எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

bhaira

 

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில்.

1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட போது பைரப்பாவும் அவரது நண்பர்களும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். அனந்தமூர்த்திக்காக இந்தியா முழுக்க உள்ள எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் ஆதரவு திரட்டியபோது இப்படி கன்னடத்தவர் ஒருவரே எதிர்த்து பிரச்சாரம் செய்தது சில கன்னட தேசியவாதிகளை கோபப்படுத்தியது. அதற்கு அனந்தமூர்த்தி இவ்வாறு பதிலளித்தார். “நான் சோஷலிஸ்ட் அணுகுமுறை உடையவன். பைரப்பா மரபுவழி அணுகுமுறை உடையவர். இந்த இரு முனைகளும் மோதி உரையாடியதன் விளைவாகவே கன்னடத்தில் சிறந்த படைப்புச்சூழல் உருவாயிற்று. எனது எதிர்முனையான அவரே நான் கன்னடத்தில் மிக மதிக்கும் படைப்பாளி. இந்தப் போட்டியில் நானும் அவரும் ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர் தன் எதிர்ப்பை நிறுத்திவிட்டிருந்தாரென்றால், நான் ஆழமான ஏமாற்றம் அடைந்திருப்பேன். அவர் மீதான மதிப்பும் சரிந்திருக்கும்……“ பைரப்பாவின் தரப்பைச் சேர்ந்த எச். எஸ். சிவப்பிரகாஷை சாகித்ய அகாதமியின் முக்கியப் பொறுப்புகளுக்கு சிபாரிசு செய்யவும் அனந்தமூர்த்தி தயங்கவில்லை. அனந்தமூர்த்தியைப் புரிந்து கொள்ள பைரப்பாவையும் புரிந்து கொண்டாக வேண்டும்.

அனந்தமூர்த்தி நவீனத்துவ[ கன்னடத்தில் நவ்யா] இயக்கத்தின் பிதாமகர்களுள் ஒருவர். நேரடியான கச்சிதமான நடையில் மரபை விமரிசிக்கவும் நிராகரிக்கவும் எள்ளிநகையாடவும் கூடியவர். ஆழமான அதிர்ச்சிகளையும் அலைகளையும் உருவாக்கிய எழுத்து அவருடையது. சம்ஸ்காரா, அவஸ்தே, கடஸ்ராத்தா, பாரதீபுரா போன்ற அவரது ஆக்கங்கள் முக்கியமானவை. கறாரான திறனாய்வு நோக்கில் சிவராம காரந்த் முதலிய முன்னோடிகளை ஆய்வுசெய்து ஏற்பும் மறுப்பும் செய்தவர். அவரை முழுமையாக எதிர்க்கும் மரபுவாதி என பைரப்பாவைச் சொல்லலாம். ஆனால் பைரப்பாவின் மரபு நோக்கு என்பது பழமைச்சார்பு அல்ல. விமரிசனநோக்கு இல்லாததும் அல்ல. மாறாக அனந்தமூர்த்தியைவிடவும் கூரிய நோக்கில் மரபை தொடர்ந்து உடைத்து ஆராய்ந்தவர் அவர். ஆனால் அதற்குரிய இடமும் மரபிலேயே உள்ளது என நம்புகிறவர். அனந்தமூர்த்தி முதலிய நவ்யா இயக்கத்தவர் உண்மையில் மேலைநாட்டு அளவுகோல்களை நம் மரபின் மீதும் வாழ்க்கை மீதும் பிரயோகிக்கிறார்கள் என்றும் அது மேலோட்டமானது , பொருந்தாதது என்றும் பைரப்பா கருதுகிறார். அவ்வளவுகோல்கள் மேலை நாட்டு வாழ்க்கைமுறையின் விளைவுகள். இங்குள்ள வாழ்விலிருந்தே இங்குள்ள மரபை நோக்கிய திறனாய்வுநோக்கு உருவாகவேண்டும் என்று அவர் வாதிடுகிறார். இன்றைய அனந்தமூர்த்தியின் சிந்தனைகளை வைத்துநோக்கினால் அவர் பைரப்பா பக்கமாகச் சாய்ந்திருக்கிறார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

