கதைகளின் நேர்மை – கடிதம்

திருவருட்செல்வி வாங்க

திருவருட்செல்வி மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வாசித்தேன். எனக்கு அந்த தொகுப்பின் பெயர் ஈர்ப்பதாகவும் அட்டை கொஞ்சம் விலக்குவதாகவும் இருந்தது. இந்த நவீன இலக்கியம் என்ற பேரில் எழுதப்படும் பாவலாக்களை வாசித்து கொஞ்சம் சலித்துப்போயிருந்தேன். திருவருட்செல்வி கதையை அகழ் இணையதளத்துக்குப்போய் வாசித்தேன். அதன்பிறகுதான் தொகுப்பை வாங்கினேன். அண்மையில் வந்த நல்ல தொகுப்புகளிலொன்று. அந்தச் சிறுகதைதான் அதில் உச்சமான கதை.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும்போது ஒன்று நமக்கு தோன்றும். சுஜாதா அதை யோக்கியமான கதை என்று சொல்வார். நேர்மையாகக் கதைசொல்வது என்பது ஒரு பெரிய விஷயம். அதற்கு ஒரு தன்னம்பிக்கை வேண்டும். வாழ்க்கையை ஒட்டிநின்று கதைசொல்லவேண்டும். நான் சொல்லும் வாழ்க்கை முக்கியமானது, அதை நான் நேர்மையாகச் சொல்லியிருக்கிறேன், ஆகவே அது கலை என்னும் எண்ணமே அந்த தன்னம்பிக்கை. அது பல எழுத்தாளர்களிடமில்லை. விஷாலிடமிருக்கிறது.

அதேசமயம் வாழ்க்கையைச் சொல்கிறேன் என்ற பாவனையில் வன்முறையையும் காமத்தையும் கூடுதலாக்கிச் சொல்லவுமில்லை. ஏனென்றால் இன்றைய கொரிய சீரியல் காலகட்டத்தில் அவற்றைச் சொல்வதுதான் கலை என்று இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விஷால்ராஜாவின் கதைகள் நிதானத்தை கைவிடாமலிருக்கின்றன.

தொகுதியில் பலவகைப்பட்ட கதைகள் இருக்கின்றன. திருவருட்செல்விக்கும் ’கிரேஸ் இல்லம்’ கதைக்கும் உள்ள ஒற்றுமை கடல்”, “நீர்வழி ஆகிய கதைகளுக்கு இல்லை. எல்லாவகையான கதைகளையும் இந்த தொகுதியில் முயன்று பார்த்திருக்கிறார். பொதுவாக முக்கியமான புனைவெழுத்தாளர்களின் முதல் தொகுதியில் இப்படி பலவகையான தொடக்கங்கள் இருக்கும் என கண்டிருக்கிறேன். இந்த நூல் அண்மையில் நான் வாசித்த ஒரு சிறந்த தொகுப்பு.  வாழ்த்துக்களுடன்

செந்தில்ராஜ்

திருவருட்செல்வி முன்னுரை

திருவருட்செல்வி – கடிதம்

திருவருட்செல்வி கடிதங்கள்

முந்தைய கட்டுரைமாற்று – கடிதம்
அடுத்த கட்டுரைஎன்.டி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை