள். அதனால்தான் ஒரு வியாதிக்கு ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு மருந்து கொடுக்கக்கூடும். அது சரியாக பலனளிக்கவும் கூடும்.

இது ஆயுர்வேதத்தின் பலம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக வகுத்து அவரது நோய்க்காரணிகளை ஆராய்ந்து ஒரு மருத்துவர் தனிப்பட்ட சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அதுவே ஆயுர்வேதத்தின் பலவீனமும் கூட. ஒற்றை ஆயுர்வேத மருந்தை, ஜூரத்துக்கு பாராசிட்டமால் போல, அனைவருக்கும் பரிந்துரைக்க முடியாது. பரிந்துரைக்கவும் கூடாது. அதனால்தான் நிலவேம்பு குடிநீரை தினமும் குடிப்பது ஆயுர்வேதத்துக்கு ஏற்புடையது அன்று. மருந்து உணவாகாது. எற்கனவே அல்சர் இருக்கும் ஒருவருக்கும், இல்லாதவருக்கும் மருந்து வெவ்வேறாகத்தானே இருக்க முடியும்.

இதில் சுவாரசியமானது, ஆயுர்வேதத்தின் ஒளி மங்கி, மேலை நாட்டு ஆங்கில மருத்துவம் பெருமளவு பரவியதற்கு ஆயுர்வேதத்தின் தனிப்பட்ட சிகிச்சை என்ற தனித்துவமே காரணமாகியதுதான். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெருந்தொற்றுகளை சமாளிக்க மேலை மருத்துவம் பெருமளவு உதவியது. அதனால் மக்களிடையே பரவலாக ஏற்கப்பட்டது. அந்நேரத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்து, அவர்களுக்கு தனித்தனியாக மருந்து தயாரிப்பது சிறு எண்ணிக்கையிலான ஆயுர்வேத மருத்துவர்களால் இயல்வதாக இருக்கவில்லை.

மற்றொரு காரணம், வெள்ளை கோட்டும், கழுத்தில் பாம்பு போல ஒரு கருவியும் அணிந்த மருத்துவரைக்கண்டு ஊரில் அனைவரும் பயந்து ஒளிந்துகொள்ளும் போக்கு மாறி, மருத்துவர் வீட்டுக்கு வருவது பெருமையாக கருதப்படலானது. அறிமுக நாட்களில் செல்வாக்கானவர்கள் வீட்டுக்கு மட்டமே மருத்துவர் அழைத்து வரப்பட்டார். அதை நடுத்தர வர்க்கத்து மக்களும் நகல் எடுப்பதுதானே இயல்பு.

இப்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவ்விரண்டு கூறுகளுமே ஆயுர்வேதத்துக்கு ஏதுவாக வேலைசெய்ய ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார் சுனீல். சுனீலின் மனைவியும் ஆயுர்வேத மருத்துவர். இருவரும் 80க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனாவின்போது சிகிழ்ச்சை அளித்திருக்கின்றனர். அனைவரையும் உயிருடன் மீட்டிருக்கின்றனர். பெருந்தொற்றிலும் ஆயுர்வேதம் நல்ல பலனளித்திருக்கிறது. நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களின் மருந்துகளும் இப்போது பரவலாக கிடைக்கின்றன. மருந்து தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் ஊழியர்களுக்கு கொரோனா வந்து அந்த இடம் மூடப்பட்டதால் வந்த மருந்து தட்டுப்பாட்டைத் தவிர, ஆயுர்வேத மருந்துகளுக்கு பஞ்சமில்லை.

மேலும் இப்போது செல்வந்தர்கள் ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை எடுத்துக்கொள்வது வாடிக்கை ஆகிவிட்டதால், கூடிய விரைவில் பொதுசமூகம் அதையும் நகல் எடுத்து ஆயுர்வேதத்துக்குள் வந்துவிடும் என்று நம்பலாம்.

