அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டை மனமேந்தும் விதமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் அரசுப்பள்ளியில் நூலகம் ஒன்றைத் துவங்குகிறோம். தமிழிலக்கியச் சிறுகதையில் மானுடத்தருணங்களை விரிவாக கதைப்படுத்தியவர் கு.அழகிரிசாமி அவர்கள். அத்தகைய படைப்புமனிதரை சமகாலப் பிள்ளைகளுக்கு அண்மைப்படுத்தும் முயற்சியாக இந்நூலகத்திறப்பு அமையவுள்ளது.
மேலும், சிற்பி கோவில்பிச்சை பிரபாகர் அவர்களால் செதுக்கப்பட்ட கு.அழகிரிசாமி உருவச்சிலையும் பள்ளிவளாகத்தில் நிறுவப்படவுள்ளது. இந்நிகழ்வை பள்ளிமாணவர்கள் மனதில் ஆழப்பதிக்கும் நல்லசைவாக மாற்றும்வகையில், நாடகக்கலைஞர் வேலு சரவணன் அவர்களின் சிறார் நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்படுகிறது. இதனுடன், ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலம் அப்பள்ளியின் பிரதானக் கிணறானது தூர்வாரி சீரமைக்கப்பட்டு குழந்தைகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் ஒருசேர நிகழவுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்நிகழ்வு ஒரு கூட்டதிர்வின் வெளிப்பாடாக அமையும். கல்விச்சாலைக்குள் கலைமனதின் இன்றியமையாமையை மனம்பதிக்கும் விதமாக இதன் அத்தனை கிளைநிகழ்வும் தன்மைகொள்ளும். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களைத் திரட்டித்தொகுத்து இந்நூலகம் அமைக்கப்படுகிறது.
அரசுப்பள்ளி நூலகங்களில் இதை ஓர் சாட்சிநூலகமாக செயல்படவைக்கும் அத்தனை தவிப்பையும் மனதேற்கிறோம். ஆகவே, அறச்சலூர் அரசுப்பள்ளியை வாசிப்புசார்ந்து தமிழகத்தின் முன்மாதிரிப் பள்ளிகளில் ஒன்றாக பன்மைத்துவம் அடையச்செய்யும் நோக்குடன் இப்பெருங்கனவுக்கு உயிர்கொடுக்க முடிவெடுத்துள்ளோம். ஓராண்டு காலநிர்ணயம் செய்து அதற்கான அடுத்தடுத்த செயற்பணிகளைத் திட்டமிட்டுள்ளோம்.
கு.அழகிரிசாமி நூற்றாண்டைத் தமிழ்ச்சூழலில் கவனப்படுத்தும் பொருட்டு தன்னறம் நூல்வெளி வாயிலாக, அவரது படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக்கி 1000 நண்பர்களுக்கு விலையில்லா பிரதிகளாக வழங்கியிருந்தோம். கு.அழகிரிசாமியின் நாட்காட்டியையும் அச்சாக்கி வாசிப்புலகத் தோழமைகளுக்கு அளித்திருந்தோம். இச்செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே வருகிற 23ம் தேதி, சனிக்கிழமை பள்ளிநூலகத் திறப்புவிழாவும் நிகழ்கிறது.
சமகாலப் புத்தகங்களுடன் மேம்படுத்தப்பட்ட நூலகமாக இதை மாற்றுவதற்கு நண்பர்களின் துணைநிற்றலும் அவசியமாகிறது. புத்தகங்கள் அன்பளித்தாலோ, அல்லது சிற்றளவிலான எண்ணிக்கைக்குப் பொறுப்பேற்றாலோ அது அந்நூலகத்தில் கூடுதலாக ஒரு புத்தக அலமாரி அமைய வழிவகுக்கும். இவ்வாழ்வின் மீது நம்பிக்கை தரக்கூடிய கதைகளை எழுதியவர் கு.அழகிரிசாமி. ஆகவே, அந்நம்பிக்கையை நாமும் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டிய பொறுப்பிலிருக்கிறோம். கு.அழகிரிசாமியின் படைப்புமனதை அகத்திலேந்தி இந்நல்லசைவைத் துவங்குகிறோம்.
இந்நூலகமானது வழிகாட்டி ஆசிரியர் ஓ.வி.சரவணக்குமார் அவர்களின் கரங்களால் திறப்படைகிறது. அறச்சலூர் அரசுப்பள்ளி ஆசிரியராக வாழ்ந்து பரிசோதனை திட்டங்கள் பலவற்றை உருவாக்கியவர். ஆயிரமாயிரம் மாணவர்களை தாழ்வுணர்ச்சியில் இருந்து மீட்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிக் கழிப்பறையில் பெண் பிள்ளைகளுக்கான நாப்கின் பெட்டி வைத்தவர். எத்தனையோ மனங்கள் வணங்கும் ‘கக்கூஸ் வாத்தி’ ஓ.வி.சரவணக்குமார் அவர்களால் இந்நூலகம் திறப்படைவது நெகிழ்வையும் மகிழ்வையும் தருகிறது.
கு.அழகிரிசாமி அவர்களின் மார்பளவு உருவச்சிலையானது எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களால் திறக்கப்படவுள்ளது. தமிழின் மிகச்சிறந்த படைப்புகளை எழுதிய முன்னோடி ஆளுமையாகத் திகழ்பவர் எழுத்தாளர் யூமா வாசுகி. மொழிபெயர்ப்பின் வழியாகப் பிறமொழி இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவந்து இம்மொழிக்குச் செறிவூட்டியவர். சிறார் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆகவே, முந்தைய தலைமுறை எழுத்தாளரின் சிற்பத்தை இன்றைய தலைமுறை எழுத்தாளர் திறந்துவைப்பது வாசிப்பின் வழித்தோன்றலுக்கான குறியீடாக பிள்ளைகளின் மனதில் பதியும் என நம்புகிறோம்.
“நீங்கள் ஒரு கப்பல் கட்ட விரும்பினால், மனிதர்களை நோக்கி கட்டளைகளை முழக்கமிடாதீர்கள். மாறாக, பரந்துவிரிந்த முடிவிலாக் கடலில் பயணிக்க ஏங்குவதற்குக் கற்றுக்கொடுங்கள்” என்பார் குட்டி இளவரசன் நூலை எழுதிய எழுத்தாளர் அந்த்வான் துசெந்த் எக்சுபெரி. ஒவ்வொரு நூலகமும் ஒரு மரக்கலம் போலதான். அது அறிவின் முடிவிலியைக் கடக்க நமக்கு கரைதொடும் கருவியாகிறது. ஆகவே, நாம் ஏங்கக் கற்றுக்கொடுப்போம். குழந்தைகளின் எதிர்கால துக்கம் நீங்கிட இது நம் நிகழ்கால ஏக்கம்.
தொடர்புகொள்ள: 9965689020
நன்றியுடன்,
குக்கூ காட்டுப்பள்ளி
தன்னறம் நூல்வெளி