எளிய உத்திகளுடன் உணர்ச்சிகரமான கவித்துவமான மொழியில் எழுதும் பைரப்பாதான் ஒருவேளை கன்னடத்திலேயே புகழ்பெற்ற படைப்பாளி. அவரை இந்திய அளவில் புகழ் பெறச் செய்தது. `வம்ச விருட்சம்` என்ற திரைப்படம். பைரப்பாவின் புகழ்பெற்ற நாவலை ஒட்டி பி.வி. காரந்த் இயக்க, கிரிஷ் கர்நாட் நடித்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் தீவிர திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வெகுஜன அளவிலும் மிகுந்த வரவேற்பு பெற்றது. தன் மருமகள் விதவையான பிறகு மறுமணம் செய்து கொள்வதை விரும்பாத வைதிக பண்டிதர் சிரோத்ரி ஒரு கட்டத்தில் அவரே அவரது தந்தையின் உதிரத்தில் பிறந்தவரல்ல என்பதை அறிய நேர்கிறது. பண்டைய வழக்கப்படி குழந்தையில்லை என்ற குறையை தீர்க்க ஊர்பேரற்ற பரதேசி ஒருவனை வீட்டில் `தங்கவைத்து` பெற்றுக் கொண்ட குழந்தைதான் அவர் என்று அவரது தந்தையே எழுதி வைத்திருக்கிறார். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் அடையும் வாழ்க்கைத் தரிசனம்தான் அந்நாவலின் உச்சம். “பெண் தாய்மையின் வடிவம். அவளை ஒழுக்க நியதிகளால் அளக்க முடியாது. அவளை அவள் பெற்ற குழந்தைகளினாலான கலாச்சாரம் ஒரு போதும் மதிப்பிட்டுவிட முடியாது; நதியை மரங்கள் அளந்து விடமுடியாது என்பதைப் போல….“

அனந்தமூர்த்தியின் `சம்ஸ்சாரா`வையும் பைரப்பாவின் `வம்ச விருட்சா`வையும் ஒப்பிட்டு யோசிப்பது பலவகையான புரிதல்களுக்கு வழிவகுக்கக் கூடியது. சம்ஸ்காராவில் பிராணேசாச்சாரியார் மரபுடன் உக்கிரமாக மோதிக் கொள்கிறார். தன் இருப்பு சார்ந்த ஆழமான நிலைகுலைதலுக்கு ஆளாகி இறுதியில் தன் சுயத்துவம் சார்ந்து ஒரு புரிதலை அடைகிறார். மக்கள் கூடி முயங்கி வாழும் சந்தையன்றில் சாமானியர்களுடன் கலந்து வாழ நேர்ந்த சில தினங்களே அவருக்கு அந்தச் சுயதரிசனத்தைத் தருகின்றன. தன்னுடைய அதீதமான தார்மிக நிலைகுலைதல் என்பது உண்மையில் ஒரு சுய பாவனையே என்று அவர் அறிகிறார். தன்னை அதிமானுடனாகவும், பிறரது தார்மிகங்களுக்கும் 01பொறுப்பு ஏற்று முன்னால் நடக்கும் வழிகாட்டியாகவும் பல்லாயிரம் வருடப் பாரம்பரியத்தின் சுமை தூக்குபவனாகவும் கற்பனை செய்து கொண்ட அகங்காரத்தின் விளைவுதான் அது. அவ்வகங்காரத்தை உதறி தன்னையும் எளிய மானுடனாக உணரும்போது அவர் விடுதலை பெறுகிறார்

Gruhabhanga

நேர்மாறாக, வைதிகரான சிரோத்ரி தன் தார்மிக சிக்கலுக்கு விடையாக மரபில் உள்ள ஒரு ஆழத்தைத்தான் கண்டடைகிறார். வைதிகக் கலாச்சாரத்தின் தார்மிகத்தால் சிதறடிக்கப்படும் அவர் மேலும் ஆழமாக நகர்ந்து சென்று அவ்வைதீகமரபுக்கும் சாரமாக உள்ள ஆதிப் பழங்குடித் தார்மிகத்தை கண்டடைகிறார் என்று சொல்லலாம். மரபின் புறப்பாவனைகளை மீறி மரபின் சாராம்சத்தை கண்டடைவதுதான் வம்சவிருட்சாவில் நிகழ்கிறது. `சம்ஸ்கார`விலோ மரபின் சுமைகளை முழுமையாக உதறி தனிமனிதனாக வெட்ட வெளிமுன் நிற்கும்போதுதான் சாராம்சத்தின் கண்டடைதல் நிகழ்கிறது. அதாவது பைரப்பா மரபார்ந்த செவ்வியல்வாதி. அனந்தமூர்த்தி நவீனத்துவர். பைரப்பா முற்றிலும் இந்திய சாரம் நோக்கிச்செல்கிறார். அனந்தமூர்த்தி இருத்தலியம் நோக்கி. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நவீனத்துவ எழுத்து அதி சீக்கிரமாக காலாவதியாகிறது; செவ்வியல் எழுத்து மரபின் புதிய கூறுகள் சிலவற்றுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு உயிர்த்து எழுகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பைரப்பாவின் `கிருகபங்க` எனும் இந்த நாவல்.

1972ல் எழுதப்பட்ட `கிருகபங்க` தமிழில் 1987ல் எச்.வி. சுப்ரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக `ஒரு குடும்பம் சிதைகிறது` என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பைரப்பாவின் இன்னொரு பெரும் நாவலான `பர்வ` பாவண்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. கர்ணனைப் பற்றிய நாவல் இது. எச்.வி.சுப்ரமணியத்தின் அழகிய மொழிபெயர்ப்பில் உண்மையான இலக்கிய அனுபவமொன்றை அளிக்கும் முக்கியமான இப்படைப்பைபற்றி தமிழில் எனக்குத்தெரிந்து எவரும் பேசியதில்லை.

*

ஒரு குடும்பம் சிதைகிறது. இந்திய கிராமமொன்றின் அசலான பின்னணியை காட்டுவது. சென்னராயப்பட்டினம் கிராமத்தின் கணக்குப்பிள்ளையின் மனைவியான கங்கம்மாவும் அவள் பிள்ளைகளான சென்னிகராயன், அப்பண்ணய்யன் ஆகியோர்தான் `குடும்பம்`.
மைசூர் சமஸ்தானத்தில், தும்கூர் ஜில்லாவில் உள்ள திப்டூர் தாலுகாவில், கம்பன கொரெ பிர்காவில், ராமச்சந்திரபுரா கிராமத்தில் கதை நிகழ்கிறது. கணக்குப்பிள்ளை ராமண்ணா இறந்தபின்னர் அவரது மனைவி கங்கம்மா தன் இரு முரட்டுப்பிள்ளைகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. ராமண்ணாவின் குடும்பத்தின் முழுமையான சரிவை சித்தரித்துக்காட்டுவதே இந்நாவலின் கதை எனலாம்.

மூன்று கதாபாத்திரங்களின் இயல்பை விவரித்து தொடங்குகிறது நாவல். படிக்கப்போகச் சொன்னதற்காக கோபித்துக்கொண்டு வீட்டுக்கூரையை கடப்பாரையால் இடிக்கும் இருமகன்கள். அப்பணய்யா, சென்னிகராயன். இருவருமே அசட்டுமூடர்கள் என்றாலும் முத்தவன் சென்னிகராயன் இளையவனைவிட சற்று கோழையும்கூட. ஊரார் கரும்புத்தோட்டத்துக்கு தீவைக்கும் அப்பண்ணய்யாவை அசட்டுத்தனமாக சென்னிகராயனே காட்டிக்கொடுக்கிறான். அந்த நஷ்டத்துக்கு ஈடாக மொத்த சொத்தையும் அடகுபிடிக்கிறார் ஊரின் பெரியமனிதரும் கர்ணம் பதவி வகிப்பவரும் பணப்பேயுமான சிவே கவுடர். முதல் அத்தியாயத்திலேயே இந்த வீழ்ச்சியுடன் நாவல் விரிவுகொள்ளத் தொடங்குகிறது

கங்கம்மா அறியாமையும் மொண்னைத்தனமும் மிக்க கிராமத்துப் பெண். அறியாமையிலிருந்து எழும் கர்வமும் மூர்க்கமும். `எங்கோ, பார்த்திருக்கிறோமோ’ என்ற ஒவ்வொரு அசைவிலும் கங்கம்மா நமக்கு துணுக்குறலைத் தந்தபடியே இருக்கிறாள். அவள் பிள்ளைகள் இருவருமே அவளது குணங்களின் வாரிசுகள். கிராமத்துக் கோயிலின் துறவியான மகாதேவய்யா அக்குடும்பத்தை படிப்படியான அழிவிலிருந்து காப்பாற்ற தொடர்ந்து முயல்கிறார். ஆனால், கனமான பாறை மலைச்சரிவில் உருள்வது போல தடுத்து நிறுத்த முடியாதபடி அழிவு நோக்கிச் செல்கிறது அக்குடும்பம். சென்னிகராயரின் மனைவியாக வரும் நஞ்சம்மா தன் கடும் உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும், தியாகத்தாலும், பொறுமையாலும் அப்பாறையை நிறுத்த முயல்கிறாள். படிப்படியாக அவளை நசுக்கி கூழாக்கி பாறை கடந்து செல்கிறது. குடும்பத்தின் கடைசித்துளியான நஞ்சம்மாவின் கடைசி மகனை ஏற்றுக்கொண்டு மாதேவய்யா ஊரைவிட்டுப் போகும்போது நாவல் முடிவுக்கு வருகிறது. இதுதான் 600 பக்கம் நீளும் இப்பெரிய நாவல்.

விசித்திரங்கள் நிரம்பிய பல கதாபாத்திரங்களை நம்பகமாக சித்தரித்து உருவாக்கியுள்ள கிராம சித்திரமே இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம். அமைதியும் விவேகமும் நிரம்பிய துறவியான மகாதேவய்யா, அசுர கணமான கண்டி வைத்தியர், மோசடிகள் செய்து சூதாட்டத்தில் இழந்து கொண்டேயிருக்கும் ராமு ஷெட்டி, தகிடுதத்தம் செய்வதில் இன்பம் காணும் மணியக்காரர் என்று பலவகைப் பட்ட மனிதர்கள். வங்க நாவல்களில் காணப்படுமளவு துல்லியமான மண் அடையாளம். ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து மனித உயிர்கள் வாழும் சித்திரத்தை அனாயசமாக உருவாக்கிவிடுகிறது இந்நாவல்.

கன்னடத்தில் வெளிவந்த போது இந்நாவல் தீவிரமான கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் இதில் உள்ள அபத்த அம்சம்தான். மனித யத்தனங்களின் காரணகாரிய உறவுகளை எல்லாம் அபத்தமாக ஆக்கியபடி உருண்டு செல்லும் வாழ்வின் கரும்பாறையை இதில் துணுக்குற வைக்கும்படிக் காணலாம். ஒரு மரபுமனம் விதியென்றோ, நவீனத்துவ மனம் இருத்தலின் நிச்சயமின்மை என்றோ கூறும் அபத்தம். அவலம் என்று அதை இலக்கிய ரீதியாக வகைப்படுத்தலாம். மாபெரும் கதாபாத்திரங்களின் அவலம் வாழ்வின் ஒரு நியதியை நிலைநாட்டும் விதமாக அமைகையில் வாழ்வுக்கு நியதியே இல்லை என்று காட்டும் அவலமாக உள்ளது இந்நாவல்.

எழுதப்பட்டு முப்பது வருடம் கழிந்து இன்று இந்நாவல் ஒரு பெண்ணியப் பிரதியாகப் படிக்கப்படுகிறது. அனைத்துக்கும் பொறுப்பேற்கும்படி பெண் கட்டாயப்படுத்தப்படும் சமூகக் கட்டுமானமே அந்த அவலத்திற்கு மூலகாரணம் என்று ஊகிக்கப்படுகிறது. நஞ்சம்மா என்ற எளிய கிராமத்து பெண்ணின் அழிவு ஒரு நாகரீகம் இழைத்த பெரும் பிழைகளுடன் இணைந்து, சீதை முதல் கண்ணகி வரை அடையாளப்படுத்தி விரிகிறது இப்போது. ஒரு படைப்பின் படைப்புத்தன்மை இலக்கிய தளத்தை, இலக்கண விமரிசன வரையறைகளை மீறியது என்று காட்டும் படைப்பு `கிருகபங்க’.

*

இந்திய இலக்கியத்தில் சீதை என்ற தொல்படிமத்தைப்பற்றி ஆழமாக யோசிக்கவேண்டியுள்ளது. மண்மகள் அவள். அனைத்தையும் தாங்கும் பொறுமை, உணவூட்டும் கனிவு, அனைத்துக்கும் முடிவாக இருக்கும் நெருப்பு என மண்ணின் இயல்புகள் பல. அவற்றையெல்லாம் ஏதோ ஒருவகையில் சீதை என்ற மகத்தான துன்பியல் குணச்சித்திரம் தானும் வகிக்கிறது. புராதனமான பூமித்தாய் வணக்கம் என்னும் சடங்கு ராமாயணக்கதையுடன் ஏதோ ஒருகாலகட்டத்தில் இணைந்தமையால் பிறந்த தொல்படிமம்தான் சீதை. இன்றுவரை மீண்டும் மீண்டும் அபடிமம் நம் புனைகதைமரபில் முளைத்தெழுந்தபடியே உள்ளது. இந்தியத் திரைப்படத்தில் இதன் எக்காலத்துக்கும் பெரிய உதாரணமான ‘மதர் இந்தியா’ திரைப்படத்தில் மண்ணில் ஏர்நுகமிழுக்கும் அன்னையின் படம் இன்றும் நம் நெஞ்சங்களை அதிரவைக்கும் சமகால பெரும்படிமமாக உள்ளது. இந்தியத்திரைப்படம் அப்படிமத்தை மீண்டும் மீண்டும் கையாண்டுள்ளது.

வாழ்வின் பெருந்துயரைத் தாங்கும் மானுடமகத்துவத்தின் உச்சமே சீதை எனலாம். ராமனும் அத்துயரைத்தாங்கியவனே. ஆனால் சீதை அன்னையும் கூட. ஆகவே அவள் பலபடிகள் மேல். இயற்கையும் சமூகமும் அளிக்கும் பெரும் துயரங்கள் முன் தன்னுடைய நல்லியல்புகளினாலேயே தலைநிமிர்ந்து நிற்பவள் சீதை. தோற்க ஒப்புக்கொள்ளாத ஆத்மாவை எதுவும் தோற்கடித்துவிடமுடியாது என்ற பேருண்மையே அவள்மூலம் முதல் இதிகாசத்தில் வெளிப்பாடு கொள்கிறது. இந்தியத்தாய் என்பவள் என்றும் சீதையின் முகம் கொண்டவளாகவே அவள் குழந்தைகளால் அறியபடுகிறாள். இந்தய இலக்கியமெங்கும் தங்கள் அன்னையைப்பற்றி எழுதியவர்கள் எல்லாருமே எப்படியோ அப்பெரும் தொல்முகத்தின் சாயலை அவளுக்கு அளித்துவிட்டிருக்கிறார்கள். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் எஸ்.எல் பைரப்பா நஞ்சம்மா என்ற மையக்கதாபாத்திரத்துக்கு அளிப்பதும் அதேமுகம்தான். அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு குடும்பம் சிதைகிறது எஸ்.எல் பைரப்பாவின் சுயசரிதையின் சாயல் கொண்ட ஆக்கமேயாகும்.

சென்னிகராயனுக்கு வாழ்க்கைப்பட்டு நாகலாபுரத்திலிருந்து வந்த நஞ்சம்மாதான் இந்நாவலின் கதாநாயகி. அவள் தந்தை கண்டி ஜோசியர் தன்னுடைய சொந்த உழைப்பாலும் அகடவிட சாமர்த்தியங்களாலும் அஞ்சாமையாலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். குதிரை மீது கோட்டும் சராயும் அணிந்து அவர் சென்னிகராயனுக்கு பெண்கொடுக்கத் தேடிவருவது உண்மையில் ஒரு திருப்பம். ஆனால் கடவுளே வந்தாலும் காப்பாற்றமுடியாத நிலையில் இருக்கிறது குடும்பம். அதன் அடிப்படை பிசகிவிட்டது. சென்னிகராயன் மற்றும் அவன் அண்ணன் நடத்தையில் அந்த அவச்சுருதி எப்போதும் உள்ளது. உண்மையில் அதன் முதல் தொடக்கம் அவர்களின் தாய் கங்கம்மாவில் உள்ளது. எந்நேரமும் சாபமும் வசைகளுமாக ததும்பும் கங்கம்மாவின் வாய் அவள் மனதின் வெளிவடிவமே. ஓயாது அவள் அப்படிச் சபித்துக்கொண்டிருப்பது தன்னையேதான் என்பதையும் அச்சாபமே அவள் குடும்பத்தின் அழிவுக்குக் காரணமாகிறது என்பதையும் குறிப்பாலுணர்த்தித்தான் தொடங்குகிறது நாவல். தொடக்க அத்தியாயங்களில் கங்கம்மா”இதுகளோட வீடு பாழாப்போகட்டும்!”என்று சபிப்பதும் வீட்டை இடிக்கும் பிள்ளைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு குறியீட்டுச் சித்திரமே நாவலாகிறது.

நஞ்சம்மா எந்நிலையிலும் சிதறாத பொறுமையும் பெருந்தன்மையும் கருணையும் கொண்டவள். மிகக்கடுமையான உடல் உழைப்புக்கு எப்போதும் தயாராக இருப்பவள். வந்த சிலநாட்களிலேயே கணவன் எப்படிப்பட்டவன் என்பதை அவள் உணர்ந்துவிட்டாள். தீனி அல்லாமல் வேறு எதுவும் அறியாத முட்டாள்கணவனை பிறர் கண்களுக்குமுன் கௌரவமானவனாக நிறுத்துவதிலேயே அவளது கவனம் செலவாகிறது. சிறு நிகழ்வுகள் மூலம் தெரியவரும் சென்னிகராயனின் குணச்சித்திரம் வேடிக்கையான வருத்தத்தை உருவாக்குவது. முதல் குழந்தை பிறந்தபோது அதைப்பார்க்க மனைவியின் பிறந்தகம் போகும் சென்னிகராயன் வழியிலேயே சீராகக் கொண்டுபோகும் ஒன்றேகால் சேர் வெல்லத்தையும் முப்பத்தெட்டு வாழைப்பழத்தையும் தின்று ஏப்பம்விட்டு மரத்தடியில் படுத்து குறட்டைவிட்டு தூங்கி எழுந்து சென்றுசேர்கிறான். அங்கே கிடைப்பனவற்றையெல்லாம் தின்று வாழ்பவனை ஊரில் கணக்குப்பிள்ளை வேலை இருக்கிறதே என்று நினைவூட்டி பின் வற்புறுத்தி நஞ்சம்மா அனுப்பி வைக்க நேர்கிறது.

நஞ்சம்மா தன்னைச்சூழ்ந்திருக்கும் இருளுடன் ஓயாது போராடும் காட்சி மகத்தான துன்பியல்நாடகமாக நாவலில் விரிகிறது. கிராமம் என்றால் களங்கமற்ற மக்களும் நிதானமான வாழ்க்கையும் மாறாத நெறிகளும் கொண்ட ஒரு உலகம் என்பதற்கு நேர் மாறாக பைரப்பா காட்டும் கிராமம் முட்டாள்தனமும் மூர்க்கமும் ஒருவரை ஒருவர் ஏய்த்துப்பிழைக்கும் குரூரமும் அடக்குமுறையும் அடிமைத்தனமும் கொண்ட ஒன்றாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் தின்னவே ஊரில் ஒவ்வொருவரும் முயல்கிறார்கள். அப்பண்ணா வயலுக்கு தீவைத்தபோது அதில் ஏற்பட்ட நஷ்டத்தை கூட்டிச்சொல்லி லாபம்பார்க்கவே ஊரில் உள்ள அனைவரும் முயல்கிறார்கள். நிலமே இல்லாத புரோகிதர் வயல் எரியாமலிருந்தால் தனக்குவந்திருக்கக் கூடிய தட்சிணைகளை கணக்குபேசி வாங்கிக் கொள்கிறார். சிவே கவுடன் அடமானப்பணத்துக்கு கூட்டுவட்டி போட்டு நிலத்துக்காக நீதிமன்றம் செல்லும்போது கங்கம்மாவையும் பிள்ளைகளையும் மேலும் தூண்டிவிட்டு செலவுசெய்யவைத்து சுரண்டுவதற்கே ஊரார் முயல்கிறார்கள். நியாய உணர்வுடன் சில மெல்லிய கண்டனங்களை சொல்லும் பெண்கள் கணவர்களால் அடிக்கப்படுகிறார்கள்.

நாவலில் வலுவாக உருவாகும் கங்கம்மாவின் கதாபாத்திரம் நமது வழக்கமான அன்னைச்சித்திரங்களுக்கு எதிரானது. ஆனால் கறுப்புவெள்ளைச் சித்திரமாக அதை உருவாக்காமல் மிகுந்த நம்பகத்தன்மையுடன் காட்டியுள்ளார் பைரப்பா. கங்கம்மாவும் பிள்ளைகள் மீதுள்ள இணையற்ற பாசம் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. கணவனுக்கு நாற்பத்தைந்து வயதாக இருக்கும்போது பதினாறுவய்துப்பெண்ணாக மணம் முடித்து வந்தவள் அவள். அவளுக்குள் ஒரு ஊற்றிலிருந்து மூர்க்கமும் துவேஷமும் பொங்கியபடியே உள்ளது. குடும்பம் கரையேற வேண்டுமென்றுதான் அவள் விரும்புகிறாள். ஆனால் அறியாமையும் வெறுப்பும் இணைந்து ஒவ்வொரு முறையும் குடும்பத்தை மேலும் சேற்றில் மூழ்கடிக்கும் செயல்களை அவளைச் செய்யவைக்கின்றன. தன் மைந்தர்களை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் அவளது பழக்கவழக்கங்கள், குடும்பவிளக்காக சுடரும் மருமகள் மீது கொள்ளும் பொறாமை, தூண்டிவிட்டால் எந்த முட்டாள்தனத்தையும் கூசாதுசெய்யும் தடித்தனம் என கங்கம்மாவின் குணச்சித்திரம் மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டது.ஆனால் நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி காண நேர்வது. அதனாலேயே நம்மால் உள்ளும் புறமும் புரிந்துகொள்ளத்த தக்கது.

கணவனில் தொடங்கும் நஞ்சம்மாவின் துயரம் சூழ இருக்கும் அனைவரிலிருந்தும் பெருகி வருகிறது. அம்மா பேச்சைகேட்டு அவளை எட்டி உதைக்கும் அறிவில்லாத கொழுந்தன், அறிவில்லாத கணவனின் கணக்குவேலையை அவள் தானே செய்ய அதை ஒரு பெரும்பாவமாக எடுத்துக்கொள்ளும் மாமியார், கங்கம்மாவின் மறு உருவமாக அவள் பிறந்தகத்தில் வெறுப்பும் குரோதமுமாக கொந்தளிக்கும் நாத்தனார் என நஞ்சம்மா நாற்புறமும் விஷத்தையே எதிர்கொள்கிறாள். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் கடும் உழைப்பை செலுத்தி அவள் மீட்க முயலும் குடும்பம் அவளுடைய கைகளை மீறி உடைந்து சிதைந்து வழிகிறது. அதை உள்ளம் பதைக்க பார்த்திருப்பது தவிர அவள் செய்யக்கூடுவது ஏதும் இல்லை.

