நித்திலம் – ஒரு முயற்சி
அன்புள்ள ஜெ,
உங்கள் கடிதத்தில் மோகன் தனிஷ்க் என்பவர் எழுதிய கடிதத்தைக் கண்டேன். அவர் சின்னாளப்பட்டி புடவைகள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்வதாக எழுதியிருந்தார். இந்த நவீன காலகட்டத்தில் அந்த வகையான பழையபாணி ஆடைகளின் இடம் என்ன? அது ஒரு வெற்றுக்கனவு என நினைக்கிறேன். ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்க்கிறேன்
ராஜா மாதவ்
அன்புள்ள ராஜா
பொதுவாக நம் நுகர்வுகள் இருவகை. எல்லாரும் வாங்குவதை நாமும் வாங்குவோம். அது தான் 99 சதவீதம்.நமக்குரியதென ஒன்றை தேடி வாங்குவோர் நூற்றிலொருவர் உள்ளனர்.அவர்களுக்கான சந்தையும் உள்ளது.
அவர்களில் சிலருக்கு இதைப்போன்ற பாரம்பரிய ஆடைகள் பிடித்திருக்கின்றன. நண்பர் ஜெயக்குமார் (ஆலயக்கலை பயிற்றுநர்) பொன்னியின் செல்வன் மேடைநிகழ்வுக்கு நடிகர்களுக்கான ஆடைகளை வடிவமைத்தார். பாரம்பரியமான அந்த ஆடைகள் இன்று உலகமெங்கும் அவரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
மோகன் தனிஷ்க் என் நண்பர். நிகழ்வுகளில் புகைப்படம் எடுப்பவர். இப்போது தனக்கான இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இவ்வகையான பாரம்பரியச் செயல்பாடுகள் மேல் ஓர் ஆர்வமும் நம்பிக்கையும் உண்டு. அதில் உள்ளூர் பொருளியல் இணைந்துள்ளது. அது நுகர்வுப் பண்பாட்டு ஆக்ரமிப்பு, பெரும்பொருளியலின் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பொருளியல் நடவடிக்கையும்கூட.
ஜெ
Website link