கூவுதலின் அழகியல் -கடிதம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் நூறு நாற்காலிகள் புத்தகத்தை நான் சமீபத்தில் வாசித்து முடித்தேன். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரி ஒருவரையே சமூகம் இப்படி நடத்துகிறது என்றால் சாமானிய பழங்குடி மக்களின் நிலையை எண்ணி பார்க்கும் துணிவு எனக்கு இல்லை ஐயா. இலக்கியங்களின் சில காட்சிகள் உங்கள் இமைகளை வருடும் என்று என் ஆசிரியரும் எழுத்தாளருமான ஸ்டாலின் அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

அப்படியாக தங்களின் படைப்பில் இரண்டு காட்சிகள் என் இதயத்தை வருடின. அதில் ஒன்று காப்பன், குப்பையில் கிடந்த உணவை தன் மகனுக்கு ஊட்டியதற்காக அவன் தாயை தாக்கிய காட்சி. மேலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அதிகாரி நாயாடி சமூகத்தைச் சார்ந்தவர் என்று அறிந்ததும் மனுவோடு வந்து மன்றாடி கொண்டிருந்த மக்களிடம் மன்றாட்டம் தொலைந்து போன காட்சி.

பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு அதிகாரியாகவோ மருத்துவராகவோ இருக்கிறார் என்று அறியும் போதெல்லாம் சற்றே பெருமிதம் கொள்வேன். ஆனால் அவர்கள் சந்திக்கும் சவால்கள் இவ்வாறாக இருக்கும் என்று நினைக்கின்ற பொழுது நெஞ்சம் திடுக்கிடுகிறது. மேலும் பார்வை கோணம் தவறி கிடக்கும் எங்களைப் போன்ற இளம் ஆட்களை இது போன்ற எழுத்துகள் வாயிலாக சீர்திருத்தும் தங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இது போன்ற பல படைப்புகளை படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

இப்படிக்கு ,

கவிஞர் சா.சமீமா சிரின்.

அறம் புதிய பதிப்பு வாங்க

அறம் மின்னூல் வாங்க

அறம் ஆங்கிலநூல் வாங்க

அன்புள்ள ஜெ

இன்றுதான் நான் அறம் தொகுப்பை வாசித்து முடித்தேன். உரத்த குரல் கொண்ட கதைகள் என நான்கு உள்ளன. நான்கு கதைகள் மிக அமைதியானவை. அறம், நூறுநாற்காலிகள், சோற்றுக்கணக்கு, வணங்கான் ஆகியவை உரத்த கதைகள். மயில்கழுத்து, மத்துறு தயிர், உலகம் யாவையும், தாயார் பாதம் ஆகிய கதைகள் மென்மையானவை, குறைந்து சொல்பவை. ஆனால் உரக்கச் சொல்லும் கதைகளே ஒரு படி மேலாக, கலையமைதி கொண்டவையாக உள்ளன. ஏனென்றால் அவை நீதியைப் பேசுகின்றன. நீதிக்கான குரல் அப்படி அடிவயிற்று ஆவேசமாகவே ஒலிக்கமுடியும். அதன்முன் மற்ற குரல்கள் கொஞ்சம் தாழ்ந்துதான் ஒலிக்கும்

சபரீஷ்        ‌‌

முந்தைய கட்டுரைவாய்நோக்கியல்
அடுத்த கட்டுரைநீலி, உமா மகேஸ்வரி சிறப்பிதழ்