யுவன், கடிதங்கள்

யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி

யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி

அன்புள்ள, ஜெயமோகன்,

யுவனுக்கு இந்த வருட விஷ்ணுபுர விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சம காலத்திய ஒரு மூத்த எழுத்தாளர், அதுவும் மிகத் தகுதி வாய்ந்த எழுத்தாளருக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது. சரியான தேர்வு!

சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – என்று யுவன்  நிறைய கலைத்துப் போட்ட பல அடுக்குக் கதைகளை  எழுதி இருக்கிறார். அவற்றைப் பற்றி நிறைய பேசி, எழுதி இருக்கிறார்கள். இவற்றிலிருந்து முற்றிலும் வேறு பட்டது “கானல் நதி”. இது ஓரு பித்து நிலையில்  சித்து வேலை செய்திருக்கும்  நாவல்.

வீட்டில் மூங்கில் குருத்து முளைத்த முகூர்த்ததில் பிறந்து சிரஞ்சீவி என்று சொல்லப்பட்ட தனஞ்சய் முகர்ஜியின் தோல்வியின் கதை, பெரும் காவியம் போல கால அமைப்பு தவறாமல், நாயகனுடைய பிறப்பில் ஆரம்பிக்கிறது. இரண்டரை வயது தனஞ்சய் பீம்ப்ளாஸியை அடையாளம் காங்கிறான். அப்பா ஆவேசமாக அவனைக் கட்டிக் கொள்கிறார். விஷ்ணுகாந்த் சாஸ்திரியிடம் அழைத்துச் சென்று சங்கீதம் கற்க எற்பாடு செய்கிறார்.

வித்யாதானத்துக்கு சன்மானம் வாங்கலாமா ? குழந்தையை அனுப்புங்கள் போதும் “ என்று குரு ஆரம்பிக்கிறார். இப்படி உணர்ச்சிபூர்வமான தருணங்களும், அபூர்வமான பாத்திரங்களும் சம்பவங்களுமாக ஆரம்பிக்கும் கதையில் சங்கீதம் பின்னணியாக இல்லாமல், முன்னணியாகவே ஊடுறுவி ஒலிக்கிறது. இசை அனுபவங்கள், துல்லியமாக விவரிக்கப் படுகின்றன.

“கேட்கும் கச்சேரியில் கீரவாணி ராகத்தில் மூன்றாவது காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத சல்லாத்திரை போல கூட்டத்தில் ஒரு மயக்க நிலை படர்கிறது. வான வெளியின் ரகசியக் கிடங்குகளிலிருந்து அவசர அவசரமாய்த் திரட்டி வந்த ஸ்வர ரத்தினங்க்களை வாரி வாரி இறைக்கிறது ஸரோட்.”

குரு “ ராகம் மைதானம் மாதிரி, மாட்டின் கழுத்தில் கட்டிய கயிறு ஞானம் , பசியும் ஞானமும் இருந்தால் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தூரம் சஞ்சாரம் செய்யக் கிடைக்கும்” என்கிறார்.

தனஞ்சய், “கழுத்துக் கயிறு அறுந்து விட்டால் மைதானத்தில் எங்கே வேண்டுமானாலும் புல் தின்னலாம் அல்லவா “ என்கிறான். முதலில் அவனைத் திட்டும் குரு, “நீ கேட்பதும் சரிதான், கயிறு அறுவதற்குப் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் “ என்கிறார்.

குருசரண்தாஸ் “இதோ பார் இந்தக் கோடியில் ஒரு நிறமும் அந்தக் கோடியில் ஒரு நிறமுமாக கிடக்கிறதே ஆகாயம், ஆகாயத்தின் இயல்பான நிறம் என்ன என்று எந்தப் பட்சிக்குத் தெரியும் ? நாதத்தின் எல்லையற்ற வெளியில் பறந்து திரியும் போது , புதிது புதிதாக வர்ணங்களும் ருசிகளும் கிடைக்கிறதா இல்லையா ?” என்று கேட்கிறான்.

தனஞ்சய் அவன் சங்கீதத்தைப் பற்றுப் பேசுவது வேறு பாஷையாக இருக்கிறதே என்று கேட்டு, தானே “ஓவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாகத் தாயிடம் மழலை பேசும், தாய்க்கு மட்டுமே புரியும் பாஷை அது” என்று  சொல்லிக் கொள்ளுகிறான்.