இந்தியாவில் மன்னராட்சியின்போது ஆயுர்வேத மருத்துவர்கள் அரசவை மருத்துவர்களாக இருந்துள்ளனர். பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆயுர்வேதம் வீழ்ச்சியடைகிறது. 2020 கொரோனா காலகட்டத்தில் ஆயுர்வேதம் மீண்டும் எழுச்சியடைகிறது. இது சுனீல் மட்டுமே சொல்லக்கூடிய ஆயுர்வேத வரலாற்று சித்திரம். மெய்யியல், நோய் காரணி சிகிச்சை போன்றவை கூட நூல்களில் கிடைக்கும் ஆனால் இந்த வரலாறு அவரே தயாரித்த உள்ளடக்கம் என்றார். ஆயுர்வேதத்தின் தொடக்கத்தை புத்தரின் ஜாதகக் கதைகளில்கூட பார்க்க முடியும். மக்கள் மருத்துவம் திரண்டு, சரகர், சுசுருதர் மற்றும் சாரங்கதரரின் சம்ஹிதைகளாக வளரும் விதத்தை விளக்கியிருந்தார். சுவாரசியமாக, இந்த சம்ஹிதைகள்கூட நம் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிட வாய்ப்பு இருந்திருக்கிறது. ஒரு கும்பல் ஸ்தூபிக்களை, அதனடியில் இருக்கும் புதையலுக்காக கொள்ளையடிக்கும்போது இந்த சம்ஹிதைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயுர்வேத வரலாறு பற்றிய வகுப்பு, ஆயுர்வேதத்தின் சமூக ஏற்பு ஏறுமுகமாக இருப்பதைக் காட்டியது. மக்கள் ஆயுர்வேதத்துக்குள் வந்துவிடுவார்கள். ஆனால் மருத்துவர்கள் ஆயுர்வேதத்துக்குள் வருவார்களா என்பதுதான் கேள்வி. ஆயுர்வேதத்துக்கு மருத்துவர்கள் வருவதற்கான தடையாக ஆயுர்வேத உயர்கல்விக்கான சமூக அங்கீகாரம் இல்லாமை, பொருளியல் ஆதாயங்கள் இல்லாமை அனைத்தும் சுட்டப்படலாம். அவை நடைமுறை உண்மைகள்தான்.

ஆனால் என்னைப் பொருத்தவரை ஆயுர்வேதத்தை நம்பி ஏற்கும் ஒருவர் முதலில் தாண்ட வேண்டிய முக்கியமான தடை ஒன்று உள்ளது. ஆயுர்வேதத்தின்படி ஒருவனது நோய்க்கு அவனது பாவங்களே காரணம். ஒரு நோயாளியை குணப்படுத்தும் மருத்துவன் அவனது பாவங்களைப் பெற்றுக்கொள்கிறான். எனவே மருத்துவன் பல மடங்கு புண்ணியம் செய்து நோயாளியிடமிருந்து பெற்ற பாவங்களையும் தீர்க்க வேண்டும். கட்டணமாக வாங்கிய பணத்தையும்கூட தர்மகாரியங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும். முற்றிலும் தலைகீழான ஒரு தர்க்கம்.

முதலில் இது என்ன அநீதி என்று தோன்றியது. ஆனால் தனித்துவமானதும்கூட என உணர முடிந்தது. இன்றைய நடைமுறைக்கு இது ஒத்திசையாமல் போகலாம். ஆனால் மானுடர்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டு, நல்லனவற்றை திரும்ப அளிப்பதையே அடிப்படையாகக்கொண்ட ஒரு மருத்துவ மரபு இந்நிலத்தில் தழைத்து வளர்ந்திருக்கிறது என்பது நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றுதான். “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலில் ரஷ்யாவில் வன்முறைக்கு உடல் சிதைந்து பலியான குழந்தைகள் ஏசுவை சந்திக்கும் காட்சி ஒன்று உள்ளது. “உன்மீது ஏன் இத்தனை புண்கள் ஏசுவே?” என குழந்தைகள் கேட்க, “உன்மீது புண்கள் உள்ளவரை என் மீதும் புண்கள் வேண்டாமா? உன் வலி என் வலியல்லவா? நான் உன் தேவனல்லவா?” என்று ஏசு பதில் சொல்லும் தருணம்தான் நாவலின் உச்சம். கண்கள் பொங்க, கடக்க முடியாமல் நின்ற வரிகள். ஆயுர்வேதத்தினுடையதும் அதேதான். உன் பாவங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு மருத்துவனை சொல்ல வைத்த மரபு. வகுப்பில் பெரும் மன எழுச்சியை அடைந்த தருணம் அது.

ஆயுர்வேத வரலாறு, மெய்யியல் வகுப்புகளுக்குப் பிறகு நோய் அறிகுறிகள், காரணிகள் மற்றும் சிகிச்சை முறை பற்றிய வகுப்பு. ஆயுர்வேதத்தில் ஒவ்வொன்றும் இழைகளைக் கொண்ட சிலந்தி வலையேதான். சிக்கலும் நேர்த்தியும் ஒத்திசைந்த ஒரு சட்டகம். ஏற்கனவே முக்குற்றங்கள் எப்படி ஐம்பூதங்களுடனும், சுவையுடனும், காலத்துடனும், குணங்களுடனும், தாதுக்களுடனும் பின்னிப் பிணைந்துள்ளன என்று பார்க்க முடிந்தது.

நோயும் அதே சிலந்தி வலைதான். நோய் காரணிகளை எடுத்துக்கொண்டால் முன்வினை, உணவு, செயல், சூக்ஷம சரீரத்தில் (மனதில்) இருக்கும் அழுத்தம் ஸ்தூல சரீரத்தில் நோயாக வெளிப்படுவது, நாளங்களில் கோளாறு, கால மாற்றம், மற்றும் வயது என பல காரணிகள் இருக்கலாம்.

சுவாரசியமாக, தவறு என்று தெரிந்தே மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் செயல்களால் வரும் நோயும் உள்ளது. சுனீலின் இயல்பு ஒன்று நன்கு வெளிப்படுவது இங்குதான். மனசாட்சிக்கு விரோதமாக நாம் ஏதேனும் தீவிரமாக எதிர்பார்க்க, அவர் அந்த அளவு தீவிரமானவை மட்டுமல்ல, எளிமையாக “நடைபயிற்சிக்கு சென்று வடை சாப்பிடுவதையும், நல்ல மழையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும்” கூட மனசாட்சிக்கு விரோதமானது என்று முடித்துக்கொள்வார்.

இவையெல்லாம் நோய்க்கான காரணிகள். ஆனால் ஆயுர்வேதம் நோயின் அறிகுறிகளைக் கொண்டுதான் சிகிச்சையை முடிவு செய்கிறது. சரகரின் அபாரமான உவமை ஒன்று உள்ளது. பறவை என்று ஒன்று உள்ளது என அறிய பறவையின் நிழல் போதும். ஆயுர்வேதம் நிழலைக்கொண்டு நோயை அனுமானித்து சிகிச்சை அளிப்பது. அதற்குள் தர்க்கபூர்வமான சட்டகம் உள்ளது. ஆனால் அது நவீன அறிவியலின் தர்க்கம் இல்லை. நவீன அறிவியலின் ஏற்பை எதிர்பார்ப்பதும் இல்லை.

வகுப்புகள் நகர நகர நண்பர்கள் கற்றவற்றை உரையாடலுக்குள் இணைத்துக் கொள்வதும் நாட்களை இனிமையாக்கியது. உணவு இடைவேளையின்போது வைக்கப்பட்டிருந்த சாதம், குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், அருகே இருந்த உப்பு, இனிப்பு அனைத்துக்கும் வாதம் பித்தம் கபம் என பெயர் சூட்டியபடி இருந்தனர். மருத்துவத்துக்கு வெளியே பிரகிருதி என்ற கருதுகோளின் நடைமுறை பயன்பாடுகள் பற்றி வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே சுனீல் பிரகிருதியைக் கொண்டு ஒருவன் அரசனா, அமைச்சனா என்று ஊகிக்கலாம் என சொல்லியிருந்தார். நான் அலுவலகத்தில் பணிக்கு ஆள் அமர்த்தவே இதை பயன்படுத்தலாம் என்றேன். அனைத்து பிரகிருதியும் சேர்ந்த கலவை ஒரு நல்ல அணியாக அமையக்கூடும். விக்னேஷ் ஒரு வக்கீல் தனது கட்சிக்காரரை தேர்ந்தெடுக்கக் கூட இதை பயன்படுத்தலாம் என்றார்.

கடைசி நாள் காலை குடிலில் ஒரு உரையாடல். ஒருவர் “குடில் மலை உச்சியிலிருந்தும், இரவெல்லாம் மின்விசிறி ஓடியும் சூடுதாங்காமல் வியர்வை இருந்தது.” என்றார். அதே குடிலில் இருந்த மற்றொருவர் ஆச்சரியமாக, “மின்விசிறி இல்லாமலேயே குளிர் தங்கவில்லை. அது ஓட ஆரம்பித்தபிறகு எனக்கு நடுங்கவே ஆரம்பித்துவிட்டது” என்றார். பார்த்தாலே ஒருவர் வாதப் பிரகிருதி என்றும் மற்றொருவர் கபப் பிரகிருதி என்றும் தெரிந்தது. நான் அந்தியூர் மணி அண்ணனிடம் சொன்னேன், “இனி வகுப்புகளுக்கு வருபவர்களுக்கு கட்டை விரலும், சுண்டு விரலும் கொண்டு மணிக்கட்டை சுற்றிப்பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். வாதர்களுக்கு ஒரு குடில், பித்தர்களுக்கு வேறு குடில், கபர்களுக்கு பிறிதொரு குடில். சுபம்.”

ஒரு புதிய அறிவுத்துறை பற்றிய திறப்பு அனைவரிலும் பற்றி வளர்வதை உணர முடிந்தது.

இந்த முகாமின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கலும் உண்டு. வகுப்பு பெரும்பாலும் நோய் பற்றியது. வகுப்பில் நோய் பற்றி பேசப்படும்போதெல்லாம் தனக்கோ, குடும்பத்துக்கோ அந்த நோய் இருந்தால் அதற்கு என்ன சிகிச்சை என்ற கேள்வி எழுந்துவிடும். அனைவருமே இதை அறிவுத்துறையாக பார்த்து கற்றுக்கொள்ள முயன்றாலும் நடைமுறை சிக்கல்கள் கேள்வியாக எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் சுனீல் தனிப்பட்ட கேள்விகளையெல்லாம் இலகுவாக அதன் பின்னிருக்கும் கருதுகோள்கள் பக்கம் நகர்த்திச் சென்று வகுப்பு திசைமாறிச் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டார். தனிப்பட்ட கேள்விகள் இருப்போருக்கு உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரங்களில் அவரது அறையில் நேரம் ஒதுக்கினார். பொதுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் கேட்டவர் ஊருக்கு அருகில் இருக்கும் நம்பகமான மருத்துவமனை அல்லது மருத்துவர் பெயர்களை பரிந்துரைத்தார். சொந்தமாக மருத்துவத்தை செய்து பார்க்க வேண்டாம் என்பதுதான் அவரது முக்கியமாக வலியுறுத்தியது.

ஆயுர்வேதத்துக்கு சுனீலைவிட பொருத்தமான ஆசிரியர் அமைத்திருக்க முடியாது. சிறப்பான வகுப்புகள் வழியே ஆயுர்வேத வரலாறு, மெய்யியல், பிழைப்புரிதல்கள், நோயறிதல், நோய்க்காரணி, நோய் சிகிச்சை மற்றும் ஆயுர்வேதம் தீர்வளிக்காத நோய்கள் என்று விரிவான வரைபடத்தை அறிய முடிந்தது. வகுப்புகளுக்கு வெளியே சுனீலிடம் காந்தியம், போராட்ட வழிமுறைகள் பற்றிய உரையாடல்கள் என கற்றுக்கொண்டே இருந்த மூன்று நாட்கள்.

இரண்டாவது நாள் இரவு இடைவேளை. மரணம் பற்றி சுனீல் பேசிக்கொண்டிருந்தார். எத்தனை அறிவார்ந்த வகுப்பாக இருந்தாலும், மரணத்தை பற்றிய அறிதல் என்றவுடன் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது. மரணம் அணுகுவதை முன்னரே அறிய ஆயுர்வேதம் சில அறிகுறிகளை வகுத்துள்ளது. மரணத்துக்கான முன்னறிவிப்புகளில் கனவுக்கு முக்கிய இடம் உண்டு என்றார். “உதாரணமாக, கனவில் நாய்கள் பூட்…” என்று சுனீல் ஆரம்பிக்க, இரவு தூக்கத்தை தொலைப்பது உறுதி என்று சொல்லி அவரை தடுத்து நிறுத்திவிட்டோம். சுனீலிடம் பேசவே வேண்டாம் என ஒருமித்த குரலில் எல்லோரும் கேட்டுக்கொண்டது மரணத்தின் முன்னறிவிப்பு பற்றி மட்டும்தான். அவர் சொன்னதாலேயே அந்தக் கனவு வந்தால் என்னாவது.

சுனீலுக்கும் உங்களுக்கும் நன்றி

பா.விஜயபாரதி

சென்னை

 

முந்தைய கட்டுரைமார்க்ஸிய வகுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைதி.ஜ.ரங்கநாதன்