மானுடரால் வரும் துயருக்கு மேலாக இயற்கையின் விதியின் கனத்த அடிகள் அவள் மீது விழுகின்றன. இந்நாவலின் மிகக்குரூரமான சித்தரிப்புகள் பல பிளேக்கோடு தொடர்புடையவை. கர்நாடகநாவல்களில் வரும் பிளேக் சித்தரிப்புகள் வாசகக் கவனத்துக்குரியவை. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தென்கர்நாடகத்தை பிளேக் சூறையாடியிருக்கிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் குலநினைவுகளில் அதன் அழிவுகள் பதிவாகியுள்ளன. தமிழில் வாசிக்ககிடைக்கும் சிறந்த பதிவு சம்ஸ்காரா நாவலின் பிளேக். பிளேக் இங்கே புரிந்துகொள்ளமுடியாத விதியின் வடிவமாக, வாழ்க்கையின் சுடரைச் சூழ்ந்துள்ள மரணத்தின் கரிப்படலமாக பலவிதமான முகம் காட்டுகிறது. மீண்டும் மீண்டும் நஞ்சம்மா குழந்தைகளை பறிகொடுக்கும் காட்சிகள் வாழ்க்கையின் பொருள் பற்றிய வெறுமை நிறைந்த எண்ணங்களை நாவலை வாசிக்கும்போதே உருவாக்குகின்றன. வாழ்க்கை என்பது கிராமத்தில் மரணத்தை முடிந்தவரை தவிர்த்தல் என்றே பொருள்கொள்ளப்படுகிறது.

நஞ்சம்மாவின் மறைவுதான் இந்நாவலை மீண்டும் மீண்டும் நினைவுகூரச்செய்கிறது. அவள் வாழ்நாளெல்லாம் கண்ணுக்குத்தெரியாத இயற்கை விதி ஒன்றுடன் போராடினாள். வாழத்தகுதியில்லாதன அழியும் என்ற விதியுடன். அவளுடைய விவேகம் உழைப்பு எல்லாமே அதற்காகச் செலவிடப்படுகிறது. படிப்படியாக எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறாள் அவள். கங்கம்மாவின் வீடு இல்லாமலாவதன் சித்தரிப்புடன் நாவல் தொடங்குகிறது. நஞ்சம்மா கடும் உழைப்புடன் தானே மண் சுமந்து தன் வீட்டை கட்டி எழுப்பும் போது நாவலின் உச்சம் நெருங்குகிறது. வீடுதயாராகிறது, ஆனால் பிளேக் வந்து அந்த கடைசி முயற்சியை உடைத்து வீசுகிறது

நஞ்சம்மா பிளேக் வந்து இறக்கும் காட்சியை மிகமிகச் சாதாரணமாகச் சொல்லியிருக்கும் பைரப்பா நவீன இலக்கியம் ஒரு செவ்வியல்துயரத்தை எப்படிச் சித்தரித்துக் காட்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை ஆக்கியுள்ளார். அப்புள்ளியில் வாசகன் கொள்ளும் ஆழமான அதிர்வு ‘அப்படியானால் எல்லாவற்றுக்கும் என்னதான் பொருள்?’ என்ற உக்கிரமான வினாவாக உடனேயே மாறி விடுகிறது.

மிக யதார்த்தமான ஒரு பாணியில் எழுதப்பட்ட இந்நாவலில் கவித்துவமான நுட்பங்கள் என ஏதுமில்லை. குறியீட்டுத்தளம் நோக்கி எந்த நிகழ்வும் விவரணையும் எழுவதில்லை. இரு அம்சங்களிலேயே இந்நாவலின் மறைபிரதியை நாம் வாசிப்பதற்கான இடம் இருக்கிறது. ஒன்று இதன் கதாபாத்திரங்களில் இருக்கும் உட்சிக்கல்கள். கண்டிவைத்தியர் எதற்கும் அஞ்சாதவராக நாவலில் வருகிறார். ஆனால் ஒரு கொலையைச் செய்துவிட்டோம் என்ற அச்சம் காரணமாக அர்த்தமில்லாமல் ஊரைவிட்டே ஓடி பன்னிரண்டுவருடங்கள் காசியில் அலைகிறார். அச்சமின்மை என்பது அவர் தனக்கென தேர்வுசெய்த புறவடிவம், ஒரு கருவி. உள்ளூர பேரச்சத்தால் ஆனவர் அவர் என்பதை வாச்கன் உணரலாம்.

மகாதேவய்யா என்ற துறவியை விரிவாகவே நாவல் காட்டுகிறது. எங்கிருந்து வந்தவரென்று தெரியவில்லை. ஊர்மடத்தில் இரந்துண்டு வாழும் அவருக்கு பந்த பாசங்கள் இல்லை. ஆனால் அற உணர்வு உண்டு. ஆகவே ஊர்விஷயங்களில் ஈடுபட்டு நியாயம் சொல்பவராக இருக்கிறார். ஆனால் நஞ்சம்மாவின் குடும்பத்துடன் அவருக்கு ஏற்பட்ட ஒட்டுதல் அப்படிப்பட்ட ஒன்றுதானா? அவருடைய மனதுக்குள் நஞ்சம்மாவுக்கு இருந்த இடம் என்ன? ஒரு துறவியான அவர் கடைசியில் நஞ்சம்மாவின் மகனை தன் மகனாக ஏற்றுக்கொண்டு சம்சாரத்திற்குள் நுழைகிறார். அவர் தன் கர்மபூமியாக தெரிவுசெய்த ஊரைவிட்டும் விலகுகிறார். இத்தகைய உக்கிரமான முடிவுகளை எடுக்க அவரைத்தூண்டிய உள்விசை என்ன?

இந்நாவலின் சில இடங்கள் நெஞ்சைத்தொடும் சித்தரிப்பு மூலமே கவித்துவத்தீவிரம் கொண்டுள்ளன. பசி ஓங்கிய கொடும்பஞ்ச காலத்தில் நஞ்சம்மா பள்ளிசென்ற மகன் இரவாகியும் திரும்பாதது கண்டு அவனுக்காக ஊர் எல்லையில் காட்டில் காத்திருக்கிறாள். வழியில் பார்த்த பலாப்பழத்தை திருடி சட்டையால் கட்டி எடுத்து சுமந்துகொண்டு அவன் வருகிறான். அற உணர்வை மூச்சாக கருதுபவள் ஆயினும் நஞ்சம்மா அவனை விலக்கவில்லை. அழுகிறாள். மிக நுட்பமான பசி சித்தரிப்பு இது. மூன்று பிள்ளைகளை பிளேக் கொண்டு போனபின் ஆவேசமடையும் பாட்டி ஊருக்குள் ஓடிவந்து ஆவேசமும் கண்ணீருமாக வீட்டில் குடிகொண்ட பிளேக் அன்னையை செருப்பால் அறையும் காட்சி. மரணத்தின் முன் கனிதன் கொள்ளும் திகைப்பையும் ஆங்காரத்தையும் அவனுடைய நிர்கதியையும் காட்டுகிறது இது.

சென்னிகராயரின் குணச்சித்திரத்திலும் இதேபோல சிந்தனை சென்று சுவரில் முட்டிக்கொள்ளும் இடம் ஒன்றை வாசகன் உணரலாம். அவருக்கு தன் சாப்பாடு தன் சுகம் தவிர வேறு எதிலுமே ஆர்வமில்லை. எதையும் அவருக்கு புரியவைக்க முடியாது. அப்படியானால் அவரை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது ? நஞ்சம்மாவின் இறப்புகூட அவருக்கு பெரிதல்ல. மறுமாதமே கல்யாணம்மாப்பிள்ளையாக பெண்பார்க்கக் கிளம்பிவிடுகிறார். தன் கால்கலில் கட்டப்பட்ட பெரும் பாறை ஒன்றை உயிர்மூச்சால் மெல்லமெல்ல நகர்த்தியபடி நஞ்சம்மா நகர்வதையே நாம் நாவல் முழுக்கக் காண்கிறோம். பிளேக் போலவே சென்னிகராயரின் இயல்பும் ஒரு இயற்கையின் சக்திதான். அதை நாம் தமோ சக்தி எனலாம். சத்வ, ரஜோ சக்திகள் அதனுடன் போராடியே ஆகவேண்டும். வெல்லவேண்டியது அதையே. நஞ்சம்மா வீழ்கிறாள்

‘ஒரு குடும்பம் சிதைகிறது’ அர்த்தமில்லாதுபோன ஒரு இறந்தகாலம் பற்றிய பதிவு என்று படுகிறது. வாழ்க்கையே அர்த்தமில்லாத ஒரு போராட்டம்தானோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அப்போராட்டத்தில் மானுட மனம் அன்பின் மூலம் அடையும் தீவிரமும் அர்ப்பணமும்தான் அதன் சாரமோ என்ற தெளிவைநோக்கி நம்மை செலுத்துகிறது.

[ஒரு குடும்பம் சிதைகிறது _ எஸ். எல். பைரப்பா தமிழில்: எச். வி. சுப்ரமணியம்; நேஷனல் புக் டிரஸ்ட், ]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 29, 2006 

முந்தைய கட்டுரைகல் அழகுறுதல்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61