யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகரின் கவிதைகளை 2000 முதல் வாசித்து வருகிறேன். அவருடைய கவிதைகள் calculated என்பது என் அபிப்பிராயம். ஏறத்தாழ சுந்தர ராமசாமியும் அப்படி எழுதியிருந்ததாக நினைவு. ஆனால் அவர் புனைவு எழுத ஆரம்பித்ததும் நல்ல எழுத்துக்குத் தேவையான easiness வந்துவிட்டது. அவருடைய கதைகள், கட்டுரைகளிலெல்லாம் அது உண்டு. ஆனால் அதன் உச்சம் வெளியேற்றம் என்னும் நாவல்தான். பல்வேறு வகையில் தாங்கள் இருக்கும் ஓர் அக இடம் அல்லது புற இடத்தில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பவர்களைப் பற்றிய அழகான நாவல் அது. விளையாட்டுத்தனமும் சகஜமான மொழிநடையும் உடைய சிறந்த படைப்பு. யுவன் சந்திரசேகருக்கு விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. வாழ்த்துக்கள்.
ராஜ்குமார் செல்வநாயகம்
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகருக்கும் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அவரை நான் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். எம்.ஜி.சுரேஷ் எழுதிய ஒரு கடுமையான எதிர்விமர்சனம் வழியாகத்தான் நான் பகடையாட்டம் என்னும் நாவலைப்பற்றி அறிந்தேன். அதை தற்செயலாக வாங்கி வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. வரலாறு ஒரு பக்கம். தனிமனிதர்கள் இன்னொரு பக்கம். என் அப்பா இந்தி எதிர்ப்பு போராட்டம் வழியாகத்தான் தன் வாழ்க்கையையே சொல்வார். அதைப்போன்ற ஒரு பின்னல் எல்லா வாழ்க்கையிலுமுண்டு. அந்தப்பின்னலை அந்த நாவல் வழியாக வாசிக்க முடிந்தது. ஒரு புதிர்விளையாட்டு மாதிரியான நாவல். இன்றைக்கு புதிர்விளையாட்டு என பலவகை கதைகளை எழுதிப்பார்க்கிறார்கள். ஆனால் மொழிச்சிக்கலைத்தான் புதிர் என நினைக்கிறார்கள். Ambiguity யை உருவாக்கினாலே புதிர் வந்துவிடும். யுவன் தெள்ளத்தெளிவாக கதை சொல்கிறார். நிகழ்ச்சிகளை துல்லியமாகவும் சொல்கிறார்.ஆனால் கதைகள் ஒன்றுடன் ஒன்று எங்கே தொட்டுக்கொள்கின்றன என்பதை புதிராக விட்டுவிடுகிறார். அதுதான் புதிர்விளையாட்டாக அமைந்துள்ளது. அவை சிறந்த வாசிப்பனுபவமாக அமைகின்றன. யுவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிவா
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அவருடைய நீண்ட சிறுகதைகளை நான் விரும்பி வாசித்துள்ளேன். என்னுடைய வாசிப்பில் தாயம்மாகிழவி சொன்ன 108 கதைகள், மீகாமரே இரண்டும் முக்கியமான சிறுகதைகள். அவருடைய பங்களிப்பு தமிழிலக்கியத்துக்கு மிகுதியானது. அவருக்கு விருது அளிப்பது மகிழ்ச்சியானது. வாழ்த்துக்கள்
ரா.கணேசன்
யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்