குருசரண்தாஸ் மாடுகளின் கழுத்து மணியிலும், தாத்தாவின் இருமல் சத்தத்திலும், தகரத்தில் விழும் மழைத்தண்ணீரிலும் லயத்தைக் காண்கிறான்.

இப்படி கவிதையாகவும், சங்கேத மொழியாகவும் விரியும் கதையில் பின்னுரையாக யுவன் கேட்கும் கேள்விகள் பல…

மேற்கத்திய இசை மரபுகளில் உள்ள தறிகெட்ட பாய்ச்சலும் உன்மத்தமும் இந்திய சாஸ்திரீய சங்கீதத்தில் இல்லையா ?

சிந்தனையை கிளர்த்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஆற்றுப் படுத்துவதற்கும் இலக்கியம் உதவுகிறது என்றால் இசையின் பணி என்ன ? சிந்தனையைத் தற்காலிகமாக மழுங்கச் செய்வதா ?

வெற்றியைப் போலவே தோல்வியின் வலியும் பாடுவதற்குரியதுதானே ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலைத் தேடலாம், கூடவே இந்த நாவலைப் பற்றி சிந்தனைகளைக் கேள்விகளாகத் தொடுக்கலாம்.

மோகமுள்ளில் தி ஜானகிராமன் போட்ட ஒற்றையடிப் பாதை, ராஜ பாட்டை ஆகி இருக்கிறதா ? லா ச ரா எழுதிய மோகனாஸ்திர மொழி  ப்ரம்ம மோகனாஸ்திரமாகி இருக்கிறதா ?

கூடவே சொல்லலின் நூதனம் வங்காளத்தின் கதைக் களமும், ஹிந்துஸ்தானி இசையுமா ?

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான், யுவன் சொல்லியிருப்பதைப் போல

மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டதற்குப் பிறகும் ஒரு இசைக் கோவை புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன ?

அல்லது யுவன் கழுத்துக் கட்டு அறுந்த மாடு போல மேய்ந்திருக்கிறாரா ?

இல்லை இரண்டுமா ?

யுவனுக்கு வாழ்த்துகள் !  அவருக்கு கழுத்துக் கட்டுக்குள் மாட்டிக் கொள்ளாமல், மைதானத்தோடு நின்று விடாமல் இன்னும் நிறைய மேயும் பாக்கியம் தொடரட்டும்.

விஷ்ணுபுரம் வட்டத்துக்கும் வாழ்த்துகள் !

அன்புடன்,

தருணாதித்தன்

அன்புள்ள ஜெ

யுவன் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சிக்குரியது. நான் அவர் கதைகளை தொடர்ச்சியாக வாசித்து வருபவன். அவருடைய கதைகள் எனக்கு எப்போதுமே ஒரு திக்குமுக்காடலைத்தான் உருவாக்குகின்றன. கதை வாசிக்கும் சொகுசுக்கு பதிலாக ஒரு புதிரில் மாட்டிக்கொண்ட உணர்வு உருவாகிறது.  ஏன் அவை எனக்கு அந்த திணறலை உருவாக்குகின்றன என்றால் அவற்றிலுள்ள சிக்கலான கதைக்குள் கதைகள் அமைந்திருக்கும் தன்மைதான். ஆனால் அவருடைய பல கதைகள் எனக்கு நினைவில் நீடிக்கின்றன. காரணம் அந்தக்கதைகளுடன் நான் கொஞ்சம் உழன்றிருக்கிறேன். அதுதான் யுவன் அளிக்கும் அனுபவம் என நினைக்கிறேன். அவை உண்மையில் வாழ்க்கையிலுள்ள ஒருசில புதிர்களை நமக்குக் காட்டிவிடுகின்றன

ராஜேஷ் என்.ஆர்

அன்புள்ள ஜெ

நான் யுவன் கதைகளை வாசிக்கும்போது எங்களுக்கு ஆசிரியர் ஓவியக்கல்லூரியிலே சொல்லித்தந்த ஜென் ஓவியங்கல் மாதிரி கறுப்புவெள்ளையில் அலட்சியமான தீற்றல்களாக உள்ளன என நினைத்தேன். பிறகுதான் அவர் ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்ததை அறிந்தேன். என் எண்ணம்சரிதான் என உணர்ந்தேன்

நன்றி

செல்வ கணேசன்

முந்தைய கட்டுரைமழைக்குளிரும் காடும் – சக்திவாசா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா